வெள்ளிப் பூக்கள்

என்றோ முளைத்த வெள்ளிப் பூக்களும்
என்றோ கன்ன்ற நெருப்புத் துளிகளும்
இன்று மீண்டும் எட்டிப் பார்ப்பன.

நினைவும்
நிகழ்வும்
தொடர்ந்த நீண்டு
மணலில் உதிரும் பாதச் சுவடென
நெருண்டு
நெருண்டு
நெருளும் வாழ்வில்

புதிய சுவடுகள் மேலும் புதைந்தன
புதைந்த சுவடுகள் தொடர்ந்து நெரிந்தன.

புதிய சுவடுகள் பதியப் பதியப்
புதைந்த சுவடுகள் மறைந்து போகுமோ?

காலையில் உடுத்து வெளியே செல்வதும்
வேலைகள் முடிந்து மதியம் திரும்பலும்
மாலையில் நண்பர் வரவுக்காக
ஓடிச் சென்று,
உறங்கும் இருளில் வீடு திரும்பலும்
என்று வெறிதே
நாட்கள் கழிய,
நாட்கள் தோறும்
வாழ்க்கை என்றோ வார்த்துத் தந்த
வெல்லக் கரைசலில்
பளிங்கு விளைந்துள்ள அருமையை
உணரத் தவறினேன்.

வாழ்க்கை தந்த ரோஜாச் செடியில்
நாட்கள் தோறும்
நறுமலர் கோடி
பூத்து நிற்கும் பொலிவை உணர்ந்திலேன்.

தினமும் என்றன் வரவுக்காக
தினமும்,
எங்கள் தெருக்கதவடியின்
புளியை நிழலில்,
கோயிற் புறத்து வழியை நோக்கி,
என் மகனைத் தூக்கி
ஒருத்தி நிற்பதன் உணர்வைச் சுகித்திலேன்,
நிற்கும் ஒருத்தியின் நினைவைச் சுகித்திலேன்.

வெயிலோ புழுங்கும்,
வேலித் தழைகளின்,
குச்சு நிழல்கள், கோட்டுப் பின்னலாய்
நித்திரை செய்யும் அந்த நீண்ட தெருவிலே
நீண்ட தெருவிலே நித்திரை செய்யும்
குச்சு நிழல்களின் கோட்டுப் பின்னல்
என்,
சைக்கிள் ஒலியில் தடதடத் தெழுவதோ?
மார்பிலும் தோளிலும்
அந்தவரி நிழல்கள்
சலனப் படமோட, சைக்கிளில் விரைந்து
வந்து,
திரும்பி
வளைவில் நிமிர்ந்த்தும்
எங்கள் வீடுதான் எதிரில் தெரியும்,

எங்கள் வீட்டின் எதிரில் உள்ள
கோயில் வெளியும் குறுக்கே தெரியும்.
குறுக்கே தெரியும் கோயில் வெளியில்
மறுகரை ஓரம்,
புளியை மரத்து
நிழலிலே அவள் நிற்பதும் தெரியும்,

குழந்தைக்கு
என்னைக் குறித்துக் காட்டுவாள்,
குழந்தை சிரிப்பான்,
கீழே குனிந்தே
எதையோ பொறுக்கி இருந்த மூத்தவன்
நிமிர்ந்து பார்த்து
அந் நெடும் வெயில் ஊடு
ஓடி வருவான்.
உதிர்ந்த புளியம் பூக்கள்
அவன் கைப்போதுள் இருந்து
கோர்த்த சரம்போல் மணலில் கொட்டும்,
‘’என்னை மலர் சொரிந்து,
இனிய மைந்தனே,
அன்னை மகிழ அழைக்கின்றாயோ?’’
என்ற நினைவு என்னுள் குதிரும்.

அந்த நினைவும்
அந்த வரவும்
அந்த வரவை அவள் எதிர்பார்த்து
நின்ற பொழுதும்,
நிழலும் வெயிலும்
வாழ்க்கை என்றோ வார்த்துத் தந்த
வெல்லக் கரைசலில் விளைந்த பளிங்குகள்
வாழ்க்கை தந்த ரோஜாச் செடியில்
நாட்கள் தோறும் பூத்த நறுமலர்
அந்தப் பளிங்கும், அந்த மலரும்
என்றும் பூத்தே இருப்பன வாயினும்
இன்றோ திடீரென
ஏன் உணர்கின்றேன்?
நினைவும்
நிகழ்வும்
தொடர்ந்து நீண்டு
மணலில் உதிரும் பாதச் சுவடென
நெருண்டு
நெருண்டு
நெருளும் வாழ்வில்
புதிய சுவடுகள் மறைந்து போகுமா?

அப்படி நினையேன், அருமைத் துணையே
என்றும் தெரியும் வெள்ளிப் பூக்களை
என்றும் கண்ணில் படுமே, அவைகளை
இன்றே புதிதாய் காண்பது போல
என்றோ,
ஒருநாள் இரவு
நம்
நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே!

Leave a Reply

Your email address will not be published.