திருப்பப்பட்ட தேவாலயமும் காணாமல் போன சில ஆண்டுகளும்

தேவாலயம் திருப்பப்பட்டிருந்தது. அதுதான் அவனுடைய பிரச்சினையா?

அது அல்ல. நத்தார் நள்ளிரவுப் பூசை இந்த முறையும் இல்லாமல் போனது. மார்கழி மாதம் மழை பெய்து விட்ட பின், ஈரமாய், இன்னும் கறுப்பாகத் தெரியும் நள்ளிரவு வீதியைப் பார்த்து ரசித்து எத்தனை காலம்? ஒருமுறை வளைந்து நிமிரும் அந்த பிரதான வீதியில், தூரத் தூரத் தெரியும் மின்குமிழ்களின் மங்கலான ஒளிர்வில், தள்ளித் தள்ளி, சின்னச் சின்ன கூட்டங்களாய், நாலைந்து நாலைந்து பேர்களாய், பிள்ளைகளும் பெரியவர்களும் ஊர்ந்தூர்ந்து செல்வது போல் தோன்றும் நத்தார் நள்ளிரவை அவன் இன்று இழந்து விட்டான். இதோ இந்த வெளிறிய விடியற் காலையில், ஓட்டமும் நடையுமாக மனைவி சுவர்ணாவுடனும் மகன் பிரகாஷ்தனுடனும் சௌஜன் குட்டியுடனும் ஓடிவந்து, இதோ தேவாலயத்தின் அண்ணார்ந்து பார்க்கும் இந்த யன்னல்களினூடு பாயும் வெள்ளொளிக் கிரணங்களுக்கு முகம் கூசி இருந்துவிட்டு போவதில் என்ன ரசம்? அதுதான் அவனுக்குப் பிரச்சினையா?

அல்ல, அதுகூட அல்ல. அவையெல்லாம் சற்று முன் அவனும் குடும்பமும் பூசைக்குப் புறப்பட்டு வரும் போது அவனுக்குள் எழுந்த பிரச்சினைகள். ஆலயத்துள் நுழைந்த, ஆலயத்தின் இந்த இடது பக்க ஆசனத்தில் சுவர்ணாவைத் தொடர்ந்து அமர்ந்த பிறகு எழுந்த புதிய பிரச்சினை இது. ஒரு பழைய நினைவின் புதிய பிரச்சினை! பதினைந்து வருடங்களுக்கு முந்தய அந்த பன்னிரண்டு வயதுப் பூஞ்சிட்டின் நினைவு. அந்த நினைவை அவன் ஒரு சில நிமிஷங்களுக்காவது வாழ்ந்துவிடத் தீர்மானித்து விட்டான். அந்த நினைவை ஒரு சில நிமிஷங்களுக்கு வாழ்ந்துவிடுவதெனினும் அவனுக்கு அந்த நள்ளிரவுப் பூசை அவசியம். நள்ளிரவுப் பூசை மட்டுமல்ல, திருப்பப்படாத அந்த பழைய தேவாலயமும் தேவை. உண்மையில் தேவாலயம் திருப்பப்பட்டதும் ஒரு பிரச்சினைதான். நள்ளிரவுப் பூசை இல்லாது போனதும் ஒரு பிரச்சினைதான்.

நல்ல வேளையாக இந்த மேர்கூரி மொட்டுக்களும் இந்த வெண்ணிற மின் குழாய்களும் இருந்திருந்து ஒளிர்கின்றன. பரவாய் இல்லை. இடையிடையேனும் இவைகள் ஒளிர்ந்து ஒரு நள்ளிரவுப் போலி உணர்வை தருகின்றனவே. பரவாய் இல்லை. நிஜம் அரிதாகும் போது பிரமைகளும் ஒரு வகையில் பயன் உள்ளவைதான்.
இதோ மீண்டும் மேர்க்கூரிகள் பிரகாசிக்கினறன. மின்குழாய்கள் ஒளிர்கின்றன. நள்ளிரவுக் கோலம். வெளிறிய காலைப் பொழுதை நள்ளிரவாக்கும் மின்குமிழ் ஒளிர்வுகளின் கோலம்!

எதிரே, பீடத்தில், மெழுகுவர்த்தி சுடர்ந்து இளங்காற்றில் இமைப்பதை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், தன்னையும் மறந்து இந்த நள்ளிரவுக் கோலத்தில் திளைத்து சட்டெனத் திரும்புகிறான்.

கழுத்து 90° சுழன்று, முகம் தோள் பொருத்தைத் தொடுகின்ற திரும்பல். ஆலயத்தில் அவன் இருக்கும் இந்த முன் இடது பக்க தூண் நிரையிலிருந்து வலது பக்க தூண் நிரையை சற்றுப் பின்னோக்கி கோடறுக்கும் பார்வை.

இந்தப் பார்வைக் கோட்டின் வழியே குறுக்குச் சரிவாகத் தெரிவது யார், யார்?

மிக அண்மையில், அவனுக்கு அடுத்த பின் ஆசனத்தில் வேஜினியாவும் தம்பிமாரும் தாயும்.

இரண்டு பக்க ஆசன நிரைகளுக்குமிடையே நடுவழியின் சிவப்புக் கம்பளம்.

சிவப்புக்கம்பளத்தை அடுத்து, அடுத்த பக்கத்தில் பண்டிதர் யேசுரெட்ணமும், மகள் ஏஞ்சலாவும். இன்னும் பின்னால் பஞ்சுத்தலை அன்னம்மா. இன்னும் அந்த பத்தாவது தூண் ஓரமாய் சிஸ்ரர் திரேஸா. ஓ சிஸ்ரா திரேஸா! காவிப் புடவையும், மூக்குக் கண்ணாடியும் முக்காட்டுக்குள் தெரியும் பொன்னிற நெற்றியின் முன்தலை மயிரும்! சிஸ்ரர் திரேஸா இருக்கும் அதே இடத்தில்தான் பதினைந்து வருடங்களுக்கு முன் அந்தச் சிட்டு இருந்தாள்.

…… ஓ அந்த சிட்டு! முதுகுப் பக்கமாய் ஸிப் இழுத்து விட்ட ஊதாப் புள்ளிச் சட்டை . . . சிஸ்ரர் திரேஸாவே இப்போது அந்தச் சிறுமியாக உருமாறுவது போல . . . இடையின் பின்பக்கம் கொத்தாக முடிந்த லேஸ், கொழுமிய ஒரு பக்கக் கன்னம். அதே பக்கத்து இமையின் கடைக் கோணம். ஃபிறீல் வைத்த பொப் ஸ்லீவ்ஸ். காதின் அகன்ற வளையம். களிபொங்கும் உவகையே உருவானது போல் அந்தச் சிட்டு . . . நிற்கிறாள் . . இருக்கிறாள் . . . எழுகிறாள் . . . நெளிகிறாள் . . . விட்டு விட்டு ஒவ்வோர் பக்கமாய் பார்க்கிறாள் . . . இது நினைவுதானே . . . ? அல்ல, அல்ல, நிஜம். நிஜமாகத்தான் அவள் நிற்கிறாள், இருக்கிறாள், எழுகிறாள், நேளிகிறாள் . . . சேச்சே . . . இல்லை, இல்லை, உண்மையாகத்தான், உண்மையாகத்தான் அவள் தெரிகிறாள் . . . உனக்கு என்ன பைத்தியமா, ஹலுஸினேஷனா? . . . ஒமோம் அது ஒரு தோற்றந்தான் . . . ஆனால் மீண்டும் தோன்றுகிறாளே, மீண்டும் மறைகிறாளே, மறைந்தாளோ, சிஸ்ரர் திரேஸாவாக மாறினாளோ . . . இதென்ன அபத்தமான சிந்தனைகள்? அபத்தந்தான். எல்லாம் அபத்தந்தான். சிஸ்ரர் திரேஸாவும் ஒரு அபத்தந்தான். என்ன அழகு! என்ன துடிப்பு! என்ன நளினம்! எவ்வளவு அறிவார்த்தம்! எல்லாம் அந்த காவிக்குள்ளா போய் முடங்க வேண்டும்?

பண்டிதர் யேசுரெட்ணமும் ஒர அபத்தந்தான். மகளை சிறகுக்குள் கொண்டு திரிகிறார். இவன் இப்படி திரும்பிப் பார்ப்பதைக்கூட அவர் சந்தேகிக்கலாம். இவனது கிருதாவில் உள்ள நரையின் இழையையும் ஏஞ்சலாவுக்கு இவன் தனிப்பட ரியூஷன் செய்தவன் என்ற நினைவையும் இவர் மறந்திருப்பார். ஏஞ்சலா அந்த நாட்களிலேயே தக்காளிப்பழம் போன்றவள். அந்த வட்டக்கரு விழிகளால் எவரையும் கொத்தித் தின்று விடக் கூடியவள். ஆனால் இந்த தாஷீஸியசைத் தின்றுவிட அவளால் முடியவில்லை, இதைத் தெரியாத பண்டிதர்தான் அவர். இப்போது செட்டைக்குள் கொண்டு திரிகிறார்.

இவன் திரும்பும் போதெல்லாம் திடுக்கிட்டது போல் பார்ப்பது இதோ இவனுக்குப் பின் ஆசனத்தில் இருக்கும் இந்த வேஜினியாதான். இவனை எங்கு கண்டாலும் அந்த துணுக்குற்ற பார்வைதான் அவளுக்கு வரும். அது அவனிடம் அவளுக்குள்ள மரியாதையினால் என்பது அவனுக்குப் புரியும். அவளுக்குப் புரியாது, அவளுடைய முகத்திலுள்ள அந்த நிரந்தரமான சோகக் களை. எல்லாம் அந்த சோகக் களை? அவளுடைய நிறத்தினாலா? மெல்லிய மஞ்சள் கலந்தது போன்ற சிவப்பு. ஓரஞ் நிற புடவைக்கு ஏற்றால் போல் தெரியும் ஒரு வகையான சிவப்பு. அதனை ஓரஞ் நிறம் அல்லது தோடம் பழச் சிவப்பு நிறம் எனலாமா? ஓரஞ் சிவப்பு சோகத்தின் சாயல் உடையதா? அல்லது அவளுடைய மெல்லிய உதடுகள்தான் அவளுக்கு அத்தகையதொரு சோகக் களையான தோற்றத்தைக் கொடுக்கிறதா? அல்லது அவளுடைய அந்த பூனைக் கண்கள்தான் அந்தத் தோற்றத்துக்கு காரணமா? தாய்க்கு இல்லாத பூனைக்கண் இவளுக்கு எப்படி? தகப்பனக்கு உரியதாக இருக்குமோ? ஏதோ ஒரு தலைமுறையில் எப்போதோ தோன்றக்கூடிய பின்னடைவான ஒரு இயல்பு அது. இவளுக்கு தாயைப் போல நீளமான முகம் இருக்கிறது. அந்த ஒட்டல் சரீரம்? தகப்பனுடையதா? இதெல்லாம் சேர்ந்ததுதான் அந்த சோகக் களையா?

பாவம், கொழும்பில் வசதியாக இருந்ததுகளாம். பிரிஜ்ட் கொன்வெண்டில் படித்தவளாம். தகப்பன் கார் விபத்தில் சாக, இங்கே தாயின் ஊருக்கே வந்து விட்டார்களாம். இதெல்லாம் அவள் இடையிடையே சொல்லித்தான் தெரிந்தது. அப்போதெல்லாம் இவன் எங்கே? கொழும்பு வெளியீட்டுத் திணைக்களத்தில் சில வருடங்கள். கல்வி டிப்ளோமாவுக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கொஞ்ச நாள். இடையிடையே ஊருக்கு வந்த போது கேள்விப்பட்ட பரத நாட்டிய ரியூஷன் ஆசிரியையும் இவள்தான் என்பது பின்பு இவனும் ஊருக்கு வந்து அவளுடன் பழக நேர்ந்த போது தெரிந்து கொண்டவைதான் . . . சே, எங்கெல்லாம் சிந்தனை ஓடுகிறது!

‘’ஆண்டவர் எம்மோடு இருப்பதாக’’

‘’உம்மோடும் இருப்பதாக’’

‘’இதயங்களை மேலே எழுப்புங்கள்’’

‘’இதயங்களை மேலே எழுப்புகின்றோம்’’

அவன் மேலே நோக்கினான். மேர்க்கூரிகளும் மின்குழாய்களும் அணைந்திருந்தன. சோடனைகளுக்கூடாக இளம் சூரியக் கதிர்கள் மென்மையாகவும் மெதுவாகவும் எட்டிப் பார்த்தன. பீடத்தில் குங்கிலியத்தின் வெண்புகை மெல்ல ஐதாகப் பரவி, இசைக் கோலங்களாக காற்றில் கரைந்து கொண்டிருந்தன. குங்கிலியத்தின் நறுமணம் எத்தனையோ பிரார்த்தனைகளின் நினைவுகளைச் சுமந்தபடி மெல்ல கமழத் தொடங்கியது.

‘’எங்கள் அன்புத் தந்தையே’’

‘’நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம்’’

‘’நாங்கள் உம்மை வாழ்த்துகிறோம், , , ‘’

அது காணிக்கை மீதான மன்றாட்டு. இனி, எழுந்தேற்றம் – திவ்விய திருப்பலியின் மையம். ஆழிய உணர்வுகளுக்குள் இனியாவது இவன் திரும்பித் திரும்பிப் பார்ப்பதை தவிர்த்து மனதை ஒருநிலைப்படுத்த வேண்டாமா?

மனதை ஒருநிலைப்படுத்த அவன் இணங்கும் போதே மேர்க்கூரிகளும் மின்குமிழ்களும் மீண்டும் ஒளிரத் தொடங்குகின்றன. மீண்டும் அந்த நள்ளிரவுக் கோலம்!

‘நள்ளிரவுக் கோலம்’ என்ற அவனுடைய வார்த்தைக் கோர்ப்புக்கூட, அவன் மீண்டும் மீண்டும் திரும்பித் திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு சாக்குதானா? அந்த பத்தாவது தூணில், சிஸ்ரர் திரேஸாவின் இடத்தில் மீண்டும் அந்தச் சிட்டு! இது வெறும் நினைவா? அல்லது திட்டவட்டமான, பூதகண ராசியில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் புலனாகக்கூடிய ஒரு நிகழ்வா? ஆன்மீக அடிப்படையில் அல்லது உளவியல் அடிப்படையில், தமிழில் தோற்றரவு என்றும் ஆங்கிலத்தில் Apparition என்றும் சொல்லப்படுவது இதுதானா? அவனுக்குத் தெரிந்த அளவில் மனவிம்பங்களை புறநிலைப்படுத்துகிற ஒரு மனநோயாகவே இது தெரிகிறது.

‘மனநோய்’ என்ற சிந்தனையில் திடுக்கிட்டுப் போகிறான். நோயாளனுக்கு நோய் தெரிகிறது. எனினும் நோய் நோய்தானே. . . இதோ மீண்டும் தெரிகிறது அந்த ஊதா புள்ளிச் சட்டை. முதுகுப் புறமாக ஸிப் இழுத்த, பின் இடுப்பில் லேஸ் முடிப்புகள் வைத்த ஃபிறீல் பிடித்த பொப் ஸ்லீவ்ஸ் பொருந்திய ஊதா நிறச்சட்டை – ஒரு பக்கக் கன்னம் – இமையின் கடையோரக் கோணம் – காது வளையம் – தோளைத் தொட்டும் தொடாமலும் தொங்கும் பொப்சிலுப்பா கூந்தல் – உண்மைதான். நினைவு தடிப்படைந்த மனத்திரை விம்பங்களின் புறந்தள்ளல்கள் – இது ஒரு நோய் நிலைதான். மீண்டும் மீண்டும் துணுக்குற்றான், முகம் வியர்த்தான். எனினும் அதன் மாயக் கவர்ச்சி! இன்னுமொரு முறை. பிளீஸ், இன்னுமொரு முறை மாத்திரம் என்று அவன் தன்னைத் தானே கெஞ்சுவது போலத் தோன்றியது.

‘’என்ன நீங்க திரும்பித் திரும்பிப் பார்க்கறீங்க’’

சுவர்ணா கேட்டு விட்டாள். அடுத்து வேஜினியாவும் கேட்பாள். அவனிடம் பதில் இருந்தது.

‘’கோயில் திரும்பிவிட்டது. அதனால்தான்’’

புரியுமா அவளுக்கு.

‘’கோயில் திரும்பிவிட்டதா? என்ன பைத்தியமா-‘’

‘’கொங்கிறீற் தூண்கள் அப்படியே இருக்க சுவரும் கூரையும் பறந்ததே, அந்தச் சூறாவளி நினைவிருக்கா?’’

‘’இருக்கு. ஆனால் இரண்டுக்கும் என்ன சம்பந்தம்-‘’

‘’சம்பந்தம் இருக்கு. சூறாவளிக்குப் பிறகு, தூண்களை வைத்துக் கூரை போட்டார்களே. . . .’’

‘’ஓமோம் அதுக்கென்ன?’’

‘’கூரை பழையபடிதான். ஆனால் முகப்பு மாறிப் போனதே. தெற்கே பொலிஸ் வீதியை பார்த்திருந்த கோயில் இப்போ வடக்கே குளக் கரையை பார்க்கும் படி ஆனதே . . . ‘’

‘’ஓமோம் அதுக்கென்ன’’

‘’முன்பு பீடம் இருந்த இடத்தில் இப்போ கோயிலின் வாசற்கதவு – முன்பு கோயிலின் வாசற்கதவு இருந்த இடத்தில் இப்போ கோயிலின் பீடம். முந்திய கோயிலின் முற்றம் இப்போ கோயிலின் கொல்லைப்புறம். . . .புல்லும் புதருமாய் காடு பற்றி கால் வைக்கவும் அச்சம் தருவதாய் கிடக்கிறதே. . . . ‘’

‘’அது சரி, இதுகளுக்கும் நீங்க இப்போ அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்க்கிறதுக்கும் என் சம்பந்தம்?’’

‘’சம்பந்தம் இருக்கு. இப்போ நம் முன்னால் இந்தப் பீடம் இருக்கல்லவா. பீடத்துக்கு இடது புறமாக பாடகர் குழு இருக்கிறாங்கல்லவா, அந்த பாடகர் குழுவின் இடத்தில்தான் நம்ம பழைய குடும்ப ஆசனம் இருந்தது நினைவிருக்கா?’’

‘’இருக்கு.’’

‘’இருந்தால் கேள். அந்த ஆசனத்தில் இருந்து நேரே பார்த்திருந்தால் என்ன தெரிந்திருக்கும்?’’

‘’பழைய பீடம் தெரிந்திருக்கும்.’’

‘’அந்தப் பழைய பீடம் இருந்த இடத்தை, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், அந்தப் பழைய பீடம் இன்னும் இருப்பதாக நான் எண்ணிக்கொண்டு அதைப் பார்ப்பதாய் இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும்?’’

‘’சரி, பின்னால் திரும்பிப் பார்க்கத்தான் வேணும்.’’

‘’சந்தோஷம், அதேபோல அந்த வரிசையில் இருக்கிற 10ஆவது தூணை நான் திரும்பிப் பார்க்க வேணும் என்றால் நான் என்ன செய்ய வேணும்?. . . . ‘’

‘’அது சரி, ரொம்ப அளந்து நிறுத்துச் சொல்றீங்களே, அந்த 10ஆவது தூணில் என்ன விசேஷம்?’’

‘’அதிருக்கட்டும், அந்தப் 10ஆவது தூணை நான் திரும்பிப் பார்க்க வேணும் என்றால் நான் திரும்பி ஒரு கோணமாய். . . ‘’

‘’ஏன் இப்படியும் செய்யலாமே. . . .’’

‘’எப்படி’’

‘’அந்தப் பாடகர் குழுவோடு நீங்க போய் நின்று கொண்டாலும் சரிதானே, நீங்க என்ன, பாடத் தெரியாதவரா?’’

‘’அடி, கள்ளி’’ நாக்கைக் கடித்துக் கொண்டு நிமிர்ந்தான். முகம் வியர்த்து இருந்தது. சுவர்ணாவைப் பார்த்தான். அவள் பீடித்தை நோக்கி கண்கள் கலங்க மன்றாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அப்படியானால் அவனுடன் இவ்வளவு நேரம் பேசியது யார்? எல்லாம் மனக் கோறாறுதானா? அந்தச் சிறுமி அவனுள்ளிலிருந்து வெளியே விகசிப்பதைப் போல, சுவர்ணா வெளியிலிருந்து அவனுள் விகசிக்கின்றாளா?

முதலாவது மணியின் கிலுக்கலுடன் பாடல் உயர்கிறது.

‘’தூயவர். . . . தூயவர்
மூவுலகுக்கு இறைவனாம் ஆண்டவர்
உன்னதங்களிலே ஓஸானா. . .
உன்னதங்களிலே ஓஸானா. . . .’’

சுவர்ணம் முழந்தாழிடுகிறாள். எல்லோரும் முழந்தாழிடுகிறார்கள். இவன் மட்டும் இன்னும் முழந்தாழிடாமல். . . .

இன்னும் முழந்தாழிடாமல். . . .

இன்னும் ஆசனத்தில் அமர்ந்தபடி. . . .

பின்னால் இவனுடைய வலது தோளில் படுகின்ற மூச்சு யாருடையது. ஓ, வேஜினியா! அவள் முழந்தாளிட்டு இவனுடைய ஆசனப் பின்சாய்வில் கூப்பிய கரங்களுடன். . . இவனுடைய தோளில் அவளுடைய மூக்கு நுனி படுவது போல. . . அவன் இன்னும் முழந்தாழ் இடாமல் இருப்பது அவளுக்கு அசௌகரியமாய் இருக்குமோ? அவளுக்காகவேனும் இவன் இரண்டாவது மணிக்கு காத்திராமல் முழந்தாள் இடத்தான் வேணும். . . .

வேஜினியாவிடம் இவனுக்கு இரக்கம் சுரந்த்து.

அந்த ஓரெஞ் சிவப்பு நிற சோகக் களையும், மெல்லிய உதடுகளும் பூனைக் கண்ணும் நிழலாடியது. அந்த ஒல்லி உடலின் ஒடிந்து விழுவது போன்ற சாயலின் மென்னுடலில் ஒரு பரிசுத்தம் பரிமளித்தது. ஒரு அறிவார்த்தமான ஆளுமை, அவள் ஒர இன்ரலெக்ஷுவல்தான். ஒரு சோகமான இன்ரலெக்ஷுவல்.

அவளைத் திரும்பிப் பார்க்க வேணும் போலிருந்த்து. எனினும் முடியாது. திரும்பிப் பார்த்தாலும் எப்போதும் போல் ‘’என்ன ஸேர்’’ என்றுதான் கேட்பாள். எப்போதும், இவனிடம் ஒரு இணக்கத்தைக் கண்டவள் போல, மதிப்புமிக்க ஒரு பார்வையுடன், ‘என்ன ஸேர்’’ என்று அவள் அலட்டாமல் சொல்லிக் கொண்டு போவதே அலாதி. அவளுடைய சோகக் களையை ஆழ்ந்து ஆய்வு செய்கின்ற முயற்சியில் இவன் எத்தனையோ முறை தோற்றுப் போயிருக்கிறான். இவளுடைய ஒரு ரீச்சர் சம்பளத்தில் ஒரு தாயும் இரண்டு தம்பிமாரும் என்று மனம் காரணங்களை ஆராயும். அவளுக்குக் கல்யாணமாகி இருக்க வேண்டிய வயது என்பதிலும் அவனுக்குக் கவலைதான். அவனுடைய இந்த எல்லா எண்ணங்களினூடும் அவள், ஒல்லியாய், ஓரெஞ் சிவப்பாய், அறிவார்த்தமாய், அவனுக்குள் ஒரு சோகத்தை வளர்க்கின்ற சம்மனசாய். . . .

இரண்டாவத மணியையும் பீடப் பரிசாரகன் குலுக்குகின்றான்.

உச்சாடன வேளை. உலகமெல்லாம் அமைதியாகி, உள்ளினுள் உள்ளான மையத்தை நோக்கி மனித உணர்வுகள் குவியப்படுகின்ற தருணம். குருவின் முகம் சூன்யப்படுகிறது. பீடத்தில் குனிந்து அப்பத்தை எடுக்கிறார். இவன் கைகூப்பி, சிரம் தாழ்த்தி. . . . .

‘’அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள். ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் சரீரம். . . . ‘’

‘’, , , ,அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள், ஏனெனில் இது நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். . . . ‘’

ஒரு மூச்சு விட்டபடி நிமிரும் திருச்சமூகம். மௌன ஆழியின் மையத்திலிருந்து வெளித்தாவும் விடுபாடுகள். உசும்பல்கள், உரசல்கள். . . .

இந்த விடுபாடுகள் உசும்பல்கள் உரசல்களுடன் அவனும் இந்த பாடகர் குழுப் பக்கமாகப் போய் விட வேண்டும். வளைத்துப் போவதா? குறுக்காகப் போவதா? வளைத்துப் போவது நோஞ்சாத்தனம். குறுக்கறுத்துப் போனால் முழுக் கோயிலே அவனைப் பார்க்கும். சுவர்ணாவின் முகத்திலும் கேள்விகள் எழும். முகம் வியர்ப்பது தெரிகிறது. கடலைப் பிளந்து இஸ்ரவேலரைக் கரை சேர்த்த மோயீசனைப் போல அவன் கோயிலைக் குறுக்கறுத்து தன்னைக் கரை சேர்க்கிறான், பாடகர் குழுவுக்கு.

இனித் தங்குதடையற்ற நள்ளிரவு! மேர்க்கூரிகளின் வெளிச்சங்கள். மின் குழாய்களின் ஒளிர்வுகள். திரும்பித் திரும்பிப் பார்த்துச் சங்கடப்பட வேண்டியதில்லை. நேரே அந்த தூண் வரிசை. பத்தாவது தூண் ஓரமாய் அதோ சிஸ்ரர்! சிஸ்ரர் திரேஸா பனிப்படலமாக, அந்தப் பனிப்படலத்தினுள்ளிலிருந்து புறப்படுவதாய் அதோ களிகொள் பேருவகையுடன் அந்தக் சிட்டு!

ஊதா நிறச் சட்டையும்
முதுகுப் புறமாய் மூடிய ஸிப்பும்
லேஸும் பட்டன்களும்
அவள் இருப்பதும், எழுவதும்
முழந்தாள் இடுவதும்

பக்கங்களிலும் ஓரங்களிலும் பார்ப்பதும்

குனிவதும் நிமிர்வதும்

அவளுடைய பிடரிச் சிலுப்பா அசைவதும் சரிவதும்

ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு முகக்கோணம்.

முழுமையான அவளுடைய முகம் எங்கே?

மறந்தானா, அல்லது மங்கலாக விட்டானா?

உடைந்த கண்ணாடித் தெறிப்பைப் போன்ற அவளது சித்திர வடிவப் பிம்பத்தைத்தானா அவன் சேமித்திருந்தான்?

‘’இது கிறிஸ்துவின் சரீரம், விசுவாசிக்கிறாயா?’’

‘’ஆமென்’’

‘’இது கிறிஸ்துவின் சரீரம், விசுவாசிக்கிறாயா?’’

‘’ஆமென்’’

எந்தப் பீடத்தில் இந்த சற்பிரசாதம் வழங்கப்படுகிறது? எல்லோருடைய கண்ணுக்கும் தெரிகின்ற தற்போதைய பீடத்திலோ, அல்லது இவனுடைய கண்ணுக்கு மட்டும் புலனாகும் அந்தப் பழைய பீடத்திலா?

எந்தப் பீடத்தை நோக்கி, சற்பிரசாதம் பெறும் விசுவாசிகளின் பெயர்வு நடைபெறுகிறது? எல்லோரின் கண்களுக்கும் தெரியும் இந்தப் பீடித்தை நோக்கியா, அல்லது இவனுடைய கண்ணுக்கு மட்டும் புலனாகும் அந்தப் பழைய பீடத்தை நோக்கியா? பின்னோக்கி ஓடும் காலத்தின் கானல்கள். கானல்கள் ஊடு நிகழும் குறுக்குப் பரிமாற்றங்கள். . . .

இவனுக்குத் தெளிவாகத் தெரியும் அந்த பழைய பீடத்தை நோக்கி எழுவதாய், மிகத் தெளிவாகத் தெரியும் அந்த பூஞ்சிட்டு. அவளுடைய சிலுப்பா ஏவி, ஏவி அசைய, அந்தத் தூண்களின் உள்ளும் புறமுமாக மாறி மாறி செல்கிறாள். அதோ அந்தப் பீடத்தின் கிராதியில் முழந்தாள் இடுகிறாள். அவளுடைய நாக்கு நுனி நீள்வதும் ஓர் ஓரமாய் தெரிகிறது.

“Et corpose christae” = “amen”

“Et corpose christae” = “amen”

பதினைந்து வருஷங்களுக்கு முந்திய அந்த லத்தின் மொழிச் சொற்கள் கூட அவனுக்குக் கேட்கிறதே!. . . .

அவள் அந்த கிராதியிலிருந்து எழுகிறாள். எந்த விகற்பமும் இல்லாத பூஞ்சிட்டின் துள்ளலோடு இறங்கித் திரும்புகிறாள். திரும்பி வருகையில் அந்தத் தூண்களின் மறைப்பு. தூணுக்குத் தூண் பூக்கும் அவளுடைய முகம். தூணுக்குத் தூண் மிநுங்கும் அவளுடைய கூப்பிய கையின் தங்க வளையல்கள்!

‘’சென்று வாருங்கள், பூசை முடிந்தது.’’

‘’இறைவா உமக்கு நன்றி.’’

பாடல்களுக்கு மத்தியில் கலைகின்ற விசுவாசிகளின் மத்தியில் சுவர்ணா எழுதுவதும் தெரிகிறது. அவள் வேஜினியாவுடன் கை குலுக்கிக் கொண்டே பேசுகையில், இவன் தான் யாருடன் கைகுலுக்குவது என்ற சிந்தனையில் பக்கத்துக் கதவில் நழுவி, பொலிஸ் வீதி ஓரம் உள்ள கோயில் மணிக்கோபுரத்துக்கு உள்ளான திறந்தவெளி அரங்கை நோக்கி கால் வைக்க, அவன் முன்னே பழைய கோயில் முற்றம் – புல்லும் புதருமாய் காடு பற்றியதாய். . . . காலை இளம் வெயிலில் தளும்பும் பனித் துளிகளுடன். . . .

கண்கள் துருதுருத்தன, புதர்களுக்கு மேல் படர்ந்து அப்பாலுள்ள அந்தப் புளியமரத்தில் நிலைகுத்துகின்றன அவனுடைய விழிகள். புல்லையும் புதரையும் கடந்து விரையும் அவனுடைய கால்கள். புளிய மரத்துக்கு அருகே இன்னமும் அணைக்கப்படாத இரவின் மின் குமிழ்கள். புளிய மரத்தடியில் அவன் நின்று பார்க்க, தேவாலயத்தினோடு தொடுத்த பழைய மிஷன் ஹவுஸ் கூடத்தில் இரவு முழுவதும் ஜொலித்து இன்னும் ஜொலித்துக் கொண்டேயிருக்கும் வர்ண மின்குமிழ்கள்! இந்த வேளையிலும், இங்கும் இந்த பழைய கோயில் முற்றத்திலும் நத்தார் நள்ளிரவின் கோலங்கள்!

நள்ளிரவுக் கோலம் . . . நள்ளிரவுக் கோலம் . . . பதினைந்து வருஷங்களுக்கு முன்பிருந்த கோயில் முற்றத்து நள்ளிரவுக் கோலம். மீண்டும் அந்த மனநோயா? . . .

எல்லாம் தெரிகிறது. எல்லாம் கேட்கிறது. பதினைந்து வருடங்களுக்கு முன் பனி நனைந்த கோயில் முற்றத்து நள்ளிரவுக் கோலம் பதினைந்து வருடங்களுக்கு முன் பனியின் சீதனக் காற்றில் பதிவான வாழ்த்துக் குரல்கள்.

‘’ஹெப்பி கிறிஸ்மஸ் . . . ஹெப்பி கிறிஸ்மஸ் . . . ‘’

இரவின் மின் ஒளிர்வுகளூடு இன்பம் பொங்குகிற குரல்கள். இரவின் நிலவினூடு வரும் இதம் கனிந்த குரல்கள். இரவின் பனியுடன் கலந்து ஈரலிப்பாகும் குரல்கள்.

நிலவும் மின்குமிழ் ஒளியும் விழுத்தும் புளிய மரத்தின் வரிநிழல்கள், வரி நிழல்களுக்குள் இவன். பதினைந்து வருடங்களுக்கு முந்திய இவன். இப்போதும் பதினைந்து வருடங்களுக்கு முந்திய இவன்தான். இப்போதும். . . .இப்போதும், , , இவன்தான், , , ,பதினைந்து வருடங்களுக்கு முந்திய தாசீஷியஸ்!’’

‘’ஹெப்பி கிறிஸ்மஸ் ரூ யூ அங்கிள்’’

இன்னமும் அதே நம்ப முடியாத பரபரப்பு. அவள் தான் அந்தப் பூஞ்சிட்டுத்தான். அருகில் வந்துவிட்டாள். . . நிலவொளியின் லேசான மங்கலில் நெற்றிப் புருவமேடும், மூக்கு நுனியும் நிழலிட. . .

‘’ஹெப்பி கிறிஸ்மஸ் ரூ யூ லிற்றில் உவொன். என்னைத் தெரியுமா? உங்களுக்கு?’’

‘’பூசையில் நீங்க என்னையே பார்த்துக் கொண்டிருந்தீங்களே. . . . !’’

‘’ஓ! நீங்க கண்டிங்களா? நீங்க ரொம்ப ஸ்மார்ட், அதனால்தான்.’’

‘’தெங்கியூ அங்கிள் சே-ரியோ.’’

‘’நீங்க எங்க இருக்கறீங்கள்?’’

‘’கொழும்பு. வெள்ளவத்தையில. அங்கிள் சேரியோ…..’’

‘’உங்க பெயர் சொல்லலியே? . . . ‘’

துள்ளி ஓட எத்தனித்தவள் சட்டென்று திரும்பி நின்றாள். நீட்டிய இவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு சிரிக்கிறாள். இவனும் அவளுடைய கையைப் பற்றியவாறே, உற்று உற்று, இதோ இன்னும் உற்று உற்று அவளுடைய முகத்தைப் பார்க்கிறான். நிலவில் மங்கலாகத் தெரிந்த முகம் அந்த நிலவின் ஓரெஞ் சிவப்பாக ஒளிர்கிறது. இன்னும் உற்றப் பார்க்கிறான். பூனைக் கண்கள். . . . மெல்லிய உதடுகள். . . பூனைக் கண்கள் . . . மெல்லிய உதடுகள் . . . ஓரெஞ் சிவப்பு நிறம் . . . பூனைக் கண்கள் . . .பூனைக் கண்கள் . . . ஓ! வே. . ஜி. . .னியா. . . ஓ, வேஜினியா, அது நீயா?

வெயில் சுள்ளென்று குத்தியது. முகம் வியர்த்தது. எந்த தொலை தூரத்திலிருந்து எந்த இருட்குகையினூடு புகுந்து வந்த பயணி இவன்!

அதோ தேவாலயத்தின் பின்னால் உள்ள திறந்த வெளி அரங்கையும் கடந்து, புல்லையும் புதரையும் கடந்து அவனை நோக்கி காலை வெயிலின் நிழல்கள் நீள வந்து கொண்டிருந்தார்கள் சுவர்ணாவும் வேஜினியாவும், சிஸ்ரர் திரேஸாவும், ஏஞ்சலாவும், எல்லோரும் இவனை நோக்கி . . . .இவனை நோக்கி. . . .ஹெப்பி கிறிஸ்மஸ் சொல்லி கைகுலுக்க. . . . கைகுலுக்க. . . .

Leave a Reply

Your email address will not be published.