காலடி (குறுங்காவியம்)

காலடி (குறுங்காவியம்)

நான் உறங்கிப் போனது எனக்குத் தெரியும். நான் உறங்கப் போனதும் எனக்குத் தெரியும். உறக்கம் என்னை எங்கெல்லாமோ கொண்டு சென்றது. உறக்கத்தை நான் எங்கெல்லாமோ கொண்டு சென்றேன். புதிர்களை நான் அவிழ்த்துப் பார்த்தேன். புதிர்கள் என்னை அவிழ்த்துப் பார்த்தன.
தாத்மாவை நான் கண்டேன். துஷ்றிகியையும் நான் கண்டேன். தொலைந்து போன கிரகவாசியை கண்டேன். பாதாள மனிதர்களையும் பார்த்தேன். வியூகங்களை நான் அமைத்தேன். வியூகங்களை நான் உடைத்தேன். அண்டவெளி மனிதர்களையும் நான் அணுகினேன்.
உறக்கத்தில் எனக்கு நம்பிக்கை உறக்கத்தின் உள்ளாழங்களிலும் எனக்கு நம்பிக்கை. உறக்கத்தின் உள்ளாழத்தில் உண்மைகள் வெளிப்படுகின்னறன. உண்மையின் உள்ளாழத்தில் நினைவுகள் கனவுகளாகின்றன. கனவுகள் நினைவுகளாகின்றன.
நிவேதன் உடன் இருக்கும் வரையில் வந்த நினைவும் இந்த நிவேதைக்குப் பொருட்டல்ல. நினைவுகள் உடன் இருக்கும் வரையில் நிவேதன் உடன் இருக்க வேண்டும் என்பதுமில்லை இந்த நிவேதைக்கு.
நிவேதை நான் உறங்கிய பின்புதான் உறங்க வருவார் நிவேதன். நான் உறங்கும் போதும் அவர் உறங்குவதும் உறங்காதிருப்பதும் எனக்குத் தெரியும். அவரோடுதான் நான் உறங்கினேன் அவர்தான் என்னை உறங்க வைத்துக் கொண்டிருந்தார்.
என் விசாரணைகள் முடிந்து நான் வீடு திரும்பிய போது இரவு எட்டு மணியாயிற்று. ‘அவர் கோபிப்பாரே’ என்ற நினைவில் வானம் பொத்து மின்னல்கள் தெறித்தன. மின்விளக்கு ஒளிர்ந்த இரும்புக் கேற்றில் தலை முட்ட நின்று கண்களைத் துடைத்த பின்புதான் உள்ளே போக முடிந்தது.
என் கை நிறையச் சாமான்கள். தாத்மா தந்த MWG கருவிகளும் டிஸ்க்குகளும் மற்றும் துஷ்றிகியின் அல்பங்களும். சோபாக்களுக்கு நடுவில் உறங்கிக் கிடந்த என் பிள்ளைகளையோ அவர்களை அணைத்தபடி கிடந்த என் ஆச்சியையோ பரிவு கொள்ளும் நினைவற்று, இரண்டு எட்டில் பாய்ந்து போய் நான் அவரையே பார்த்தேன். கதவுத் திரைச்சீலையூடு கசியும் மின் வெளிச்சத்தில் அவர் தெரிந்தார். பேனாவும் கையுமாய், குனிந்த தலை சற்று நிமிர்ந்த புன்சிரிப்புடன்.
நான் சேலையை மாற்றினேனோ இல்லையோ, உடனடியாக தாத்மா சொன்னபடி, அவள் தந்த MWG கருவியில் டிஸ்க்கை இணைத்து டெக்குடன் தொடுத்தேன். என் தேடலின் கண்டுபிடிப்பை இதோ காணப்போகிறேன்.
அதற்கு முன்னதாக என் கைப்பையிலிந்த புகைப்படத்தை அவசரமாக எடுத்து மற்றுமொரு முறை பார்த்துக் கொண்டேன். தினமும் நூறு முறை பார்ப்பது வழக்கமாகிப் போய் விட்ட படம் அது. இதன் பின்பு அதைப் பார்க்கத் தேவையற்றுப் போகும் எனவும் நினைத்தேன்.
அந்தப் புகைப்படத்தில் பதித்திருந்த காலடி என் மனதிலும் பதிந்திருந்தது. அல்லது என் மனதில் பதிந்திருந்த காலடிதான் அந்த புகைப்படத்திலும் பதிந்திருந்தது என்பதும் உண்மையே. உண்மையில் அந்தக் காலடி முதன் முதலில் என் வீட்டு முற்றத்தில் பதிந்திருந்தது. அது வெறுமனே என் முற்றத்து மண்ணை அழுத்திய காலடி மட்டுமல்ல. என் நெஞ்சத்தை மிதித்த காலடி மாத்திரமல்ல, என் உயிர்ப் பொருளையே நசுக்கி, சாறாக்கி தூசாக்கிய காலடி எந்த மர்ம மனிதனின் காலடி அது”. எந்த அகன்ற வெளி ஜெந்துவின் காலடி அது? இதை அறிவதில்தான் என் ஆர்வமும் தேடலும். யாருடைய காலடி அது?
தொலைந்த போன கிரகவாசிகளினுடையதா? தொலையாத பாதாளவாசிகளினுடையதா? யாரும் சந்தேகம் கொள்ள முடியாத அண்டவெளி மனிதர்களினுடையதா? அல்லது இவர்கள் யாருமற்ற அப்பாலான இன்னொரு பிரபஞ்ச வாசியினுடையதா?
இந்த அப்பாலான மனிதர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்கான ஐஎஸ்ஐசிக்கு – (I S I C) போனபோதுதான் தாத்மா (MWG) கருவிகளையும் டிஸ்க்குகளையும் தந்தாள். I S I C என்பது, INTER STAR INFORMATION CENTRE.
தாத்மா ஒர் அழகிய பெண். ஒல்லியான தேகம் என்றாலும் மிக உறுதியானது. மின்வெட்டு போன்ற உதடுகள். என்னுடைய சாயல்தான் அவளுக்கும் என்று நினைத்தேன். என்னையே நான் பார்ப்பதைப் போலுமிருந்தது. என்னுடைய சேலையை அவளுக்குக் கொடுத்து, அவளுடைய நீண்ட அங்கியை நான் அணிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.
துஷ்றிகியும் நீண்ட அங்கிதான் அணிந்திருந்தான். துஷ்றிகியின் முகத் தோற்றம் எனக்கு முன்பே பரிட்சையமானதுதான் எனினும், நிவேதனின் முகச்சாயலிலேயே துஷ்றிகியும் தெரிந்தான். அதே குறுந்தாடி மீசையும் ஒளி பொருந்திய முகமும்! துஷ்றிகியின் பாதங்களுக்கு தைலம் தடவியபடி, மின்வெட்டு உதடுகளில் நளினம் சுழியோட, உறுதியாக தாத்மா சொன்னாள்.
‘நிவேதா, இந்த MWG டிஸ்க்குகள் என் நினைவுப் பதிவுகள். நீ அறிய விரும்புகிற எல்லா மனிதர்களும் இதில் வருகிறார்கள். நீ நினைத்த மாத்திரத்தில் அவர்களின் புகைப்படங்களை ஸ்ற்ரில்களாக இதிலிருந்து நீ பெற்றுக் கொள்ளலாம். அவர்களுடைய காலடித் தடயங்களைக் கூட புகைப் படங்களாகப் பெற்றுக் கொள்ளக் கூடும்.”
தாத்மா சொன்னது போல சிவப்பு பொத்தானை அழுத்தினேன். டிஸ்க் பிளே ஆனது. ரீ. வீ. இன் திரையில் சலனங்கள் தோன்றின.
வட்ட நிலா வானம்.
நிலவைப் பார்த்து விட்டுத் திரும்பும் தாத்மாவின் வட்டமான முகம்.

கடல் வரையும் நீளும் கல்லறைகள்.
கல்லறைகளின் பின்னணியில்
துஷ்றிகியின் இளம் குறுந்தாடியும், நீண்ட கூந்தலும்
நேரிய மூக்குமான பளிச்சென்ற முகம்.

நெற்றியிலும்
காதோரக் கன்னங்களிலும்
ரத்தக் கறை.

கைகளிலும் பாதங்களிலும்
உள்ளும் புறமும் ஊடுருவிய காயங்கள்.

இடது விலாப் பக்க அங்கியில் இரத்தக் கறை.

நிலவில் பளிச்சிடும் ஈட்டி முனைகள்

தாத்மாவையும் துஷ்றிகியையும் சுற்றி வட்டமாக நெருங்கும் ஈட்டி வீரர்கள்.

”கல்லறையை பிளந்து தப்பிய கலகக்காரன் துஷ்றிகி நீதானே.”

”நீயே சொல்கிறாய்.”

நிலவின் புகாருக்குள் திடீரென எழும் புழுதி.

எஃறிப் பாயும் ஈட்டி முனைகள்.

புழுதியினூடு விட்டு விட்டு தெரியும் வீரனின் ஈட்டி ஓட்டங்கள்

விட்டு விட்டு தெரியும் துஷ்றிகியின் முகம்.

பாதங்கள், பாதங்கள், பாதங்கள் …………

உயரும் பாதங்கள், ஊன்றும் பாதங்கள் …….
கல்லில் இடறும் பாதங்கள், முள்ளில் துடிக்கும் பாதங்கள்

இறங்கி வரும் மேடுகள், உயர்ந்து செல்லும் பள்ளங்கள்.

ஓடி வரும் காடுகள், ஓங்கி வரும் ஓடைகள்

வெளி …. …. வெளி .. .. வெளி .. .. .. எல்லையில்லாத வெளி
பூமியை எல்லாப் புறமும் மூடுகின்ற வானம்.

மீண்டும் கால்கள், மீண்டும் மீண்டும் கால்கள்
ஓடும் கால்கள், ஓடி ஓடி ஓயாக் கால்கள்.

திரும்பிப் பார்க்கும் துஷ்றிகியின் முகம்.
திரும்பிப் பார்க்கும் தாத்மாவின் முகம்.

அண்ணார்ந்து பார்க்கும் தாத்மாவின் முகம்.
அண்ணார்ந்து பார்க்கும் துஷ்றிகியின் முகம்.

மேலே ஆகாயத்தில், இன்னும் பின்னணியில்
துரத்துவது போல் ஒரு ஹெலிகாப்டர் நிழல்

நீண்ட அங்கிகளினிடத்தில் நெடிய காற்சட்டையும் ஷேர்ட்டும், நீண்ட கூந்தல்களினிடத்தில் தோளில் துள்ளும் ஹிப்பித் தலைமுடிகள். ஹிப்பித் தலைமுடிகளினிடத்தில் குறுணியாய் போன நீக்ரோ சுருள் சிவப்புத் தோலினிடத்தில் கறுப்புத் தோல். இடைக்கிடை இந்தியத் தோற்றம்.

இடைக்கிடை சீனத் தோற்றம் … பட்பட்டென்று மாறும் பருவ காலங்கள் …. வெண்பனி வெளிகள் ….. வானுயர்ந்த காடுகள் … சகாராப் பாலைவனங்கள் … பொன்மணல் சரிவுகள் …. ஒட்டகை தொடர்கள் …. செம்மறி மேய்ச்சல்கள், ஸ்த்தெப்பிகள், கரைந்து வார்ந்தோடும் துருவப் பாளங்கள் …..

இன்னும் கால்கள், இன்னும் கால்கள், ஆள் மாறி, அடையாளம் மாறி, தேசம் மாறி, இனம் மாறி, இன்னும் கால்கள், இன்னும் கால்கள், இன்னும் பாதங்கள், இன்னும் பாதங்கள்.

இன்னும் அவர்களைத் துரத்தும் அந்த ஹெலிக்கொப்டர் நிழல்…..

ஓடிக் களைத்து இனியும் ஓட முடியாத நிலையில் நின்று, குனிந்து, தவழ்ந்து, அண்ணார்ந்து பார்க்கும் தாத்மாவும் துஷ்றிகியும்.

”அவன்தான் தொலைந்து போன கிரகவாசி இஸ்தாயூ. கிளைடர் விமானத்தில் பறக்கிறான். விமானம் இயங்க மறுக்கும் போது அல்லது அவன் இறக்க முற்படும் போது மிதக்கும் பலூன்களை பரசூட் மாதிரிப் பாவிக்கிறான்”

”இறங்கப் போகிறானா?”

”ஏதோ ஒரு ஆபத்துக்குள் நம்மை இறக்கப்போகிறான்”

திரை முழுதும் இருள்
இருளின் மெதுவான விடியல்
இன்னும் கருக்கல்
கருக்கலில் இருளோடு இருளாகத்
தெரியும் படிக்கட்டுகள்.
கீழிறங்கிச் செல்லும் படிக்கட்டுகள்
இருளோடு இருளாக கிணற்றுக்குள்
இறங்குவது போன்று இறங்கும்
இரண்டு உருவங்கள்.
கிணற்றின் அடிவட்டத்தினூடு கசியும்
மங்கல் ஒளி.
கிணற்றின் அடிவட்டத்திலிருந்து
அகல விரியும் அகவுலகு.
மங்கல் ஒளியில் வழிதேடும்
தாத்மாவும் துஷ்றிகியும்
வெள்ளைப் புற்களும் மெலிந்து
நீண்ட வெளிறிய மரங்களும்.
காளான் வயல்கள்.
சுண்ணாம்பு நீர்ச் சுனைகள்.
மின்மினி பூச்சிகள். மின்மினி மரவட்டைகள். இராட்சதப் பாம்புகள் போன்று ஊர்ந்து செல்லும் பாம்பு முகத்து மனிதப் பரிணமிப்புகள்.

”எங்கு வந்திருக்கிறோம்?”

”ஒரு பாதாளக் கிராமம்”

வெள்ளைப் புற்கள் மிதிபட மிதிபட நடக்கும் தாத்மாவும் துஷ்றிகியும் சுண்ணாம்பு நீர்ச்சுணைகள்!
சுண்ணாம்பு நீர்ச்சுணைகளைச் சுற்றி ஊர்ந்தூர்ந்து செல்லும் பாம்பு முகத்து மனிதர்கள்.

நீச்சல் குளங்கள்.
நீச்சலடிப்பது போன்றும் …. குஸ்த்தி
அடிப்பது போன்றும் ….
பாம்பு முகத்து மனிதர்களுடன் வேற்று முகத்து மனிதர்களும்

வேற்று முகத்து மனிதர்கள் பாம்பு முகத்து மனிதர்களினால்
மேலும் மேலும் நீருக்குள் அமிழ்த்தப்படுவது போன்று ….

வெள்ளைப் புற்களை மிதிக்கின்ற வேகமான பாதங்கள்
ஓடிச் செல்லும் சுண்ணாம்பு நீர்ச்சுணைகள்.
கரை ஒதுங்கி வரும் அழுகிய சடலங்கள்.
ஊர்ந்தூர்ந்து செல்லும் பாம்புகள் முகத்து மனிதர்கள்.
ஒவ்வொரு முதுகிலும் சவங்கள்.
நீண்ட முதுகுகள்.
இடுப்பில் வளைந்து முன்னோக்கி நீண்ட முதுகுகள்.

நீண்ட முதுகுகளை தோள் மூட்டில் தாங்குவதான சிறிய முன்னவயங்கள்.
உயர்த்திய கழுத்தில் முட்டும் பிணத்தின் தலை.
சவங்களின் உருளை ஊர்வலம்.
நீண்டு மெலிந்து வெளிறிய மரங்கள் கரையிட்ட சாலைகள்
இடையிடையே நீண்டுயர்ந்த குடைக்காளான்கள்
குடைக்காளன்களின் இடையிடையே தரிக்கும்
ஊர்ந்தூர்ந்து செல்லும் பாம்பு முகத்து மனிதரின்
நடைவண்டிப் பிண ஊர்திகள்
பிணவூர்திகள், பிணவூர்திகள்.

வெள்ளைப் புற்களை மிதித்து
நகரும் பிணவூர்திகள்.
ஊர்ந்தூர்ந்து செல்லும் பாம்பு
முகத்து மனிதர்களின்
நீண்ட முதுகுப் பிணவூர்திகள்

வெள்ளைப் புற்களைக் கடந்து
வரும் காளான் வயல்கள்.
காளான் வயல்களின் கருகிய
கோலங்கள்.
காளான் வயலில் சுண்ணக்
களிமண் சவப் புதையல்கள்

”எவ்வளவு தூரமோ இந்த
இடுகாடு?”

”இது இடுகாடல்ல.
எலும்புகளின் பண்ணை.”
வெள்ளைப் புற்களுக்கு பதில்
பொன்னிறப் புற்கள்

பொன்னிற மண், பொன்னிற வெளி.
பொன்னிறப் புற்கள், பொன்னிறக் கிடங்குகள்.

பொன்னிறக் கிடங்குகளில் தோண்டிய எலும்புப் புதையல்கள்.
எலும்புக் குவியல்கள், எலும்புக் குவியல்கள்,
மலை போன்ற எலும்புக் குவியல்கள்.
சுரங்கம் சுரங்கமாக எலும்பு வயல்கள்
எலும்புச் சுரங்கங்கள், எலும்புச் சுரங்கங்கள்
சுரங்கப் பாதையிலிருந்து இரும்புத் தண்டவாளங்கள்.
இரும்புத் தண்டவாளங்களில் எலும்புகளை ஏற்றிச் செல்லும்
இயந்திர வாகனங்கள்.
”இந்த தண்டவாளத்தின் வழியே நாம் தப்பிப் போகலாமோ?”

”அந்த எலும்பு ட்ரக்கில் கூட நாம் ஏறிக் கொள்ளலாம்”

மெல்ல மெல்ல ஊர்ந்து செல்லும் ரயில் ட்ரக் பெட்டிகள்.

சாம்பல் பொழுதை ஊடறுத்து, இமைப் புருவ மேட்டில் கை வைத்து, நீண்ட ரயில் ட்ரக் பெட்டித் தொடரின் ஓரமாய் கண்நோக்கும் துஷ்றிகியும் தாத்மாவும்.
தூர மெல்லிய, மங்கலான, வெண்புகை விட்டுச் செல்லும் வெண்ணிற எஞ்சின்.
கடைசி ட்ரக் பெட்டியில் கால் வைத்துக் தொற்றிக் கொள்ளும் துஷ்றிகியும் தாத்மாவும்

ஊர்ந்து செல்லும் சாம்பல் நிறப் பொழுதும்
ஊர்ந்து செல்லும் ரயில் ட்ரக் பெட்டிகளும்
மெல்லக் கடந்தோடும் மெலிந்து வெளிறிய நீண்ட மரங்கள்
வெள்ளை இலைகளுடன் அல்லது பொன்னிற இலைகளுடன்,
தூரத் தூர ஓடிவரும் மின்விளக்குக் கம்பங்கள்
ஊதா நிற ஒளிர்வுகள்
மெல்லக் கழிந்து, விட்டு விட்டு, இடையிடையே மெல்ல தோன்றி
மெல்ல மறையும் ஊதா நிற ஒளிர்வுகள்.

அடிக்கடி தோன்றும் ஊதாநிற ஒளிர்வு மின்விளக்குக் கம்பங்கள்.
நெருங்கி நெருங்கித் தோன்றும் ஊதா நிற மின் ஒளிர்வுக்
கம்பங்கள்
கொத்துக் கொத்தாய் தோன்றும் ஊதா நிற மின் ஒளிர்வுகள்.
கொத்துக் கொத்தாய் ஊர்ந்து வரும் ஊதா நிற மின் ஒளிர்வுகள்.

கொத்துக் கொத்தாய் சுழன்று வரும் ஊதாநிற மின் ஒளிர்வுகள்
கூடிக் கூடி வலம் வரும் ஊதாநிற மின் ஒளிர்வுகள்.
கூடிக் கூடி ஊர்ந்தூர்ந்து செல்லும் பாம்பு முகத்து மனிதர்கள்.
நெருங்கி நெருங்கி ஊர்ந்தூர்ந்து செல்லும் பாம்பு முகத்து
மனிதர்கள்.
பச்சை ஒளி சிந்தும் வாகனங்கள்
குபு குபு என புகை கக்கி வரும் வாகனங்கள்.
வாகனங்களிடையே ஊர்ந்தூர்ந்து நெருளும் பாம்பு முகத்து
மனிதர்.

”என்ன இது, இவ்வளவு திமுதிமுவும் ஒளிர்வுகளும்?”

”இது பாதாளத்தின் பட்டினப் பாக்கம். மெல்ல இறங்கி
கொள்வோம்”

கடைசி ட்ரக் பெட்டியின் கையளவு சிவப்பொளி.

கையளவு சிவப்பொளி தூரித்துத் தூரித்து கண் அளவு ஆகி, கடுகளவு ஆகும் வரை கருக்கலிடை கருங்கோடாக நின்று விட்டு, நகர்ந்து, தூரத்து ஒளிச் சிதறலில் முகம் திருப்பும் தாத்மாவும் துஷ்றிகியும்.

திடிரென ஒளி வெள்ளம். திரை முழுதும் ஒளி வெள்ளம். ஒளி வெள்ளத்தில் கண்கள் கூசி, கால்கள் தடுமாறி, முகத்தை கைகளால் பொத்தும் தாத்மாவும் துஷ்றிகியும்.

குரல்: இந்த கணத்திலேயே நான் உன்னை சுட்டுப் பொசுக்கியிருப்பேன், நான் இந்த கிரகத்துவாசியாய் இருந்திருந்தால். எனினும் இவ்வளவு தூரம் உன்னை கொண்டு வர முடிந்த எனக்கு உன் இறுதியையும் காணமுடியாமலிருக்க முடியாது.”

ஒளிக்கு முதுகு காட்டி ஓடும் தாத்மாவும் துஷ்றகியும். பக்கவாட்டு மேற்கோணத்திலிருந்து நகரும் ஒளி வட்டம், விரையும் ஒளி வட்டம், துரத்தும் ஒளி வட்டம், நீரில் நீந்தி முகம் திருப்புவது போல், ஒளியில் நீந்தி, இடைக்கிடை, கண்ணிமைக்கும் கணப்பின்னத்தில் மின்னல் வீச்சில் முகம் காட்டி, முகம் திருப்பி, ஒளியுள் மூழ்கும் தாத்மாவும் துஷ்றகியும்.

ஒளியின் பக்கவாட்டு வீச்சுக்கள்.
ஒளியின் தளம்பல்கள்.
ஒளியின் தடுமாறல்கள்.
ஒளியின் தேடல்கள்.
ஒளியின் தவிப்புகள்.

ஓடி ஓடி செல்லும் ஒளி. தூர தூரச் செல்லும் ஒளி. ஒளியின் மறைவிலிருந்து தலை நீட்டும் சாம்பல் நிறப் பொழுது. ஒளியின் கடைசிக் கண் சுருங்கலையும் நிமிர்த்தி நிரப்பும் சாம்பல் பொழுது. சாம்பல் பொழுதின் மங்கலில் தலைகாட்டும் கிடங்குச் சல்லடைகள். கிடங்குச் சல்லடைகளிலிருந்து கிளம்பும் தாத்மாவின் முகம், துஷ்றிகியின் முகம்.

கிடங்குச் சல்லடைகள், கிடங்குச் சல்லடைகள்.
மடங்கி வளைந்து, வளைந்து மடங்கி, மடங்கி வளையும்
சல்லடைகள்
மடங்கி, மடங்கி, வளைந்து வளைந்து தாழ்ந்து தாழ்ந்து,
இறங்கி இறங்கி செல்லும் கிடங்குச் சல்லடைகள்.
இறங்க இறங்க கவியும் இருள்.

எல்லாம் இருள், திரை முழுதும் இருள்.
வெறும் மூச்சுகள் மட்டும். – இருளின் மூச்சுகள்.

இருளின் மூச்சுகளிடையே பாதாளத்து உதயம்.
மீண்டும் கொத்துக் கொத்தான ஊதா ஒளிர்வுகள்
கொத்துக் கொத்தான ஊதா ஒளிர்வுகளிடையில்
முண்டியடிக்கும் ஊர்ந்தூர்ந்து செல்லும் பாம்பு முகத்து மாந்தர்
முண்டியடிக்கும் மாந்தர்களை முறைப்படுத்தும் இயந்திர மனிதர்
இயந்திர மனிதரில் முகமுள்ள சிலரும், முகமற்ற சிலரும்.
முகத்தை தலையில் கொளுவியோரும், கையில்
கொளுவியோரும்.

முகமற்ற மனிதரும், முகமற்ற முகமூடி மனிதரும்
இயங்காத முகமற்ற மனிதரும் இயங்குகிற முகமற்ற முகமூடி
மனிதரும்.
இயங்குகிற முகமூடியை கழற்றி இயங்காததாகச் செய்யும்
இன்னொரு இயங்கும் முகமூடி.

திடீரென மீண்டும் ஒளிவெள்ளம்.
திரை முழுதும் ஒளிவெள்ளம். சைறன் ஒலி.
ஒளி வெள்ளத்தில் கண்கள் கூசி, கால்கள் தடுமாறும்
தாத்மாவும், துஷ்றிகியும்
ஒளி வெள்ளம் நீங்க, சைறன் ஒலி தீர,
ஊதா ஒளிர்வில்,
சுற்றி வளைத்த முகமற்ற முகமூடி மனிதர்களுக்கிடையில்,
நிமிர்ந்து நிற்கும் ஆளுயரக் கழுகுக்கு நேருக்கு நேர்
துஷ்றிகியும் தாத்மாவும்.

ஆள் உயரக் கழுகு நேருக்கு நேர்.
செங்காவி நிற இறகுகளால் போர்த்த உடல்.
வெள்ளை பூஞ்சிறகுகளால் வேய்ந்த தலை.
மினுங்கும் பெரிய வட்டக் கண்கள்.
நீண்டு வளைந்த, வாய் அளவு அகன்ற பெரிய அலகு.
பாரிய செங்காவி நிற செட்டைகளின் மேல் இழுத்துப் போட்ட
பரசூட் பலூன்கள்
விலகிச் செல்லும் முகமற்ற முகமூடி மனிதர்.
அலகு திறவா கழுகின் மனிதக் குரல்.

”என் பெயர் சடாயூ”
”அல்ல. இஸ்த்தாயூ”
”எதுவானால் என்ன?”
”நீ தொலைந்து போன கிரகவாசி.”

”நான் ஏன் தொலைந்து போனேன்? எந்த நிலமைகள் உன்னைப் போன்ற அண்டவெளி மனிதர்களை உருவாக்கியதோ, அதே நிலைமைகள்தான் என்னைப் போன்ற தொலைந்து போன கிரகவாசிகளையும் உருவாக்கியது.”

”நான் அண்டவெளி மனிதன் அல்ல.
”நீ அண்டவெளியின் அண்டவெளி. நீ கலகக்காரர்களின்
கலகக்காரன்.
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நீ மீட்பாய் என நான் நம்பினேன். உன்னையே நீ மீட்க முடியாமல் மாட்டிக் கொண்டு
அவஸ்த்தைப்பட்டாய்.
உன் அவஸ்த்தைகளே பெரும் அவஸ்த்தைகளாயிற்று.
உன் பாடுகளே பெரும் பாடுகளாயிற்று.
உன் பாடுகள் உன்னை மீட்பராக்கியது.
உன் பாடுகள் உன்னை விடுதலையோடு இணைத்தது
உன் பாடுகள் விடுதலையின் சங்கேதமாயிற்று
உன் பாடுகள் விடுதலையின் சங்கீதமாயிற்று
உன் பாடுகள் விடுதலைப் போராளியின் பாடுகளுக்கு உயர்ந்தது
நீ விடுதலையின் சின்னம் ஆனாய்.
அந்தச் சின்னத்தை அழிக்கவே நான் சிறகு கட்டினேன்.
வாக்கு பண்ணப்பட்ட தேசத்தை மீட்காது மாட்டிக் கொண்ட நீ
எப்படி விடுதலையின் சின்னம் ஆகலாம்?”

செங்காவி இறகுச் செதில் போர்த்திய ஆளுயரக் கழுகின் கால்கள் நகர்ந்தன. முக்காலிப் பாதத்தின் குறடுகள் தெரிந்தன.

பாரிய செங்காவி இறகுச் செட்டைகள் சற்று உயர்ந்து லேசாய்
விரிந்தன.
செட்டையின் ஓரம் உள்ள ஐவிரல் நீட்டங்கள் அசைந்தன.
பக்கத்தில் இருந்த முகமற்ற மனிதனைப் பற்றி இழுத்தன.
முகமற்ற மனிதனின் கையில் கொளுவியிருந்த முகமூடி
தலைக்கு மாறியது.
தொலைந்து போன கிரகவாசியின் செட்டையின் ஓரத்து ஐவிரல்
நீட்டங்கள்
முகமற்ற மனிதனின் சில பொத்தான்களை அழுத்தின.

முகமற்ற மனிதன், முகமற்ற முகமூடி மனிதன் ஆகி உயிருறல் தெரிந்தது. தாத்மா கழுகின் செட்டையைப் பற்றினாள்.

” என்ன செய்யப் போகிறாய்? ”

” நாற்பது வெள்ளிக் காசுக்காக நான் இதைச் செய்யவில்லை.
நாற்பது கோடி ரூபாவுக்காகவும் நான் இதைச் செய்யவில்லை,
எதிரும் புதிருமான இயங்கியலில் துஷ்றிகின் வேலையை துஷ்றிகி செய்தால் என் வேலையை நான் செய்கிறேன் …….

உயிர் பெற்ற முகமற்ற முகமூடி மனிதனின் கண்களிலிருந்து பச்சை ஒளிக்கதிர் அவனுடைய கைவிரல் பொட்டுகளும் ஒளிர்ந்தன. கால் விரல் பொட்டுகளும் ஒளிர்ந்தன. முகமூடியில் கணணியின் திரை தெரிந்தது. திரையின் சதுரத் தீர்வில் துஷ்றகியும் தாத்மாவும் தெரிய, அந்த இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்கும் முகமற்ற முகமூடி மனிதன்.

தாக்குதலுக்குத் தயாராகும் துஷ்றிகி

முகமற்ற முகமூடி மனிதனின் பின்னால் பாயும் தாத்மா.

முகமூடி தளர நிலை தளம்பும் முகமற்ற முகமூடி மனிதன்.

துஷ்றிகியை இழுத்துக் கொண்டோடும் தாத்மா.

இடையில் பாயும் ஆளுயரக் கழுகு.

ஆளுயரக் கழுகின் நெஞ்சில் உதைக்கும் துஷ்றிகி.

கவிழ்ந்து விழும் ஆளுயரக் கழுகு. விழுந்த நிலையில், மின்னல் வேகத்தில் துஷ்றிகியின் பாதங்களைப் பின்னும் கழுகின் பாதங்கள்.

நிலை தளர்ந்து விழும் துஷ்றிகி.
துஷ்றிகியின் பாதங்களை மேலும் இறுக்கும் கழுகின் பாதங்கள்.

கழுகின் பாதங்களை அகட்டிப் பெயர்க்கும் தாத்மாவின் கைகள்.

கழுகின் பாதங்களை அகட்டி அகட்டி மேலும் அகட்டி இழுக்கும் தாத்மா.
தாத்மாவின் கையோடு வந்து விடும் கழுகின் காலணிகள்.

நான் உஷாரானேன். கழுகின் காலணியை, தொலைந்து போன கிரகவாசியின் காலணியை, இதோ கண்முன் காண்கிறேன். சற்று மங்கலாக இருக்கிறதே என நினைக்கையில், மீண்டும் இயங்கத் தொடங்கிய முகமற்ற முகமூடி மனிதனின் கட்புள்ளி ஒளிர்க்கதிர்கள் காலணியில் தெறித்தன.

உடனே நான் MWG இன் கறுத்த நீல பொத்தான்களை அழுத்த MWGஇன் வெளியீடு வழியாக காலணியின் புகைப்படம் விழுந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.

துள்ளிக் குதித்தேன்.

உடனே அவரிடம் ஓடிப் போனேன்.

இரண்டு புகைப்படங்களையும் அவர் முன் வைத்தேன். ”எப்படியும் கண்டு பிடித்தே தீருவேன் ” என்று சூளுரைத்தவாறு வெளியில் வந்தேன்.

வெளியில் நிலவு. பால் நிலவு. பகல் போன்ற நிலவு. பயங்கரிக்கும் நிலவு. கனவுகளில் காண்பது போன்ற நிலவு.

பயமாகவே இருந்தது. பயத்தை மீறும் கவர்ச்சியும் இருந்தது.
கிணற்றுக்கும் மாமரத்துக்குடையில் நடந்து, பின் மதிலின் மேலாகத் தெரியும் கோயில் வெளியைப் பார்த்தேன்.

வெள்ளை மணலுக்கும், கண்கூசும் நிலவுக்குமிடையே கலக்கும் மெல்லிய பனிப்புகார் ஊடே ஆவிகள் திரிவது போன்ற ஒரு பிரமை என்னை துணுக்குற வைத்தது. எனினும் வெறும் பிரமைதானே என சிலிர்க்கும் பயத்தை அடக்கிக் கொண்டு, கோயில் ஆலமரங்களின் இருட்கூடாரத்தைப் பார்த்தேன்.

கோயில் ஆல மரங்களின் இருட் கூடாரத்துள் புக முடியாமல், நிலவுக் கதிர்கள் முறிந்து தெறிந்தன. திடீரென ஆலமரங்களின் கீழே அடர்ந்திருந்த நிழலினுள்ளிருந்து அந்த கல் எறியும் சத்தம் –

” சலார் …. … ச-லா-ர் …. ”

மரங்களுக்கு மேலே, வானில் கரும் புள்ளிகள் உயர்ந்தன. உயர்ந்த கரும்புள்ளிகள் ஒரு கணம் வானில் உறைந்தன. உறைந்தவை உறைந்த நிலையில் – எனக்கு திக் என்றது. உறைந்தவை மீண்டும் சலனமுற்று ஆலமரத்து மேற்பரப்புகளின் இருளுக்குள் இறங்கிப் புதைந்தன. மீண்டும் அந்தக் கல் எறி.

”சலார்… …. ச-லா-ர் …..

”அத்தான்! ” என் ஆவி துடித்தது.

மீண்டும் ஆலமரத்திலிருந்து, ஆலமரத்துக்கு மேலே, வானில் கரும்புள்ளிகள் உயர்ந்தன. எனினும் இந்த முறை உயர்ந்த கரும் புள்ளிகள் உறையவில்லை. உயர்ந்த கரும் புள்ளிகள் வானமெங்கும் பரந்தன. ஒவ்வொரு கரும் புள்ளியிலிருந்தும் ஒவ்வொரு வௌவால் வடிவம் விரிந்தது. மூஞ்சுறு வௌவால் அளவிலிருந்து காக்கை வௌவால் அளவுகள் தோன்றின. என் கண்கள் விரிந்த அளவுக்கு வௌவால்களின் அளவுகளும் விரிந்தன. விரிந்த பெரிய குரங்கு வௌவால்கள். வானமெங்கும் குரங்கு வௌவால்கள்.

எனக்கு ஏற்பட்ட திகிலில் நான் ஓடினேன். மாமரத்துக்கும் கிணற்றுக்குமிடையில் ஓடி, மண்டபத்தினுள் பாய்ந்து, அவருடைய அறைக்குள் எட்டிப்பார்த்தேன். அவர் இன்னும் எழுதிய படியே .. .. .. ..

”அத்தான் …. ஏன் அத்தான் உறங்குகிற அந்த வௌவால்களுக்கு உங்களவர்கள் கல் எறிய வேணும்?”

வௌவால்கள் உறங்கத்தான் வேணும். ஆனால் கோயில் ஆலைகளில் அல்ல. கோயில் ஆலைகளில் வௌவால்கள் உறங்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அவை அங்கு தொங்கவும் கூடாது. வௌவால்கள் உறங்குவது பகலில்தான். இரவில் அல்லவே! ”

அந்தக் குரலின் வன்மத்திலும், உறுமலிலும் கதவுத் திரைச் சீலை அதிர்ந்து நெளிவது போலிருந்தது. பூச்சூடிய படத்திற்குக் கீழிருந்த சிவப்பொளிர் விளக்கில் நெளிந்த சுடர்உரு. இன்னும் சற்று அதிகமாக நடுங்கித் துடிப்பது போலுமிருந்தது. அந்தக் குரல் என் செவிக்குள் இருந்ததா, என் மிடறுக்குள் இருந்ததா, புரியவில்லை. என்னுள் புகுந்த ஆவியின் குரலா, என்னுள் வாழும் ஆவியின் குரலா என்பதும் தெரியவில்லை. நிலவின் பனிப்புகாருக்குள் உலவிய ஆவிகளின் நினைவில் உடல் சிலிர்த்தது.

இரண்டாவது டிஸ்க் ஓடிக் கொண்டிருந்தது.

பரந்த நிலப் பரப்பின் வெளி எங்கும் குண்டுகள் வெடித்தன. வெடிக்கும் குண்டுகளிடையே தாத்மாவும் துஷ்றிகியும் புகுந்து புகுந்து போகப் போகக் குண்டுகள் வெடித்தன. தூரத் தூரத் தொடர்ந்து, குண்டுகள் வெடித்துக் கிளம்பிய குமுறல்கள் ஒவ்வொரு வெடிப்பிலும் வானுயர மண்ணும் கல்லும், ஒவ்வொரு வெடிப்பிலும் ஒவ்வொரு கிணறு.

ஏவுகணைகள் நெருப்பை கக்கின. வானம் தீப்பிடித்தது. விமானங்கள் தீப்பிடித்தன. கப்பல்கள் தீப்பிடித்தன. கடல்கள் தீப்படித்தன. பாட்டம் பாட்டமாய் விட்டில் பூச்சிகள் விளக்கில் வீழ்ந்தன. பாட்டம் பாட்டமாய்.

அகதிப் பூச்சிகள் சிறகு முளைத்து தெருவில் அலைந்தன.

R U W A N D A எழுத்துக்கள் …. அழுக்குப் படிந்த வெள்ளைக் கொங்கிறீற் பாளம். பாளத்தை ஏந்தும் கொங்கிறீற் தூண்களின் ஓரம் நீண்டுயர்ந்த புற்களின் மஞ்சள் நிறப்பூக்கள்.

அலைமோதும் நீக்கிரோ அகதிகள்.
பூஞ்சணம் பிடித்த முகங்கள்.
கூட்டம் கூட்டமாய் உயிர் தப்பி ஓடும் மான்களின் கூட்டம்
கூட்டம் கூட்டமாய் உயிர் தப்பி ஓடும் மனிதரின் கூட்டம்
கூடாரம் கூடாரமாய் அடைந்த ஆடு மாடுகள்.
கூடாரம் கூடாரமாய் அடைந்த மனிதர்களின் கூட்டம்.
கூடாரங்களில் மனிதர்களை ஆற்றுப் படுத்தும் தாத்மா துஷ்றிகி.

ஜோஜ் புஷ்ஷின் நீண்ட உருவப் படம்.
கல் எறியும் கைகள்.
பொத்தல் பொத்தலாய் ஜோஜ் புஷ் பொந்துபோகும் நிலை
நீண்ட பதாகைகளும் கருந்தலைச் சமுத்திரமும்.

”HANDS OFF IRAQUE” பதாகையை தாங்கியபடி தாத்மாவும் துஷ்றிகியும்.

புரண்டு கிடக்கும் ரயில் பெட்டிகள்.
பழுப்பு நிற ரயில் பெட்டிகளில் மங்கலாய் போன வெண்ணிற எழுத்துக்கள்
Y U G O S L A V I A … …. …. Y U G O S L A V I A

Y U G O S L A V I A ஐ வெட்டிய கரிக்கோடுகள்.
பக்கத்தில் அதே கரியால் எழுதிய LONG LIVING SERBIA கோஷம்.
ரயில் பெட்டிகளைக் கடந்து வரும் படையினர்.
படையினரின் மார்பில் நேரே UNO PEACE KEEPING FORCE என்ற பட்டி.

UNO PEACE KEEPING FORCE எழுதப்பட்ட வாகனங்கள்
UNO PEACE KEEPING FORCE வாகனங்களைச் செலுத்தி வரும் தாத்மாவும் துஷ்றிகியும்.

உடைக்கப்பட்ட லெனினின் சிலை.
கரிக்கோடு வெட்டிய ரஷ்ய எழுத்துப் பெயர்ப் பலகை.
குப்பைத் தொட்டியில் கிடக்கும் கோபச்சேர்வின் உருவப் படம்.
நியோன் விளக்கில் மினுங்கும் போரிஸ் யெல்ட்ஸ்ரனின் இருவிரல் புன்னகை.
இருளில் முன்னேறிச் செல்லும் கவச வாகனங்கள்.
இருளிலேயே தகரும் கவச வாகனங்கள்.
புதர் மறைவில், நிலவொளிக் கீற்றுக்களில் வயர்களைப் புதைக்கும் துஷ்றிகி.
வாக்கி ரோக்கியுடன் உதடுகளும் கண்ணும் நெற்றியும் மாத்திரம்
நிலவுக் கீற்றுக்களில் நிழலாடும் தாத்மா –
”ஹலோ, ஹலோ, கோளிங் செர்ச்சினியா மௌண்ரன் …..”
வாக்கியோடு பதிந்த தாத்மாவின் உதடுகள்.

சீக்கிய தாடியும் தலைப்பாகையும்.
இந்திய யுத்தத் தாங்கிகள்.
உறைபனி படர்ந்த வயல் வெளி.
இந்தியப் படைகளின் பங்கர் நிலைகள்.
எல்லைப்புற முட்கம்பி வேலிகள்.

துப்பாக்கிச் சூடு பட்டவனைத் தூக்கி ஓடும் கும்பல்
தூரத்தில் கோஷம் ”KASHMIR FOR KASHMIRIS”
கும்பலில் மறைந்து துண்டு துணியாக தாத்மாவினதும் துஷ்றிகியினதும் முகங்கள்.

எரியும் கடல் – விரையும் படகுகள் = சுழலும் விமானங்கள்.
நெருப்புக்குள் நெருப்பாக தெரியும் துஷ்றிகின் முகம்
எரியும் கப்பலின் இறுதித் தளம்.
”கப்பலுடன் உட்ஸ்கி, கடலில் பாய்வோம், படகு காத்திருக்கிறது
”இந்த கப்பலோடு சாம்பலாவேன். கடலில் குதிப்பதற்கு ஆணை இல்லை.”
”THE BOY ON THE BURNING DECK”
”Yes அதற்கும் இந்தக் கழுகுகள் என்னை விடப் போவதில்லை. ஆனால் என்னை உயிருடன் அவர்கள் நெருங்க நான் விடப் போவதுமில்லை.

”மாவீரன் உட்ஸ்கி !”

”அது என் மரணத்தின் பின் பேசப்பட வேண்டியது. நீங்கள் புறப்படுங்கள். நெருப்பு இன்னும் சூழ முதல் வெளிப்புறமாகவே ஒட்டி இறங்கிப் பாயுங்கள்.”

இருள். திரை முழுதும் இருள்.
கலங்கல். கலங்கலில் தெரியும் கடல்.
கடல், கடல், திரை முழுதும் கடல்.
கடலினுள் நீர்மூழ்கி, நீர்மூழ்கியினுள் மின்மினிகள்.
குகைப் பயணம், கொம்பியூட்டர் கருவிகள்.
தூரத்து ஒலி விம்பல்கள்.
அலை மேற்பரப்புக்கள், அலைகளின் மேற்பரப்பு சந்திரோதயம்
சந்திரோதயச் சிதறலில் படகுப் பரிமாற்றம்
அலைகளின் நடுவே படகுகள். கரை ஒதுங்கும் படகுகள்.
உதய சூரியனின் செவ்வொளிப் பந்து உஷாவின் கிரணங்கள்.
கடலோரத் தென்னைகள். கடந்துசெல்லும் கரையோர
மணல்வெளி
எழுத்தாணிப் பூண்டுகள், இராவணன் மீசைகள். அடம்பன்
கொடிகள்
பின்னும் மணல் வெளி, பெரிய மணல் வெளி.

தாழை மரங்கள், நிரையான தாழை மரங்கள், நீண்ட
நிரைத்தாழை.
ஓடை, நீண்டு நெளியும் ஓடை, தாழை நிரைகளுக்கூடான ஓடை
ஓடையின் வழியே நடக்கும் இருசோடிக் கால்கள்.
ஓடை அகன்ற தடாகம். தடாகம் அகன்ற சிற்றேரி.
சிற்றேரி அகன்ற கடலேரி. கண்படுவரை நீள் கடலேரி.
கடலேரியின் இரு கரையையும் இணைத்த கற்கட்டுச் சாலையின்
கற்றூண் நிரைகள்.

”அடே! ” அதிசயத்துக்கு அளவில்லை MWG ஐ ஸ்டில் ஆக்கினேன்.

”அத்தான், இது நம்ம, நம்ம .. .. .. கல்லிடையாற்றங்கரைதானே?”
வானம் பொத்து மின்னல்கள் தெறித்தன. மேசையில் முட்டினேன்.

”ங்காஆ, ஓம், ஓம், அப்படித்தான் தெரியுது”

தட்டித் தடவிக் கொண்டு ஆச்சி வந்து நின்றாள். மீண்டும் MWG-ஐ சலனமுறச் செய்தேன். அது கலிடையாற்றங்கரைதான். சிற்றேரித்தடாகத்தினுள், அதன் ஸ்படிக நீரை ஊடறுத்துக் கற்பாறைகள் தெரிந்தன. எங்கெல்லாமோ சென்ற தாத்மாவின் நினைவுப் பாதை எங்களது கல்லிடையாற்றங்கரையையும் ஊடறுத்திருப்பது பெரிய பாக்கியமாகவே பக்தி கொள்ளச் செய்தது. சந்தேகமில்லை. கல்லடையாற்றங்கரைதான். பிரதான சாலையிலுள்ள வீடுகளைக்கூட அடையாளம் கண்டேன்.

மீண்டும் ஓடையும் தாழைமரங்களும்.
ஓடையினூடாக, தாழை மரங்களின் கீழாகச் செல்லும் பாதங்கள்.
பாதங்கள் முன்சென்ற திசைக்கு எதிர்த்திசை.
ஓடை முடியத் தோன்றும் பொட்டல் வெளி.
பற்றைகளும் பாடசாலைக் கூரைகளும்.
காட்டு வீதி வளைவு மூலையின் காஞ்சிரை மரம்.
மரமுந்திரிகைகளின் நிலம் சார்ந்த கந்துகள்.

காட்டு வீதியின் வளைவு நெளிவுகளுடே தெரியும் பிரதான வீதி. இவைகளுக்கிடையேயுள்ள எத்தனையோ மரமுந்திரிகைக்
கூடாரங்கள்.
எத்தனையோ மணல் மேடுகளும் மணல்மேடுகளுக்கிடையே வளைந்து நெளியும் பள்ளப்பாடுகளும்.
பள்ளப்பாடுகளிலும் மணல் மேடுகளிலும் பரவித்
தலையசைக்கும்
தவிட்டு நிறப் புற்களும் செங்களனி, வெண்களனிப் பூக்களும்.

”இது கல்லிடையாற்றங்கரை, இது கல்லிடையாற்றங்கரை” ஆச்சியும் உரத்துக் கூறினாள்.

வானத்து நிலவு.
பார்த்துத் திரும்பும் தாத்மாவின் மங்கலான வட்டமான முகம்.
மீண்டும் நிலவைப் பார்க்கும் தாத்மா. நிலவோடு தெரியும் கடல்.
நிலவிலிருந்து திரும்பி இன்னொரு புறம் நோக்கும் தாத்மா.
நிலவில் மங்கலாகிப் போன மரமுந்திரிகைக் கிளைகள்.
நிலம் வழியக் கிடக்கும் மரமுந்திரிகைக் கிளைகளின் கூடாரம்.
மரமுந்திரிகைக் கூடாரத்தின் ஓரமாய் இன்னொரு கூடாரம்.
கூடாரத்துக்குச் சற்றுத் தள்ளி பல குடிசைகள் குடிசைகளின்
ஒளிப்பொட்டுகள்.
குடிசைகளைக் கடந்து கூடாரத்தை நோக்கி நடக்கும் தாத்மா. நிலவில், மணலில், கருந்தலைகள்.

கருந்தலைகள் உள்ளிருந்து எழும் துஷ்றிகி.
துஷ்றிகியோடெழும் கருந்தலைகள். நிலவை நோக்கும் மங்கல்
முகங்கள்.
கை குலுக்கல்கள், கையசைப்புகள். பிரிந்து செல்லும்
கருந்தலைகள்.
தனித்து வரும் துஷ்றிகியின் மங்கலான முகம்.

கூடாரத்தின் வாசலில், லந்தன் லாம்பு விளக்கொளியில் தாத்மா.
தாத்மாவைக் கடந்து உள்ளே செல்லும் துஷ்றிகி.
உள்ளே நடுவில் பெரிய மேசை. சுற்றிலும் கதிரைகள்.
பின் மூலைகளில் சிறிய மேசைகள், சமையல் பாத்திரங்கள்.
உணவு பாத்திரங்க்ள். லந்தன் விளக்கை எடுத்து, லந்தன் விளக்கில் முகம் சுடர
உள்ளே வரும் தாத்மா.

வெளியே வரும் துஷ்றிகி. துஷ்றிகியின் பக்கம் பார்த்தவாறே
உணவை பாத்திரங்களில் எடுக்கும் தாத்மா.
அண்ணார்ந்து பார்க்கும் துஷ்றிகி.
கூடாரத்தின் நெற்றியினூடு தெரியும் நிலவுப் பாளம்.
உணவை எடுத்து மேசையில் வைத்து..கூடாரத்தின் முன்
நடுக்கம்பத்தின் ஓரம்
துஷ்றிக்குப் பின்னால் நிற்கும் தாத்மா.

நிசப்தமாய்ப் போன நிலவும், மரமுந்திரிகைக் கூடாரங்களும்,
மணல் மேடுகளும், பள்ளப் பாடுகளும், இடுகாட்டுப்
பூஞ்செடிகளும்.
மரமுந்திரிகைக் கூடாரங்கள்!
வெளியில் இலைகளில் மினுங்கும் நிலவு நெய்.

உள்ளே கொதுப்பும் இருட்குவியல்.
மணல் மேடுகளுக்கும் மரங்களுக்கும் அப்பால் நிலவு போர்த்திய
இருட்குகை.

”என்ன துஷ்றிகி, இரவின் நிச்பதத்தை ரசிக்கிறாயா?”

”இரவின் பயங்கரத்தை அனுபவிக்கின்றேன். அந்த மணல் மேடுகளுக்கும் மரங்களுக்கும் கீழே, அடுத்த பக்கத்தில் ஓடும் பிரதான சாலையில் ஒரு சிவப்பு வெளிச்சம் தெரிந்தது.”

”சாலையில் வாகனங்கள் சகஜம்”

”சகஜமான வேளையில் சகஜம். சகஜமல்லாத வேளையில் அபாயம்”

இருட்டு. மங்கலான இருட்டு. திரை முழுதும் மங்கலான இருட்டு. கலங்கல். நிலவின் கலங்கல். திரை முழுதும் நிலவின் கலங்கல். கலங்கலிடையே ஒரு ஒளிப்பொட்டு. அடுத்தடுத்து இரு
ஒளிப்பொட்டுகள்.
முன் பின்னாகத் தெரியும் ஒளிப்பொட்டுகள்.
மாறி மாறி பின் முன்னாகத் தெரியும். ஒளிப் பொட்டுக்கள்.
ஒரு ஒளிப் பொட்டுத் தெரிந்த இடத்தில் ஓர் அரைச் சற்று
ஒளிப்பொட்டுகள்
மறு ஒளிப் பொட்டின் இடத்திலும் அதே அரைச் சுற்று ஒளிப்
பொட்டுகள் கரிய உருவங்கள்.
இரண்டு அரைச்சுற்று ஒளிப் பொட்டுகளினதும் தாளலயத்தில்
இடம் பெயரும் கரிய உருவங்கள்.
கூடாரத்தை முன்னோக்கி நடந்து வரும் ஒற்றைக் கரிய உருவம்.
கரிய உருவத்தின் காற்பாதங்களின் விரல் பொட்டுகளில்
மினுங்கும் ஒளிச்சரம்.
கட்புள்ளிகளிலிருந்து பாயும் பச்சை ஒளியின் விரிகதிர்!
நிலவில் புலனாகும் பனிப்புகார் படலங்கள்.
படலத்துள் படலமாய் உருவற்றொலிக்கும் மெல்லிய
காற்றோசை.
பட்டும் படாமலும் கேட்கும் கடலின் மெல்லிய அலையோசை.

ஓசையுள் ஓசையாய் உதிரும் சொற்கள்.

”மீண்டும் முகமற்ற முகமூடி மனிதர்கள் …..”

”கல்லிடையாற்றங்கரையில் அவர்களைக் காணுகின்ற காலம்…”

மெல்லிய பனிப்புகாரிலிருந்து அடர்ந்த பனிப்புகார்.

மெல்லிய காற்றோசையிலிருந்து உறுமும் காற்றோசை
நிலவின் பனிப்புகாரினூடு மங்கலாய் தெரியும் கரிய உருவம்.
சடுதியாக உருவம் திரை முழுதும்.
உறுமும் காற்றூடே ஓங்கி விழும் கோடாரி.
இரும்புகளின் உச்சரிப்பு.
எஃகுகளின் இடிமுழக்கம்.
கூடாரத்தின் வாசலில் குறுக்காகக் கிடக்கும் முகமற்ற
முகமூடிமனிதன்.
உயருகின்ற லந்தன் / கோடாரியுடன் லந்தனை உயர்த்தும்
துஷ்றிகி.
முகமற்ற முகமூடி மனிதனின் முகமூடியை பிய்த்ததெறியும்
தாத்மா.
தலை வேறாய் உடல் வேறாய் கிடக்கும் கருநாகம்.
துடிக்கும் வால்.

கருநாகத்தின் துடிக்கும் வால்.
முகமற்றுப்போன முகமூடி மனிதனின் துடிக்கும் பாதங்கள்.
துடிக்கும் பாதங்களின் ஒளிரும் விரல் பொட்டுகள்.
ஒளிரும் விரல் பொட்டுகளில் உயிர்க்கும் பாதங்கள்.
உயிர்க்கும் வாலை உயர்த்தும் கருநாக முண்டம்.
உயிர்க்கும் பாதங்களை உயர்த்தும் முகமற்ற முகமூடி முண்டம்.
உயர்த்திய பாதங்கள் மீண்டும் மண்ணை உதைக்கும் பாதங்கள்.
சுற்றிச்சுற்றி மண்ணை தொட்டுச் சுழலும் பாதங்கள்.

கால் வட்ட்ம, அரை வட்டம், முக்கால் வட்டம் ….

முக்கால் வட்டத்தைத் தொட்டபடி கிடக்கும் முகமூடி ….
முகமூடி காலில் முட்டியதும் முதுகை நிமிர்த்தும் கருந்தேள்.
இராட்சத நண்டின் இராட்சத இடுக்குங்கால்.

இரண்டு பாதங்களும் இணைந்த இடுக்குங்கால்.
இடுக்கங் கால்களால் இழுக்கப்படும் முகமூடி
இடுக்கப்பட்ட முகமூடியுடன் உயிர்தெழுந்த கால்கள்.
உயிர்த்தெழுந்த கால்கள் வளைந்து தலையை தொடும்
உயிர்ப்பாசனம்.
உயிர்ப்பாசனத்தில் திமிறிக் கொண்டு உயிர்த்தெழும் முகமற்ற
முகமூடி
உயிர்த்தெழுந்த முகமூடியின் விரல்களை உமிழும் தீப்பொறி.
தூக்கிய கோடாரியுடன்
துஷ்றிகியை இழுத்துக்கொண்டோடும் தாத்மா .. .. ..

ஓடிவரும் மணல் மேடுகள்.
ஒதுங்கிக் கழியும் பள்ளப்பாடுகள்.

எழுந்து வரும் மரமுந்திரிகை இருட் கூடாரங்கள்
இருட் கூடாரத்தின் இருளோடு இருளான
தாத்மாவும் துஷ்றிகியும்

இருள். இருள். திரை முழுதும் இருள்.

சிறிது சிறதாக கலங்கல்.
வட்டமான சிறிய ஒளிப் பொத்தல்கள்.
இலைகளின் வெள்ளிக் கோடுகளில் வெள்ளி மினுக்கம்.
கிளையில் குத்தும் நிலவுக் கோட்டில் தெரியும் கை விரல்கள்.
பெருமரத்தின் கறுத்தப் பட்டையில் விழும் நிலவுப் பொட்டில்
ஒரு குதிகால் ஓரம்.
அடுத்த கிளையில் விழும் நிலவுப் பொட்டில்
ஒரு கையின் மணிக்கட்டும் மணிக்கூடும்.
திரை முழுதும் இலைகளுக்கிடையே நிலவுத் துளைகளின்
சல்லடை.

நிழல் உருவாய் தாத்மாவின் அசைவுகள்.
முகத்திலும் உடலிலும் நிழற்கோடுகள்.

நிலவு மங்கலில் மணல் மேடுகளும் பள்ளப் பாடுகளும்.
முகமற்று முகமூடி மனிதர்களுக்கிடையே
ஆளுயரக் கழுகு, கெந்தி கெந்தி
செட்டை நீக்கி, திசைகாட்டும் ஆளுயரக் கழுகின் கை.

நிலவுப் பொட்டுகளிடையே உரசும் இலைகளின் ஓசை.

”துஷ்றிகி, கல்லிடையாற்றங்கரையில் முகமற்ற முகமூடி மனிதர்கள் தனியாக வரவில்லை. தொலைந்து போன கிரகவாசியின் துணையுடன்தான் வந்திருக்கிறார்கள்”

”கவனம், சுடப்போகிறார்கள். உன்னை நீ காப்பாற்றிக்கொள்”

நிலவில் நீளும் துப்பாக்கிகள்
சடசடக்கும் ஒலிகள். தவிடுபொடியாகும் ஒலிகள்
திசை முழுதும் இலைப் பொத்தல்கள்.
பறந்து போகும் இலைகள். ஒடிந்து விழும் கிளைகள்.
மரத்தை இறுகப் பற்றிய உடும்பு
கைகளிலும் பொத்தல், கால்களிலும் பொத்தல்.
விலாவிலும் பொத்தல்
தலையில் சிராய்வுகள்
எனினும் பிடி தளரா உடும்பின் சிலுவையேற்றம்.

மரத்திற்குப் புறம் காட்டும் முகமற்ற முகமூடி மனிதர்கள்.
வேறு மரங்களைச் சுற்றிவரும் ஆளுயரக் கழுகு கெந்தி கெந்தி.

இருளுக்கும் நிலவுக்குமிடையில்,
மரங்களுக்கும் புதர்களுக்கு மிடையில்
துஷ்றிகியைச் சுமந்து செல்லும் தாத்மா.

மங்கல், மங்கல், திரை முழுதும் மங்கல்.

மங்கல் திரையை மறுபடியும் பிளக்கும் வேட்டொலிகள்.

மங்கலுக்குள் மங்கலாக வேலியூடே வழி எடுத்து
துஷ்றிகியை இன்னும் தூக்கிச் செல்லும் தாத்மா.

மங்கல், வெறும் மங்கல்.
தூர ஒலிக்கும் துப்பாக்கி வேட்டுகள்.
நிலவின் மர நிழல்களுக்கிடையில் தொங்கும் உருவமும்

தூக்கிச் செல்லும் உருவமும்
மங்கலாக உடைந்த ஒரு கட்டிடம்
உடைந்த கட்டிடத்துள் தூக்கிய உடலுடன் புகுந்து புறப்படும்
உருவம்.

கிணறும் வாழைகளும்.
கிணற்றுக்குப் பக்கத்தில் உடைந்த கட்டிடத்தின் நெற்றிமுட்டு.
நெற்றிமுட்டு சுவரோடு இணைந்து நிலத்துள் பதிந்த தொட்டிகள்.
கல்லறை போன்ற தொட்டிகள்.
தொங்கும் துஷ்றிகியுடன் கல்லறையுள் இறங்கும் தாத்மா.
நிலவு மங்கலில் நீட்டி நிமிர்ந்து கல்லறையினுள் துயிலும்
துஷ்றிகி.
உடைந்து கிடக்கும் கதவை உருட்டிப் புரட்டும் தாத்மா.
கல்லறையை ஒருக்கணித்து கட்டிடத்தின் நெற்றிமுட்டில் சாயும்
கதவு.
அடுத்த தொட்டி விளிம்பில் அமரும் தாத்மா.
எழுந்து நடக்கும் தாத்மா.
நிலவின் மங்கலில் மரங்களின் நிழல்களுக்கிடையில் ஓடிச்
செல்லும் தாத்மா.
உடைந்த வேலி. உடைந்த வேலியின் ஓரம் தெரியும் கோடாரி
மினுக்கல்.
கோடாரியை எடுத்து, புதர்களைக் கடந்து … .. ….
கல்லறையில் காவல் இருக்கும் தாத்மா.
கோடாரி, கோடாரி, கதவில் சார்த்தியிருக்கும் கோடாரி.
சட்டென ஒளிரும் கைவிரல்கள். தாத்மாவின் கைவிரல்கள்.
விட்டு விட்டு ஒளிரும் நகப் பொட்டுக்கள்.
கீச் கீச் ஒலிகள்.
மோதிர விரலின் வளையத்தில் சிவப்பு ஒளிர்வு.

”தாத்மா … தாத்மா …. ஐஎஸ்ஐசி …. ஸப்பேஸ்மென் 1046 கோளிங் ….. கோளிங் ……”

”யெஸ்…. யெஸ் …. தாத்மா. ஹியர், தாத்மா ஹியர் 014 கேஸி ….. கல்லிடையாற்றங்கரை. உடைந்த ரைஸ் மில் …. ரைஸ்மில்.

ரைஸ்மில்லின் தொட்டி ஒன்றை துஷ்றிகியின் கல்லறையாக்கி
இருக்கிறேன் …..
இரண்டு கைகளிலும் சூடு, இரண்டு பாதங்களிலும் சூடு,

நெற்றியிலும் பிடரியிலும், மேல மண்டையோட்டுக்
கன்னங்களிலும்
குண்டுகள் சீராய்த்து ரத்தம் கசிகிறது …..
இடது புற விலாவில் ஒரு குண்டு பாய்ந்திருக்கிறது ….. ”

”சரி, சரி, கல்லறையை நாங்கள் கவனிக்கிறோம்.
நீ தொலைந்து போன கிரகவாசியை தொடர்ந்து போக
வேண்டியிருக்கிறது”

தாத்மாவின் கைவிரல் நகப்பொட்டொளிர்வுகள் அணைகின்றன.
மோதிர விரல் வளையத்தின் சிவப்பு ஒளிர்வும் அணைகிறது
கோடாரியைப் பிடித்து ஊன்றி எழும் தாத்மா.

இருட்கலங்கல்.
அண்ணாந்து பார்க்கும் தாத்மாவின் புறவரிக்கோடு
நிலவை அப்புகிற மேகம்.
இன்னும் இருட்கலங்கல்.
தூரத்து பச்சை ஒளிக் கற்றைகள்.
பச்சை ஒளிக் கற்றைகளை வீசும் கட்பொட்டுகளின் உருவம்
ஒரு பிசாசின் கறுத்த நிழல்.
கோடாரியுடன் மறைந்து கொள்ளும் தாத்மா.

இன்னும் இருட்கலங்கல்.
இருட்கலங்கலுக்குள் தடார் என மோதும் ஒலி.
காலணி ஒளிர்வுகளுடன் தரையில் புரளும் முகமற்ற முகமூடி
மனிதன்.
முகமூடியைப் பிய்த்து எறியும் தாத்மா, மங்கலாக.
சுழன்றுவரும் முகமற்ற முகமூடி மனிதனின் ஒளிரும் பாதங்கள்.
ஒளிரும் பாதங்களை கோடாரியால் மோதும் தாத்மா,
கலங்கலாக.
சிதறும் காலணிகள், சிதறும் காலணிகளைப் பொறுக்கும் தாத்மா.

நான் உஷாரானேன்.
பொறுக்கிய காலணியின் புறப்பக்கத்தையும் உட்பக்கத்தையும் புரட்டிப் பார்க்கும் தாத்மா.
உட்பக்கம் தெரியக் காத்திருந்து பொத்தான்களை அழுத்தினேன்.

வெளியீடு வழியாக முகமற்ற முகமூடி மனிதனின் காலணிப் புகைப்படம்! ஒரு பாதாள வாசியின் காலணிப் படம். என் கையில்! நம்ப முடியுமா? மீண்டும் நான் துள்ளிக் குதித்தேன். என் கணவரிடம் ஓடிப்போனேன். பட்டென மின்சாரம் அறுந்தது. நான் வெளியில் இறங்கினேன்.

வெளியில் நிலவு உச்சிக்கு மேலிருந்தது. ஒரு நிழல் கூட இல்லை. எல்லா நிழல்களும் மரங்களுக்குள் அடங்கிவிட்டன. நிழல்கள் எல்லாம் பயந்து ஒளித்துக் கொண்டது போல் இருந்தது. நிலவின் ஆட்சி! நிலவின் மண்டையோட்டுப் பற்களின் அகோரம் தெரிந்தது. சாவின் பல்லிளிப்புத்தான் நிலவு என்பது எனக்குத் தெரிந்தது. உலகம் முழுவதையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டு, மேய்ந்து திரியும் பிசாசுகளின் மூச்சுத்தான் இந்த நிலவு எனவும் எனக்குத் தோன்றியது. எனினும் சமுத்திரத்துள் இழுபட்டுப் போகும் ஜீவனைப் போல் அந்த நிலவுக்குள் நான் இழுபட்டுப் போய்க் கொண்டிருந்தேன்.

கிணற்றுக்கும் மாமரத்துக்குமிடையில் நடந்து, பின் மதிலை நெருங்கிப் போகத் தெரிந்தது. வானம் முழுதும் வௌவால்கள் விரித்துப் பறக்கம் சிறகுகளுடன். கோயில் வெளி முழுவதையும் ஆக்கிரமிக்க, உலகத்திலுள்ள குரங்கு வௌவால்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டதைப் போல் தோன்றியது. ஒவ்வொரு வௌவாலும் ஒவ்வொரு கப்பல் போல் பறந்தது. கோயில் வெளியின் வானம் முழுதும் பறந்து திரிந்தவை கடைசியில் எங்கள் வீட்டுப் பக்கம் நோக்கிப் பறந்து வந்தன. பறக்கின்றன. பறக்கின்றன. ஒரு நீண்ட தொடராகப் பறக்கின்றன. ஜென்மாந்திர ஜென்மாந்திர காலந்தொட்டுப் பறப்பன போல் பறக்கின்றன. ஒரு அணியில் பறந்து வந்தவை, இரண்டு, மூன்று, நான்கு அணிகளில் பறந்து வருகின்றன. இதோ, இதோ, எங்கள் பின் மதிலுக்கு மேலாகப் பறக்கின்றன. எங்கள் மாமரத்தின் மேலாகப் பறக்கின்றன. எங்கள் கிணற்றுக்கு மேலாகவும் பறக்கின்றன. இதோ, இதோ, என் தலைக்கு மேலாகவும் பறக்கின்றன.
பறக்கின்றன, பறக்கின்றன, பறக்கின்றன. ……….

”அத்தான், அத்தான் …… ”

நான் வீரிட்டுக் கத்தியபடி உள்ளுக்குள் ஓடினேன்.

மின்சாரம் வந்திருந்தது.
விளக்குகள் ஒளிர்ந்தன.
அவர் இன்னும் பேனாவும் கையுமாய் …. ….

”எப்போது அத்தான் ஓயும் இந்த எழுத்துக்கள்? வௌவால்கள் நம் வீட்டு வாசல்வரை அல்லவா வந்து விட்டன?”

”வரட்டும், வரட்டும் …… ” சற்று நிமிர்ந்து பார்த்த புன்னகை. அவருடைய குரல் என்னுள் ஒலித்தது.

மூன்றாவது டிஸ்க் ஓடிக் கொண்டிருந்தது.

கொழுந்து விட்டெரியும் நீண்ட பெரிய தீக்குழி
கொழுந்து விட்டெரியும் தீக்குழிச் சுவாலையில்
கொழுந்துகள் கருகும் துவாரகா யுகத்து ஆலமரங்கள்.

தலைகள், தலைகள், ஜன சமுத்திரத்தின் கருந்தலைகள்.

வால் வெள்ளிகளின் வீச்சு.
வடக்குத் தெற்காய், கிழக்கு மேற்காய், குறுக்கு மறுக்காய்,
வால் வெள்ளிகளின் வீச்சு.

”நட்சத்திரங்கள் இறங்குகின்றன, நட்சத்திரங்கள் இறங்குகின்றன” சமுத்திரத்தின் குரல்.

”அரோகரா, சாமிக்கு அரோகரா”

வானத்தில் புதைந்து கிடக்கும் மாலைச் சூரியனின் தேர்ச்சில்.
தேர்ச்சில்லைப் பிடித்தபடி கண்ணீர் சிந்தும் மேகக்கிழவி.

”பகவானே, பகவானே, என் மகனின் கிரகம் தொலைந்து போயிற்று. தொலைந்து போன கிரகவாசிகளை சுட்டுக் கொல்ல அண்டவெளி மனிதர்கள் கோயில் வெளியில் வந்திருக்கிறார்களாம். என் மகனைக் காப்பாற்று, பகவானே, என் மகனைக் காப்பாற்று”

சூரியனின் தோடம்பழச் சிவப்பு முகத்தில் ஈயாட்டம் இல்லை.
கலவரத்துடன் கீழே பார்க்கும் கிழவி.

சனசமுத்திரத்தின் மத்தியில் ஒரு கரகாட்ட மைதானம்.
உடல் முழுதும் மஞ்சள் பூசிய ஆண்களும் பெண்களும்.
ஆண்களுடைய இடையில் ஒரு துண்டு மாத்திரம்.
பெண்களுடைய இடையிலும், உடுகின் நடுவில் உள்ளது போல,
ஒரு துண்டு மாத்திரம்.
ஆண்களையும் பெண்களையும் பிரித்தறியலாம்.

ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணிலிருந்து பிரித்தறிய முடியவில்லை.
உயரமும், உடுவின் நடுவிலிருந்துள்ள மேலும் கீழும் ஒரே அளவில்.
ஒரு ஆணை இன்னொரு ஆணிலிருந்தும் பிரித்தறிய முடியவில்லை.
உயரமும் புயங்களும் உடற்கட்டும் ஒரே அளவில்.

கரகாட்டத்தின் ஒய்யார அசைவுக் கோலங்கள்
கதகளியின் உருவம் பெறுகின்றன.
சுழன்று சுழன்றசையும் தொங்கினாக்கள்.
தெளிவாகத் தெரிந்த செம்புக் குடங்களின் நூல்கள்
இப்போது தெளிவற்றுப் போகின்றன.
பார்வைக்குத் தெரிந்த பத்திரக் கொத்தின் சிற்றிலைகள்
இப்போது கொத்துக்குள் பூசிய பச்சை வர்ணமாய் மாத்திரம்.

சுழற்சியின் வேகத்தை மென்மேலும் தொடுகின்றன.

ஒரு ஆண் கரகாட்டக்காரனை, ஒரு பெண் கரகாட்டக்காரி தொடர்ந்தும் தொடர்ந்தும் மறித்தும் நெருக்கியும் ஆடுகிறாள்.

”நீ ஏன் தொடர்ந்தும் தொடர்ந்தும் மறித்தும் என்னை நெருக்கியும் ஆடுகிறாய்?”

”நீ எங்களை தொடர்ந்தும் தொடர்ந்தும் மறித்தும் நெருக்கியும் கொண்டிருப்பதால்…”

”யார் நீ?”

”நீ யாரென்பது எனக்குத் தெரியுமானால், நான் யாரென்பதும் உனக்குத் தெரியும்”

”நான் யாரென்பது உனக்குத் தெரியுமா?”

”தொலைந்து போன கிரகவாசி”

”தொலைந்து போன கிரகவாசியின் தோற்றம் வேறு ….”

”உன் நிழலைக்கூட நான் அறிவேன். கெந்திக் கெந்தி ஆடுகிறாயே, நான் உன் பாதங்களை அகட்டித் திருகியபோது ஏற்பட்ட ஊனத்தினால் அது என்பது எனக்குத் தெரியாதா_ இந்த மஞ்சள் பூச்சையும் மீறி, உன் புயத்திலும் முன்னங்கையிலும் உள்ள தழும்புகள் சொல்கின்றனவே. நீ சிறகு கட்டி கிளைடரில் பறந்த சேதியை”

”தாத்மா, நீ என்னை விட்டு விலகி ஆடு”

”உன்னை விட்டு விலக வேண்டிய நிமிடம் ஒன்று வரும் அதுவரையில் இல்லை”

மஞ்சள் பூசிய கரகாட்டக்காரனான தொலைந்து போன கிரகவாசி ஆடிக் கொண்டே சுற்றிவரப் பார்க்கிறான்.

மஞ்சள் பூசிய கரகாட்டக்காரியான தாத்மாவும்
ஆடிக் கொண்டே சுற்றிவரப் பார்க்கிறாள்.

ஆடுகளத்தின் எல்லைகளில் காவடியாட்டக்காரர்கள்.
கரகாட்டத்ததின் எல்லையில் காவடியாட்டம்.
அண்ணார்ந்து பார்க்கும் காவடியாட்டக்காரி தாத்மா.
மாலைச்சூரியனிடம் இன்னமும் மன்றாடும் மேகக் கிழவி.
மாலைச்சூரியனுக்கு எதிரே.
ஆடுகளத்தின் கிழக்கு எல்லையின் ஒரு மூலையில் ஒரு காவடியாட்டக்காரன்.
ஆடுகளத்தின் கிழக்கு எல்லையின் மறு மூலையில் இன்னொரு காவடியாட்டம்
இரண்டு காவடியாட்டக்காரர்களின் நடுவிலும் இன்னொரு காவடியாட்டக்காரன்.

கிழக்கு நோக்கிய பின், இடது புறமாகத் திரும்பி
வடக்கு நோக்கும் கரகாட்டக்காரி தாத்மாவும்
கரகாட்டக்காரன் தொலைந்து போன கிரகவாசியும்.

வடக்கின் இரண்டு மூலைகளிலும் இரண்டு காவடியாட்டக்காரர்கள்.

வடக்கு நோக்கிய பின், மேலும் இடது புறமாகத் திரும்பி
மேற்கு நோக்கும் கரகாட்டக்காரனும் கரகாட்டக்காரியும்
மேற்கு எல்லையின் முழு நீளத்திற்கும் கோயில் மடத்துக் கூரைகள்.
கூரையின் தாழ்வாரத்தில் குருத்தோலை சோடனைகள்.
பார்வையாளர்களை அந்தப் பக்கம் விடாது துரத்தும் பாக்குச் சாமியார்.
காவடியாட்டக்காரர்கள் கால் வைக்காத, கால்வைக்க முடியாத ஓடை.

மேற்கு நோக்கிய பின், மேலும் இடதுபுறம், திரும்பி தெற்கு நோக்கும் கரகாட்டக்காரனும் கரகாட்டக்காரியும்.

தெற்கு எல்லையின் நடுவே ஒரே ஒரு காவடியாட்டக்காரன்.

இப்போது எல்லாப் புறமும் திரும்பித் திரும்பிப் பார்க்கும்
கரகாட்டக்காரனும் கரகாட்டக்காரியும்

முன்னும் பின்னும் திரும்பித் திரும்பி ஆடும் காவடியாட்டக்காரர்கள்.
முதுகுச் சதைகள் கிழிய,
முட்களினூடு இரத்தம் வழிய,
முண்டி முண்டி உருக்கொண்டு
மூர்க்கமாக ஆடும் காவடியாட்டக்காரர்கள்.

புன்னகைக்கும் தொலைந்து போன கிகரகவாசியான கரகாட்டக்காரன்.
புன்னகையின் பொருள் தேடும் முகக்குறியில் கரகாட்டக்காரி தாத்மா.

”மேற்கு எல்லை திறந்தே கிடக்கிறது”

கரகாட்டக்காரனான தொலைந்து போன கிரகவாசியின் உரத்த சிந்தனை.
உதடுகளை மடித்து சிரிப்பை அடக்கவது போல் தோன்றும்
கரகாட்டக்காரி தாத்மா.

சூரியனின் சிவப்பு முகம்.
சிவப்பு முகத்தில் மஞ்சள் சோகை.
மேகக் கிழவியின் காதை முட்டும் சூரியனின் மையப் புள்ளி.
மையப் புள்ளியின் பொன்னிற மேனி அதிர்வுகள்.
கிழவியின் காதுச் சோணைகளின் துடிப்பு.
கண்களின் விரிவு.
முகச்சுருக்கங்களின் நிமிர்வு.
முகிலாகத் துகிலாக வானில் மிதந்திறங்கும் மேகக் கிழவி.

காவடிகளும் காவடியாட்டக்காரர்களும்.
காவடிகளினுள்ளிருந்து துப்பாக்கிகளை எடுக்கும் காவடியாட்டக்காரர்கள்.

”அண்டவெளி மனிதர்கள், அண்டவெளி மனிதர்கள்….
நேர்த்திக் கடனுக்கு காவடி தூக்கிய அண்டவெளி மனிதர்கள்”

மெல்லத் தளம்பும் சனசமுத்திரத்தின் கருந்தலைகள்.
இப்போது,
மஞ்சள் பூசிய கரகாட்டக்காரியான தாத்மா
மஞ்சள் பூசிய கரகாட்டக்காரனான தொலைந்துபோன கிகரகவாசியை விட்டு விட்டு, விலகி, விலகி ஆடத் தொடங்குகிறாள்.

மஞ்சள் பூசிய கரகாட்டக்காரனான தொலைந்துபோன கிரகவாசி
மஞ்சள் பூசிய கரகாட்டக்காரியான தாத்மாவில் மறைந்து மறைந்து
அவளை நெருங்கி நெருங்கி, எப்பொழுதும் அவளுக்கு மேற்காக
அணைந்து அணைந்தே ஆடத் தொடங்குகிறாள்.

பார்வையாளர்களின் கண்கள் மிரள்கின்றன.

முகங்களை முகங்கள் நோக்குகின்றன.
காவடியாட்டக்காரர்களை கண்கள் மொய்க்கின்றன.
குறி வைத்திருக்கும் துப்பாக்கிகளை முகச்சாமிக்கைகள் குறிக்கின்றன.
மையம் நோக்கிய கரகாட்டக்காரர்களின் நகர்வு.
துப்பாக்கிகளை நோக்கிய கரகாட்டக்காரி தாத்மாவின் நகர்வு.

விடுபட்டுவிட்டது போல் பரிதவிக்கும் கரகாட்டக்காரன்
தொலைந்து போன கிரகவாசியின் தலையிலிருந்து இறங்கும் செப்புக்குடம்
செப்புக் குடத்தின் பத்திரத்துக்குள் செருகியிருக்கும் துப்பாக்கி

பத்திரத்தால் மூடியபடி கைக்குள் அடங்கும் துப்பாக்கி

துப்பாக்கி வேட்டொலி.
காற்றில் பறக்கும் கரகாட்டம்.

தொலைந்துபோன கிகரகவாசியின் புறங்காலில் பொங்கும் குருதி.

செப்புக்குடம் நழுவ,
பத்திரக்கொத்துடன் மேற்கெல்லைக்குப் பாயும்

தொலைந்துபோன கிகரகவாசி.

கோயில் மடத்துக் கூரைகளில் தொங்கும்
குருத்தோலைச் சோடனைக்குள் சிக்கி
பத்திரக் கொத்தும் நழுவ, தென்புறம் பாய்ந்து,
மடத்து மூலையில் மேற்குப்புறம் திரும்பி கெந்தி கெந்தி ஓடும்
மஞ்சள் பூசிய மேனியும் இடுப்புத் துண்டுமான
தொலைந்துபோன கிரகவாசியின் இரத்தச் சுவடுகள்.

எதிரே,
மேற்குத் தெருவிலும் இன்னொரு காவடியாட்டக்காரன்.

எதிரே ஒடி வரும் மேகக்கிழவி.

”என்ர மகனே, என்ர மகனே,
உன்னைத் தனிமைப்படுத்தியதே சத்துராதிகளின் வியூகம்”

உயரும் துப்பாக்கி.
மேற்குத் தெருவின் காவடியாட்டக்காரனின் துப்பாக்கி.

ஓடி, அவனுடைய காலைக் கட்டிப்பிடிக்கும் கிழவி.

”என்னைச் சுடு …… என்னைச் சுடு …… என்ர மகனை உட்டிரு”

கால்களை உதறும் காவடியாட்டக்காரன்.
கால்களின் உதறலில் பெயர்ந்து விழும் காவடியாட்டக்காரனின் காலணிகள்.

மீண்டும் குறிவைக்கும் காவடியாட்டக்காரன்.
மீண்டும் அவன் கால்களைப் பற்றும் கிழவி.
வேட்டொலி.
குறி தவறியது போன்ற முகச்சுழிப்பு.
கால்களை விடாது கட்டிப்பிடிக்கும் கிழவி.

காவடியாட்டக்காரனை கடந்து ஓடும், கரகாட்டக்காரன் தொலைந்துபோன கிரகவாசி.
எதிரே, இரண்டு கைகளாலும் துப்பாக்கியை ஏந்தி நிற்கும் துஷ்றிகி.

வேட்டு.

நெஞ்சைப் பொத்திக்கொண்டு விழும் தொலைந்துபோன கிகரகவாசி.

காலணிகளை உயர்த்திக்கொண்டே கதறும் கிழவி….

”கண்கெட்ட சூரியனே, என் கண்மணியை காப்பாற்றவில்லையே நீ”

கிழவியின் கைகளிலிருந்து காலணிகளை எடுக்கும் தாத்மாவின் குரல்….

துஷ்றிகி நீ எப்போது உயிர்த்தெழுந்தாய்?”

”மூன்றாம் நாளில்”

காலணிகளின் கீழ்ப்பாகத்தை பார்க்கும் துஷ்றிகி

”ஒரு அண்டவெளி தன் காலணியை இழந்தது இதுதான் முதல் தடவை”

நான் மீண்டும் உஷாரானேன். காலணியின் கீழ்ப்பாகம் செவ்வையாக வந்தபோது பொத்தான்களை அழுத்தினேன். வெளியீட்டின் ஊடாகப் புகைப்படம் தலை நீட்டியது. அண்டவெளி மனிதனின் காலணிப் புகைப்படம் என் கைகளில் நினைத்த மாத்திரத்தில்.

நான்கு படங்களும் இப்போது என் கைகளில், என் வாசலில் வந்த நின்ற மர்மப் பேர்வழி யார் என்பது இன்னும் சில விநாடிகளில் எனக்குப் புரிந்துவிடும்.

கைக்கு எட்டும் வரையில்தான் எல்லா ஆவலும் கைக்கு எட்டியபின் எல்லாம் அடங்கிப் போகின்றன. எனக்கு முதலில் உறங்க வேண்டும் போலிருந்தது.

நான் உறங்கப் போனது எனக்குத் தெரியும். நான் உறங்கிப் போனதும் எனக்குத் தெரியும். நான் உறங்கிய பின்புதான் அவர் உறங்குவதற்கு வருவார். நான் உறங்குகையில் அவர் உறங்குவதும் தெரியும். அவர் உறங்காதிருப்பதும் தெரியும்.

அவரோடுதான் நான் உறங்கினேன். அவர்தான் என்னை உறங்க வைத்துக்கொண்டிருந்தார். நான் உறக்கம் கலைந்து எழுவதற்கு முன்பே அவர் உறக்கம் கலைந்து எழுந்து விடுவார். நான் விடிந்து எழுவதற்கு முன்பே, அவர் எழுந்து, விடிய வைத்து விடுவார்.

விடிந்தும் விடியாத நிலை, நான் விழித்தும் விழிக்காத நிலை. நான் எழுந்தும் எழாத நிலை. நான் கதவைத் திறந்தும் திறக்காத நிலை. நான் நடந்தும் நடக்காத நிலை. நான் முற்றத்தில் இறங்கியும் இறங்காத நிலை.

கிணற்றின் துலாக்கால் அடியில் அவர் நின்றார். கிணற்றின் துலாக்காலாகவும் அவர் நின்றார். பற்றுக் கையும் அவரே. பற்றிய கையும் அவரே. இது என்ன ஷிசோஃபேனியாவா? எனக்கு என்ன ஹலுஷினேஷனா? ஓ, ஒன்றுமில்லை.

காலையில் அவருக்ககுச் சுடச்சுட கோப்பி வேணும். கேஸ் குக்கரின் சுவாலைகள் தங்கத் தகடுகளாகக் கட்டித்துப் போகின்றன. தேனீர் போச்சியினூடாக வெளிவரும் நீராவி தடித்த புகாராக சுவர்களில் படிகிறது. கொதிநீரைக் கோப்பையில் ஊற்றும்போதே கொதிநீர் உறைந்து கட்டியாகிப் போகிறது,

எங்கே இருக்கிறேன்? அண்டவெளியிலா? பாதாளத்திலா? அதற்கும் அப்பாலா? கல்லிடையாற்றங்கலையிலா? கோயில் வெளியிலா? நான் நிவேதையா? தாத்மாவா? அவர் நிவேதனா? துஷ்றிகியா?

”விடிந்தும் இவ்வளவு நேரத்திற்கு ஒரு கோப்பி போடல்லியா?”

அவருடைய கோபக் குரல் என் காதுக்குள்ளேயே உறைந்து கிடக்கிறது.

”இந்தா வந்திற்றன், இந்தா வந்திற்றன்”

நாக்கின் நுனியிலும் உதடுகளின் ஓரத்திலும் உறைந்துபோய், அதற்கப்பால் பாவாத சொற்கள்.

கோப்பையில் உறைந்து போகிறது கோப்பி. அதனை உடைத்து உடைத்து கரைத்துக்கொண்டு வருகையில் நானே உறைந்துபோய் விட்டேன், கல்லாய்.

நின்றன வௌவால் இரண்டு நிமிர்ந்து. கால் இல்லாத அவைகளுக்கு கால் முளைத்திருந்தது. கை நீட்ட முடியாத அவை கை நீட்டிச் சுட்டன. அவரை நெற்றியிலும் கண்ணடியிலும் வழிந்தோடும் ரத்தம் விறாந்தையில் இரத்த வெள்ளத்தில் மிதந்தார் அவர்.

எனது புகைப்படங்கள் எல்லாம் கிழிக்கப்பட்டுக்கிடந்தன வாசலில்.

துடித்துப் பதைத்து எழுந்தேன், வெயர்த்தது. இருட்டுக்குள் தடவி சுவிட்சைப் போட்டேன். அவருடைய அறையைப் போய்ப் பார்த்தேன். அறையின் சுவிட்சைப் போட்டேன்.

சாமி படத்திற்குக் கீழே, மாலை போட்ட அவருடைய படத்தின் அடியிலும் சிவப்பு ஒளிர்வு துடித்துக்கொண்டிருந்தது. அதே புன்சிரிப்பும். பேனாவும் கையுமாய்.

இப்போது ஏதோ விளங்குவது போலிருந்தது. அவருடைய கொலையாளிகள் யாரென்று.

Leave a Reply

Your email address will not be published.