இரு . .
எழு,
முழந்தாள் இடு
— இது ஒரு நாடகம்
சுடர்கள் பல,
நடுவில்
சில ரோஜாமலர்கள்
பொன்மணிச் சரிகை விரிப்பு
பூசைப் பலிப்பீட
அலங்கரிப்பு.
செஞ்சிலுவையின் கீழ்
குனிந்து,
செபித்து
நிமிரும்
தங்கவஸ்திரம் தரித்த
பங்குக் குரு.
ஆண்டவர் உம்முடன் இருப்பதாக!
‘’உம்முடனும் இருப்பதாக’’
இது கிறிஸ்த்துவின் சரீரம்
இது கிற்ஸ்த்துவின் இரத்தம்
விசுவாசிக்கின்றாயா?
ஆமேன்.
நாக்கை நீட்டு
கண்களைக் குவி;
கரங்களைக் கூப்பு;
நடந்து செல் –
புல்லும் நோகாது,
உள்ளினம் உள்ளாய் ஓர்ந்து
எல்லாம் ஒன்றாகி
கோயிற் சுவர்கள்,
இடையிற் பெருந்துண்கள்
மின் குமிழ்கள்,
குளிர் காற்றில் மெதுவாய்
ஊசலாடும் சோடனைகள்
உறங்குவது போல் வணங்கும்
அணங்குகள்,
அப்புகள்,
ஆச்சிகள்,
ஆயிரம் கருத்தலைகள்
நரை திரைகள் –
எல்லாம் ஒன்றாகி, ஏகமாய்,
இயைந்து கரைந்த வாரியாய்,
உள்நோக்கி ஓட
உறைந்த பனிவெளியின்
தன்னந்தனி உருவாய்,
நினைவுத் தடம் அழிந்து
விண்ணில்,
காற்றில் மிதந்து,
சுவர்க்கத்தின்
வாயிலின் இரண்டு மருங்கிலும்
தேவதைகள், பூச்சொரிய
நடந்து நடந்து சென்று
ஒரு கனவு நிகழ்ந்த்தென
இரு –
எழு –
முழந்தாள் இடு
–எனும் இந்த நாடகம்.
நம்பிக்கை வேறு, நடத்தை வேறு.
மனம் வேறு, வாழ்க்கை வேறு.
நான், நான் அற்றுப்போன
நமைச்சல்
குமைச்சல்,
திக்குமுக்கு
திணறல்.
இது கிறிஸ்த்துவின் சரீரமா?
இது கிறிஸ்த்துவின் இரத்தமா?
கிறிஸ்த்து என் இரட்சகரா?
நான் பாபாத்தமாவா?
பின் ஏன் இந்த முடங்கல்?
கசப்பு குபீர் எனும்
அமுங்கி அமுங்கி மனம் அழும்,
கெத்ஸ்ஸமனித் தோட்டத்தில்
கடைசி இரவில்
கைகளை விரித்து,
வானத்தைப் பார்க்கிறேன்.
‘’பிதாவே,
இந்தப் பாத்திரம், எனைவிட்டு
நீங்கக்கூடுமாயின்,
நீங்கட்டும் . . . . ‘’
பிதா எங்கே?
வானத்தைக் கிழித்து,
திரைகளை நீக்கி,
பிதாவின் பொருளைத்
தெரிந்தும் வெகுநாள்.
பின் ஏன் இந்த முடங்கல்?
ஏன் இந்தப் பாரிசம்?
ஏன் இந்த அழுந்தல்?
அமுங்கல்?
அமுங்கி,
அமங்கி,
கழுத்தைக் காலுடன் பிணித்து,
இழுபட்டுப் போகும்
இந்த எருது,
ஒரு நாள் தலையை உயர்த்தினால்?
கொம்புகளை பூமியில் குத்திக் கிழித்து
மண்ணைப் பூ சூடினால்? –
மடிந்த முன்னங்காலின்
பெரிய குளம்பினால்,
பூமியைக்
குழிபறித்துக் குழிபறித்து
குமுறிப் பெரியமூச்சுடன்
தலையை நிமிர்த்தினால்? –
கீழோடும் வேர்கள் கிழிந்து அறுபடும்.
அவள் சாய்ந்து சவமாவாள்.
அந்தக் கால்களிடை
கிடந்த மிதிபடுவாள்.
அவள்,
பூமியைக் குத்திப் புரட்ட அறிந்திலள் . .
வானத்தைக் கிழித்து
திரைகளை நீக்கித் தெரிந்திலள்.
இந்தச்
சதுப்பில் வேரோடித் தழைத்து
வானத்தை நோக்கி மலர்பவள்.
அதோ
சேலைக்கரையிடை பாதச் சிவப்பு மறைய
புல்லும் நோகாது,
உள்ளினும் உள்ளாய் ஓர்ந்து
எல்லாம் ஒன்றாகி,
ஏகமாய்
இயைந்து, கரைந்த வாரியாய்
உள்நோக்கி ஓட,
உதிர்ந்த பனிவெளியின்
தன்னந்தனி உருவாய்
நினைவுத் தடம் அழிந்து
விண்ணில், காற்றில்
மிதந்து,
சுவர்க்கத்தின்
வாயிலின் இரண்டு மருங்கிலும்
தேவதைகள் பூச்சொரிய,
நடந்து, நடந்து, நடந்து சென்று
ஒரு கனவு நிகழ்ந்த்தென,
அவள்,
குருத்தும் முளையுமாய்,
குழந்தைகள் பின்தொடர,
சதுப்பில் வேரோடித்
தழைத்த கரம் கூப்பி
வானத்தை நோக்கி மலர்கிறாள்.
வேர் சிதற,
தழை சிதற,
முளை சிதற,
கால் அடித்து,
கொம்பு குத்தி
போர் பிடிக்கும்
நிர்மூலப் பயங்கரத்தில்
இரு,
எழு
முழந்தாள் இடு
–எனும் இந்த நாடகம்.
கசப்பு குபீர் எனும்,
அமுங்கல்,
அமுந்தல்,
நமைச்சல்
குமைச்சல்
எரிச்சல்
திக்குமுக்கு,
திணறல்.