நீ , , ,
இன்னும் மலர்கின்றாய்.
நிழல் தேடி
நான் அலைந்து
வாடி
நலிந்து
மிகத் தேய்ந்து
போன இடம் பாராது
வந்த இடம் தேராது
பாதியிலும் பாதி – பரதேசி ஆண்டியாய்,
துசும் புழுதியும் தோயத் திரும்புகையில்
ஓ!
நீ இன்னும் அங்கே நிறைய மலர்கின்றாய். . .
உன்றன் அருகில் ஓடுகிற நீர் வாய்க்கால்
இந்த விதியிலிக்கு ஏன் வறண்டு விட்டது?
எல்லாம் முடிந்தது . . .
எல்லாம் முடிந்ததென
உள்ளம் உணரும் ஒரு கண நீக்கலில்
நிம்மதி நீண்ட வெளியாய்த் தெரிகிறது.
நிம்மதிதான், எந்த நிகழ்வும் முடியுமெனில் . . .
நான் அதுவல்ல
அதுவாக என்னை நான்
வீணாய் உருவகித்து, சற்று மினக் கெட்டதெல்லாம்
ஊமை மயக்கமென இப்போ துணர்கிறேன்,
நான் அதுவல்ல
அது என்னில் உள்ளதல்ல
ஏதேனும் முன்னர்
இருந்த்தெனச் சொன்னாலும்
ஆள் இப்போ காலி.
ஆமாம்,
பாலை – வெறும் தரிசு.
நான் அதுவல்ல
அது என்னில் உள்ளதல்ல. . .
என்றாலும்
நீ அங்கே இன்னும் மலர்கின்றாய்
வாழ்வு மகத்தானதே.
ஆயின் அதை வழுவித்
தாழ விடும் போது அதுவே தலைச் சுமை
வீண் மயக்கம்
கோடி விழலான சிந்தனைகள்
ஆலாப் பறக்கையிலே
கீழே
எறும்பு ஊரும்
எறும்பு ஊரும் பாதையிலே
ஈசல் முறைத்து வரும்
ஈசல் சிறகொடிந்து
எங்கொங்கோ போய் மடியும்.
போய் மடிந்த
ஈசற் புதர்களைத் தேடுகிறேன். . .
இந்த நிராசையை முன்னர்
இகழ்ந்ததுண்டு.
‘வாழ்வின் முனைவுக்கு இது மாறு’
என்றதனை
நானும் உறுதியாய் நம்பி நிராகரித்தேன்.
ஆயினும்,
வாழ்வின் ஆராத காதலுக்குத்
கீழே அடி வேராய்
பின்னிக் கிடப்பதுவும்
வாழ்வு முனைவின் மறுதலையாய் உள்ளதுவும்
இந்த நிராசையே என இப்போதுணர்கிறேன்.
இந்த நிராசைகளே எனது நிசங்கள்.
எனது முனைவுகள் இன்னும் மயக்கமே
என்றாலும்
நீ அங்கே இன்னும் மலர்கின்றாய்.
உன் முன்னே,
என் நினைவு ஊர்ந்த சிறு தடமும்
இல்லாமல்,
காற்று இரவு பகலாக
மேய்ந்த கடற்கரையின் வெள்ளை மணல் போல
துர்ந்து அழிதல் ஒன்றே சுகம்
அந்த ‘நிர்மூல
சம்ஹாரம்’ ஒன்றை
நினைவு தழுவுமெனின்
இந்த விதமாய் எழுதிக் கிளர்வதுமேன்?
இந்த எழுத்தும் எனது மயக்கமென்பேன்.
நிராசையின் கீதமும் வாழ்வின் ஒரு முனைப்பே.
‘சம்ஹாரம்’ கோருகிற
அற்ற நிலைச் சார்பினுக்கும்
வாழ்வின் நிறைவு மிகத் தேவை.
அஃது அற்ற
கோழியின் மேச்சலில் இன்னும் குறுகுறுத்து
ஓடி அலைந்தே ஒடிந்து திரும்புகையில்
ஓ!
நீ இன்னும் அங்கே நிறைய மலர்கின்றாய்.