அது,
ஆபத்து இல்லாத
எனது சாரையின்நீண்ட வெண்செட்டை – என்பதால்
எத்தனை நாளைக்கு விட்டுவைப்பேன்,
அறையின் கட்டில் மூலையில்
மடங்கி சுருண்டு கிடக்க
அதனை?
நேற்றிரவு,
வெளிச்சம் இல்லாத அறையின்
கட்டில் மூலையிலிருந்து
தும்புத்தடியால் இழுத்து
பின்கதவால் தள்ளி வீசினேன், வெளியே.
வெளியில்,
பக்கத்துக் கோயில் விளக்குகளின்
மங்கல் கீற்றுகள்தான்
வேப்பமரக் கிளைகளினூடு வெட்டுண்டு.
வெட்டுண்ட கீற்றுகளின் மங்கல வெளிச்சத்தில்
ஒட்டித் தெரிந்தது செட்டை
ஒரு பழைய பெட்டியோடு.
உற்றுப் பார்த்துத் திகைத்தேன்,
தலைக்குரிய செட்டை சற்றுப் பெரியதாய்
கரியநிறமாய்,
Walkie Talkie ஆய், அதன் அளவில்
பின்,
பழப் புளியின்
கறுத்தக் கொட்டைகளின் அடுக்காய் –
உதறல் எடுத்தது எனக்கு …..
உள்ளே கருநாகம்!
ஓடினேன் இருளில் மதில்ஏறி –
கோயில் வெளியில் புதைத்திருந்த
துப்பாக்கியை எடுத்துவர
பின்னிப்பிணைந்தது எனது சாரை
புறங்கால்களைச்சுற்றி.