மழைப் பூச்சிகள்

ஒளிர்ந்த மின்குமிழில் இரண்டொரு மழைப்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

ஊடகவியலாளரின் இதழுக்கு நான் எதை எழுதுவது? எதுவும் ஓடவில்லை எடுத்த பேனாவையும் தாளையும் அப்படியே மேசையில் வைத்துவிட்டு அருகிலுள்ள கட்டிலில் சாய்ந்தேன்.

மின்குமிழில் மேலும் மழைப்பூச்சிகள் சேர்ந்தன. பெடஸ்ரல் மின்விசிறியின் சலனத்தில் மேசையின் மீதிருந்த எழுதுதான் படபடத்தது. கட்டிலில் கிடந்து முகட்டை வெறித்த எனக்கு மழைப் பூச்சிகளின் தொடர்பில் சட்டென வாடிவீட்டு வீதி தொங்கலில் கிளப்புக்கு முன்னே உள்ள மேர்க்கூரி வெளிச்சத்தில் முன்னொருநாள் மொய்த்த மழைப் பூச்சிகளின் நினைவு வந்தது. கூடவே அந்த இருளில் கேட்ட குரல்களும் நினைவுக்கு வந்தன.

கிளப் என்று சுருக்கமாய் என்னுள் தோன்றுவது கல்முனை பப்ளிக் சேவிஸ் கிளப். இன்னும் சரியாகச் சொன்னால் Service Recreation Clunb, இருபதாண்டுக் கால யுத்தத்தில் அடிபட்டுப்போன அந்த கட்டிடம் அண்மையில் புனரமைக்கப்பட்டது. Public என்பதனுடைய பொருள் சற்று மாறியும் விட்டது. கட்டிடத்தினுள் உறுப்பினர்கள் காட்ஸ் அடிப்பார்கள். பிங்பொங்கும் கரமும் விளையாடுவார்கள். கட்டிடத்தின் வெளியில் மேற்குப் பக்கமாக, நுழைவாயிலை சார்ந்து பழைய டெனிஸ் கோர்ட்டும் அதனை அண்டிய பகுதியும், பகலில் கிரவல் படிந்து கிடக்கும். இரவில் குறுக்கு மறுக்குமாக விழுகின்ற தூரத்து மின் ஒளிக்கீற்றுகளுடனும், ரம்மியமான கடற்காற்றுடனும் உயிர் பெற்றெழும். உறுப்பினர்களைத் தவிர கௌரவமான விருந்தினர்களும் இங்கு இடம் பெறுவர். பக்கத்தில் வாடிவீட்டு ராணுவ முகாம் பயமுறுத்தும்.

இருளும் ஒளியும் கலந்து, ஒன்றை ஒன்று மறித்தும் முறித்தும் கடற்காற்றில் ஜிலுஜிலுக்கும் பழைய டெனிஸ் கோர்ட், அல்லது புதிய திறந்தவெளி விருந்தினர் அரங்குதான் நமது களம். இருளில் அமர்கின்றவர்க்ள இருளில் அமர்ந்து கொள்ளலாம். ஒளியில் அமர்கிறவர்கள் ஒளியில் அமர்ந்து கொள்ளலாம். கலங்கலில் அமர்கின்றவர்கள் கலங்கலில் அமர்ந்து கொள்ளலாம்.

நான் கலங்கலில் அமர்வதுதான் வழக்கம். ஆனால் அன்று வழக்கத்துக்கு மாறாக ஒரு பெரிய கூட்டம். அரங்கு எல்லையின் பனை மரத்துக்கு அப்பால் இருளில் கலகலத்துக் கேட்டதால் நானும் பனை மரத்துக்கு இப்பால் இருளுக்குள் அமர்ந்து கொண்டேன். ரோச்சுடன் வந்த பரிசாரகனை தூரத்தில் வரும் போதே ரோச்சை அணைக்கும்படி சொல்லிக் கொண்டேன்.

பனை மரத்துக்கு அப்பால் இருளில், தெரிந்த பல குரல்கள் ஒலிப்பதுபோல் கேட்டன. கல்லூரனுடையதைப் போன்ற குரல் (கபோகு) ஓங்கி அறைந்து உதிர்வது போல் கேட்டது. மூர்த்தியினுடையது போன்ற குரல் (மூபோகு) ஏதோ முணுமுணுத்தது. அரு கணேஷினுடையது போன்ற குரல் (அகபோகு) சற்று அணுங்கியது. விஜயரெத்தினத்தினுடையது போன்ற குரல் (விபோகு) விட்டு விட்டு கேட்டது. பேரின்பராஜாவினுடையது போன்ற குரல் (பேபோகு) மற்றக் குரல்களிடையே பிசுபிசுத்துப் போனது. துஷ்யந்தனுடையது போன்ற குரல் (துபோகு) சற்றுத் தூரத்தில் ஒலிப்பது போல இருந்தது. சலீமினுடையது போன்ற குரலும் (சபோகு) உமாவினுடைய போன்ற குரலும் (உபோகு) தமக்குள் ஏதோ பேசுவதுபோல் கேட்டன. சலீமும் உமாவும் சோடாவை மெல்ல மெல்ல சுவைப்பதாக கற்பனை செய்தேன். மகரிஷியினது போன்ற குரலும் (மபோகு) கேட்டமை மனதுக்கு இதமாய் இருந்தது. ஆனால் மறுகணம் திடுக்கிட்டேன். எனினும் மற்றோர் எண்ணத்தில் என்னைத் தேற்றிக் கொண்டேன். சாட்டுக்கு ஒரு பியர் கிளாசை வைத்துப் போக்குக் காட்டிக்கொண்டிருப்பான் என நினைத்தேன். முடிவில் சிவராமினுடையது போன்ற குரல்தான் (சிபோகு) தெளிவாகவும் தீர்க்கமாகவும் கேட்டது.

சிபோகு : நான் சொல்கிறேன், பள்ளிப்படிப்பு ஒருவரையில்தான் உதவுகிறது. கலை இலக்கியம் ஒரு உணர்வுலகை சிருஷ்டிக்கின்றன. ஆனால் நிஜவுலகு பற்றி ஒரு விம்பத்தை, நேரடி அனுபவங்களுக்கு அப்பாலான ஒரு பெரும் பரப்பளவிலான பிரக்ஞையை நமக்குத் தருவது ஊடகங்கள்தான். அந்த வகையில் தத்துவார்த்தமாகச் சொன்னால் ஊடகங்கள்தான் நவீன பிரக்ஞையை கட்டமைக்கின்றன. ஊடகங்களுக்கு அப்பால் எமக்கு ஒரு உலகம் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கின்றது. நவீன சமூக வளர்ச்சியில் நமக்கு நாமே மாட்டிக் கொண்ட ஒரு பூதக்கண்ணாடி. இரு ஒரு மாயக்கண்ணாடி என்று கூடச் சொல்லலாம்.

கபோகு : இந்த மாயக் கண்ணாடி வெறுந்தேர்த் திருவிழாவின் ஒரு வீடியோ காட்சியாக மட்டும் அமையக்கூடாது. மூலஸ்தானம் வரை ஊடுருவுகின்ற உட்பக்கப் பார்வையும் இந்த மாயக் கண்ணாடிக்கும் பூதக்கண்ணாடிக்கும் தேவை.

விபோகு : உட்பக்கப் பார்வை என்பது என்ன?

கபோகு : உட்பக்கப் பார்வை என்பது மேலோட்டமான செய்தித் துணுக்குகளில் தங்கிவிடாமல் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு ஊடகங்கள் உணர்வுகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. உதாரணமாக ஒரு கொலை நடக்கின்றதென்றால், அதைப் பத்திரிகையில் ஒரு செய்தியாக போட்டு விடுவதோ அல்லது தொலைக்காட்சியில், நிகழ்விடத்தையும் பொலிசாரின் நேரடி விஜயத்தையும் வழங்கி விடுவதோ உட்பக்கப் பார்வையல்ல. அந்தக் கொலை நிகழ்ந்ததற்கான வாழ்க்கை நெருக்கடிகளை முன்வைத்து மக்களுடைய பிரக்ஞையை வளர்க்க வேண்டும்.

விபோகு : அதைத்தான் இலக்கியமும் சினிமாவும் நாடகங்களும் செய்யக்கூடுமே.

கபோகு : அல்ல. இலக்கியத்தையும் சினிமாவையும் நாடகத்தையும் நிஜம் என்று மக்கள் நினைப்பதில்லை. அவை நிஜமாகவும் இருக்க முடியாது. ஆனால் ஊடகங்கள் நிஜம் என்று மக்கள் என்றும் நம்புகிறார்கள். நிஜத்தை ஊடுருவ முடியாத ஊடகத்தால் பயனில்லை. அது வெறும் காட்சி ஜோடனையாகத்தான் அமையும்.

அகபோகு : அதாவது ஊடகங்கள் தெரிவு, தேடல்கள், கட்டவிழ்ப்புக்கள், திரைநீக்கங்கள், வெளிப்படுத்துதல்கள் புரியவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

கபோகு : சரியாய் சொல்கிறீர்க்ள, செயற்பாட்டு ரீதியாக அப்படி வரையறுக்கலாம்.

மபோகு : இந்தச் செயற்பாடுகள் எமது ஊடகங்களில் இல்லை என்றா சொல்கிறீர்கள்?

மூபோகு : அப்படியல்ல. இந்த நெறிமுறைகள் முற்றாக எமது ஊடகங்களிலே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் தேடலும் கட்டவிழ்ப்பும் ஒரு பொதுவான ஊடக நெறியாக இன்னும் வளரவில்லை என்று சொல்லலாம். தேடலுக்கும் கட்டவிழ்ப்புக்கும் தனிப்பட்ட ஊடகவியலாளர் முன்வந்து மட்டும் பயன் விளையாது. ஸ்தாபனம் அதற்கு பண்ணப்பட்டதாக இருக்க வேணும். அத்தகைய ஸ்தாபனங்கள் தமிழ்மொழி ஊடகங்கிளில் இல்லையென்றே சொல்வேன். It is a matter of professionalism. குண்டடிபட்டு செத்துப்போன சில பத்திரிகையாளர்களைத் தவிர தொழில்சார் நாட்டத்தை ஒரு வாழ்க்கை குறிக்கோளாக, ஒரு Vocation என கொண்ட உடகவியலாளர்களைக் காணக்கூடியதாக இல்லை.

அபோகு : குண்டடிபட்டால்தான் காணமுடியும் போல? …..

எல்லாக் குரல்களும் : அஹ்ஹஹ்ஹ் …. அஹ்ஹஹ்ஹ்(சிரிப்பு)

சிபோகு : வெறுமனே சிரித்துவிட்டு போகிற விஷயம் அல்ல அது. ஊடகவியலின் பச்சை யதார்த்தம் அதில் தெரிகிறது.

விபோகு : அது சரி, அடுத்த விஷயம் ஒன்றுக்கு வருவோம். வடகிழக்கு மலையகம் என்ற முழு தமிழ் பேசும் மக்கட் தொகுதியையும் ஒரே அடையாளத்துக்குள் கொண்டுவர தமிழ்மொழி ஊடகங்கள் தவறியுள்ளன என்று நினைக்கிறேன். அரசியல் பிரிவினையை ஊடகங்களும் பிரதிபலிக்க வேண்டுமா? அரசியலுக்கு அப்பால் உள்ள பண்பாட்டுத் தளங்களிலாவது ஒரு பொது அடையாளத்தை வளர்க்க ஊடகங்கள் உதவக்கூடாதா?

பேபோகு : அது ஒரு நல்ல கேள்வி. ஆனால் வடகிழக்கு தமிழ்பேசும் மக்களை பிரித்து வைத்து அரசியல்வாதிகள் மட்டும் பிழைப்பு நடத்தவில்லை. தமிழ்மொழி ஊடகங்களும் அதே பிழைப்பைத்தானே நடத்துகின்றன. ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு ஊடகம் என்ற நிலையல்லவா காணப்படுகின்றது?

துபோகு : அந்த நிலையில் கூட, மலையத்தின் இதயத்தை நாம் தமிழ்மொழி ஊடகங்களில்கூட காணக்கிடைக்கவில்லையே… ஞாயிறு பதிப்புகளில் ஒரு பக்கமோ அரைப்பக்கமோ குறிஞ்சிக் குரல்கள், குறிஞ்சிப் பரல்கள் என்ற ஒருவகையான அடையாளத்துடன் சில ஒதுக்கீடுகள் தரப்படுகின்றன. இந்த ஒதுக்கீடுகள் அமெரிக்காவின் Ghettos, மலையகத்தின் லயன் காம்பராக்கள் போன்ற Segregationist ஒதுக்கல்களின் மற்றுமொரு வடிவமே.

மூபோகு : வடகிழக்கு மலையகம் என்ற பொதுக் கண்ணோட்டத்தோடு ஊடகப் பரப்பு பொது ஊடாட்டம் உடையதாக வேண்டும். தமிழ் பேசும் இனங்களின் சிந்தனை பத்தாம் பசலித்தனமாக ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ப தாளம் போடுவது நிறுத்தப்பட வேண்டும்.

லிபோகு : உண்மைதான், நாட்டின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து கிடைக்கும் ஒன்றுகலந்த ஊடாட்ட உணர்வை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும். இதே போல வடகிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தை, தமிழ் முஸ்லிம் மக்களை அரசியல் நோக்கங்களுக்கு அமைய ஊடகங்கள் கூறு போடுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

சிபோகு : வடகிழக்கு மலையக தமிழ்பேசும் மக்கட் தொகுதி மாத்திரமல்ல, நாட்டின் ஏனைய பகுதி தமிழ்பேசும் மக்கட் கூட்டம் மாத்திரமல்ல, நாட்டின் அடுத்த பெரும் பகுதி மக்கள் தொகையினரின் சிந்தனைகளையும் நாட்டங்களையும் கூட நேர் முறையில், Positive ஆக தமிழ்மொழி ஊடகங்களுக்கு கொண்டுவர வேண்டும்.

உபோகு : இது மிகவும் முக்கியமானது. சிங்களம் பேசும் மக்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையேயுள்ள சகலவிதமான இடைவெளிகளும் நிரப்பப்படவேண்டும். அதற்கு ஊடகங்கள் நினைத்தால் பெரும் பணியாற்ற முடியும்.

துபோகு : ஆனால் அது ஒரு வகை ஓசையாக இருக்கக்கூடாது.

அகபோகு : அதாவது பாக்கியராஜின் சினிமாவாக இருக்கக்கூடாது என்கிறீர்கள்.

லிபோகு : பாலச்சந்தரின் ஒருதலை ராகமாககூட இருக்கக்கூடாது.

அகபோகு : ஒரு பக்கம் மட்டும் என்றால் அது உரல் இடி தாங்காது. பொந்து போகும். இரண்டு பக்கமும் என்றால் தவில் அடி. சொல்லுங்கள் எந்தத் தவில் வித்துவானைப் பிடிக்கலாம் ….

எல்லாக் குரல்களும் : அஹ்ஹஹ்ஹ் …. அஹ்ஹஹ்ஹ்(சிரிப்பு)

சிபோகு : அட, கொஞ்சம் ஓவராக போகிறது போல இருக்கு, அடேய், மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பு இழக்கக்கூடாது. தெரிவு, தேடல், கட்டவிழ்ப்பு, வெளிப்படுத்தல் Exposure என்றெல்லாம் பேசினோம். இவைகளுக்குரிய ஓர்மம், Professional Carex and Institution, உள்ளார்ந்த நோட்டமும் இனங்காணலும் எங்கிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

கபோகு : இதைச் சொல்லத் தேவையில்லை. ஊடகத்தின் ஆட்சிபீடத்திலிருந்துதான் எல்லாம் ஊற்றெடுக்கும்.

மூபோகு : உண்மை. ஊடகத்தின் ஆட்சிபீடத்தில் அல்லது லகானில் அமர்கிறவர் ஒரு பேராசிரியரின், ஒரு நிபுணரின் ஸ்தானத்தில் இயங்க வேண்டியவராகிறார். எந்த நல்ல பத்திரிகையாளனுக்கும், அல்லது அந்த அர்த்தத்தில் எந்த நல்ல ஊடகவியலாளனுக்கும் தயக்கமில்லாமல் கலாநிதிப் பட்டம் வழங்கக் கூடியதாகவிருக்க வேண்டும். அவர் பல்துதறை அறிவும், சிந்தனையும், சிந்தனையாளர் தொடர்புமுள்ள இன்ரலெக்ஷுவலாக அமைய வேண்டும்.

சபோகு : அத்தகைய இன்ரலெக்ஷுவல் லெவலில் உள்ளவர்கள் எமது ஆசிரிய பீடங்களில் இல்லை என்றா சொல்கிறீர்கள்?

மூபோகு : காலத்துக்குக் காலம் ஒரு சிலர் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அது நிலைபேறான தன்மையாய் இல்லை. ஊடகத்தின் எல்லா மட்டங்கிளிலும் அந்த மேதமை சரியாக கூறவில்லை. சில அரைப்பக்க, கால்பக்க விமர்சனங்கள் அல்லது பத்திகள் எடுப்பான தலைப்புகளுடன், முக்கியமான அலசலைத் தரும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவனவாகத் தோன்றும். ஆனால் உள்ளே நுழைந்ததும் வெறும் சுற்றுப் பாதையாய் இருக்கும். அல்லது வெங்காயத் தோல் உரித்த கதையாக முடியும்.

உபோகு : நமது ஊடகங்களின் மிகப்பெரிய வறுமை இதுதான். நிரம்பிய கல்வி கேள்வியும் தத்துவர்த்த புலமையுமுள்ள சமூக அரசியலில் விமர்சனங்களுக்கு பஞ்சமாகவே உள்ளது.

அகபோகு : நம்முடைய இந்த கொக்ரெயில் சாகச்சாவில் கூட அதுதான் தாராளமாகத் தெரிகிறதே!

பல குரல்கள் : அஹ்ஹஹ்ஹ் …. அஹ்ஹஹ்ஹ்,,, (சிரிப்பு)

சிபோகு : நல்லா ஏறிற்றுப்போலதான் தெரியுது. பில்லை முடிப்போம்.

மபோகு : ஏன் அப்படிச் சொல்றீங்க? தரமான சமூக அரசியல் விமர்சகர்கள் நம்மிடம் இல்லாமலா?

உபோகு : அத்தி பூத்தாற் போல, தோன்றி மறையும் மின்மினி சுடர் போல, ஆங்காங்கே சில நல்ல அரசியல், ராணுவக் களநிலவர விமர்சனங்களைக் காண முடிகிறதுதான். ஆனால நிலைபேறான, திடமான விசுவாசத்தோடு தொடர்ந்து மக்களுக்கு அறிவு கொள்ளக்கூடிய, நிறப்பிரிகை செய்யக்கூடிய, நுண்மாண் புழைநலம் மிக்க, சமூக அரசியல் விமர்சகர்கள் நம் மத்தியில் எங்கே இருக்கின்றார்கள்? கருத்தாழம் மிக்க நுட்பமான அலசலுக்கு ஒரு உயன்கொடைவையோ, ஒரு ரூபசிங்காவையோ, ஒரு எதிரிசிங்காவையோ அல்லவா காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.

பேபோகு : நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

அகபோகு : அப்படியென்றால் நீதான் அடுத்த Editor in Chief

பல குரல்கள் : அஹ்ஹஹ்ஹ் …. அஹ்ஹஹ்ஹ்… (சிரிப்பு)

உறக்கத்தில் நான் உளறிக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த உளறளையே ஒரு பாட்டாகவும் இசைமீட்டுக் கொண்டே இருளில் தடவி பனை மரத்துக்கு அப்பால் போனேன். கதிரைகள் யாவும் காலியாகக் கிடந்தன.

சுற்று முற்றும் பார்த்தேன் கிளப்பின் கட்டிடத்துக்குள் போய் பார்த்தேன். அங்கும் அந்த பாட்டைப் பாடிக்கொண்டே பலரையும் பார்த்து சிரித்தேன்.

விலகிப்போன நட்சத்திர வாசிகள்
மீள வருவதெப்போ?
குலைந்துபோன மழைப்பூச்சிகள்
கோலம் போடுவதெப்போ … ?

வெளியில் கடல்வரையும் நடந்தேன். மீண்டும் இருளும் ஒளியும் ஒன்றை ஒன்று வெட்டுகின்ற டெனிஸ் அரங்கிற்கு வந்தேன். அப்படியே என் சைக்கிளையும் தள்ளிக் கொண்டு வாடிவீட்டு வீதியின் கடல் சந்திக்கு வந்தேன். தூரத்தில் சில மோட்டார் சைக்கிளின் பின்பக்கச் சிவப்பு ஒளிர்வுகள், வீதி மேக்கூரி விளக்கை அண்ணார்ந்து பார்த்தேன். மழைப்பூச்சிகள் கோலமிட்டுக் கொண்டிருந்தன.

அதே மழைப்பூச்சியிகள்தான் இப்போதும், என் அறையில் ஒன்றிரண்டாக கோடு போட்டவை. இப்போது ஒரு திரளாக கோலம் போடுகின்றன. நான் எழுந்து இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.

Leave a Reply

Your email address will not be published.