நீக்கம்

அவன் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.
கார்த்திகை மாதக் கடைசி. மழை இன்னும் மூச்சுப் பிடிக்கவில்லை. எனினும் இடைக்கிடை சில பாட்டங்கள் சொரிந்திருந்தன. அனேகமாக எல்லா வயல்களிலும் விதைப்பு முடிந்திருந்த்து. அவைகள் சிறுபயிராக மெல்லிய காற்றில் சிலிர்த்தன. குளங்களில் முழங்கால் வரையும் நீர் பிடித்திருந்த்து. எருமைதக்கி எல்லாக் குளங்களிலும், சப்பு நீர்களிலும் குடிபெயர்ந்த்து விட்டது போல் தோன்றியது. அதன் மிருதுவான பூக்கள் ஊதாக்கம்பளம் விரித்த்து போன்று ஒரே பரப்பாகத் தெரிந்தன. (லோட்ஸ்-வேர்த்தின் ‘ஒரு கண்வீச்சில் பத்தாயிரம் டஃபோடில்ஸ்’ இங்கு எதற்குக் காணும்?)
நின்றபஸ் மீண்டும் நகரத் தொடங்கியது. தன் உள்ளமும், உடலும், மிகவும் லேசாக, மிகவும் மிருதுவாக இருப்பதை, தான் ஆனந்தமாக உள்ளதை அவன் திடீரென உணர்ந்தான். அவனுக்குப் பெரிய ஆச்சரியமாகவிருந்த்து. எப்படி அவனுடைய உள்ளமும் உடலும் இவ்வளவு இலேசானது? வயல்களின் இந்த இதமான பசுமையாலா? எருமை நச்கிகளின் இந்த ஊதா நிறப் பூக்களவினாலா? அதை அவன் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
எனினும் அவன் ஆனந்தமாக இருந்தான். அவனுடைய உடலும் உள்ளமும் இலேசாக இருந்த்து.
இதற்குமுன் இப்படி ‘’மூட்’’ அவனுக்குக் கிடைக்கவில்லை. ஒரு நல்ல கதையை அல்லது கவிதையை அவன் எழுதியபோது அவனுடைய உள்ளம் நிறைவுகண்டு பூரித்துப் போனமை உண்மையே. ஆனால் நிறைவும் பூரிப்பும் வேறு. ஆனந்தம் வேறு. இப்படி அவன் சொல்லாய்வு நிகழ்த்துவது சரிதானா? எப்படியெனினும் உடலும் உள்ளமும் இலேசானது முற்றிலும் வேறு. அதில் அவன் சந்தேகப் படவில்லை. எழுச்சி, கிளர்ச்சி, இன்பக்கிளுகிளுப்பு எல்லாம் அவன் அனுபவித்தவையே. ஆனால் உடலும் உள்ளமும் இலேசாவதென்பது எழுச்சியும் அல்ல, கிளர்ச்சியும் அல்ல. அது அமைதி, நிர்மலமான நிலை – வேண்டுமானால் நிர்மலமான ஆகாயத்தை அதன் மாதிரியாகச் சொல்ல்லாம். நிர்மலமான ஆகாயத்தை எந்த எண்ணமும் இல்லாமல், எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டே கிடக்கலாம் — அதைப்போல.
கடந்த சில மாதங்களாக அவனுடைய உள்ளத்தில் தீராத பளு இருந்து வந்திருக் கின்றது. பதிநான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு ஊரில் அவனுடைய வேலைத் தலம். விடிய ஐந்து மணிக்குக் கண் விழித்த்தும், அந்த நெடுந்தூரந்தான் கல்வாரி மலைபோல் மனக்கண்ணில் தெரியும். ஆறு மணிக்குள் பஸ் அல்லது ட்ரக் பிடித்துச் செல்லும் நடுவழியில் ஒரு சிந்தனை மூட்டம் தலை நிமிர்ந்து பார்க்கும் போது, பயணம் இன்னும் முடியவில்லையே என்ற சலிப்புத் தோன்றும். இடத்தை அடைந்து பஸ்ஸை விட்டிறங்கி, ஒன்றரை மைல் கால் நடையில் செல்லும் போது, அட ஏன் வந்தோம் என்றாகிவிடும். மதிய உணவின்றி, இரண்டு மணிக்கு வேலை கலைந்து, பஸ் ஏறி, வீட்டுக்கு வந்து சேர மாலை ஐந்து ஆகிவிடும். அதன் பிறகு மதிய உணவை ஒரு மூச்சுப்பிடித்தால், வரும் அசதியும், உடற்பாரமும் அன்று இரவு முழுதும் வாட்டும். இவையெல்லாம் ஒரு அதிகாரியின் வெறும் முரட்டுத்தனத்தாலும் தான் தோன்றித்தனத்தாலும் என்றெண்ண எல்லாம் இன்னம் பளுவாகத் தோன்றும். இந்தப் பாரச்சிலுவையைச் சுமந்தபடிதான் அவன் காலையில் பஸ் ஏறுவான், ஆனால் இன்று ஏன் இப்படி எல்லாம் இலேசாகவும் மிருதுவாகவும் உள்ளது?
பஸ் அடுத்த நிறுத்த்த்திலிருந்து மீண்டும் தொடர்கிறது. இந்த விஷயம் மிகவும் துருவி ஆராயத்தக்கது என அவன் மனம் தீர்மானிக்கிறது. நேற்று மாலையிலிருந்து இப்போது வரையில் நிகழ்ந்தவைகள்தான் இதற்குச் சரடு அமைக்க வேண்டும் என்றும் அவனுடைய உள்ளுணர்வு அவனுக்கு எப்படியோ தெரிவித்து விட்டது.
நேற்று மாலையில், அவன் வேலைத்தலமிருந்து போய், மதிய உணவை சற்று அதிகமாக உட்கொண்டும், அவன் அசதிக்குள்ளாகவில்லை என்பது இப்போது அவனுடைய நினைவுக்கு வருகிறது. உண்டதும் சிறிது நேரம் பத்திரிகை பார்த்தான். அவனுடைய 10 வயது, 8 வயதுச் சிறுவர்கள் தோட்டத்தில் தலைமழைக்குப் பிடித்தகளை களை வேலையாகவும், விளையாட்டாகவும் பிடுங்கிக் கொண்டிருந் தார்கள். அவனும் அந்த வேலையிலும், விளையாட்டிலும் கலந்து கொண்டான். பின்னர் இரண்டு மூன்று வீரக்கட்டைகளை விறகுக்குப் பிளந்து, மேனிமுழுவதும் வியர்வை வடியும்போது நண்பர்கள் சிலர் அவனைப் பார்க்கவந்தார்கள். அவர்கள் போய் அவன் மீண்டும் கோடரியைத் துக்கும் போது, இன்னும் சிலர் வந்தார்கள். கோடரிக்குக் குட்பை சொல்லிவிட்டு, அவன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் போகும் தறுவாயில், விடுமுறை கழிக்க அன்றுதான் ஊருக்கு வந்த நண்பர் வந்தார். அவர் வரும் போது 6.30 இருக்கும். 6.45க்குள் அவர்கள் சினிமாவுக்குப் புறப்பட்டார்கள். 9.00க்குச் சினிமா முடிந்து 9.30க்கு வீடு வந்து சேர்ந்தான், சாப்பிட்ட பின், 11.30 வரையும் மனைவியுடன் இருந்தான், அதன் பிறகு 2.00 மணி வரையும் படித்தான். ஒரு கவிதை எழுதினான். படுத்தான். விடிய இடைக்கிடை அவன் மனைவி எழுப்பியும், 6.45க்குத்தான் எழுந்திருந்தான். 7.15க்கிடையில் முகம் கழுவி உடையணிந்து, காலை உணவையும் முடித்துக் கொண்டு புறப்பட்டான். 7.30க்கு அவன் பஸ்நிலையத்திற்கு வந்த்தும் இந்த பஸ் கிடைத்த்து. இன்று அவன் மிகவும் பிந்திவிட்டான். எனினும் மனதில் அந்தப் பாரமோ, வேறு எந்தப் பாரமோ இல்லை.
பஸ்ஸில் பிரயாணிகள் இன்னும் நெருக்கமானார்கள்.
மனைவியுடன் 11.30 வரையும் அவன் இருந்த்தை மீண்டும் ஒரு முறை நினைத்துக் கொண்டான். இரவு அது கொஞ்சம் அதிகமாகத்தான் போய் விட்டது. ஆரம்பத்தில் அவள் விரும்பவில்லை. கண்ணைச் சுருட்டுகிறது என்றாள். எனினும் அவன் விறகுகளை கூட்டி ஊதினான். மெல்லச் சுடர்ந்தது. மெல்ல மெல்லத்தான் சுடர்ந்தது. மாரி காலக் குளிரில் சில்லென்றிருந்த அவளுடைய தேகம் மெல்ல மெல்ல உஷணமானது. அவன் விற்பனன் ஆனான். அற்புதமாக அவளை ஆற்றுப்படுத்தினான். நவமானவகையில் அவளை மீட்டினான். நரம்பின் ஸ்வரங்களைப் புரிந்து கொண்டு நெருடினான் . . . அந்த வீணை மெல்ல உயிர்த்த்து, அதன் நெருப்பு இன்னும் ஒளிர்ந்த்து வீணையின் வேறு நரம்புகளையும் அவன் கிளறினான். செருப்பு மேலும் சிவந்து சுடருமாறு அதன் மீது தனது மூச்சுக்களைச் செலுத்தி முகர்ந்தான். உயிர்த்த வீணை சிணுசிணுத்த்து, முனகியது, அனுகியது. அதிர்ந்த்து. அதை மீட்டு மீட்டு அவன் துடித்தான், அதை மீட்டு, மீட்டு அவன் தனளை உருக்கினான், அவன் அதனோடு இழைந்தான். அந்த நெருப்புப் பற்றிப் பிடித்த்து, சுவாலை விட்டது. பின்னர் அவள் அவனை வழிநடத்தினாள். அவள் ஆடி ஓயும் வரை அவன் நட்டுவம் செய்தான். யார் யாருக்கு நட்டுவாங்கம்? குழந்தைகள் போல இருவரும் கிடந்தார்கள். வீசிப்பட்டுக் கிடந்த அவளுடைய நைற்கவுணையும் போர்வையையும் எடுத்து அவள்மீது போட்டுவிட்டு தன்னுடைய சாரனையும் சேட்டையும் தடவி எடுத்துக் கொண்டு, அவன் வெளியே மண்டபத்துக்கு வந்தான். வியர்வை இன்னும் ஈரமாக இருந்த்து. துடைத்தான் உடற்சூடு தணிந்து குளிர்ந்த்து தனது படிப்பறைக்கு வந்து விளக்கைத் துண்டி விட்டு அமர்ந்தான்.
மாலையில் அவனுடைய நண்பன் அந்தச் சினிமாவுக்குச் செல்வதை ஆதரித்த போது அவன் சற்றுத் தயங்கினான். அடுத்தநாள் (இன்று) அவன் வேலை செய்யும் ஸ்தாபனத்தின் மரம் நடுகை விழாவுக்கு ஒரு கவிதை எழுதித் தருவதாக அவன் ஒப்புக் கொண்டிருந்தான். அது நெடுங்கவிதையாகவே அமையமுடியும் அதை உருப்படுத்த அவனுக்கு இரண்டொரு மணித்தியாலம் ஆகலாம் அதனால் சினிமாவுக்குப் போனால், அதற்கு நேரம் போதாமல் போகலாம் என அவன் சிறிது அஞ்சினான். எனினும் சினிமா முடிந்து வந்தும் எழுதி முடிக்கலாம் என்ற அசட்டுத் தைரியத்தில்தான் அவன் புறப் பட்டுப் போனான் சினிமா முடிந்து வந்து அவளுடன் இருக்கும் போதும் அந்தக் கவிதை நினைவு சுருக்கென்று தைக்கத் தான் செய்த்து. அந்த உயிர்ப்பிணைப்புகளின் பின்னர் அவன் அவளுடன் அப்படியே உறங்கிப் போவதும் உண்டு. ஆனால் அவன் அதை அப்போது பொருட்படுத்தவில்லை. அவளைப் பிரிந்து, படிப்புமேசையில் அமர்ந்த போதும் அவன் அக்கவிதை பற்றிச் சாவதானமாகவே நினைத்தான். கவிதைக்கு முன்பு Illustrated Weekly ல் ஹேமமாலினி கண் சிமிட்டினாள். அவளைப் பற்றி வாசியாமல் இருக்க முடியவில்லை. Perhaps there were other companions to luck-like hard work and persistence, a sense of dignity for this work and the consciousness of the importance of doing that job with earnestness and diligence” என்று அவள் கூறும் இடத்தை கறுத்த போஸ்ட் பேனாவால் அடையாளமிட்டான். ஹேமமாலினியின் அந்தக் கருத்துக் களுக்காக அவள் மீது ஒரு மதிப்பை வளர்த்துக் கொண்டே, மரம் பற்றிய அந்த நீண்ட கவிதையை எழுதி முடித்தான்.
பஸ் மீண்டும் ஒரு தரிப்பில் நின்றது. பசிய வயலினூடாக முகத்தில் வந்து மோதிச் சிலிர்த்து, அவனுடைய நீண்ட ஹிப்பி தலை முடியைச் சற்றுக் கலைத்த காற்றுக்குக் கூசியபடியே அவன் அந்தக் கவிதையின் நினைவிலிருந்த சில அடிகளை முணு முணுத்தான்.
‘’வசந்தத்தை நாங்கள் வாழ்த்தி இருக்கிறோம்
வளர்இள வேனிலை மகிழ்ந்தும் இருக்கிறோம்
வசந்த ருதுவின் மங்கையும் நீயே,
வளர்இள வேனிலினி இதயமும் நீயே,
மரமே உன்னை வாழ்த்தி நின்றனம்
மரமே உன்னை வளர்க்க வந்தனம் . . .

பஸ் மீண்டும் புறப்பட்டது. திடீரென அவனுக்கு ஒரு எண்ணம் பளிச்சிட்டது.
‘’நேற்று முழுக்க நான் Busy யாய் இருந்திருக்கிறேன் –‘’
ஆகவே அதன் உண்மை Being Busy தானா? கருமத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமை தானா? ஆனால் அவன் வேறுவிதமாக உணர்ந்தான். அவன் கருமங்கள் புரிந்திருந் தாலும், அவன் அவற்றைப் பெரிதுபடுத்த வில்லை. கவிதைக்காக அவன் சினிமாவைத் துறக்கவில்லை. கவிதைக்காக அவன் கலவியைக் கைவிடவில்லை. கவிதைக்காக அவன் ஹேம மாலினிக்குக் கண்மூடவில்லை. பஸ்சுக்காக அவன் நித்திரையைக் குழப்ப வில்லை. நேரத்திற்குப் போவதற்காக அவன் இப்போதும் அலட்டிக் கொள்ள வில்லை – சரிதானா? ம்ஹும். இன்றும் அவனால் சம்மதிக்க முடியவில்லை.
அட, அதை விட்டுத் தள்ளு. அதற்கு ஒரு விளக்கம் தேவை என்று கூட அவன் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? அனதைப் பாரமாக்கிக் கொள்ள அவன் இப்போது தயாரில்லை.
அவன் எந்தக் காரண காரியச் சிந்தனைப் பொருத்தமும் அற்று அந்தக் கவிதை அடிகளை மீண்டும் முணுமுணுத்தான்.
‘’வசந்த ருதுவின் மங்கையும் நீயே,
வளர்இள வேனிலில் இதயமும் நீயே’’.

இருபுறமும் நீண்டதுரம் ஓடி மறைந்து கொண்டிருந்த அந்த மருதமரங்களைப் பார்த்தான். வயலோரமாக உள்ள தந்திக் கம்பிகளில் பாட்டம் பாட்டமாக சிறிய கறுத்த நிறக் குருவிகள், அமர்வதையும், பறப்பதையும், மீண்டும் அமர்வதையும் பார்த்தான். பஸ் இன்னும் ஓடிக் கொண்டிருந்த்து.

Leave a Reply

Your email address will not be published.