மனித நேயமும் மண்ணாங்கட்டியும்

அன்று சனிக்கிழமை. ரியுசன் வகுப்பு முடித்துக் கொண்டு அவன் 10.30க்கு பிறப்பட்டான்.
ரியுசன் நடந்து கொண்டிருக்கும் போது மிஸ்ஸிஸ் தேவரெத்தினம் வந்து அவனைக் கூப்பிட்டு விசாரித்த செய்தி அவனுடைய மனதைக் குடைந்து கொண்டிருந்த்து.
‘’சசி மெய்தானா, அனுராதபுரத்தில் மிஸ்ஸிஸ் கோவிந்தசாமிதயும் அகப்பட்டுக் கொண்டாவாம்?’’
‘’அப்படித்தான் பயந்து மிஸ்டர் கோவிந்தனும் பொலிஸ் வயலெஸ் மூலமாக விசாரித்துக் கொண்டிருந்தார்’’

‘’அவ எப்ப போனவ?’’

‘’செவ்வாய்க்கிழமை – 16ம் திகதியாம் யாழ்தேவி கொணக்ஷனுக்காக உதயதேவியில் புறப்பட்டதாம்’’
‘’புதன் கிழமை விடியத்தானே அனுராதபுரத்தில் தங்கினவங்களாம்?’’
‘’ஓமாம்’’
‘’அது சரிதான். மிஸிஸ் கோவிந்தசாமி அனுராதபுரத்து ஆஸ்பத்திரியிலாம். பிள்ளைகளைக் காணல்லயாம். அதை விடப் பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? ஆனந்தராஜனை வெட்டிக் கொன்றதாம். சங்கீத்த்தை தாறுமாறாய்க் கெடுத்துப் போட்டானுகளாம்’’
‘’ஆ ,, , , , , ,,,,, ‘’
அந்த்த் திகைப்பின் பின்னரும் அவன் ஒரு மணி நேரம் வகுப்பு நடாத்திக் கொண்டிருக்கிறான்! என்ன மனுஷன் அவன்?
காதோரமாக்க் கவிந்துகிடந்த தலைமயிரைக்காது இடுக்குகளில் நீவி விட்டுக் கொண்டே அவன் விளையாட்டு மைதான ஓரமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தான். புதிய மெதடிஸ்ற் சேர்ச்சைக் கடந்து பிரதான வீதியில் ஏறுகையில் சைக்கிள் டயர் குட்டியது—அவன் நெஞ்சைப் போல.
பக்கத்தில் உள்ள சைக்கிள் கடைக்கு போய் காற்றடித்துக் கொண்டு மீண்டும் சைக்கிளில் ஏறினான், பாபுஜியைக் கடந்து மஜெஸ்ரிக் எலக்ரிக்கல் உவோர்ச்சுள் எட்டிப் பார்த்து விட்டு எதிரே தெரிந்த சனம் நிறைந்த கடைத் தெருவை அசுவார்ஸமாகப் பார்த்தான். வாடி வீட்டு வீதியில் சைக்கிள் திரும்பியது.
சந்தையைக் கடக்கம் போது, சந்தைக்கு எதிரே, பாடசாலை மதிலில் கிறுக்கப்பட்டிருந்த சுலோகங்களைக் கவனித்தான்.
முருகேசுப்பிள்ளை டொக்டரின் வீட்டு மதிலோரம் குலை குலையாகத் தொங்கிய திருக்கொன்றைப் பூக்களை ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் மிருதுவான வெயிலில், மெல்லிய காற்றில் அசைந்த அந்த புளிய மரத்தின் நிழல்களூடு செல்கையில் மீண்டும் பாடசாலையின் அந்த நீண்ட மதில் முழுவதும் தொடர்ந்து கிறுக்கப்பட்டிருந்த கோஷங்களைப் பார்த்தான்.
ஓர் இடத்தில் துப்பாக்கி வரையப்பட்டு ‘எங்கள் இரத்த்த்தில் தமிழ்ஈழம்மலர்க’ என்று இருந்த்து.
இன்னோர் இடத்தில் ‘ஏழாண்டில் எங்கள் தமிழ் ஈழம்’ என்று வழிந்த மாதிரி இருந்த்து.
மற்றுமோர் இடத்தில் ‘சிங்களவனின் தோலை உரித்து மேளம் கொட்டுவோம்’ என்றிருந்த்து.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவன், எதிரே நீண்டு கிடந்த அந்தக்கறுத்த தார்றோட்டைப் பார்த்தான். ஏற்ற இறக்கங்களுடன், ஹரிசன் தியேட்டரில் ‘’Daring dozens” சிவப்பு எழுத்துக்கள் தெரிந்தன. அதற்கப்பால் உள்ள மதகடியைக் கடந்து வரும் ஏற்றத்தில் சைக்கிள் கிரீச்சிட்டு அழுது முனகியது. அடுத்துவந்த இறக்கத்தில் குதிரைபோல பறந்த்து. தபால் கந்தோரையும் கடந்து, கடலின் அமைதியை அவனுடைய கண்கள் முற்றாகத் துளாவ முன்னரே சைக்கிள் கிளப் வாசலுக்குப் போய் விட்டது. பழக்கப்ட்ட குதிரை.
கிளப்பில் பாரதியுடன் சிறிது நேரம் பிங்பொங் விளையாடினான் சசி. திலகனும் யாக்கூப்பும் வந்தபோது அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவனும் பாரதியும் பாக்கியத்தோடும், செபத்தாரோடும் 304 விளையாடச் சேர்ந்தார்கள்.
எதிரே ஸ்ரூலில் சிகரெட்டுகளும் சாராயமும் லெமனேட்டும். யார் அவனுக்கும் சேர்த்து ஓடர் செய்தார்கள்? செபத்தாரா, பாக்கியமா? என்ன இது கறுப்பா, வெள்ளையா? கறுப்புத்தான், சேச்சே! சீ! என்றாலும் இந்த வேளையில் அதுவும் பரவாயில்லை. லெமனேட்டை கிளாசின் விளிம்பு வரை ஊற்றி ஒரேயடியாக வாரிக் குடித்துவிட்டு மூக்கைச் சுளித்துக் கொண்டு நிமிர்ந்தான். பின், எல்லாவற்றையும் மறந்தவனைப் போல தாள்களை மாற்றி அடித்துப் பிரித்துப் போட்டான்.
. .. . . .. .. ஆஸ்பத்திரி, வார்ட். உயர்ந்த கட்டில். அவள் தலையில் கட்டுகளுடன், தாலிக் கொடியைக் காணவில்லை. மாலையைக் காணவில்லை. காப்புகளை காணவில்லை. தோடு? . … காது அறுந்ததா? பிளாஸ்ரிக் போட்டிருக்கு, ஓ ஐயோ. . . என்ர பிள்ளைகள் . . . என்ர பிள்ளைகள்…
ஒரு சிறிய தெருவின் மூலை, ஒரு தண்ணீர்க் குழாயடியின் சகதி. இரண்டு கோழிக் குஞ்சுகள் – தலைகளை உயர்த்தி . . . . கழுத்து வரையும் தோல் மடிப்பு இழுபட்டு நீள, நிர்க்கெதியாய் . .. .. கீச், கீச் . . . . கீச், கீச். . . . . .
……துரத்தில் வெள்ளரசு மரம்……. ருவான் வெலிசாய தாதுகோபுரம் …… பின் அவை இதோ கண் முன் உயர்ந்து நெடுத்து – செக்கர் வானின் பின்னணியில் அரசு இலை கரிய நிழலாக . . .
‘’என்ன சசி, இரண்டு தாள் போட இவ்வளவு நேரமா?’’
‘’என்ன, பாரதி இறக்கியாச்சா? . . . . . . கலாவரைதானே இறங்கி வருது? என்னிடம் துருப்பு இல்லையே, , , , ஆடத்தன் ஏசைக் கழிப்போம். . . .அடேடே ஆடத்தன் துரும்பா? என்ன, இன்றைக்கு! ஒன்றையும் கிரகித்து வைத்துக் கொள்ள முடியவில்லை!. . . . இரண்டு ஆட்டம் தோற்றாச்சா? பாக்கியம் மன்னியப்பா, பெஸ்ட் ஒஃப் ஃடைவ்தானே . . . அடத்த மூன்றும் நமக்குத்தான் . .. . . சேச்சே, அப்படி ஒன்றும் மப்பு இல்லை . . . . போயும் போயும் ஒரு ட்ரிங் தானே. . . . ‘’
. . . . . . . மீண்டும் அனுராதபுரம் . . . . . . . அத்தனை அல்லோலகல்லோலத்திலும் ஆனந்தராஜனின் உருவம் தெரிகிறது. அவன் நெடுவல் கடைவாயில் இரத்தம் வழிகிறது. காடையரின் இரும்புப் பிடி என்றாலும் அவன் நிமிர்ந்த நிற்கிறான். ரத்தம் வழிந்து சேர்ட்டுக் கிழிந்தாலும் அவன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய நிமிர்ந்த தோற்றத்தில் அந்தஜக்கடையாவிற்கு இன்னும் எரிச்சல் வந்துவிட்டது, துள்ளிப் பாய்ந்து ஆனந்தராஜனின் தலைமயிரைப் பற்றி இழுத்துக் குலுக்கி விடுகிறான். ஆனந்தராகஜன் இப்போது சிறிது குனிந்த மாதிரி தலைமயிர் குழம்பி நிற்கிறான். அவனை ஓர் மரத்துடன் சேர்த்துக் கட்ட அவர்களுக்குக் கயிறு கிடைத்து விடுகிறது. அவனுக்கு முன் அவளை இழுத்துக் கொண்டு போகிறார்கள். இரண்டு பக்கமும் இரண்டு பேர். பின்னால் ஒருவன்.
‘’அத்தான் ‘’
‘’சங்கீதா ‘’
ஓர் இளம் நாகு திமிறி, எகிறி கழுத்தை இழுத்துக் கொண்டு நின்று, பின் இழுபட்டு இடறி இடறிப் போகிறது,
சுளை சுளைந்த பலாப் பழச் சக்கை ஒன்றை, ஒரு கை வேலிக்கு வெளியே எறிகிறது . . . . . .
. . . . . சசி சீட்டாட்டத்தில் இன்னும் அநேகம் பிழைகள் விட்டான். விழுந்த தாள்களைக் கிரகித்து மனதில் வைத்துக் கொள்ள முடிய வில்லை. அடுக்கிய தாள்கள் எங்கே போய் நிற்கும் என்பதைப் பிடித்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு உண்மையிலேயே மதுவின் கிறக்கம்தானா? ஆக இரண்டு ட்ரிங்தானே. முத்து இன்னுமொரு அரைப் பைந்தும் லெமனேடும் சிகரெட்டுகளும் கொண்டு வந்தான். யார் இதற்க்கு ஓடர் செய்தார்கள் பாக்கியமா? செபத்தாரா? பாரதியா? அதிலும் பாதி முடியும் போது உலகத்தையே உள்ளுக்குக் கொண்டு வருவது போல் வெங்கட் வந்து சேர்ந்தான்.
‘’கண்டியிலும் கேஃபியு, கொழும்பிலும் கேஃபியு . . . . . . இட் இஸ் ஸ்பெறடிங் ஒள் ஓள . . . . முத்து ஒரு ட்ரிங் கொண்டு வா….’’
வெங்கட் கலகலப்பாகச் சொன்னான். அந்தக் கிளப் முழுவதும் அவனுடைய குரல் சதங்கைபோல ஒலித்த்து. சசி ஸ்தம்பித்துப் போய் இருந்தான். திலகனும் யாக்கூப்பும் பிங்பொங் ஆட்டத்தை நிறுத்தினார்கள். இந்த வெங்கட்டுக்கு மாத்திரம் இதெல்லாம் சந்தோஷமா? முத்துக் கொணர்ந்த ட்ரிங்கை வெங்கட் எடுத்துக் கொண்டே இன்னும் உற்சாகமாகச் சொன்னான்.
‘’எப்படி ஜனாதிபதியின் ராத்திரிய ரேடியோ பேச்சு?’’
‘’சண்டை என்றால் சண்டை, சமாதானம் என்றால் சமாதானம்’’ – திலகன்.
‘’நல்ல நரிப் பேச்சு!‘’ – பாக்கியம்.
‘’இல்லை ! இட் உவோஸ் எ கிராண்ட் ஃபாதேஸ் ஸ்பீச்’’ – சசி.
சுடுதியாக்க் கிடைத்த அந்த உவமானம் சசிக்குப் பிடித்துக் கொண்டதைப் போலிருந்த்து, மீண்டும் அதைச் சொல்லிக் கொண்டே எழுந்தான்.
‘’யெஸ், இட் உவோஸ் எ கிராண்ட் ஃபாதேஸ் ஸ்பீச் . . . . . . அது ஒரு பெத்தப்பாவின் பேச்சு,’’
‘’ஓம்ம் . . . . . . . ‘’
நேரம் 1.30க்கு மேலாகி இருந்த்து, நல்ல வெயில். சைக்கிளை வேகமாக மிதித்தான். வாடி வீட்டு வீதியின் இறக்கம். ஹரிசன் தியேட்டர். அந்த பாடசாலையின் நீண்ட மதிற்சுவர். அதில் வரைந்துள்ள சுலோகங்கள்.
‘’எங்கள் ரத்த்த்தில் தமிழ் ஈழம் மலரட்டும்’’
‘’எட்டப்பரின் மகள்மாரைத் தமிழ்ஈழத்துக்குக் கடத்துவோம்.’’
‘’சிங்களவனின் தோலை உரித்து மேளம் கொட்டுவோம்.’’
சைக்கிளை நிறுத்தி காலை உதை குத்தி அந்தக் கடைசிச் சுலோகத்தை உற்றுஉற்றுப் பார்த்தான். மதுவின் கிறக்கம் முகத்தில் தெரிந்த்து. உதடு கடை வாயோரமாய் நெளிந்து சுருண்டது. அதே இடது பக்கக் கண்ளோரமாய்ச் சந்தை தெரிந்த்து. அவன் சைக்கிளைத் தொடர்ந்து மிதித்தான். சந்தைப் பக்கம் திரும்பிப் பார்க்கையில், இறைச்சிக் கடை வேறு வேறு கடைகளின் இடுக்குகளின் ஊடே தெரிந்த்து.
. . . . . . தோலுரித்த ஆடு இன்னும் துடித்துக் கொண்டு தொங்கியது. அதன் சிவப்புத் தசை ‘குளோசப்பில்’ கண்ணின் முன் வருகிறது. தோலுரித்த தசை அதன் மெல்லிய வெண்சவ்விழையப்படரினுடாக எங்கும் ‘புரு புரு’’ என்று துடி துடித்துச் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. தோலுரித்த பிறகு அதன் ஜீவசக்தி துலாம்பரமாய்த் தெரிவது போல் உள்ளது. சுகாதாரப் பரிசோதகர் வந்து ‘சிங்கள ஆடு’ என்று அதற்கு சீல் குத்துகிறார். கீழே கசாப்புக் கடையினுள், உரித்த ஆட்டுத்தோல் கம்பளிப் போர்வை போல் கிடக்கிறது . . . . . . ஆடு விளாஸ் இறுக்கிய உடுக்கை, கண் தெரியாத இளைய மாமா தட்டுகிறார் . . . . கே. பாலச்சந்தரின் ‘அரங்கேற்ற’ நாயகி பிரமிளா, ரவுண்ட் எபௌட் சந்துக்கு மேல் ஏறிக்குதித்து, றபானை தட்டிக் கொண்டு ஓடுகிறாள் கடலை நோக்கி. கடல் சசியின் முன், பட்டினத்தையெல்லாம் மூடி, உறைந்து ஸ்தம்பித்து நிற்கிறது . . . . .
சசியின் சைக்கிள் ரவுண்டெபௌட்டில் திரும்பி மஜெஸ்ரிக்கைக் கடந்து வெலிகமையை நெருங்கும் போது சைக்கிள் கடைக்காரன் சொல்லிக் கொண்டிருக்கின்றான்-
‘’சிலோன் முழுக்க ஊரடங்குச்சட்டம், என்ன, நம்புறிங்கல்ல இல்லையா? . . . . . கல்முனையிலயுந்தான் . . . . . அஞ்சு மணி தொடக்கம் . . . . . ஓடுங்கோ! சாமான் சக்கட்டுப் புக்கெட்டுகளை வாங்கி வையுங்கோ . . . . . .’’
சருகுகள் பறந்த ஓடுகின்றன. வீதியும் வெயிலும வெறிச்சோடுகின்றன . . . . . .
. . . . . வெள்ளைச் சுவரில் இருளும் ஒளியுமாய் நிழல்கள் சடசடத்து யாருக்கோ பயந்து ஓட்டம் எடுக்கின்றன. வேலிக்கம்புகள், வேலித்தழைகள், இலைகள் இவ்வளவு பெரிய கரிய நிழல்களாக யாருக்குப் பயந்து இப்படி- . . . . . . . இன்னும் கிடுகுப் பொத்தலில் கண் புதைய, ‘’ஆமி ஜீப்’’ என யாரோ அலறிக் கேட்கிறது. ஹரிசன் தியேட்டரின் வெள்ளித்திரை இலக்கங்கள் அறுந்து தலைகீழாகப் புரள்கின்றன. 58, 61, 71 . . . . துறைநீலாவணையின் புளிய மரத்து இருளில் ஜீப்பை விட்டு விட்டு, வெறும் காலுடன் வயல் வரம்புகளில் தப்பி ஓடிய கரிய உருவங்கள் . . . . . . பஸ்ஸை கொளுத்து வதற்கும் துவக்குகளைப் பறிப்பதற்கும் கோயில் வெளியில் கூடிய இருள் இரவுகள் . . . மருதமுனையிலிருந்து இரவோடிரவாக வந்த சீனத்து யாத்திரீகர்கள் . . . கீர் – அன் – சுங்கும், மர்தூங்கொத்தூங்கும், மர்துங் – கு புரூட்டுங் – சுங்கும் . . . . மாக்ஸை மடு வெட்டிப் புதைக்கிறோம். மாஓவை கோடி மூலைக்குள் குவித்து எரித்து விட்டோம். எரிந்தும் அவை சாம்பலாகிப் போகல்லையே, கறுத்தக் கறுத்த்த் துண்டுகளாய் எங்கும் காற்றில் பரவி . . . . .பொல்லாத சீனக் கடதாசி! அந்த எழுத்துக்கள் கூட இன்னும் தெரிகிறதே, தாள் கருகிப் போயும் . . . . எல்லாம் நிழல்கள் . . . . கரு நிழல்கள் . . .
சசி இன்னும் சைக்கிளை மிதித்தான். வெயில் இன்னும் கொளுத்தியது. ஆஸ்பத்திரி கடந்தது. ராஜ் தியேட்டர் கடந்தது. வயல்கள் கழிந்தன, எதிரே அரசடியம்மன் கோயில். கூட்டம் கூட்டமாக அணியணியாக . . . . .சூட்கேசுடனும் மூட்டை முடிச்சுக்களுடனும் ஆண்களும் பெண்களும் – யார் இவர்கள்? இவர்களுடைய முகத்தில் ஏன் கவலை? . . . . எங்கே போகிறார்கள்? கதிர்காமத்துக்கா?
‘’யார் இவங்க? சாமிற்ற போற ஆக்களா’’
‘’ம்ம், இவங்க இனிசாமிற்றதான் போக வேணும் . . . .இப்பதான் தெரியுது மாத்தயாக் களுக்கு. . . குடி எழும்புறாங்க. . . .எழும்பட்டும், எழும்பட்டும். . . .மாத்தையாக்கள்’’
சலுன் யன்னிலினூடு சின்னத்துரை பாபரின் குரல்.
இவன் துணுக்குற்றான். கண்கள் அகல அகல அந்த மனிதர்களைப் பார்த்தான். இத்தனை சிங்கள மக்களும் உத்தியோகத்துக்காகவும், வியாபாரத்துக்காகவும், சிறு தொழில்களுக்காகவும் இந்தச் சிறிய தமிழ்க் கிராமத்தில் இருந்திருக்கின்றார்களா? வேர்கள் எங்கெல்லாம் நீண்டு நெருண்டு கிடக்கின்றன!
இவர்கள் ஏன் போகின்றார்கள்? பயந்து போகின்றார்களா? எங்களுக்கு, இந்த ஊர் மக்களுக்கு, பயந்தா போகிறார்கள்? . . . ஓ . . . நோ, நோ.’’உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது நீங்கள் போக வேணாம்’’ என்று இவன் இவர்களுக்குச் சொல்லத் தேவை இல்லையா? இவனுக்கு அவர்களின் பாஷை கூடத் தெரியாதே. இந்த மக்களில் எவரையும் அறியாமல், எவருடனும் சிநேகம் கொள்ளாமல் அவன் இவ்வளவு காலமும் இங்கே வாழ்ந்திருக்கின்றானா?
அவன் மிகவும் கூச்சப்பட்டான். அவன் அவர்களின் எதிரி அல்ல என்பதை, தன்னுடைய ஊர் மக்களும் எதிரிகள் அல்ல என்பதை அவர்களுக்கு எவ்வாறு புரிய வைக்கலாம்? மனித நேயம் இன்னும் வரண்டு விடவில்லை என்பதை இவர்களுக்கு எப்படித் தெரியச் செய்யலாம்?
அவன் அவர்களைப் பார்த்துச் சிரிக்க முயன்றான். அவனுடைய உதடுகள் பிரிகின்றனவா? சாராயம் அவனுடைய உதடுகளை வரளச் செய்து விட்டனவா? . . . .
மதியம் கழிந்த இரண்டு மணியின் கூர் வெயில் முகத்தில் அடித்த்து. அவர்கள் எவரும் அவனைக் கவனித்த்தாகவே தெரியவில்லை. சைக்கிள் மிதித்தபடியே எதிரே வந்த இன்னும் சிலரை அவன் பார்த்தான். அவன் மீண்டும் சிரிக்க முயன்றான். ஆனால் அவனுடைய சிரிப்பை அவர்கள் தவறுதலாகவும் விளங்கிக் கொள்ளக் கூடுமல்லவா குடி எழும்பிப் போறிங்களா? என்று இவன் பரிகசிப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டால்? . . . . . .
அவன் தலையைக் குனிந்தான். அவர்களைக் கடந்துமுடியும் வரை அவன் தலையைக் குனிந்து கொண்டே சைக்கிளை மிதித்தான். பின்னர் தலையை மேற்குப் பக்கமாக சற்று உயர்த்தித் திருப்பி வெறிச் சென்றடித்த அந்த வெயிலை என்னவோ ஏதோ என்பதைப் போல அசுவார்ஸயமாகப் பார்த்தான்.
எதிரே ஒரு பொலிஸ் ஜீப் வந்து கொண்டிருந்த்து.

Leave a Reply

Your email address will not be published.