அவளின் அழுகை சகிக்கவேயில்லை.
விளக்கை அலுமாரிமேல் வைத்துவிட்டு
கதவை திறந்து
வெளியிலே வந்தேன்.
நிலவு மங்கலாக விழுந்த வாசலில்
நாலைந்து முறை
நடந்து குழம்பினேன்.
கோயில் அரசமரம் முன்னால் தெரிந்தது
எல்லா இலையும்
உதிர்ந்த கிளைகளின் பின்னால்,
நரைத்த பெரிய நிலாப்பந்து.
மங்கல்;
வெறுமை;
மயக்கம்.
மணல் சிதற
எங்கும் நடந்தேன்
எனது அடியின் கீழ்ப்பட்டு,
இறுகிப் பதிந்தும் உதிர்கின்ற
மண்ணின் நெருளை மனதில் புரட்டுகிறேன்.
இன்னமும் வேகமாய், இன்னுமின்னும் வேகமாய்
மேலும் கீழும்,
மீண்டும் மீண்டும்,
எனது கால்நோகும் வரையும்
மணல்கள் நொறுங்க நடந்தபின்
ஆறிப்படியில் அமர்கிறேன்.
‘நானும் அவள்போல் அழுது நயமென்ன?
வீதியில் நேரும் விபத்துகள் எத்தனை?
அந்த விபத்தினைப் போன்று
சிலவேளை சந்தித்தல் கூடும்.
அதற்காய்ச் சரித்திரத்தை
உந்தும் விசைகள் உறங்குமா, என்ன?
எழுந்து,
கதவைத் திறந்துள்ளே வந்தேன்.
அவளின் அழுகை ஒலி இன்னும் கேட்கிறது.