நேர்காணல்

”என்னுடைய படைப்புகள் சில எனக்கு தெரியாமலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன”

கேள்வி : உங்கள் எழுத்துலகப் பிரவேசம் பற்றி சொல்வீர்களா?

சிறு வயதிலிருந்தே எழுத்தார்வம் கொண்டிருந்தேன். பல எழுத்தாளர்களை மனதில் வரிந்துகொண்டு முதலில் கவிதை எழுதினேன். எனது ‘அழைப்பு’ எனும் கவிதையில் அதுபற்றிய உருவகத்தைச் சொல்லியுள்ளேன்.

தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்
பாதி இரவினிலும்
பட்ட பகலின் அனலினிலும்
மோதி தெறித்தே
மெல்ல முனகி அழுவதுபோல்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்.

கேள்வி : ஒரு ஆசிரியராக, அதிபராக கல்விப் பணி செய்து கொண்டிருந்த உங்களால் எவ்வாறு எழுத முடிகிறது?

எனது தொழிலுக்கும் கலையார்வத்திற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை எனது மென்மையின் தளைகளிலிருந்து என்னும் கவிதையில் காண்கிறீர்கள். எனினும், நான் என் தொழிலையே கலையாக்குகிறேன். எனது ‘மழை’, ‘மனித நேயமும் மண்ணாங்கட்டியும்’, ‘நீக்கம்’, ‘துருவப் பறவைகள்’ முதலிய கதைகளில் இதைக் காண்கிறீர்கள்.

கேள்வி: சிறந்த படைப்பாளியாகக் கருதப்படும் உங்களின் முதல் கவிதை, முதல் சிறுகதை, முதல் நாடகம், முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்?

முதற் கவிதை என் பட்டினத்தில் முதன் முதலில் சைக்கிள் ஓடிய ஒரு பள்ளித் தோழியைப் பற்றியது. முதற் சிறுகதை என் முதல் காதல் பற்றியது (கசங்கிய மலர்கள்). பிரசுரத்திற்கு உரிய முறையில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகப் பிரதி காத்திருப்பு – உலகமெங்கும் அலையும் தமிழ் அகதிகள் பற்றியது. பிரசுரிக்கப்பட்ட முதல் நாவல் (குறுநாவல்) காலடி.

கேள்வி: நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதுகிறீர்கள். உங்கள் முதற் கவிதையும் கதையும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சில ஆங்கில இதழ்களிலும் உங்கள் கவிதைகள் வெளி வருகின்றன. அண்மையில் வெளியான உங்களது சிறுகதையிலும் உங்களது ஒரு ஆங்கிலக் கவிதை இடம்பெற்றுள்ளது. உங்களது ஆங்கில எழுத்து முயற்சிகள் எவ்வாறு உள்ளன?

அதிகமில்லை. இடைக்கிடை சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். My Feminica, Songs of a Refugee ஆகிய ஆங்கில கவிதைத் தொகுப்புகளை தயாரித்துள்ளேன். My Feminica என் வாழ்வில் எதிர்ப்பட்ட பெண்களின் குறுங்கவிதை வரிகள். Songs of a Refugee மட்டக்களப்பு எழுவான் கரையிலிருந்து படுவான்கரை வரையிலுமான எங்கள் அகதி வாழ்க்கை பற்றியது. உதிரியாக மேலும் சில ஆங்கிலக் கவிதைகள் உண்டு.

கேள்வி: ஆங்கிலத்திலும் எழுதுகின்ற நீங்கள் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டிருக்கிறீர்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குமான மொழிபெயர்ப்புகள் எவ்வாறுள்ளன?

அதிகமில்லை. மொழிபெயர்ப்புகளை ஒரு முழுநேர வேலையாகவோ பகுதி நேர வேலையாகவோ நான் கொள்வதில்லை. அவ்வப்போது பிறர் என்னைக் கேட்டுக் கொள்ளும்போது மாத்திரமே மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறேன். ‘கவிஞன்’ கவிதை இதழ் வெளிவந்த காலத்தில் ஆங்கிலம் வழியான, சில ரஷ்ய, சீன, ஜேர்மனிய, அமெரிக்க கவிதைகளை மொழி பெயர்த்துக் கொடுத்தேன்.

அது போலவே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கிறேன். உமா வரதராஜனின் ‘எலியம்’ சிறுகதையை ஆங்கிலத்தில் (Rattology) மொழி பெயர்த்தேன். என்னுடைய ‘காட்டுத்தோடை’ சிறுகதையையும் ஆங்கிலத்தில் (Wild Oranges) மொழி பெயர்த்தேன். இரண்டும் அஷ்லி ஹல்பே, ரஞ்சினி ஒபேசேகர், எம்.ஏ. நுஃமான் ஆகியோர் தொகுத்த A Lankan Mosaic என்னும் ஆங்கிலத் தொகுப்பில் வெளிவந்துள்ளன.

கேள்வி: உங்களுடைய படைப்புகள் பிறரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா?

இப்போதெல்லாம் பல தமிழ் மொழி எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை யாரையேனும் கொண்டு மொழி பெயர்த்துக் கொள்வது சகஜமாகிவிட்டது. என்னுடைய படைப்புகள் சில எனக்குத் தெரியாமலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பத்மநாப ஐயர் சிலரைக் கொண்டு எனது சில படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். எனது நீக்கம் என்ற கதையும் ஆக்காண்டி, சமாதானச் சாக்கடை போன்ற கவிதைகளும் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. செல்வா கனகநாயகம் கனடாவிலிருந்து தொகுத்த Lutesong And Lament என்னும் ஆங்கிலத் தொகுதியில் இவை இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் சிவசேகரம் துருவத் தரையின் வசந்தப் பூவுக்கு என்னும் கவிதையையும் இன்னும் சில கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை Saturday Reviewஇல் வெளிவந்தன. எனது ஆக்காண்டி கவிதை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கேள்வி: சிறந்த விமர்சகராகவும் கருதப்படும் உங்களின் முக்கிய விமர்சனப் பங்களிப்புகள் யாவை?

அதிகமில்லை. சில நூலாய்வுகளும் கவிதை விமர்சனங்களும் செய்துள்ளேன். சிறுகதை, நாவல் விமர்சனங்களிலும் ஈடுபட்டுள்ளேன். எனது இலங்கைத் தமிழ் கவிதை சில அவதானங்கள், மஹாகவியும் தமிழ்க் கவிதையும், உலக – இலக்கியப் பரப்பில் மஹாகவியின் ஒரு சாதாரண மனிதரின் சரித்திரம், மூவர், நீலாவணன் கவிதைகள், மு.பொ.கவிதை ஆய்வு. இருத்தலியல் ஒரு நோக்கு முதலிய கட்டுரைகள் சிலாகிக்கப்பட்டுள்ளன. அமைப்பியல் பின் நவீனத்துவம் பற்றியும் எழுதியுள்ளேன்.

கேள்வி: நவீனத்துவம் பின்நவீனத்துவம் பற்றிய உங்களின் கருத்து என்ன?

நவீனத்துவம், விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பிரெஞ்சுப் புரட்சியின் சுலோகங்களின் அடிப்படையிலான அரசியல் பார்வையுடையது. தேசிய விடுதலையையும், தேசியத்தையும் உள்ளடக்கியது.

டார்வினிசம், மார்க்சீயம், அமைப்பியல், இருத்தலியல் ஆகிய மெய்யியல் தத்துவங்கள் அதன் சிந்தனை வடிவங்களாக உள்ளன. பின் நவீனத்துவம் இவைகளை கேள்விக்குள்ளாக்கி தேசிய எல்லைகள் தாண்டிய பொருளாதார சுரண்டலுக்கும் தேசியத்தின் நிராகரிப்புக்கும், வர்க்க முரண்பாட்டுணர்வை மழுங்கப்பண்ணும், உடனிருக்க வாழும் வர்க்க சமரச கொள்கைக்கும் உரிய தத்தவார்த்த சிந்தனையாக முன்வைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சித்திட்டம் பூகோளமயமாதல், உலக மயமாதல் என்ற மாயாஜாலப் பெயரைப் பெற்றுள்ளது. இவ்வாறு அது முன்னறுக்கின்ற பன்முகத்தன்மை உலகில் நிரந்தரப் போரையும், வறுமையையும் அவலங்களையும் ஒரு மந்திர மோகினி போல் வளர்க்க எத்தனிப்பதால் நாம் அதனை நிராகரிக்க வேண்டும்.

கேள்வி: இந்த நிராகரிப்பில் உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் பங்கு என்ன?

இன்றைய திரிசங்கு சொர்க்க நிலை அதுதான். உலகமயமாதலுக்கு எதிராக உலகெங்கும் அணிதிரளும் உலகமயமாதல் எதிர்பபாளர்களுடன் நாம் அணி சேரவேண்டும். இந்த காட்டாற்று அசுரத் தத்துவத்தை கிழித்தெறியும் காலம் ஒன்று வரும். இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த அசுரன் முகம் இல்லாதவன். சகல ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களும் இவனுடைய முகமே என்பதை இனங்காண வேண்டும். இனம்கண்டால் அவனைத் துரத்துவது எளிதாகும்.

கேள்வி: படைப்பு, விமர்சனம் இரண்டிலும் காலூன்றி மெய்யியலில் வீச்சமாக உள்ளீர்கள். உங்கள் படைப்புகளிலும் விமர்சனங்களிலும் உங்கள் தத்துவார்த்த நோக்கு எவ்வாறு உள்ளது?

எனது படைப்புகளிலும் விமர்சனங்களிலும் மார்க்சிய நோக்கு அடிப்படை. ஆனால், மார்க்சீயமே எல்லாம் அல்ல. மார்க்சீயத்தினூடு முன்னெடுக்கப்படும் தேசியம், ஒடுக்குமுறை எதிர்ப்பு, மேலாண்மை எதிர்ப்பு, இருத்தலியம், மனிதம், சர்ரியலிசம் மற்றும் ஆன்ம தரிசனம் முதலிய நோக்குகள் என் படைப்புகளில் உண்டு.

நேர்காணல் : ஜெஸ்மி எம். மூஸா

Leave a Reply

Your email address will not be published.