துருவத் தரையிலும்
வசந்தப் பூக்கள் உண்டல்லோ!
வசந்தப் பூக்களின் வருகைக்காக
துருவப் பாளங்கள் கரையத் தொடங்காவோ!
துருவப் பாளங்கள் கரையத் தொடங்கையில்
புத்தம் புதிய புது நீர் அந்த
வெண் பனி வாய்க்கால் விளிம்பில் சலசலென
ஓடிவருகையில்….ஓ!—
வாழ்வின் வனப்பை வரைய முடியுமா?
ஆங்கோர்
சாண்உயரப் பூக்காடு
தளதளத்து நின்றந்தச்
சீதளக் காற்றில் சிலிர்த்து நிமிராதோ?
ஓ!
நான் கரைய வேண்டும்,
நான் கரைய வேண்டும்,
என்னுள் ஒடுங்கி இருக்கின்ற ஆனந்த
மென் உணர்வின் வித்தெல்லாம் இந்த
மண்ணில் முளைத்து மலர்ந்து சொரியாதோ, –ஓ!
நான் கரைய வேண்டும்,
நான் கரைய வேண்டும்,
துருவத் தரையின் வசந்தப் பூவுக்கு.