சந்தியிலே நிற்கிறேன்;
பகல் சாய்கிறது.
மங்கல் இனி வந்து விடும்
அதைத் தொடர்ந்து வரும் விடிவு,
அதுவரையில்,
இந்த மக்கள் போய்த் துயில்வர்.
இருளகன்று விடிகையிலே,
முந்திடுவார்;
வேலை செய்வார்;
முறுவலிப்பார்;
பின்னிரவு வந்து விடும்
போய்த் துயில்வார்,
மறு தினமும் எழுந் திருந்து
‘’இன்றுமட்டும் –
இனித் துன்பம் இல்லை’’ என்பார்
போய் உழைப்பார்.
சந்தியிலே நிற்கிறேன்
பகல் சாய்கிறது.
வயிரண்ணன் வண்டியிலே சம்மாளம்….
மாடிரண்டும்,
தளர் நடையில், சென்ற தடம் செல்லும்
ஆங்கே,
திடீரென்று அவர் விழித்து
‘’இந்தா படித்தா’’ என்றிரைகிறார்.
எனினும் அந்த,
நொந்தலுத்த மாடுகளோ
நோவறியா
ஆதலினால்,
வந்த நடையே தொடரும்
வயிரண்ணனும் அயர்வார்
சந்தியிலே நிற்கிறேன்;
பகல் சாய்கிறது.
என் இனிய
சுந்தரக் கனவுகள் – வான்
தொடர்கிறது . . .
சுமந்த மக்கள்
வெந்தெழுவார்;
சமர் செய்வார்
வில் நிமிர்த்தும் துரியர் படை
வென்றிடுவார்
நல்ல பல விதி செய்வார்
அதுவரையில்.
இந்த மக்கள் போய்த் துயில்வார்.
இருள் அகன்று விடிகையிலே
முந்திடுவார்;
வேலை செய்வார்
முறுவலிப்பார் –
அவ்வளவே!