இன்னும் வெளியில் இடை யிடையே
பின்நிலவில்,
தென்னைகளின் ஓலை திடீர் என்று சலசலக்கும்
பின் அவைகள் ஓயப்,
பிறகும் — சலார் என்று
வீசி எழுந்து விரைகின்ற வெள்வாடைக்
காற்றிடையே,
தூரக்
கடல் இரைந்து கேட்கிறது.
உள்ளறையில் கண்ணாள் உறங்குகிறாள்
பக்கத்தில்,
பிள்ளைகளைப் போட்டுள்ளாள்.
பின்னும் ஒரு முறை, எம்
சின்ன மகன் இருமித் தீர்த்துச்
சிணுங்கலிடை
கண்ணயர்ந்து போகையிலே … … … …
மீண்டும் கடும் இருமல்.
”எத்தனை நாள் வந்த இருமல்!
இதற்குமுன்
சத்தியும் காச்சலும்
சனியன்
நமக்கேதான் இத்தனை நோய் … … …”
என்றே எழாது படுத்தபடி
நித்திரை பாதி, நினைவுகளும் பாதி என
‘இச்சுச்சு’ சொல்லி
இதமாய் மகன் தோளைத்
தட்டிக் கொடுத்துச் சரி செய்தாள் கண்மணியாள்.
விட்டு விட்டு
இன்னுமந்த வெள்வாடை மேய்கிறது.
கொஞ்சம் அமைதி … … …
பிறகும் அதே குக்கல்.
இந்த முறை லேசில் இளகவில்லை.
சங்கிலிபோல்,
நெஞ்சு பிளந்து நிறுத்தலின்றித்
தொண்டையின் — அப்
பிஞ்சுச் சதையெல்லாம் பிய்த்து வருகிறது.
என்ன செய்வோம்?
ஏதறிவோம்?
எவ்வாறிதைத் தீர்ப்போம்?-
அஞ்சிப் பதறும் அவளுக்கோர் ஆறுதல் நான்! –
”நெஞ்சைத் தடவு … … …
முதுகை நிமிர்த்தாதே …. ….
கொஞ்சம் சுடுநீர் கொடுப்போமா? … …. ”
என்றிவைகள்
சொல்லி,
மகனை என் தோள்மீது போட்டுலாவி
மெல்ல அவன் துயிலும் போது மெதுவாக
மெத்தையில் சேர்த்து
விளக்கைத் தணித்தபின்
சத்தம் எழாமல் கதவினையும் சார்த்திவிட்டு
மண்டபத்தில் வந்தேன்.
மணி இரண்டு ! … ….
சாய்மனையில்
குந்துகிறேன்
மீண்டும் குழந்தை இருமுகிறான்.
இன்னும் வெளியில் இடை யிடையே
பின்நிலவில்,
தென்னைகளின் ஓலை திடீர் என்று சலசலக்கும்
பின் அவைகள் ஓயப்,
பிறகும் — சலார் என்று
வீசி எழுந்து விரைகின்ற வெள்வாடைக்
காற்றிடையே,
இன்னும்
கடல் இரைந்து கேட்கிறது.
நான் மிகச்சிறு வயதில் ரசித்துப் படித்த கவிதை இது. கவிஞன் இதழில் வெளிவந்தது. இது போன்றவோர் இயற்கையை நுகரும் கவிதையை பாரதிகூடப் பாடியதில்லை. பாரதி நிலாவும் வான்மீனும் காற்றும் என்ற கவிதையில் தன்னைச் சூழவுள்ள ஆரவாரங்களை ‘நண்ணிவரு மணியோசையும் பின்னங்கு நாய்கள் குரைப்பதுவும் எண்ணுமுன்னே அன்னக் காவடி பிச்சையென் றேங்கிடுவான் குரலும் வீதிக் கதவையடைப்பதும் கீழ்த்திசை மேவிடும் சங்கொலியும் வாதுகள் பேசிடு மாந்தர் குரலும் மழலையழுங் குரலும் ஏதெது கொடு வருகுது காற்றிவை எண்ணிலகப்படுமோ சீதக்கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு தேனுண்ணுவாய் மனமே’ என்ற பாரதியின் பாடலொன்றும் இயற்கை நுகர்வால் வரும் இன்பத்தைச் சொன்னாலும் காற்றிடையே கவிதை எனது மனதைத் தொட்டது போலத் தொடவில்லை. அதற்குக் காரணம் இத்தகைய இரவுச் சூழலை நான் என் கிராமத்தில் அனுபவித்திருக்கிறேன். எனது தரதிஸ்டம் கவிஞரை நான் சந்திக்கவில்லை. ஒரேயொரு நாள் அவரது பாடசாலையில் அவரை ஓர் இர இரண்டு நிமிடங்கள் வேறொரு அலுவலாகச் சந்தித்தேன். மிக அவசரமான அந்தக் கணப்பொழுதில் வேறு விடயங்களைத்தான் பேசமுடிந்தது. விடைபெற்றுச் செல்லும்போது அவரிடம் உங்களது காற்றிடையே கவிதை எனக்குப்பிடித்த மிகவும் சிறந்த கவிதை என்னும் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு விடைபெற்றேன். கவிஞர் சிரித்துக்கொண்டே கையசைத்து விடை தந்தார். அதன்பிறகு நான் எழுதிய பாரதியின் குயில் பாட்டின் தத்துவமர்மம் என்னும் நூலை அவருக்கு அனுப்பிவைத்தேன் அது அவரைச் சென்றடையவில்லை. கொண்டு சென்வர் அதைக் கொடுக்கவில்லை. அவரும் இற்ந்து விட்டார். கடந்த ஆகஸ்டில் ஊருக்குச்சென்றபோது அவரைச் சந்திகலாமென்று எண்ணியபோதுதான் கவிஞர் மறைந்து விட்டார் என்ற துக்கச் செய்தியை அறிந்தேன். எனக்கு இது பெரிய இழப்பு. அவரை நான் வாழ்க்கையில் சந்திக்க முடியாமற்போனது ஓர் பெரிய குறை. இத்தனைக்கும் அவர் எனது கிராமத்திற்கு மிகச் சமீபமாகவே வாழந்தார். என்ன செய்வது கதிர்காமத்திற்கு எட்டுமைல் தூரத்திற்கு அருகிலிருந்த கட்டகாமத்தில் வாழந்த கிழவி இன்று போவோம் நாளை போவோமென்றிருந்து கதிர்காமத்தைப் பார்க்காமலேயே செத்துப்போனாளாம். அது போலத்தான் எனது வாழ்விலும் நடந்துவிட்டது.