ஒரு ஞாயிற்றுக்கிழமை

இன்னும் விடியவில்லை,
இருள் மூடிக் கிடக்கிறது.

அன்னை எழுப்புகிறாள்,
அவசரமாய் அவசரமாய் … …
தின்னும் பனிக்கூதல்!
சிறிதின்னும் கண்ணயர்ந்தால்
என்னசுகம், என்னசுகம் !
இவள் ஏன் எழுப்புகிறாள்?

மண்ணாகிப் போன அந்த
மணியோசை கேட்கிறது.
இன்னும் விடியாத
இரவின் குளிர் அறுத்துத்
தூரத்தில் பனிக்குளிரில்
தொங்குவது போல் மிதந்தும்
வீரித்தே என் காதில்
வீழுவதைப் போல் இடித்தும்

மண்ணாகிப் போன அந்த
மணியோசை கேட்கிறது.

கண்கள் அரிக்கிறது.
கடும் குளிரும் தைக்கிறது.
அன்னை எழுப்புகிறாள்
அவசரமாய், அவசரமாய்
இன்னும் விடியவில்லை
இருள் மூடிக் கிடக்கிறது
இன்னும் சிறிதிங்கே
இனிய துயில் கொண்டால்
என்ன சுகம், என்ன சுகம் … …
இவள் ஏன் எழுப்புகிறாள்? …

II

பின்னல் குலைந்த இருள்
பிரிகிறது; … … கரும் நூலில்
இன்னும் சில இழைகள்
இழுத்தது போல மங்கல் … …
இன்னும் கலங்கிறது
இன்னும் தெளிகிறது.

பின்னல் குலைந்த இருள்
பிரிகிறது … … … வேலிகளில்
சின்ன மணிகளைப் போல்
செல்வரத்தை பூக்கிறது
இன்னும் அலர்கிறது
இன்னும் தெளிகிறது.

பின்னல் குலைந்த இருள்
பிரிகிறது … … … மென்மேலும்
சின்ன மணிகளைப் போல்
செல்வரத்தை பூக்கிறது
அன்னை நடக்கின்றாள்
அவளைத் தொடர்கின்றேன்
அன்னை நடக்கின்றாள்
அவளைத் தொடர்கின்றேன்

எம் முன் பலபேர்க்ள
செல்கின்றார் … … எம் போல
முன்னே எழுந் திருந்து
முகம் கழுவி உடையணிந்து
வந்தவர்தான் நிரை நிரையாய்
வழிநெடுகச் செல்கின்றார்.
எங்கிவர்கள் செல்கின்றார் — ஓ!
எங்கே இவர் செல்கின்றார்.

மெல்ல நடந் திவர்கள்
விடியும் குளிர் தாங்கி
என்ன சுகம் பெறவோ
இந்நேரம் செல்கின்றார்?

என்ன சுகம் பெறவோ
இந்நேரம் செல்கின்றார்?

மண்ணாகிப் போன அந்த
மணியோசை மீண்டெழுந்து
என்ன அவசரமோ
இரைந்து பொழிகிறது!

என்ன அவசரமோ
இரைந்து பொழிகிறது!

IV

அன்னை முன் செல்கின்றாள்.
அவள் துயரைத் தீர்ப்பதற்கு
என்ன வழியுமில்லை …
ஆகையினால் முந்துகிறாள் … …
மண்ணாகிப் போன அந்த
மணியோசை ஓய்கிறது.

கன்னிமரி ஈன்றெடுத்த
கர்த்தரின் கோயிலிலே
அன்னை முழ்ந்தாளில்
யான் ஒருத்தன் மூலையிலே, … …
என்ன சுகம் என்ன சுகம்
இன்னும் துயின்றிருந்தால்!

V

அன்னைபோல் அன்னையர்க்ள
அநேகம்பேர் அங்கிருந்தார்.
எல்லோரும் முக்காடு.
எல்லோரும் கரம்கூப்பி,
எல்லோரும் முழந்தாளில்.

எல்லோரின் கண்களிலும்
துன்பத்தை யார் விதைத்தார்?

துயரத்தில் இதழ்வெருவி
இன்பத்துக் கேங்குகின்ற
இதயத்தின் நெடுமூச்சை
அங்கவற்கு யார் ஈந்தார்’?

அவர்க்ள இந்த வாழ்க்கையிலே
புண்பட்ட வெண்புறாக்கள்,
புதர்களிலே வீழ்ந்துள்ளார்.

துன்பத்தின் கேணி என்று
வாழ்க்கையினைச் சொன்னவர்கள்
இன்பத்தை எங்கு வைத்தார்?
எட்டாத சொர்க்கமதில்!

இன்பத்தை எங்கு வைத்தார்?
எட்டாத சொர்க்கமதில்!

அந்த ஒன்றையே நம்பி
அவர்கள் இங்கு வாழ்கின்றார்.
அந்த ஒன்றுக்காகவே
அவர்கள் இந்த வாழ்க்கை யெனும்
”கண்ணீர்க் கணவாயில்
கதறிப் புலம்புகிறார்.

அந்த ஒன்றைச் சொன்னவர்க்ள
அதிமேதை! ஏனென்றால்,
அந்த ஒன்றைத் தள்ளி விடின்
இந்த மக்கள் இவ் வாறோ
கண்ணீர்க் கணவாயில்
கதறிப் புலம்பிடுவார்? … …

துன்பத்தை ஏற்றுழன்று
துவளும் இவர் விழகள்
துன்பத்தை மறுப்பதற்குத்
தொடங்கி விடின் பின்னங்கே
கண்ணீர்க் கணவாயில்
கதறுபவர் யார் கொல்லோ?

கண்ணீர்க் கணவாயில்
கதறிப் புலம்புவதால்
துன்பத்தின் ஓடையிலே
துளிகள் சொரிவதினால்
இன்பத்துக்காக
ஏங்கி நிதம் வாடுவதால்
எங்கள் வழிபாடோர்
இனியதுயர்க் காவியமாம்!

எங்கள் பிரச்சினைகள்
இவ்வுலகில் தீராவோ?
எங்கள் பிரச்சினைகள்
இவ்வுலகிற் தீர்வதற்கு
எங்கள் இறைவன் அதை
இயற்றித் தரவிலையாம்.

எங்களுக்கு அரிசி இல்லை
எங்களுக்கு வேலையில்லை.

நேற்றுப்பகல் சோளம்,
நேற்றிரவு தண்ணீர்.
இன்று பகல் எதுவோ?
இறைவனவன் சித்தம்!

VI

பூசை முடிகிறது — அப்
பூசை முடிவினிலே
ஆசிர் வதித்தார் குரு.
யாவரும் தொழுதேற்றோம்.

வீதியிலே இறங்குகிறோம்.
வீதியிலே இந்த வையம்
சோதியிலே கலந்து மிகத்
துரிதமாய் இயங்கிற்று.

சைக்கிளும் கார்களும்
சனங்களும் ஓடோடி
எத்தனை காரியங்கள்
இயற்றுகின்றார் இயற்றுகின்றார்!

எத்தனை வாகனங்கள்!
எத்தனை கூக்குரல்க்ள!
இத்தனை சந்தடியில்;
இத்தனை நெருக்கடியில்.

சுமையினை இறக்கி வைத்த
சுகமுடன் பதுமை யென
அமைதியில் கனிந்த முக
அன்னையர் செல்கின்றார்க்ள.

சுமையினை இறக்கி வைத்த
சுகமுடன் விழி மலர்ந்து
அமைதியாய் கனிந்த முக
ஆண்களும் செல்கின்றார்க்ள.

இன்று முடிந்து போகின்றார்.
இனியும் நாளை வருவார்கள்.
இன்றும் இழந்த துயில் மீண்டும்,
இழத்தல் நேரும். இதுபோல
மங்கற் போதில் வேலிகளில்
மலர்தல் கூடும் செவ்வரத்தை.
அங்கு கேட்கும் மணியோசை
அவர்கள் காலில் சுவை கூட்டும்.
இன்று சொரிந்த துயர்க்கவிதை
இனியும் கொண்டு வருவார்கள்.
இன்று முடிந்து போகின்றார்
இனியும் நாளை வருவார்கள்!

Leave a Reply

Your email address will not be published.