உடைப்புகள்

எனது கவிதைகளுக்கு ஆடையில்லை
என்னை நான்
உரிந்து கொண்டு எழுதுகையில்
எப்படி நான் ஆடை அணிவேன்?
சோடனைகளும் ஒப்பனைகளும் இல்லாத
எனது கவிதைகளுக்கு
கோவணமும் இல்லை, மார்புக் கச்சையுமில்லை
பெண்களே, கதவைப் பூட்டுங்கள்
ஆண்களே, கண்களை மூடுங்கள்
எனது கவிதைகளுக்கு ஆடையில்லை.

ஓடிவராதே, ஓடி வராதே,
அகதியே,
உனக்கு அல்ல என் பாடல்.

கண்ணீருக்கும் செந்நீருக்கும்
கதறலுக்கும் ஒப்பாரிக்கும் அல்ல என் பாடல்.
நிரை நிரையாய்ப் புறப்பட்ட மூட்டை முடிச்சுகளின்
இனப்படிமத்திற்கு
அல்ல என் பாடல்.

இரவில் கிசுக்கென்றுபறக்கும்
தீக்குண்டு எனது பாடல்.
வீரர்கள் மடிகையில்,
விமானங்கள் நொறுங்கும், கப்பல்கள் மூழ்கும்,
கவச வாகனங்கள் தகரும்
எனது பாடல்கள்.
புதைத்திருக்கிறேன், புதைத்திருக்கிறேன்
எனது கவிதைகளில்
கண்ணிவெடிகளை புதைத்திருக்கிறேன்.

கிட்ட வராதீர்
தொட்டுப்பார்ப்பதற்கு அல்ல என் கவிதைகள்.
மென்று சுவைப்பதற்கு அல்ல என் கவிதைகள்.
வெடித்துப் பறக்கையிலே
மிஞ்சுவது ஒன்றுமில்லை
மனதில் உடைப்பெடுக்கும்
பாரிய குழியைத்தவிர.

5 thoughts on “உடைப்புகள்

Leave a Reply

Your email address will not be published.