இலையுதிர்காலக் கதிர் பொறுக்கும் பெண்ணும் புதுக்கவிதைப் போராளியும்

நாசுக்கான நண்பர்
நமது கே.எஸ்.சிவகுமாரன்.

நடை, உடை, பாவனை
நளினம் பேச்சு எல்லாமே.
பூசி மெழுகினாற் போல் ஒரு பொழுபொழுப்பு.

கவ்லொக் வீதியில் காலம் தள்ளிய
நாட்களில்
வெள்ளவத்தை மில்ஸ் பஸ்தரிப்பில்
ஆளை ஆள் செய்து கொண்ட அறிமுகம்.

முருகன் பிளேஸைக் கடக்கையில்
நேரும் முகமலர்வு !
முருகனை யாரால் மறக்க முடியும் ?
முருகன் அழகன்,
முருகன் இளயன்,
அழகும் இளமையும் புராணமாகிய
முருகன்.
முருகன் சிவகுமாரன்.
சிவகுமாரன் வாழ்வது முருகன் பிளெஸில்.
இதற்கு ஒரு
சமன்பாட்டையோ சமாந்தரத்தையோ
காண முயன்ற என்
பித்துக்குளி கலங்கலை
இப்போது எண்ணினும் எழுமே நகைப்பு !

ஒருநாள் மரியாதைத் தரிசிப்பு
பரீட்சைத் திணைக்களத்தில்
பதவி வகிக்கும் மனைவி,
விருந்தோம்பல் கண்டு மேலெல்லாம் புல்லரிப்பு –

புல்லரித்தபோது எனக்குள் ஒரு புதுக்கேள்வி
சில்லையூர் சொன்னானே
சிவகுமாரனோர்
நுனிப்புல் விமர்சகன் என்று –
நுண்மான் நுழைபுலம்
இல்லாதவரா இந்தச் சிவகமாரன்
எனும் அந்தக் கேள்வி-
புலம் – கூர்மதி
கூர்மதி குறைந்தவரா இந்தக் குமாரன் ?

ஆராய்ந்தேன்; அவருடைய ஆங்கிலமும் தமிழும்
புரியோதோர் அவருடைய போக்கை
எதுவும் புகலட்டும்.

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியிடம்
இந்த மாநிலத்தோர் எதிர்பார்ப்பது என்ன ?
தேன் அமுதத் துளிகளின் சிந்தல்கள் அல்லால்
வேறென்ன ?
சீப்புருவான முள்ளிக்கூடையில் சேகரித்த
மகரந்த மணிகள் அல்லால் மற்றென்ன ?
அறுவடையில் கதிர்பொறுக்கும் ‘கீட்ஸி’ன்
இலையுதிர்காலப் பெண்தான் எனது நினைவில்.!

மற்றுமோர் நினைவும் வந்து சூழ்கிறது.
எப்போதோ ஒரு நாள் என் இளமையில்.
பல்கலைக்கழக
கற்கை முடிந்து புதுக்கவிதையோடு- கொழும்பு
புக்கிய வேளை,
முத்திரை அளவில் பிரசுரமான
சிவகுமாரனின் முறுக்கான முகம் !

அச்சின் வாகோ அல்லது அவர் இளமையில்
அப்படித்தானோ ,
தாடைகள் துருத்து தடிப்பான முகம்.
கோபத்தோடு எடுத்த படம்.
போன்றதோர் கோட்டுருவம்
கோபத்தோடுதான் அந்தப் பத்தி குமுறியது,
ஆராருக்கோ
ஏசுவது போல – ஆருக்கு ?

யாப்பை முன்னிறுத்தும் யாந்திரிகற்கு –
மேற்கை பழிக்கும் மார்க்சீய வித்தகர்க்கு
கைலாஸ், சிவத்தம்பிக்கா
சிதம்பரம் ரகுநாதனுக்கா ?

பூவுடன் கூடிய நார் போன்றோ,
கம்பன் தறியும் கவிபாடல் போன்றோ
உறவினன் தருமு சிவராமுவின்
படிமக் கவிதையின் பாதச்சுவடுகளை
தலையில் தாங்கிய தம்பி பரதனைப் போன்றோ,
புதுக்கவிதையின் ஒரு போராளியாக
உறுமிய அந்த உருவம் !

பழைய குதிரையில் லொடலொடக்காது
நீலமலைத் திருடனின் ரஞ்சன் போல
கடிவாளம் ஒரு கையிலும்
சவுக்கு மறு கையிலும்
முன்னங்கால் உயர்த்தி முண்டி எகிறுகிற
புதிய குதிரையில் புயல்போலப் பாயும்
வீரமாகவே
அந்தப் புதுக்கவிதை
வேகத்தை உருவகித்தேன்.

ஐயகோ,
யாப்பை முன்னிறுத்திய யாந்திரிகர்களும்
மேற்கை பழித்த மார்க்சய வித்தகரும்;
கோலோச்சிய
60 இருந்து 70 வரையிலான
தசாப்த காலத் தர்பாரில்
முன்னங்கால் உயர்த்திய புதுக்குதிரை முடம் ஆக
தடக்கி விழந்தாரே தருமுசிவராமுவின் சீடர்.
ஊதாரிப் பிள்ளையாய் ஊர் வந்து சேர்ந்து பின்னர்
மார்க்சீயத் துறவிகளை வணங்கவும் செய்தார்..

ஆச்சரியப்படவில்லை நான்.
காலம் அப்படி.
ஆதன் வழியே நானும்,
பழைய குதிரையுடன் பழக்கமாகி
சேணமும் லகானும் லாடனும்
செம்மையுறச் செய்து
சில நாள் ஓடி
பல நாள்
தொழுவத்தில் சுகமாய் நிறுத்தி
இடைக்கிடை அரட்டி தடவியும் இருக்கையிலே
திடீரென எழுந்த யுகப்புரட்சிபோல
70 களின் மத்தியில்
தசாப்தகால தத்துவங்கள் உடைய
சுயேச்சா குதிரையில் சுற்றத் தொடங்கினேன்.

சுயேச்சா குதிரையின் சுதந்திரக் குளம்பொலியை
‘அக்னி’ ஊடு அலர்ந்த எனது
‘துருவத்தரையின் வசந்த பூவுக்காய்’ இல்
கேட்டுக் கிறுகிறுத்து ஓர் பத்தியும் கிறுக்கினார்
கே.எஸ். அது பற்றி.

தசாப்த கால தனிமையில் உறைந்து போன
புதுக்குதிரை விறைப்பெலாம் போக்கி உயிர்துடிப்பாய்
கனைத்து, குதித்து, களிப்புற்று மீண்டும்
முன்னங்கால் உயர்த்தி முண்டியடித்தெகிற அதில்
நீல மலைத்திருடனின் ரஞ்சன்போல் சிவகுமாரன்
கடிவாளமும் சவுக்கும் கையுமாய் மீண்டும்
ஆரோகணமாகும் அழகைக் காண்கிறேன்

இத்தியாதி, இத்தியாதி எண்ணங்களுடன்
75 ஐ எட்டிப்பிடிக்கும்
கே.எஸ் சிவகுமாரனின் கேண்மை வாழ்த்துவமே.

– சண்முகம் சிவலிங்கம்

Leave a Reply

Your email address will not be published.