ஆலம் இலைகள்

ஆச்சி கடையில் அமர்ந்திருந்து மாலைமுதல்
பேப்பர் புதினம் பிரித்துரைத்துப் பேசியபின்
மூத்தார் எழுந்து நின்றார்… ‘முன்னிருட்டு’ என்றுசொல்லி

நூர்ந்த சுருட்டை விளக்கில் கொளுத்தியதும்
போகப் புறப்பட்டார்.

கோவிற் புறம் இருளில்
ஆலைகளின் பக்கம் அரிந்தரிந்து
ஏதோ ஒலிகள் இடையிடையே கேட்டன.

மானியர் சற்றே மடிந்த சடலத்தை
நேராக்கிக் கொஞ்சம் நிமிர்ந்திருந்து பின்சரிந்தார்.

ஆச்சி மணலில் அரைத்தூக்கம்
அப்பேத்தைப்
பெட்டை தலையைச் சொறிந்திரண்டு பேன் எடுத்துக்
குத்துகிறான் …
லாம்பு குருடுபற்றி மங்கியது.

சொத்திநாய் மண்ணுள் சுருள்கிறது.

மானியரோ,
”….. அப்படிகா மாமி அது நமது காலம் இனி
எப்படியோ போகும். இருக்கிற குஞ்சுகளை
ஒப்பேத்தத்தான் வழி ஒண்டையுமே காணோம்.
முப்பதாண்டுச் சேவிஸ்; முழுப்பெண்கள்…என்னத்த?
ஒட்டுதில்லை கைல ஒருசதமும் ….”
என்றுரைத்தார்.

ஒப்புதலுக்காய் கிழவி ”ஓம் ஓம்” எனச் சொல்லி
நித்திரையே போனாள் …
நிசப்தம் வளர்கையிலே
பொக்கு பொக்கென்றந்தக் கோயிற்புறம் தொடர்ந்து
சத்தம் தெளிவாய் சருகிடையே கேட்கிறது.

”ஆலம் இலைகள் உழுதாக்கும். அப்படித்தான்
ஓயாது கொட்டி துளுக்கும்வரை உதிரும்.
அண்டு வரையும் அலுப்புத்தான் … போப்புறையா?–”
என்று சொல்லி, ஆச்சி இடுப்பைச் சொறிகின்றாள்.

”ஓங்கா” எனச் சொல்லி, துண்டை எடுத்துதறி
மானியர் கோயில் மணலில் இறங்குகிறார்.

நானும் மனது நசியா எழும்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published.