விஸ்வ ரூபங்கள்

கண்ணீரைக் கடந்துள்ளோம்,
வியப்புகளை மீறியுள்ளோம்,
உணர்ச்சிச் சுழிப்புகளை உதறிவிட்டோம்.

இழப்புகளைப் பற்றிய ஏக்கமில்லை,
தகர்வுகள் பற்றிய தயக்கமும் இல்லை.
ஒருபெரும் நிகழ்வைத் தரிசித்துள்ளோம்.
அதன் பலத்தில்,
அதன் விறைப்பில்
அதன் லயத்தில்
அதன் துணிவில்
நிமிர்ந்த நிற்கிறோம்
நினைத்து நினைத்துச் சிரிக்கவும் செய்கிறோம்.

வேலிகள் வீழ்ந்தன,
மதில்கள் தகர்த்தன,
தென்னை மரங்கள் சிதறிப் பறந்தன,
ஆலைகள், அரசுகள்
அடியோடு சாய்ந்தன,
கிடுகு திருகிக் கிடக்கும் கூரைகள்—
ஓடுகள் வீழ்ந்த உடைந்த முகடுகள்—
மறைப்புகள் மறைந்த வரனும் வெளியும்,

மறைப்புகள் அற்ற வானவெளியிலே
அகண்டமாய்,
நாங்களும் எங்கள் குடிசையும்—
அகண்டமாய்
நாங்க்ளும் எங்கள் நம்பிக்கைகளும்—
இரவின் இருளில்,
ஊ ஊ என்றந்த ஓசைப் பிரளயம்
வீசி அடித்த விஸ்வரூபத்தில்
சிறியபேச்சுக்கள் செத்துப் போயின.
சிணுங்கல்,
கலங்கல்,
இரங்கல் என்னும்
அசட்டுத் தனங்களும் அற்றுப் போயின,
நிசத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறோம்.
ஆமாம்,
கண்ணீரைக் கடந்துள்ளோம்
வியப்புகளை மீறியுள்ளோம்
உணர்ச்சிச் சுழிப்புகளை உதறியுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published.