ஈழத்து இலக்கிய உலகில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூன்று பெயர்களும் ஒருமிக்க உச்சரிக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம், இதற்குப் பல காரணங்கள் உண்டு, ஒரு காரணம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், 1955க்கும், 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், படைப்புகளின் அளவிலும், தரத்திலும், இலங்கையின் ஏனைய தமிழ் கவிஞர்களைவிட இவர்கள் மிக உயர்ந்து நின்றமையாகும்.
இன்னொரு காரணம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த மூன்று கவிஞர்களும் ஒருவர்க்கொருவர் ‘தண்டியானவர்கள்’ – ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, என்ற எண்ணம் மேலோங்கி இருந்தமையாகும்.
இலங்கைத் தமிழ் கவிஞரிடையே மஹாகவி எவ்வளவுதான் இமயம் போல் உயர்ந்து நின்றாலும் இன்றுகூட ஒருசில வட்டாரங்களில் மஹாகவியை விட நீலாவணனே சிறந்த கவிஞர் என்ற ஒரு அபிப்பிராயம் உண்டு, இன்னும் சில வட்டாரங்களில் மஹாகவிக்கும் நீலாவணனுக்கும் இல்லாத ‘சமூகவிஞ்ஞான நோக்குடைய முற் போக்குக் கவிஞர்’ என்ற சிறப்பு முருகையனுக்கு கற்பிக்கப்படுவதுமுண்டு, கலாநிதி கைலாசபதி முருகையனை ‘’கவிஞரின் கவிஞர்’’ என்று போற்றுவதற்குக் கூச்சப்படவில்லை, ‘மாடும் கயிறுகள் அறுக்கும்’’ என்ற தனது கவிதைத் தொகுதிக்கு முருகையன் எழுதிய முன்னுரையில், இலங்கைத் தமிழ் கவிதையின் வடிவமைப்பு முறை முற்றிலும் தமது பேனாவுக்குள் இருந்து ஊற்றெடுத்த்து என்ற பிரமையை வளர்க்கத் தயங்கவும் இல்லை. இவ்வாறு ஒவ்வோர் வகையில் மூவருமே முக்கியமான முன்னணிக்கவிஞர்கள் என்ற எண்ணம் பரவலாக இருந்த்து.
நம்மைப் பொறுத்தவரையில் இந்த மூன்று கவிஞர்களும், ஐம்பதுகளிலிருந்து எழுபதுகள் ஈறாகவுள்ள முப்பதாண்டுக்காலத்தில் இலங்கைத் தமிழ் கவிதையை ஆற்றப் படுத்திய முக்கிய, சிருஷ்டி ஆற்றல்களாக விளங்குகின்றனர். புதிய போக்குகள் தொடங்கிய எண்பதுகளில் நின்று பார்த்தால் கூட இந்த மூவரினதும் அவர்கள் வழிவந்தோரினதும் கவிதைகளே இலங்கைத் தமிழ் கவிதையின் வளமான பகுதியாக தென்படுகின்றன. ஆகவேதான் இந்தமூன்று பேரையும் ஒரு சேரவைத்து எண்ணத் தோன்றுகிறது,இவர்களைப் பற்றிய ஒப்பியல் ஆய்வுகள் மிக உபயோகமானவை. விமர்சன ரீதியாக மிகவும் வேண்டப்படபவை, எனினும் அத்தகைதோர் ஒப்பியல் ஆய்வு இங்கு சாத்தியமானதல்ல. மஹாகவியின் கவிதைகள் பற்றிய எனது இரண்டு கட்டுரைகள் வெளியாகி உள்ளன, அவை தொடர்பாக நுஃமான் எழுதிய மிக விரிவான அறிமுக்க் குறிப்புகளும் உள்ளன, மஹாகவியைப் பற்றிய வேறு சில கட்டுரைகளும் அவ்வப்போது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன, நீலாவணனைப் பற்றிய இரசனைக் குறிப்புகள் மாத்திரமே சில சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெற்றுள்ளன, முருகையனைப் பற்றி எழுதப்பட்டிருக்க கூடியவற்றில் கலாநிதி க, கைலாசபதி 1981 இல் சமூகத் தொண்டன் இதழில் எழுதி, பின்னர் மாடும் கயிறுகள் அறுக்கும் தொகுதியின் பின்னிணைப்பாக வந்த கட்டுரையையும், கலாநிதி சிலோன் விஜயேந்திரன் ‘’ஈழத்துக் கவிதை விமர்சனம்’’ என்னும தனது நுலில் எழுதிய இரசனைக் குறிப்புகளையும் பருமட்டான அபிப்பிராயங்களையும் மாத்திரம் பார்த்திருக்கிறேன். இந்த நிலையில் இவர்களைப் பற்றிய ஒப்பியல் ஆய்வுக்கு இன்னும் நெடுந்துரம் செல்லவேண்டியுள்ளது.
அதனால், இங்கு இவர்கள் இலங்கைத் தமிழ் கவிதைக்கு, ஆற்றிய பொதுப் பங்களிப்புகளில் இரண்டொன்றை இனம் காண்பதுடன் அமைகிறேன்,
1. முதலாவதாக, மூன்று பேருமே தமிழ் செய்யுளை உயிர்ப்போடு கையாளுவதில் பெரும் வல்லமை பெற்றிருந்தார்கள. ஒருவருடைய செய்யுளைப் போல் மற்றவருடைய செய்யுள் இல்லையெனினும், ஒவ்வொருவரும், தமிழ் செய்யுளை அனாயாசமாக வளைத்து, நிமிர்த்தி, நெளித்துச், சுழித்து எழுதக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தார்கள். கலாநிதி கைலாசபதி 1981இல் எழுதிய கட்டுரையில் முருகையன் ‘மிகச் சமீப காலத்தில் செந்நெறிப்பாங்கான கடின மொழிப் பிரயோகத்தை நெகிழ்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்’’ என்றார். 1955 வாக்கில் மஹாகவி, ‘’கல்லாய் சமைந்த தமிழ் கவிதைக்கு உயிர் ஊட்டுதல்’’ பற்றியும், ‘முந்தைநாள் யாப்பு முறையில் முடமாக்கும் (அத்)தளையை சற்றே தளர்த்துதல்’ பற்றியும் பேசுகிறார். ‘’விட்டுக்கொடுக்காத வெகுபழையயாப்பு முறை தட்டிக் கொடுக்குமோ தமிழர்களின் கவியுணர்வை’ என்றும் அதேகாலப் பகுதியில் மஹாகவி கேட்கிறார். பலவகைச் செய்யுள்களிலும் இவர்களுக்கு இருந்த லாவகம் இலங்கைத் தமிழ் கவிதையின் வேறு பல இயல்புகளுக்கும் மாற்றங்களுக்கும் அடிகோலியது.
2. இரண்டாவதாக, செய்யுளை லாவகமாகக் கையாளும் திறமையுடன் வளர்ந்த இவர்களது செய்யுள் நடையைக் குறிப்பிடலாம், மூன்று பேருமே சற்று ஈவுசோவாக வெவ்வேறு கால அடைவுகளிலேனும், ஒரே படிமுறை வளர்ச்சியை தமது செய்யுள்களில் காண்பிக்கின்றனர். ஆரம்பத்தில் பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் பாதிப்பு மூவருக்குமே இருந்திருக்கின்றது. பின்னர் பாரதி, பாரதிதாசனை விடவும் இனிய, புதிய சந்தங்களை உருவாக்கும் முயற்சி மூன்று பேரிடமும் காணப்படுகிறது, 1943ம் ஆண்டிலிருந்து எழுத்த் தொடங்கிய மஹாகவியின் சந்தப் பண்பு அதிக காலம் நீடிக்கவில்லை. ஐம்பதுகளின் முற்பகுதியிலேயே அவர் சத்த்திலிருந்து ஓரளவு விலகிக் கொண்டார். அறுபதுகளுக்கு முந்தியே அவருடைய செய்யுள் நடை முற்றிலும் பேச்சுத் தொனிக்கு மாறிவிட்டது, முருகையன், சந்தத்தை வலுப்படுத்தக் கூடிய உணர்ச்சிப்பெருக்கு, ஆன்மிக விசனம் ஆகிய உள்ளார்த்தங்களின் சுழிப்புகளுக்கு அகப்படாதவராகையால் ‘ஒலிகள் சிலுங்கி நின்று வீசுவீசென்று விசிறுவது வேண்டாம்’’ என்று சந்த்த்தை வெகுவாகவே ஒதுக்கி எள்ளலும், நகைச்சுவையும், கிராமியச் சொல்லமைப்பும் கொண்ட பேச்சுத் தொனிக்கு செய்யுளை மாற்றினார். நீலாவணன் அறுபதுகளில் சந்தத்தைக் குறைத்து சந்த அடைவுகுறைந்த பாவினங்களை பேச்சுத் தொனியில் கையாண்டாலும் சந்தத்தை அவர் கடைசி வரையும் முற்றாக்க் கைவிடவில்லை. சந்தத்தை அளவோடும் வலுவோடும் பாவிக்கத் தேவையான ஆன்மீக ஏக்கங்கள் அவருக்கு நிறைய இருந்தன, பலவகையான செய்யுள் நடைகளை ஒரே நேரத்தில் கையாண்ட பெருமையும் அவருக்குண்டு. சில உதாரணங்கள் இவைகளைத் தெளிவாக்கும்.
மாசங்கள் பயனற்று மடியாமல்
வாழ்வொன்றை அமைவித்தல் இயலாதோ?
பேசும் சொல் தமை விட்டு மருவாயோ?
பேரின்ப நதி கட்டு முறியாதோ?
கந்தம் படுமலர் சொருகுவை எனினும்
கண்டம் பட உயிர் திருகுதல் பிழையே
இனியும் பொழுதினை அரிவதென்
இளமை எரியும் படி செரு புரிவது நினைவோ? (முருகையன்)
இரவெல்லாம் நிலவாகி எம்மீது வாரும்
இளந்தென்றல் இதமாயுன் இயல் ஏந்தி ஊரும்!
மரமெல்லாம் மலராகி மணமஞ்சமாகும்!
மயல் கொண்டு கருவண்டு புதுராகம் ஊதும்!
கன்ன மலர் கொணடொற்றி
ஈரமெல்லாம் துடைத்தான்;
கனவின் இழை தனில் நினைவின்
கரமொன்று கொடுத்தான். (நீலாவணன்)
பிஞ்சுப் புது நெஞ்சைப் பீறிட்டுப் பொங்கிவரும் பேச்சில்
பிற நாட்டார் பெறாத பெரும் பேற்றில். உயிர்
மிஞ்சித் தெறிக்கின்ற மேம்பாட்டுப் பாட்டில். எனை
மீறிப் பறக்கின்ற மின்சார வீச்சில். அட
கிஞ்சித்துமே அழகு கிடையாதாம். கேட்டாய?
வந்துவந்து மோதுகிற வார்த்தைகளின் உள்ளே
வாராத வெண்பாவின் ஈற்றடியைத் தேடும்
சிந்தனையோ யாப்பிடையே சிக்கிவிட ‘’என்ன
சேதி?’’ எனும் தோழர்க்கும் காது கொடுக்காது
எந்த ரயில் வண்டியிலே ஏறி வழி மாறி
எங்கு வரை போனீர்கள் என்னுடைய அத்தான்? (மஹாகவி)
வெவ்வேறு அளவிலும் தினுசிலும் சந்தம் பயின்றுவரும் இந்த அடிகளைப் பின்வரும் பேச்சுத் தொனி அடிகளுடன் ஒப்பு நோக்கலாம்.
பேரன்ப மிக்க கடவுள்.
உமது தபால்
வார இறுதியிலே வந்தது. நாம் படித்தோம்.
‘சோதனைகள் செய்கின்றேன்’ என்று கிறுக்கிய உம்
சாதனை கண்டோம்
சரியன்று ஒருவரியும், (முருகையன்)
மரணித்துப் போன எங்கள்
மானாகப் போடிப் பெரியப்பா
நீர் ஓர் பெரிய மனிதர்தான்
பெட்டி இழைத்தும்.
பிரம்பு பின்னல் வேலை செய்தும்
வட்டிக்குளத்து வரால் மீன் பிடிக்கக்
கரப்புகளும் கட்டி விற்றுக்
காலத்தை ஓட்டும் ஓர் கிழவன்
என்றே நம் ஊரறியும்
நேற்று வரை. (நீலாவணன்)
மூன்று வயதில்
முலைப்பால் குடிக்கையிலே
ஆண்டவனைக் கண்டேன்
அருங்கவிதை தோன்றியது.
சொன்னேன்
எவரும் சுவைப்பதாய் காணவில்லை (மஹாகவி)
இவ்வாறு சந்தத்தைக் குறைத்தோ, அதனை முற்றாக்க் கைவிட்டோ இவர்கள் தமது செய்யுள் நடையை பேச்சோசைத் தொனிக்கு மாற்றியது இலங்கையில் தமிழ் கவிதை அடைந்த முதலாவது பெரும் பாய்ச்சலாகும்,செய்யுளை லாவகமாக்க் கையாண்டு, அதனைப் பேச்சுத் தொனிக்கு கொண்டு வரமுடிந்தமை, மனிதனுடைய பரிமாணத்தில் பெருவிரல், மற்ற நான்கு விரல்களுக்கும் பொருந்தக் கூடிய அவன் கைவிரல் அமைப்பை பெற்றதற்கு ஒப்பாகும். எதையுமே பற்றக்கூடிய வாய்ப்பு, லாவகமான பேச்சோசைச் செய்யுளுக்கு அப்பாற்பட்டதாய் உரைநடை இலக்கியத்துக்கு உரியதாய், இருந்த சிருஷ்டிப்புலம் செய்யுளில் எழுதப்படும் கவிதையாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டது, ‘வீடும் வெளியும்’ என்ற தமது கவிதைத் தொகுதிக்கு, மகாகவி 1969இல் எழுதியிருந்த முன்னுரையின் சில பகுதிகள் இது சம்பந்தமாய் கருதத்தக்கன. அங்கு மஹாகவி கூறுகிறார்.
‘’சிறுகதை’’ என்பது செட்டான புதிய இலக்கியவடிவம் ஆகும். சிறிய கவிதைகள் சிலவற்றை அவற்றின் பாங்கில் வடிக்க நான் விரும்பியதால் கிடைத்தவை இத்தொகுப்பில் உள்ளன.
நவீன வடிவங்களான சிறுகதை, நாவல் ஆகியன நவீன உரிப்பொருளை கையாண்ட வேளை கவிதை மட்டும் பழைய பொருள் மரபை பற்றியே சுழன்றமையால் அருகிவரும் கலை எனக் கருதுமாறாயிற்று. நீளக்குறைவாலும் பார்வையின் அகலம் இன்மையாலும், சுவைஞர்களை முழுமையாக ஆட்கொள்ள முடியாத சிறுகதையினது அமைப்பை கவிதையாகச் செய்யுளில் வார்க்கும் போது நிறைவுற்ற இலக்கிய வடிவம் ஒன்று தோன்றுதல்கூடும். சிறுகதை இருபரிமாணப்பொருள், ஆனால் அதன் பாங்கில் அமைந்த கவிதை முப்பரிமாண அமைப்பை ஒத்து மிளிரலாம்.’’
மஹாகவி கூறும் ‘சிறுகவிதை – சிறுகதை’ பற்றிய இலட்சணங்கள் எப்படியும் இருக்கட்டும். உரையடையில் எழுதப்பட்ட சிருஷ்டிப்புலத்தை செய்யுளில் அமைந்த கவிதைக்குள் கொண்டுவருவது பற்றிய மஹாகவியின் பிரகனமே இங்கு முக்கியமானது,
‘சிறுகதையின் பாங்கில்’ என்றும், ‘சிறுகதையின் அமைப்பை’ என்றும் மஹாகவி சற்று அவதானத்துடன் கூறியிருந்தாலும், சாராம்சத்தில் அது சிறுகதையின் வடிவத்தையே குறிக்கும். மஹாகவியின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அகலிகை, கண்களும் கால்களும், தேரும் திங்களும் முதலிய கவிதைகள் இவ்வகையில் இலகுவாக மனதில் பதியத் தக்க உதாரணங்கள். முருகையனின் தோதுப்பாடு. எங்கள் தாத்தா நித்திரை போகிறார். மதகடி மகாராசா, கயிறு முதலியன முருகையனுக்கே உரிய சொல் முறையுடன் இந்தப் பாங்கில் அமைந்த கவிதைகளாகும். நீலாவணனின் கடவுளே, பயணகாவியம், சுவடு முதலியன இவ்வகைப் பட்டவை,சிறுகதை என்கிற திட்டவட்டமான உரைநடை இலக்கிய உத்தித்கு எண்ணம் தாவுகின்ற மனச் சார்பு ஏற்கனவே சிறு சம்பவங்களை செய்யுளின் கவிதைக்குள் உள்வாங்கிய முயற்சிகளின் தொடர்ச்சியாகவே அமைய முடியும். உண்மையும் இதுவே. சிறு சம்பசங்களையும், அன்றாட அனுபவங்களையும் செய்யுளின் கவிதைக்குள் கொண்டுவரும் போக்கும் இவர்களிடம் ஏற்கனவே உள்ளது. இவர்களுடைய எந்தக் கவிதைத் தொகுதியிலும் இதனைப் பரக்கக் காணலாம். உதாரணத்துக்கு ஒரு சிலதைக் குறித்துக் கொள்வோம். முருகையனின் நிலைவேறு, குழந்தை உளவியல், நடப்பு முதலியன நீலாவணனின் கொஞ்சவந்தாள், ஓவியம் ஒன்று முருங்கைக்காய் முதலியன மஹாகவியின் பல்லி, திருட்டு, நேர்மை, செத்துப் பிறந்த சிசு முதலியன இவ்வயையின.
அன்றாடச் சம்பவங்களையும் அனுபவங்களையும் கவிதையில் கொண்டுவரும் இந்தக் கவிஞர்களின் எழுத்து முறையை ‘நிகழ்ச்சிப்படுத்துதல்’ என 1969ல் வெளியான கவிஞன் கவிதை இதழ் ஒன்றில், ‘இலங்கைத் தமிழ் கவிதை – சில அவதானங்கள்’ என்னும் கட்டுரையில் பெயரிட்டதாக ஞாபகம். நிகழ்ச்சிப்படுத்துகின்ற போக்கு அன்றாட அனுபவங்களை ஒட்டிய மெய்மை சார்ந்த சம்பவச் சித்திரத்துக்கு மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியான புனைவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. முருகையனில் இதைப் பரக்கக் காணலாம், நீலாவணனின் ஒளித்திருநாள், தங்கப்பதக்கம், பாவம் வாத்தியார், வழி, முதலியன இந்த வகைக்கு உதாரணம். மஹாகவியின் தாமதம் ஏன், யாழோசை ஆகியன மஹாகவியில் அரிதாக்க் காணப்படும் இவ்வகைக் கவிதைகளுக்கான உதாரணங்கள்.
இவ்வாறு உரைநடைக்குரிய சிருஷ்டிப்புலமான சிறுகதை உருவத்தையும் சிறு சம்பவங்களின் சித்தரிப்பையும் செய்யுளின் கவிதைக்குள் நிகழ்ச்சிப் படுத்த இவர்கள் முயன்றதன் வாயிலாக குறுங்காவியங்களும், பாநாடகங்களும் இதுகாறும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இல்லாத நவீன யதார்த்தப் பண்புகளுடன் இவர்களுக்கு வாய்க்கப் பெற்றன. முருகையனின், நெடும்பகல், ஆதிபகவன், கோபுரவாசல், கடூழியம் ஆகியனவும் மஹாகவியின அகலிகை, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், சடங்கு, கந்தப்பர் சபதம், கோடை, புதியதோர் வீடு, முற்றிற்று ஆகியனவும் இவ்வகையில் இடம் பெறுகின்றன.
இவைகள் சாதாரண சாதனைகள் அல்ல என்பது தமிழ் இலக்கியப் பின்னணியைப் பாரதியின் காலத்கோடு தொடங்கிப் பார்த்தாலே புரியும். பாரதியின் முழுக்கவிதை சடலத்திலும், அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களை ஒட்டிய அவருடைய கவிதைகள் எத்தனை? ஒன்று கூட கவிதை எனத் தேறாத அவருடைய புயற்காற்று, பிழைத்த தென்னந்தோப்பு, மழை ஆகியவற்றை மாத்திரமே கூறலாம். பாரதியின், நெடும்பாடலான குயில், பாஞ்சாலி சபதம் ஆகியன யதார்த்த உரைநடைச் சிருஷ்டிப்புலத்துக்குரிய குறுங்காவியங்கள் ஆகா, பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு’ பலவகைகளில் குறுங்காவியத்துக்கு ஒரு முதல் நூலாய் பயன்பட்டிருக்க கூடுமா யினும் நவீன யதார்த்தப் பண்புகள் குறைந்த்து.
செய்யுளில் லாவகம், அதனால் பேச்சுத்தொனி, அதனால் உரைநடையின் சிருஷ்டிப்புலத்தை செய்யுளில் கவிதைக்குள் கொண்டு வந்த நிகழ்ச்சிப் படுத்துதல் என்ற முறையில் மூவராலும் வளர்க்கப்ட்டதாக இலங்கைத் தமிழ் கவிதை அமைகிறது. நிகழ்ச்சிப் படுத்துதல் என்பது கருத்தியல் ரீதியானது அல்ல. கருத்தில் ரீதியாக அல்லாத நிகழ்ச்சிப் படுத்துதல் கட்புலத்தை அடிப்படையாக்க் கொண்டது. இதனால் இதற்குரிய கவையாக்க நெறியை கட்புலக்கலையாக்கம் என்று ‘மஹாகவியும் தமிழ்க் கவிதையும்’ என்ற எனது கட்டுரையில் பெயரிட நேர்ந்த்து. இதற்கெதிராக செவிப்புலன் கலையாக்கத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இந்த பெயரீடுகளை கலாநிதி நுஃமான், கலாநிதி கைலாசபதி முதலிய விமர்சகர்கள், பின்னர் உபயோகப்படுத்தியும் உள்ளனர்.
கட்புலக் கலையாக்கம், முற்றிலும் உரைநடைக்குரிய சிருஷ்டிப்புலத்தை கவிதைக்குள் கொண்டுவர முனையும் நிகழ்ச்சிப்படுத்துதல் என்னும் எழுத்து முறைக்கே உரியது என்பது இங்கு கருத்தல்ல. சங்க்காலத்தின் ஐந்திணை மரபிலும், கட்புலக் கலையாக்கம் உள்ளதை நினைவு கூரலாம். கம்பன் முதலிய சில காவிய கர்த்தாக்களின் சில பாடல்களும் நினைவுக்கு வரலாம். ஆனால் ஐந்திணை மரபு காவிய மரபு ஆகியவற்றிற்கும் இன்றைய வாழ்நிலை யதார்த்த்த்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் கருதத்தக்கன. அந்த அளவுக்கு இவைகளின் கட்புலக் கலையாக்கங்களிடையே உள்ள வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள முடியும். நாம் இங்கு கூறும் நிகழ்ச்சிப் படுத்துதலின் கட்புலக்கலையாக்கத்தை இந்த மூவரின் சில உதாரணங்கள் தெளிவுபடுத்தும்.
தனிமையில் நின்றேன் வயல்வெளி நடுவில்
என்னைச் சூழஎழுந்து வீசிய காற்றில்
நெல்மணம் கமழ்ந்து கொண்டிருந்த்து.
வெங்காயத்தாள் அங்கு கிடந்த்து
பச்சைத் தண்டு குழலாய் மலர்ந்தது
வெள்ளைப் பூவைத் தலையிலே சூடி.
‘’ஈசிச் செயரில்’’ இருந்தபடி
பத்திரிகை வாசித்துப் போட்டு
வளைந்து நெளிந்தசைந்து
கொட்டாவி விட்டு
குவலயத்தை மண்டையினுள்
இட்டு வைத்தார் போல்
எடுத்தெறிந்து பேசுகிறீர். (முருகையன்)
கொஞ்ச வந்தான், குனிந்தேன், அஞ்சிக்
கொஞ்சம் பின்வாங்கி நின்றான்
கொஞ்ச வந்தான் பிறகும் தடுத்தேன் விழி
கும்பிடவும்
கெஞ்சி நின்றான்; பணிந்தான்; நகைத்தான்
சற்று கிட்ட வந்தான்.
கொஞ்ச வந்தான்; குனியாது நின்றேன் அவன்
கொள்கை வென்றான்;
கடுக்கனில் பிடித்த சால்வைக்
கரையினைக் கவன மாக
எடுத்துப் பின் சோற்றுப் பெட்டி
ஏனங்கள் ஏற்றச் சொல்லி
எடுத்தடி வைத்தார் கந்தப்
போடியார். (நீலாவணன்)
இந்திரன் இறக்கி வந்தான்
இமயத்தின் அடிவாரத்தே
சந்தனம் கமழும் மார்புச்
சால்வையில் சரிகை மீதில்
பிந்தி வந்தெறிக்கும் தேய்ந்த
பிறையின் செந்நிலவு பட்டுச்
சிந்திற்றுமிரண்டங்கே ஓர்
சிள்வண்டு வாய் மூடிற்றாம்
தாய் முலை உண்டு தழைத்து மகிழ்ந்து
வாயினிலே தயிர் சிந்திய தொன்று
போய் உலை மூட்டிடுவாளை மறந்து
பாயில் உருண்டது பாதம் எறிந்து.
நீச்சலடிக்கும் நிலத்தில் மலர்க்கை
வீச்சினில் விண்ணில் மிதக்க நினைக்கும்
கூச்சலிடும் களிகொண்டு எது கண்டும்
ஆச்சரியக் கடல் ஆழம் அமிழ்ந்தும்
காற்றில் எழும் கடுகோ எனமுன்னே
தோற்றும் அவ்வண்டு தொடர்ந்திரு கண்கள்
ஏற்றிய விற்புருவங்கள் இறங்கி
ஈற்றில் அதோடும் இருந்தன கீழே. (மஹாகவி)
நிகழ்ச்சிப்படுத்தலின் கட்புலக் கலையாக்கம் பற்றி இந்த பெயரீடுகளை பரிசீலிக்காத நிலையில் கவிதையின் பொருளுருவம் என்ற முறையில், கட்புலக் கலையாக்கம் பற்றி முருகையன் 1977இல் கூறியிருப்பதும் மனங்கொள்ளத்தக்கது. நுஃமானின் ‘’தாத்தாமாரும் பேரர்களும்’’ கவிதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் நுஃமானின் கவிதையின் பொருளுருவம் பற்றி முருகைன் கூறுவது உண்மையில் இந்த மூவராலும் உருவாக்கப் பட்ட கட்புலக்கலையாக்கம் பற்றியதே.
1. காட்சி வைப்புகளின் வழியிலே கருத்துக்களை முன்னிறுத்துவது மன ஓவியங்களை அல்லது எண்ணப் படங்களை – அதாவது அக்க் காட்சிகளை – கவிதைகளை மூலமாக்க் கொள்வது,
2. நிகழ்ச்சிக் கோவைகளின் வழியே கருத்துக்களை முன்நிறுத்துவது.
3. கவிதையில் எடுத்தாளப்படும் கருத்து கவிதையின் வளர்ச்சியோடிசைந்து வளர்ந்து செல்வது
4. கருத்துக்கள் முனைப்புற்று வெளிக்காட்டி நிற்காமல் உள்ளமைந்து கிடத்தல் சங்கப் பாடல்களின் உள்ளுறை உவமம் போல். முருகையனுடைய இந்தக் குறிப்புகள் தான் மேலே முன்வைத்த கருத்துக்களை பலப்படுத்துவனவாகவே உள்ளன.
5. கட்புலக்கலையாக்கமும், அதன் வழியான நிகழ்ச்சிப்படுத்தலும், அதற்கேதுவான பேச்சுத் தொனியின் செய்யுள் ஆற்றலும், இலங்கைத் தமிழ் கவிதையை நவீனப்படுத்தியது என்பது உண்மையே. எனினும் அது மரபின் எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு நவீனத்துவமே. அடிப்படையில் இந்த மூவரும் மரபுவாதிகளே என்பதில் சந்தேகம் இல்லை. ‘உணர்வுடன் கலந்த மரபுணர்ச்சி முருகையனிடம் ஆழமாக்க் குடிகொண்டுள்ளது’ என்பார் கலாநிதி கைலாசபதி ‘’காப்பியன் வழியில் பாடினியார் / கண்டு போற்றப்பின் சமணர் / யாப்பார் உன்னைக் காரிகையால் / நயந்தோம் வாழி யாப்பே நீ’’ என்கிறார் நீலாவணன். கவிதை யாப்பு நிலைப்பட்டு இயங்குவதே என்ற கருத்தில் மஹாகவிக்கு உறுதிப்பாடு இருந்த்து.’’ என்கிறார் நுஃமான். செய்யுள் முறைக்கு அப்பால், அல்லது யாப்பிலக்கணத்துக்கு அப்பால், ஓசைநயத்துக்கும் ஒத்திசைவுக்கும் அப்பால், ஒரு கவிதை முறை சாத்தியம் என்பதை இந்த மூவரும நம்ப மறுத்த்துடன் அத்தகைய முயற்சிகளையும் மூர்த்தண்யமாக எதிர்த்தனர் என்பது நமக்கு இன்று ஆச்சரியம் தரும் செய்தியே.
நமக்குப் புரிகிறது – ஒரு கால் நுற்றாண்டுக் காலத்திலும் மேலாக பழைய யாப்பு முறையை எளிமையாக்கி, நெகிழ்ச்சியுள்ளதாக்கி, ‘கல்லாய் சமைந்த தமிழ் கவிதைக்கு உயிர்ஊட்டி’ நவீன தமிழ் கவிதைக்கென்று ஒரு புது மரபையும் உருவாக்கியவர்கள். அதற்கு அப்பால் ஒரு கவிதை நெறியை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பது நமக்கு புரிகிறது. இதுகாறும் செய்தவற்றை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு ஒரு திசையில் நடந்திருக்க அவர்களுக்கு ஏலாததுதான். அந்த அளவுக்கு மஹாகவி, நீலாவணனின் காலத்தில் 70களின் முற்பகுதிவரை, இலங்கைத் தமிழ் கவிதையுலகில் புதுக் கவிதையின் காலக்கோடு ஆழமாக விழவும் இல்லை. இப்பிரச்சினையை ஆழ்ந்து யோசிக்கும் முருகையன் ‘’எனது அனுபவத்தில், யாப்பின் சாத்தியப் பாடுகள் எதிர்பாராத வகையிலே விரிசிந்தனை யையும் சுயாதீனமான உணர்வு மூட்டங்களையும் திறந்த காட்டுகின்றன. ஏதேச்சையான குறியீடுகளாகிய சொல்லோசையின் தற்செயலான பொருத்தப்பாடுகள், நிர்க்கதியான அலைச்சல்களைக் காட்டிலும், பயனுள்ள மூலவளங்களின் முன்னிலையில் நம்மைக் கொண்டு சென்று நிறுத்திவிடுகின்றன.’’ என்று கூறுவது எனது அனுபவமாகவும் இருந்துள்ளது என்பதை இங்கு குறிப்பது எனது கடமையாகவும் உள்ளது.
ஆனால் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. இந்த மூவர்கள் இலங்கைத் தமிழ் கவிதையில் நிலைநாட்டிய மரபுக்குள்ளான மட்டுப்படுத்தப்பட்ட நவீன கவிதைச் சீர்திருத்தம் இலங்கையின் தமிழ் புதுக்கவிதையினது தோற்றத்தையும் வளர்ச்சியையும் வேகத்தையும் விறுவிறுப்பையும் ஒரு இருபத வருஷ காலம் ஒத்திப் போடத்தான் உதவியதே தவிர அதனை முற்றாக ஒழித்துக்கட்ட உபயோகப் படவில்லை. இலங்கைத் தமிழ் கவிதையில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூவரினது பிடியும் நிச்சயமாய் எண்பதுகளில் தளர்ந்த போய்விட்டது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இது சற்று வருத்தமாகவே உள்ளது எனினும், நாம் இலங்கைத் தமிழ் கவிதையின் ஒரு புதிய சகாப்த்த்தில் உள்ளோம் என்பதும், அதற்கு இந்த மூவர்கள் வளர்த்த மேற்கூறிய கவிதைப் பண்புகள் ஏதோ வகையில் உதவக் கூடியன என்பதும் நம்பிக்கை தரும் செய்தியாகும்.
I like the worthwhile info you supply within your posts.I’ll bookmark your blog and investigate yet again listed here recurrently.I’m quite convinced I will be taught quite a bit of recent stuff perfect right here! Excellent luck for the subsequent!
Wow that was unusual. I just wrote an incredibly long comment but after I clicked submit my comment didn’t appear. Grrrr… well I’m not writing all that over again. Anyway, just wanted to say fantastic blog!
Greetings! Really beneficial guidance on this informative article!
Bookmarked!!, I like your website!
This is a really good read for me, Must admit that you are one of the best bloggers I ever saw.Thanks for posting this informative article.