மண்ணும் மனிதரும்

மண்ணே,
உன்னை வாழ்த்தி நின்றனம்.
மண்ணை யாங்களும் என்று மகிழ்ந்தனம்.

‘’பூமி எம்தாய்’’ என உன்னைப் போற்றினர்
பூமி எம்தாயென யாங்களும் போற்றுவோம்,

பெண்களின் சிவந்த கன்னம் போல
எங்கள் வாசலில் ரோஜா பூத்தன.

மங்கல் வெளியிலும்,
மழையிலும்
காலைகள் சிந்தும் ஒளியிலும் சேர்ந்து புரளும்
அந்தப் பூக்களை நாங்கள் வியந்தனம்.

எங்கே இருந்தன? எங்கே இருந்து-அவை
இங்கே மலர்ந்தன என்று வியந்தனம்.

நீயே ரோஜாச் செடியும் ஆயினை.
நீயே பசிய தண்டும் ஆயினை.
நீயே இலைகள்; நீயே மலர்கள்
நீயே முட்கள் யாவும் ஆயினை.

உழுதே உன்னை உறிஞ்சும் வேர்களின்
உடலும், உயிரும் யாவும்
இங்கு நீ எனக் கண்டனம்.
நீயே இங்கு
உயிரென விளைந்தும் உணர்வென வளர்ந்தும்
வருகிறா யாதலின் வாழ்த்துதல் செய்வோம்.

II
இன்னும் உன்னை வாழ்த்துதல் செய்வோம்,
ஏனெனில் நிசூதிய இருப்பும் நீயே

எங்கள் பலாவின் அடியில்
தினமும் இலைகள் உதிர்ந்து கிடக்கும்.
அருணன் தங்க ஒளியில் கிளையில் மீண்டும்
தளிர்கள் தோன்றித் தினமும் வளரும்.

இந்த இலைகள் உதிர்ந்த மீண்டும்
இளகி அழுகி உன்னைச் சேரும்.

இந்த இலையில் இருந்த நீயே
இன்னும் சென்று தளிர்ப்பாய் மீண்டும்.

உதிர்ந்து மீண்டும் உயிரில் கூடி
ஒளியில் நிழலாய் ஊர்ந்து நீள்வாய்.

வியந்தனம்; உன்னை வியந்தனம்;
நீயே வினையும் விளையும் என்று மகிழ்ந்தனம். . . .

III

இன்னும் உன்னை வாழ்த்துதல் செய்வோம்
ஏனெனில் நீயுனை உணர்ந்ததும் ஆனாய்.

உன்னைக்கடந் தொரு உடலே இல்லை.
உடலைக் கடந்தொரு உயிரும் இல்லை.

உயிரைக் கடந்தொரு உணர்வே இல்லை.
உணர்வைக் கடந்தொரு மனமும் இல்லை.

மனதைக் கடப்பது மனதுள் மண்டிய
உணர்வுப் புடிதயலுள் உறைதலே என்றனம்.

உணர்வினுள் புதையப்
புதையப் . . . புதைய . . . .
உருவம் வடிவம் உதிர்ந்து கரைந்து
மின்துகள் போன்ற வெளியின் ஓட்டமாய்
அந்த ஆதியைத் தரிசனம் செய்கிறோம்.

அந்த ஆதியும் நீயே ஆனாய்.
ஆதலால் உன்னை வாழ்த்துதல் செய்வோம்.

மனதைக் கடப்பது மனதுள் புதைவதால்
மனதைக் கடத்தல் இல்லை என்றனம்.

மனமும் உணர்வும் உயிரும் உடலும்
மண்ணே எல்லாம் உனது லீலையே.
மனம் எனும் ஆற்றலில் இன்னோர் ஆற்றல்
மலரினும், மண்ணே, அதுவும் உன் லீலையே.

இனிய மண்ணே, இதனை உணர்ந்த்தால்
தனியே நாம் இனிச் சாதல் தவிர்த்தனம்.
இனிய மண்ணே, இதனை உணராத்
தனிமைக்கு மாயை எனும் பெயர் தந்தனம்.

மாயையின் சிரைகள் மறையும் வேளையில்
மண்ணே, உனது மனம் எனும் ஆற்றலால்,
உன்னையே நீயே உணர்ந்து தெளிகிறாய்.

மண்ணே,
உன்னை வாழ்த்து நின்றனம்
மண்ணே யாங்களும் என்று மகிழ்ந்தனம்.

Leave a Reply

Your email address will not be published.