பூச்சியம்

குளவியின் அலைவுறுதல்களையும் நகர்வுகளையும் பார்த்தவாறே நடந்து முடிந்த நம்ப முடியாத அமானுஷ்யமான நிகழ்வில் விறைத்து விக்கித்து போயிருந்தேன். இது தெய்வச் செயலா?

,,,,,,,,,,,,,,, Is it Supernatural ? கண்ணகி வழக்குரைத்த காலை நிகழ்ந்ததாய் கூறப்பட்டது போலும், யேசு மரணித்த வேளை நிகழ்ந்ததாக கூறப்பட்டது போலும், இன்னும் கூறப்பட்ட எத்தனையோ அமானுஷ்யமான எத்தனையோ நிகழ்வுகளைப் போலும் இதுவும் ஒன்றா? ஒரு பூச்சியின் ஆத்ம ஓலம் இத்தனை சக்தி வாய்ந்ததா? .. .. .. அதற்குள் இத்தனை பெரிய ஆத்மா இருந்ததா? எது யதார்த்தம்? எது ஆத்மார்த்தம்? இத்தனையும் தற்செயல்களில் அமுங்கப் போகும் பூச்சியங்களா?

சட்டென்று அந்த நீலக் குளவி இப்போதும் சுவரில் தென்படுகிறது. அதே நீலக் குளவிதானா? அது தான் என்னை நையப்புடைத்து வெற்றிகண்டுவிட்டு இன்னும் என் அறையை விட்டுப் போகாமல் இஸ்ஸுக்கிறது. எப்படியோ நான் அதற்கு விட்டுக்கொடுக்க வேண்டியவனே என்ற பாபச் சுமையையும் என் மீது ஏற்றியுள்ளது.

இந்த நீலக் குளவி அப்படியொன்றும் பிரமாண்டமானதல்ல. சுமார் 2 செ.மீ. நீளம் இரண்டு பக்கமும் சிறகுகள் விரிக்கப்பட்ட நிலையில் சுமார் 2.5 செ.மீ. குறுணி திசையில் சுமார் 0.5 செ.மீ. நீளமுள்ள இரண்டு குறுகிய உணர் கொம்புகள், சோடி கால்கள் கூட 2 செ.மீ.க்கு மேலிருக்காது. உடல் பிரகாசமான நீலம். அதன் அழகே அந்த நீலந்தான். கண்ணீர் துளி போன்ற, மினுமினுப்பான, ஒளி புகக்கூடிய திசுவான, வெளிர் சாம்பல் நிறமான கண்ணீர்த்துளிச் சிறகுகள். மெல்லிய நூல் போன்ற மார்பிடையாடல் தொடுக்கப்பட்ட வயிற்று நுனியின் அடியில் வெளித்தள்ளக் கூடிய கொடுக்கின் முனை.

இந்த வகையான நீலக் குளவிகளின் இறந்த சடலங்களை நான் சின்ன வயதிலேயே பார்திருக்கிறேன். இந்த வகையான குளவிகளை அம்மா வேட்டைவாளி என்று சொல்லித் தந்ததும் நினைவிருக்கு. பூச்சிகள் என் அறைக்கு புதியவை அல்ல. எத்தனையோ பூச்சிகள் வந்து வந்து போகின்றன. சில நிரந்தரமாகவே முகாமிட்டிருக்கின்றன. எறும்பு, நுளம்பு, இலையான், சிலந்தி மற்றும் விளக்கு வெளிச்சத்துக்கு வரும் விட்டில் முதலிய எத்தனையோ பூச்சியினங்கள். பூச்சிகளின் மீது எனக்குப் பொதுவாக பகை கிடையாது. எத்தனையோ பட்டுப் பூச்சிகளை கொல்லாமலே எடுத்தெறிந்திருக்கின்றேன். என் கையடிப்புக்குள் அகப்பட்டு நசியும் நுளம்புகளுக்காக எப்போதும் வருத்தப்படுவேன். நுளம்புத் திரியில் மயங்கி விழுந்து மூர்ச்சையாகிக் கிடந்து பின் மூர்ச்சை தெளிந்து உழன்று எழுந்து பறக்க முனைகின்ற நுளம்புகளை உற்சாகப்படுத்த மனம் விளைவதும் உண்டு. எறும்புகளுடன் விளையாடுவேன். இலையான்களை கைக்குள் வீசி எடுத்து பின் பறக்கவிட்டு விடுவதும் விளையாட்டுத்தான். மதியம் கழிந்த சாய்பொழுதில் இடைக்கிடை இரண்டொன்று என் அறைக்குள் மொய்த்து ஐந்து பத்து நிமிடங்களில் அப்பாலாகிவிடும். சிலந்திகள் உலகத்திலேயே பெரிய ஜோக்கர்கள். சூமற்சுவர் நூலான்களை இடைக்கிடை நாடு கடத்தவே வேண்டியிருக்கும். எனினும், மீண்டும் நாடு புகுவதில் பெரிய ஆத்திரம் ஒன்றுமில்லை. எந்நேரமும் அவைகளைப் பார்த்து வியந்துகொண்டே இருக்கலாம்.

எந்த நீல வேட்டைவாளிக் குளவிகளோடும் நான் பகைமை கொண்டதில்லை. சுவரில் உள்ள ஆணித்துளைகளை அவை பயன்படுத்துகின்றனவா? அல்லது அவைகளே துளைபோடுகின்றனவா? என்பதை நான் இன்னமும் கவனிக்கவில்லை. துளை போடக்கூடிய வாயுறுப்புகள் அவைகளுக்கும் உண்டு, சில குளவிகள் மரத்தில் கூட துளை போடுகின்றன.

ஒரு நாள் மிக அதிகாலையில் எழுந்துவிட்டேன். விளக்குப் போடாமலேயே வெளியில் போய் வந்தேன். வெளியில் நிலவு இன்னும் மறையாத நேரம் அது. தளர்ந்து விலகிப்போயிருந்த சுவிச்சில் இருட்டில் கை வைக்கப் பயம். அதன் வயர்கள் குழம்பி குறும் சுற்றோட்டம் ஏற்படுகின்ற ஆபத்தும் இருந்தது. அதனால் கதவை மூடிய பின்னும் இருட்டில் தடவிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தேன். அவ்வளவுதான். ஒரு கணம் என் உயிரே போனது. ஊசியிலும் கொடிதாக ஏதோ என் கீழ்த் தொடையில் குத்தியது போலிருந்தது. ‘ஆய்’ என்று அலறியும் விட்டேன். நல்ல காலம் மனுசியும் பிள்ளைகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நீல நிற வேட்டைவாளி குளவிதான் கொட்டியிருக்க வேண்டும் என நினைத்தேன். நான் அதிகாலை இருட்டுக்குள் கட்டிலில் அமர்ந்தது. அதற்கு எந்த வகையில் குந்தமாக இருந்திருக்கும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. விடியற் காலையிலேயே அதுவும் எழுந்து விடுகிறதா?

அந்த வலி சில நாட்களுக்கு நீடித்தது. தொடைப் பகுதி சிவந்து உள்ளே சீழும் உண்டாயிற்று. சீழ் உண்டான பகுதியில் கல்லுப்போல ஒரு திரணை என் கையோடு வரவும் செய்தது. அந்தத் திரணையின் உட் பொதிவில் குளவியின் ஒடிந்த கொடுக்குத் தான் இருந்ததோ எனவும் யோசித்தேன்.

இந்தச் சம்பவத்தை நான் மறந்தது போலாயிற்று. நான் அபாரமாய் பிரேமிக்கும் தேனீக்கள் கூட என்னைப் பலமுறை கொட்டியிருக்கின்றன. அதற்காக அவைகள் மீதெல்லாம் வஞ்சம் கொள்ள முடியுமா? இந்தப் பூச்சியிடமும் எனக்கு விரோதம் ஏற்படவில்லை. அல்லது என் உள்ளுணர்வில் என்ன அறியாமலே ஒரு விரோதம் ஏற்பட்டிருக்கும்.

இன்று மதியம் என்னதான் ஏற்பட்டது எனக்கு? சாப்பிட்ட பின் கட்டிலில் பத்திரிகையை வாசித்தும் வாசியாமலும் அயர்ந்து கொண்டிருந்தேன். அப்படி என்ன நடந்தது. இந்த நீல நிற குளவியில் வன்மம் ஏற்பட? என் தலையணைக்கு அருகில் உள்ள சுவரில் காலூன்றி சிறகு அதிர உணர் கொம்புகளை நீட்டிக்கொண்டிருந்ததனாலா? நான் உசாராகி எழுந்து அமர்ந்தேன் என்பது உண்மைதான். அதன் பின் தலையணையில் இருந்து இரண்டு அடிக்கு மேலுள்ள சுவர்ப் பகுதியில் இருந்த ஒரு தூவாரத்தினுள் அது உட்செல்வதும் தூவாரத்துள்ளிருந்து வெளிவருவதுமாய் இருந்தது. தற்பாதுகாப்பின் நிமித்தம் நான் கட்டிலில் இருந்து எழும்ப வேண்டியே இருந்தது. கூடவே என் எரிச்சலும் எழுந்தது போலும். இந்தப் பூச்சிகளுடன் நான் ஒரே அறையில் வாழ்வது எப்படி என்று என்னையே நான் கேட்டுக் கொண்டது நினைவுக்கு வருகின்றது. இந்தப் பூச்சியை நான் கலைத்து விடுவதா? தொலைத்து விடுவதா என்று குழம்பி சாரனை மடித்துக்கட்டி கையில் துவாயை எடுத்துக் கொண்டதும் நினைவுக்கு வருகின்றது.

கலைத்து விடத்தான் எண்ணினேன். துவாயை லேசாகத்தான் வீசினேன். லேசான துவாய் வீச்சில் அதற்குக் காற்று வீசியது போலிருந்ததோ! அது மேலும் உற்சாகமாக சுழன்று சுழன்று துவாரத்தை நோக்கியே பறந்தது. எனக்கு சினம் மூண்டது உண்மை. எப்படியும் அதை வீழ்த்தி விடுவது என்று ஆவேசம் பூண்டு கட்டில் வார்ப்பை உதறி எடுத்தேன். அதை அள்ளிப் பிடித்து ஓங்கி விசுக்கிய போதுதான் குளவி அச்சம் கொண்டு ஜன்னலினூடாக வெளியே பாய்ந்து, வாழை மடலில் இடறி மதிலுக்கு அப்பால் அடுத்த வீட்டுக் கொல்லையினுள் பறந்து மறைந்தது.

வார்ப்பை மீண்டும் கட்டிலில் வைத்து மீண்டும் பத்திரிகையை துளாவத் தொடங்கினேன். இரண்டொரு நிமிஷங்கள் கழிய குளவி மீண்டும் அறையில் தோன்றியது. என் மனதிலும் ஒரு சிறிய விட்டுக் கொடுப்பு. எப்படியாகினும் போகட்டும் என்ற சகிப்பு. திடீரென மீண்டும் கொதிப்பு. இந்தச் சனியனை இப்படியே வைப்பதன் அர்த்தம் என்ன? என்ற உறுத்தல். மீண்டும் சாரனை மடித்துக் கட்டியபடி மீண்டும் கட்டில் வார்ப்பும் கையுமாய். மீண்டும் யன்னலை நோக்கிய பூச்சியின் மன்னல். மீண்டும் வாழை மடல்கள். மீண்டும் மதில். மீண்டும் அடுத்த வீட்டுக் கொல்லை.

இனி வராது என்று ஏனோ நான் திடமாக எண்ணினேன். அவ்வாறு எண்ணுகையிலேயே மீண்டும் அந்தக் குளவி அறையினுள் புகுந்தது. அடே, போன கையோடேயே சுழன்று மீண்டும் வந்து குதிக்கிறதே என மனம் துடித்தது. எப்படியும் உன்னை அடித்து வீழ்த்துவேன் என்று என் முரட்டுத்தனம் கருவியது. வெறுமனே இதை அடித்து விரட்டுவதில் பயனில்லை. திரும்பவும் வரத்தானே போகிறது என எனது வக்கரிப்பில் நிதானமானேன். மேசையில் இருந்த மெழுகுவர்த்தித் தாங்கியை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். தாங்கியின் ஓரமெல்லாம் ஒழுகி நிரம்பி மிகைத்திருந்த மெழுகு வழியல்கள் ஜன்னலூடு பாய்ந்த சூரிய வெப்பத்தில் நைந்து கூள் நிலைக்கு நொதுமலாகிக் கொண்டிருந்தது. என் வக்கரம் மூட்டைப் பூச்சிகளின் இடுக்களின் எங்கோ ஊற்றியிருக்கக் கண்ட அடைப்புக்களின் குரூரத்துக்கு கோயில் கட்டியது.

”மூட்டைப் பூச்சிகளுக்கு மெழுகு ஊற்றி அடைப்பதை ஓரளவு நியாயப்படுத்த இயலும்.

அது மனிதரை குத்தி குருதியை உறுஞ்சுகிற ஒரு பிராணி. வேட்டைவாள் குளவி எதைக் குத்தியது? எதைக் குடைந்தது? எதை உறுஞ்சியது?”

”ஏன் என் தொடையைக் குத்தவில்லையா? என் தொடையை குடையவில்லையா? என் நிம்மதியை உறிஞ்சவில்லையா?”

என்னிலுள்ள அரக்கன் உறுதியானான். இதை ஒரு பெரிய விஷயம் போல ஆர்ப்பரித்துக் கொண்டான். நான் வேறு, என் அரக்கன் வேறு என்று நான் இப்போ தப்பித்துக்கொள்ள நினைக்கும் நினைப்பு அப்போது இருக்கவில்லை. பழியிலும் பாவத்திலும் முழங்கால் புதைய நின்றேன். – கையில் நொதுமலான அரைவேக்காட்டு வெள்ளை மெழுகு குளம்பை அள்ளியபடி.

நீலக் குளவி அதன் சுவர் வளைக்குள் புகுந்து கொள்ளும் தருணத்தை எதிர்நோக்கி நின்றேன்.

சுவர் மணிக்கூட்டின் டிக் டிக் ஒலி மட்டும் கேட்டது. குளவியின் ர்வ் என்ற சிறகு அதிர்வுகள் கூட எனக்குக் கேட்கவில்லை. குளவி சுவரில் மொய்த்து துவாரத்தை தேடுவது போல நகர்ந்து கொண்டிருந்தது.

இரண்டொரு வினாடிகள் . . . . .

மீண்டும் ர்வ் என்ற திசுவின் சிறகோசை. பத்துப் பதினைந்து சுற்றுலாக்கள். பின் மெதுவாக தரையிறக்கம். நான் பொறுமை இழந்தேன். மெழுகுக்குறை குழம்பை எறியத்தான் மனம் வந்தது. வேண்டா வெறுப்புடன் மெழுகைத் தாங்கியின் அடியில் அப்பிவிட்டு நிமிர்ந்தேன். குழவியைக் காணவில்லை. ஜன்னலினூடாக வாழைமடல் பக்கமும் மதிலுக்கு அப்பாலும் நோக்கிவிட்டு அறையின் கூரைத் தளங்களை பார்தது மீண்டும் சுவரைப் பார்த்தேன். துவாரத்தினுள் இருந்து பூச்சி தலையை நீட்டிக் கொண்டிருந்தது. மெழுகை எடுப்பதற்கிடையில் அது வெளியே வந்துவிட்டது. நான் சோர்ந்து போன தருணத்தில் மீண்டும் பூச்சி உள்ளே போனது. முற்றாக உள்ளே போனது. குரூரமும் கோபமும் தலைக்கேற மெழுகை துவாரத்தினுள் வைத்து அப்பினேன். அவ்வளவு தான், குளவியின் கதை முடிந்தது என்ற வன்மத்துடன் அப்பிய கையை எடுத்தேன்.

வெளியில் எங்கோ பறையொலி கேட்டது. யார் வீட்டு சவமோ? இந்தக் குளவியும் சவம் தானோ? என் மென்மையான தளைகளிலிருந்த வரிகள் பீறிட்டெழுந்தன. ”புறா இறந்த ஊர்வலம் அது இப்போது மரண கீதம் என் விழி நனைகிறது. கறுத்த எழுத்துக்கள் கரைகின்றன பறையொலியுடன் குழலோசையின் ஈனஸ்வரமும் கேட்கிறது. நான் துடித்துப் போனேன்.

உடனே இடிபாடுகள் தொடங்கின என் இதயத்துள். ”டாங் டாங்” என்று சம்மட்டிகள் தெறித்தன. என்னில் வரலாற்றுக் காசியப்பனைக் கண்டேன். தம்பட்டையின் சாந்த மணல் மேடுகளில் கைதிகள். வெட்டிய குழிகளில் கைதிகளையே இறக்க வைத்த சிப்பாய்களைக் கண்டேன். என்ன குரூரம்! என்ன குரூரம்! என் மூச்சுத் திணறியது. கூடவே ஒரு குரலும் கேட்டது.

”குரூரமும் வேண்டியதே.”

”குரூரம் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இயலாதா?”

மனதின் கறுத்த வானிலே பளிச்சென்று ஒரு சென்னிறப் பொட்டு!

உடனே மெழுகை துவாரத்தின் வாயிலிருந்து கவனமாக நீக்கினேன். உள்ளே போயிருக்கக் கூடிய மெழுகையும் பேனா முனையால் நீக்கினேன். ஓர் ஆணியையும் உபயோகித்தேன். பூச்சி எஃறப் பாயும் என்றும் எதிர்பார்த்தேன். பூச்சியின் அசைவாட்டமே இல்லை.

இதற்கிடையில் பூச்சி இறந்திருக்குமோ?” . . .

அது இறந்திருக்கக் கூடாது என வேண்டிக்கொண்டேன்.

பூச்சி இறந்து விட்டதா? அல்லது உயிருக்குப் போராடுகிறதா? துவாரத்தின் வாயை அகட்டி விடலாமா? என அலுமாரி லாச்சியில் ஸ்குருறைவரை எடுத்துக்கொண்டு திரும்பினேன். வ்ர் என்று ஏதோ என் கண்ணுக்குள் பாய்ந்தது. நான் கண்களை மூடி, பின்னுக்காகி, மீண்டும் கண்ணைத் திறந்த போது ஒரு பொட்டாக புள்ளியாக கூரை முகட்டை தொட்ட பின் ஒரு ஜெற்றாக ஜன்னலினூடே பாய்ந்து மதிலின் அப்பால் அடுத்த வீட்டுக் கொல்லைக்குள் தலை கீழாக குத்தென்று கர்ணமடிப்பது தெரிந்தது. அதன் நிலை மோசமாகி விட்டதோ என்ற அச்சம் மீதூர வெளியில் ஓடி மதிலோரமாக நின்று அடுத்த கொல்லையைப் பார்த்தேன். கொல்லையில் எங்கெங்கோ தொட்டுத் தொட்டு திரிந்துகொண்டிருந்தது. அதன் உயிராபத்துப் பற்றிய கிலேசம் நீங்கியவனாய் அறையினுள் வந்தேன்.

சரி, இனி எனது மறுகட்ட வேலை ஆரம்பமாக வேண்டும். இதோடு பூச்சி வெருண்டு வராவிட்டால் சரி. இன்னும் இன்னும் அது வந்தால் என் அடுத்த அஸ்திரத்தை நான் பாவிக்க வேண்டும். பூச்சி வருகிறதா? இல்லையா என்பதை அவதானித்துக் கொண்டிருந்தேன்.

நீண்ட நேரமாகியும் பூச்சி வரவில்லை. பூச்சி வெருண்டுவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஜன்னலில் வெய்யில் இன்னும் வீச்சாகப் பாய்ந்தது. பொழுது சற்று இறங்குகிறது என்று அர்த்தம். பத்திரிகையை எடுத்து சற்றுப் புரட்டினேன். கட்டிலில் சிறிது கிடப்பதற்கும் ஆயத்தமானேன். திடீரென்று ஒரு ரீங்காரம். ஜன்னலுக்கு வெளியில் தான்கேட்டது. நான் வெளியில் இறங்கி பின்னுக்கு வாழைமரங்களின் பக்கம் போனேன். கொல்லைப் புறத்தையும் எட்டிப் பார்த்தேன். குளவியின் எந்த சிலாமனையும் இல்லை. எனக்கு யோசனையாயும் இருந்தது. அறையினுள்ளே வந்த போது அந்த இஸ்ஸ்ஸிஸ்ஸ்ஸு மீண்டும் கேட்டது.

அண்ணார்ந்தேன். ஒன்றுமில்லை. குனிந்தேன். சரியாக என் கட்டிலின் மீது. அப்போது அது ஒரு சிறு பூச்சியாக எனக்குப் படவில்லை. என் கட்டிலில் கிடக்கின்ற பூச்சிமுகனாகவே பட்டது. குழம்பி சுருட்டியது போலிருந்த போர்வையுள் புகுந்து வெளிப்பட்டு தலையணைகளில் தாவி அங்கிருந்து சுவர்ப் பரப்பில் தன் கூட்டுத் துவாரத்திற்கு தாவியது. எனக்கு முடிந்த முடிவாயிற்று. மெழுகுவர்த்தி தாங்கியிருந்தது. மெழுகு வழியலில் சிறிதை பெயர்த்துக் கொண்டேன்.

பூச்சி துவாரத்தின் உள்ளே போனது. மணிக்கூட்டின் டிக் டிக் ஒலி தெளிவாக கேட்டது. அதன் நீண்ட சிவப்பு வினாடிக் கம்பியின் ஒவ்வொரு பெயர்வும் என் பொறுமையைச் சோதித்தது. எப்போது பூச்சி வெளிவரும் என்ற வாசகத் துடிப்பு மேலோங்கியது.

ஒரு பூச்சியுடன் நான் போரிடுவது எதற்காக? எனது இருப்பிடத்தை நான் பாதுகாக்க வேண்டாமா? இருப்பிடம் என்பது எனது இருப்புடன் தொடர்பானது. எனது இருப்புக்கான சுயாதிபத்தியம் எனக்குண்டு. பூச்சி வெளியே வரும் வரை நான் காத்திருந்தேன்.

பூச்சியின் தலை வெளிப்பட்டது. ஆகப்போனால் ‘சென்றிமீற்றர்’ நீளமோ அகலமோ இல்லாத பூச்சியின் குளவித்தலை இப்போது எனக்கு ஒரு வலிய விலங்கின் தலை போலவே தெரிந்தது. சில நூல் இடைவெளிகளைத் தவிர தலையில் இருபக்க உச்சிகளையும், நுதல்களையும், கதுப்புகளையும் மூடியிருந்த குமிழுருவான அதன் கூட்டுக் கண் வில்லைகள் ஒவ்வொன்றிலும் என் உருவம் கட்டுண்டு போவதைக் கற்பனை செய்தேன். எவ்வளவு நொருங்குண்டு போயிருக்கும் என் உருவம் அதன் கண்களில்! அரை சென்றி மீற்றர் கூட இல்லாத அதன் நீள உணர்கொம்புகள் ஒரு ஹெலிகொப்டரில் புரோபெல்லர்கள் போல எனக்குத் தோன்றின. ஒரு சிறு பூச்சிதான் ஆனால், எவ்வளவு பூதாகரமான மூச்சையும், முனைப்பையும் ஆளுமையையும் உடையதாய் என்னுள் உருக்கொண்டு விட்டது.

மெல்ல மெல்ல அதனுடல் பாதிக்கு மேல் வெளிவந்த போதும் ‘ஹன் !ஹாரிலிருந்து’ ஒரு விமானம் போன்ற கனதி ஒன்று தெரிந்தது.

இப்போது துவாரத்தில் இருந்த சுவரின் மேற்பரப்புக்கு நகர்கிறது. மென்மையான ஒளி புகக்கூடிய அதன் அழகான மினுக்கமான சிறகுகளின் நரம்புகளில் ஒரு சிற்பியின் வித்தைகள் தெரிகின்றன. சிற்பியின் வித்தைகள் தெரிகின்ற அந்த கண்ணீர் விமானச் சிறகின் கனதியும் நுட்பமும் பெற்றே இருக்கின்றன. அந்தக் கண்ணீர்த்துளிகள் எனக்கு சவால் விடுகின்ற கண பரிமாணம் பெற்று விடுகின்றன.

‘போராடியே தீருவது நானும் நீயும்’ என்ற புல்லரிப்புடன் நான் மெழுகு வழியலின் நொய்மத்தை உருட்டி திரட்டிக்கொள்கிறேன். வீர்ர் என்று பறந்து விடுகிறது விமானம். நான் ஹங்காரின் வாயிலை மேகத் தழைவான எரிமலை குளம்பினால் அடைத்து விடுகின்றேன். இனி வந்து பூச்சி இந்த எரிமலைப் பாராங்கல்லை உசுப்பி பார்க்கட்டுமே.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பூச்சியை எதிர்பார்த்துக் கொண்டே நிற்கிறேன். ஜன்னலை கடந்தும், வாழை மடல்களைக் கடந்தும், மதிலைக் கடந்தும், மதிலுக்கப்பால் உள்ள அடுத்த வீட்டு கொல்லைப்புறத்தை கடந்தும் எட்டி எட்டி பூச்சியை எதிர்பார்த்துக் கொண்டே நின்றேன்.

வருகிறது விமானம். அதன் இரைச்சல் அதைக் காணு முன்பே எனக்குக் கேட்டுவிடுகிறது. அதோ வெளியில் உள்ள அந்த மதிலுக்கு மேல் வாழை மடல்களைக் கடந்து அது வருகிறது. எனது ஜன்னல் கம்பிகளுக்கிடையில் உள்ள பாரிய வான் வெளியினூடாக எனது அறைக்குள் பாய்ந்து விடுகிறது.

அறையெங்கும் அதன் இரைச்சல். சுவரின் ஓடுபாதையெங்கும் அது துருவித் துருவிப் படர்கிறது. தொடுதலும் எழுதலுமான வழமையான நகர்வுகள். கடைசியாக மேகத்தழைவான என் வெண்ணிற எரிமலைக் குளம்பு பூச்சிக்கு வருகின்றது. எனது சூதின் மர்மம் அதற்குப் புரியவில்லை. ஓடுபாதையிலிருந்து கிளம்பி விமானத் தளத்தின் வான் வெளியெங்கும் சுற்றிச் சுற்றி சுழல்கிறது.

இந்த உயிர் விமானத்தின் பதற்றம் மிக்க இரைச்சலை என்னால் பொறுக்க முடியவில்லை. ஒரு ரோபோ போல கணனிக் கணிப்புகளுடன் கோணம் வரித்து நகர்ந்து நகர்ந்து பறந்து பறந்து மூடப்பட்ட ஹங்காரை நெருங்குகின்றது. இறுகிப்போன எனது வெண்பாறைக் குளம்பில் முட்டிக்கொள்கிறது. ஏதோ தவறு, ஏதோ சூது நட்நதிருக்கிறது என்பதை என் பூச்சி விமானம் புரிந்துகொண்டு விட்டதைப் போல் தோன்றுகிறது. உடனே ரீவ் என்று கிளம்பி ஜன்னலின் வான்வெளியை ஊடறுத்து வாழைமடல்களை உரசியவாறு மதிலுக்கப்பால் அடுத்தவீட்டுக் கொல்லையின் மேக மண்டலங்களில் மறைந்து விடுகிறது.

முடிந்தது கதை என்ற நிம்மதி எனக்கு. பூச்சியின் வளை மூடப்பட்டு விட்டதால் அது இனித் திரும்பி வருவது சாத்தியமில்லை. அது இனி வேறு இடங்களை நாடும். வேறு வளைகளைப் போடும் என்பதை நான் ஒரு பாட்டாகவே பாடினேன், , , , , ,

வேறு இடத்தினை நாடு
வேறு வளையினை போடு

அட என் வேட்டைவாளி குளவியே
நீ
வேறு இடத்தினை நாடு
வேறு வளையினை போடு . .. .

எனது பாடலின் உச்சஸ்தாயில் அதன் பின்னணி இசை போல அந்த விமானத்தின் ஓசை மீண்டும் கேட்டது. விமான ரீங்காரம் மேலோங்கியது. நான் அறையினுள் அண்ணார்ந்து பார்த்தேன். விமானம் விமானமாகத் தெரியவில்லை. ஒரு பறக்கின்ற தாயாகத் தெரிந்தது. அந்தரத்தில் அந்தரப்படுகின்ற அபலைத் தாய்.

‘ஆக்காண்டி’ எழுதிய அதே கைதானா இந்தத் தாயின் குடிசையை மூடியது? கல்லைக் குடைந்து இட்ட முட்டையல்லவா அவைகள்? எத்தனை குடம்பிகளுக்கு எத்தனை மலைகளையும் எத்தனை உலகங்களையும் சுற்றி இரை தேடிக்கொண்டு வந்திருக்கிறதோ நீலக் குளவி ஆக்காண்டி? நான் அடைத்த வெள்ளை மெழுகை எடுத்துவிடத் துடித்தன எனது விரல்கள். எனினும் இந்த மென்மையின் தளைகளிலிருந்து நான் இன்னமும் விடுபடுவதில்லையா? வெறும் இரக்கங்களை மீறிய தீர்க்கமான முடிவுக்ள எனக்கு சாத்தியமில்லையா? வெறும் மெழுகு மீண்டும் என்னுள் இறுகிய எரிமலைப் பாறையானது. எனினும் எதிரொலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன.

”கோழையாகாதே”

”பாவம்”

என்னுள் நானே ஒரு கிருஷ்ணனாகவும், அர்ஜூணனாகவும் என் போர்க்களம் விரிகிறது.

பூச்சி வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்தது. ஒரு மணி நேரமான அலைச்சல். ஒரு மணி நேரமான எனது உறுதியும் உறுத்தலும் காத்திருப்பும். அலைவுறும் பூச்சிக்கு களைப்பிருக்காதா? நான் அகதியாய்ப் போன நினைவுகள் வந்தன. பிள்ளைகளை இழந்த எமது தாய்மாரின் அபலக் குரல்களும் கேட்டன. இந்த துயர நினைவுகளுடன் ஏன் ஒரு பூச்சியின் அலைவுறுதலைத் தொடர்புபடுத்த வேண்டும்? புள்ளியளவில் ஒரு பூச்சிக்காய் இரங்கிய புலவன் நான் அல்ல. பூச்சியை கிள்ளி கிள்ளி அதன் வேதனையை பார்த்துப் பார்த்து இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளும் போராட்ட காலம் என்னுடைய காலம். மனதை மீண்டும் இரும்பாக்கிக் கொண்டேன்.

”இப்படி இந்தப் பூச்சி அலைந்து திரிந்து அல்லல் பட விடுவதை விட அதனை ஒரே அடியாய் அடித்துக் கொன்றுவிடலாமே ……”

”அதுதான் முடியாமல் போயிற்று கல்லறைக்குள் போட்டதை தோண்டி உயிர்ப்பித்தல்லவா இருக்கிறேன்.”

”உயிர்ப்பித்து என்ன அது மீண்டும் மீண்டும் வந்து அழுது புலம்பி கதறித் திரிகிறதே,” மீண்டும் என் மனதின் கரிய வானிலே ஒரு செஞ்சுடர். மீண்டும் இந்தப் பூச்சியை இந்த அறையில் இருந்து அகற்றுவதற்கு ஒரு புதிய உத்தி.

”பொறு, பொறு இன்னொரு முறை இது வெளியே போகட்டும். இது திரும்பி வருவதற்கு இடம் வைக்கிறேன் பார்.”

மீண்டும் அழுது புலம்பியபடி பூச்சி ஜன்னலினூடு தாவி வெளியே போனது. இன்னொரு முறை அதை அறைக்குள் அனுமதித்து அதன் அழுகையையும் புலம்பலையும் அலைவுறுதலையும் காண என்னிதயம் தாங்காது. விசுக்கென்று எழுந்து அறையின் புறக்கதவை இழுத்து அடைத்து ஜன்னல் கதவுகளையும் இழுத்து மூடிக் கொழுக்கி போட்டேன்.

அறை முழுதும் இருட்டு. மதியம் சாய்ந்த பொழுதாயினும், கதவையும் ஜன்னல்களையும் மூடிவிட்டால் இருட்டாகாமல் விடுமா? கதவோரம் இருந்த சுவிட்சை போடப் போனேன். அந்த சுவிட்சைப் போடுதல் அவ்வளவு எளிதல்ல. சுவிட்சைப் போட்டால் மட்டும் போதாது. சுவிட்சின் மேல்ப் பகுதி கழன்று போய் இருந்தது. அதன் மேல்த்தட்டை எடுத்து சற்று ஓரம் சாயகுத்தாக தொக்க வைத்தேன். வழமை போல் உள்ளுக்குள் பளிச் பளிச் என்று மின்னல் தெறிக்க பயம் காட்டியது. சற்றுப் பயந்தாலும் மேசைச் சுவரில் மாட்டப்பட்டிருந்த 200 பல்ப் ஒளிரும் வரை சுவிட்சின் மேல்தட்டை பல கோணங்கிளில் தொக்க வைத்துக் கொண்டிருந்தேன். குருட்டுத் தனமான ஒரு சூட்சுமத்தில் காலம் கழிகிறது.

ஒளிரத் தொடங்கிய மின்குமிழைப் பார்த்தேன். நல்ல வெளிச்சம் 200 வோல்ட் பத்திரிகையைப் புரட்ட ஆரம்பித்தேன். பூச்சி இனி வர முடியாது முன்பக்க ஹோலுக்கு அப்பால் உள்ள சாப்பாடு அறையில் கதவு சாத்தப்பட்டே கிடக்கிறது. அந்த ஜன்னலினூடே வருமளவிற்கு பூச்சி சுற்றி வளைக்கும் என்று தோன்றவில்லை. அப்படித் தான் வந்தாலும், எனது முன்னறைக் கதவு திரைச்சீலை யூடாக அது வர முடியாது. வேணுமென்றால் கூரை வளையினூடாக அது வரக்கூடும். ஆனால், இந்த மிக உயரமான கூரையின் வளைக்குள் செல்வதென்றால் கீழிருந்து மேலாக செங்குத்தாக உயர்ந்து வளையிடுக்கை அறிய வேண்டும். ஒரு பூச்சி பழக்கத்தின்பால் இதை செய்யக்கூடுமாயினும் சடுதியாக அறிந்து செய்ய முடியாது. அதனால் இந்தப் பூச்சி இப்போதைக்கு இந்த அறைக்குள் வரும் சாத்தியமே இல்லாமல் போய்விட்டது என நினைத்து செருக்குக் கொண்டேன்.

ஆனால், ஜன்னலுக்கு வெளியில் குளவியின் இரைச்சல் கேட்கத் தொடங்கியது. வெறும் இரைச்சல் அல்ல. அழுகின்ற இரைச்சல். அழுது புலம்பும் இரைச்சல். ஜன்னல் கதவுகளில் அது மோதி மோதி விழுவது போலும் கேட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு தொடர்ந்து பத்திரிகையைப் படித்தேன். பின்னர் புறக்கதவின் வெளியிலும் அதன் இரைச்சல் கேட்டது. நீண்ட நேரம் புறக்கதவுக்கு வெளியில் கேட்டது. புறக்கதவும் இதற்கு ஏற்கெனவே பழக்கமாகியிருக்க வேணும். சிறிது செல்ல புறக்கதவுக்கு வெளியிலும் ஜன்னலுக்கு வெளியிலும் மாறி மாறி இரைச்சல் கேட்டது.

நான் பத்திரிகையை படித்து முடித்தாயிற்று. பூச்சி இன்னும் போன பாடில்லை. பூச்சி என்னை சீற வைத்ததா? அல்லது நான் பூச்சியை அப்புறப்படுத்தினேனா? இது ஒரு புதிய பிரச்சினையாயிற்று.

இது ஒரு புதிய பிரச்சினை. கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டது போல என் காதுகளையும் அடைத்துக் கொள்ள வேண்டுமா? எத்தனை ஒலிகள் வெளியில் எழுகின்றன? சேவல் ஒன்று கூவுகின்றது. காகங்கள் சில மாறி மாறி கரைகின்றன. தெருவில் சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்டம். ஆகாயம் நோக்கிய அன்ரனாவில் கிக்கிலுப்பை ஒன்று தன்னந்தனியாக அமர்ந்து கொண்டு வாய்க்குள் திருவிழா காலத்தில் வாங்கிய விசில் உருட்டுவது, கறுத்தப் பழங்களையுடைய மலைவேம்புக் கிளையில் அமர்ந்து கொண்டு கவிதை பாடும் குக்குறுப் பாச்சான் குருவி, துவாக்களின் அழுகுரல்கள் . மைனாக்களின் வயலின் இழுப்புகள் – அத்தனை ஒலிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்ட இந்த பூச்சியின் விர் விர் என்ற விமான ஓசையைப் போல காதுக்குள் திரிவைக்கும் இந்த ஓசை . . . .இந்த அழுகுரல், இந்த ஓலம், இந்த ஒப்பாரி, இப்படி அதன் ஆத்மா விம்மி வெடிக்க இந்தப் பூச்சியினால் அழ முடிகிறதே …. என்ன பாவத்தில் மாட்டுப்பட்டோம். என்ன கொடுமைக்குப் பங்காளியோனோம் என என்னியதமும் விம்மி விம்மி, என்னவென்று புரியமுடியாத ஒரு உணர்ச்சியில் வெடித்துப் பொருமப் போகின்ற ஒரு கணத்தில் என் இதயமே வெடித்தது போல உடைந்து போயிருந்த அந்த சுவிட்சினுள் சுர் சுர் என்று ஏதோ கேட்டு என்னை பயங்கொள்ளச் செய்ய தொடர்ந்து மின் வீச்சுப் போல சுவிட்சின் ஒளிர்வுள் தெறிக்க ஏதோ எரிவது போல் புகை கிளம்ப அதே சமயத்தில் பட் என்ற பேரிடியோடு சுவரில் 200 மின்குமிழ் அணைந்து கரி படிந்தது போலாக . . . .. இருளில் தூக்கியெறியப்பட்டவன் போல நான், நான் கட்டிலில் இருந்து கீழே கவிழந்தேன். நிமிர்ந்த போது இருள். கதவையும் ஜன்னல்களையும் திறப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

ஜன்னலைத் திறந்ததும் மின்னல் பாய்ச்சலில் குளவி உள்ளே வந்தது . .. . . .. ….

நான் இன்னும் விறைத்து விக்கித்து . .. . ..

Leave a Reply

Your email address will not be published.