எல்லாம் முடிந்தது,
இனி என்ன, நாம் நடப்போம்.
மங்கல் படுகிறது.
இந்த மணல் அணைத்து என்ன பயன்?
ஆடு கடித்துத் தேய்ந்த
அரைகுறைப் பற்றைக்கிடையில்,
பழைய சவப்புதையல்
மண்சரிந்து தூர்ந்த வடிவம் தெரியலையே,
இன்னுமேன் நாங்கள் இதற்கு மணல் அணைப்பான்?
வண்ணான் வரவில்லை.
வந்த பறைப் பொடியன்
பாட்டோடு கூறவில்லை.
பட்டும்படாமலும் வாய்க்குள் முணுமுணுத்து
கம்பை வைத்தெடுத்துப் போய் இருந்தான்.
நாங்கள் பொருமிக் கிளம்பி என்ன?
வாயில் சிகரெட்டை வைத்துக் கொளுத்தி,
அதன் தூசுகளைத் தட்டி,
சுடர்முன் உள்இழுத்து விட்டான் புகை! பார்த்தோம்
அந்த வெண்சுருளில் நாம் மறைந்தோம்.
”சத்துக் குறைந்தவோர் சாதிதான் ஆனோமா? ….”
கத்தினார் போடி.
கவனமில்லாமலா,
வாத்தியார், கிளாக்கர், வைரமுத்து ஓவசியர்
சத்தா சமுத்திரம், நம் சனமெல்லாம் பார்த்துச்
சும்மாயிருந்தார்?
சவத்தைச் சுமந்துவந்து
மண்ணோடு வாய்க்கரிசி மாத்திரமா போடுகிறோம்? –
எல்லாம் முடிந்தது;
இனி என்ன போய்வருவோம்.