இன்று மிகத் துயர் உற்றேன்.
என் இனிய நண்ப,
இவ்விரவின் நிலவொளியில் என்னுடன் நீ இருந்தால்
வெண்பனியின் துளி சொட்டும்
பூங்கொத்தைப் போன்று விம்முகிற என் நெஞ்சில்
ஆறுதல்கள் தருவாய்.
‘இன்று, இந்த மிகச் சிறிய சம்பவத்திற்காக
இவ்விதமோ துயர் உறுதல்’
என்று நினைப்பாயோ?
இன்றளவும் வாழ்ந்துள்ளேன்;
எனினும் எனதன்ப,
எனது மனம் பூஞ்சிட்டின் மென் சிறகுத் தூவல்.
என் பாதம்,
இடர் கல்லில் அழுந்தாத ரோஜா.
என் நண்பர் மிக இனியர்;
சுடு சொல்லை அறியார்;
கண்ணீரின் துளிபோல்
காலம் எனும் நதியில் கலப்பதற்கே உயிர் செய்த
காதல் உரு ஆனார் . . . . . .
போகட்டும் . . . . . . . . .
இன்று முதல் கசப்புகளை வாங்கிப் புசிக்கின்றேன்,
அதற்கென்ன! . . . . . . . . .
என்மனதை, என்றும்
நோகாது வைத்திருக்க வேண்டுமென எண்ணேன்,
நொந்தவர்தான், வாழ்க்கையிலே சாதனைகள் செய்தார்.
ஆதலினால்,
என் மனதைக் கல்லாக்கிக் கொள்வேன்.
அம்புவரும்,
அது முறியும்,
நான் நடந்து செல்வேன்.
ஏகமும்,
தாம் என்று எண்ணுபவர் மாள்வார்
இப்பெரிய உலகினிலே எத்தனைபேர் உள்ளார்:
ஆகாய வீதியிலே
என் நெஞ்சைக் கிள்ளி அத்தனையும் இட்டதுபோல்
மின்னுகிற
வெள்ளிப் பூ அனந்தம் என்பதைப் போல்
தினம் மேதை பூப்பார்;
பூச் சிவந்த சேவல்,
ஒரு நாள்
இரவு
கூவும்.
என் இதயம்
இப் பரந்த வான் முழுதும் ஆகி இருப்பதனை
ஆர் அறிவார் என் இதய ஊற்றே? . . .
என் எதிரில் தெரிகின்ற வான்முழுதும்,
இந்த இரவெல்லாம் ஒளிர்கின்ற கற்கண்டுத் தூளும்
பொன்னிதயம், என்னுள்ளே,
நெடுஞ்சுரங்கமாகிப் பூக்கின்ற அழகைத்தான்
ஆர் கண்டார் அன்ப?
விண்வெளியில்
உதிர்ந்துள்ள இவ்வெள்ளிப் பூக்கள் மீது யான்
அடிவைத்து நடக்கின்ற போதில்,
‘’என்ன இவன் அழகு!’’
என்று இவர் வியந்து கொள்ளும்
இனிய பொற்காலம் ஒன்று வந்திடுமோ?—
அல்லால்,
இன்றிரவு,
இதோ வெளியில்,
எம் கிணற்று வாழை இலைகளிலே,
நிலவினிலே,
பனித்துளிகள் பட்டு,
‘இச்’
என்ற முத்த்த்தின் ஒலியுடனே
அவைகள் இழிந்து
நிலம் சொட்டுவதைப் போல் மறைந்து போமோ? . . . . . . . . . . . .?
அச் – செ – ய – லு – ம் –
எனக்கு மிக உவப்புளதே – ஆகா!
அலை கடலும்,
புவி முழுதும்,
அருமை உயிர்ச்சிட்டும்,
சப்திக்கும் ஒருங்கமைந்த ஓசையில்
என் குரலும் சங்கமிக்க
என் இயல்பை நான் பாடுகின்றேன்
இச்சை மிகும் சுருதியினை
இதனின்று வேறாய் எழுப்புகிற நரம்புகளை
நாம் முறித்து வைப்போம்;
‘’எச்சிறிய புல்லும்,’’
அதன் இயல்பினிலே முழுமை.
இடுகாட்டில் முளைக்கின்ற கழனியும் ஓர் அருமை!
அப்படியே நாம் ஆனோம்.
அதோ இந்த நிலவில்
அகன்ற இலை வாழையிலே பனிசொட்டும் கீதம்,
‘இச்’
என்ற ஒலியுடனே எழுகிறது மீண்டும்;
இனி என்ன!
போய்த் துயில்வேன், என் உயிரின் கண்ணே.