தன்னில் அப்படி ஒரு திடீர் மாற்றம் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அன்று சாயந்திரம் நிதித் தெண்டலுக்கு போக வேண்டும் என்று காலையில் அறிந்த போது அவனுக்கு ஓர் அசூசை ஏற்பட்டிருந்தது, உண்மைதான். மதிய மணி அடித்த பின் அவன் சைக்கிளில் ஏறும்வரை இந்த திடீர் முடிவுக்கு அவன் உட்பட்டிருக்கவில்லை. அலுவலகத்தைக் கடக்கும் போது ஜெபேர்ஸ், ஒரு பெரிய புதினத்தை எகத்தாளமாக கூறுவது போல சொன்னான்,
‘’தெரியுமா … … Staff meeting at 1:30 Then House Meeting. Then P. T. Practice. Then Sports practice. இதுக்கிடையில் Collection, ஒரே ரகளையாகத்தான் கிடக்கு’’
ஜெபேர்ஸின் கடைசித் தொனியில் அலுப்புத் தோய்ந்திருந்தது. ஜெபேர்ஸ் அப்படி அலுப்படையக் கூடிய ஆளில்லை. ஆனாலும் இவனுக்கு அப்படித்தான் பட்டது. ஏதோ ஒரு சுற்றிச் சுழல்கின்ற சூறாவளியில் தான் அகப்படப் போவதைப் போல் ஒரு முன்னெச்சரிக்கை உணர்வு கொண்டான். கடந்த ஒரு வாரகாலமாக தன்னந்தனியாக ஒரு பரீட்சையை முப்பத்திரண்டு வகுப்புகளுக்கு, முன்னூற்றி இருபது பாடங்களுக்கு அவன் நடத்திக் களைத்த பரபரப்பும் அவதியும் முன்னின்றது. அதைவிடவும் ஒரு பெரிய பரபரப்பும் அவதியும் தன்னைக் காத்து நிற்கின்றதென்ற ஓர் அச்சம் அவனை மேற்கொண்டது போலிருந்தது. இரும்பு கேற்றைக் கடக்கும் போது ‘இன்று பின்னேரம் இந்த கேற்றைக் கடக்க வேண்டாம்’ என்று நினைத்துக் கொண்டான்.
வீட்டுக்கு வந்ததும் அந்த முடிவு மேலும் உறுதியாகி விட்டது. அடுத்த நாள் காலையில் போகலாம் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் அடுத்தநாள் காலையில் அந்தப் பய ங்கரச்சூறாவளியில் இருந்தும் தான் தப்பிக் கொள்ள வேண்டுமே, என்ற முனைப்பு ஏற்பட்டது. அதை ஒரு சூறாவளி என நினைப்பது பொருத்தமில்லை என்றும் அவனுக்குப்பட்டது. அது ஒரு புழுதிப் படலத்தின் பெரும் சுழற்சி. அந்தப் புழுதிப்புயலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு மென்மேலும் அவனைக் கவ்வியது. அப்படியே இரண்டு மூன்று நாள் கழிந்தன.
மெல்ல மெல்ல அந்த தூசுப்படலம் அமர்வது போல் தோன்றியது,
காலையில் குளித்து சாப்பிட்ட பின் முன் கூடத்துக் கதிரையில், அப்படியே பகல் வரையும் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். அல்லது யோசனைகளே இல்லாமல் தன்னைக் களைந்து கொண்டிருந்தான். மத்தியானங்களில் கட்டிலில் புரண்டு முகட்டையே வெறித்துப் பார்த்தபடி கிடந்தான்.
பாடசாலையின் அந்த வரண்ட புற்கள் தெரிந்தன. அந்த வரண்ட புற்களை விடவும், அவற்றிடையே குறுக்கிடும் ஒற்றையடிப் பாதைகளும், நீர் ஓடிவார்த்த சுவடுகளும்தான் அவனை அதிகம் உறுத்தின. அந்த ஆல மரங்களின் குளிர் நிழல், இருண்ட தோப்பின் நுழைவாயில் எனப் பிரமையுற்றான். அந்த நீண்ட கொரிடோர்களும், நெடுந் தொடரான தூண்களும்—நீண்ட நெடுந்தொடர்—என அவன் நினைப்பதே ஒரு பீதியுற்ற அதீத பிரமைதான், அவை எல்லாம் சேர்ந்து அவனுக்கு அந்நியமாக தோன்றின. அல்லது அவனை அந்நியப்படுத்தின.
அவன் அங்கு போக முன்பு அந்த ‘மனிதர்களும்’ அந்தப் பிள்ளைகளும் அப்படித்தான் நடமாடியிருப்பார்கள். அவன் வந்த பின்புதான் அவர்கள் இப்படிப் பார்க்கிறார்கள், இப்படிச் சிரிக்கிறார்கள், இப்படி நடக்கிறார்கள், என்று ஒரு எண்ணம் இவனை அறியாமலேயே இவனுக்குள் புகுந்திருக்குமோ? முன்பு இருந்தது போலவே இப்போது எல்லாம் நடைபெறுகிறது. இந்த நடைமுறையில் இவனும் பத்துடன் பதினொன்றாக, அமிழ்ந்திக் கலந்து, அரவம் அற்று, அடையாளம் அற்றுப் போக வேண்டியதுதானா? இவனுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லையா? அவர்களிலிருந்து இவன் தனியாக இரண்டு துளிர் துளிர்த்து, எல்லோரையும் இன்னொரு திசைக்கு இட்டுச் செல்ல இவனையறியாமலே எண்ணுகிறானோ? அதற்கு எவ்வளவு பரபரப்பான ஆர்வமும் முனைப்பும் முயற்சியும், இவனை இப்போது எங்கு கொண்டு தள்ளியிருக்கிறது? இவனிலுள்ள இவன் எங்கோ தொலைந்து விட்டதைப் போலிருக்கிறது. அந்தத் தூசுப்படலத்துள், இவனும் ஒரு தூசாக—இவனுடைய தூசைக் கூடக் காணவில்லையே, ஆள்மாறி அடையாளமே இல்லாமல் போய் விட்டதே – அவன் எங்கே? அவன் எங்கே? –
‘’அவரவர் தனித்தன்மையும் அவரவர் ஸ்தாபனத் தொடர்பும்’’ . . .
முகட்டை வெறித்தபடி கட்லில் கிடந்த அவனது வாய் முணுமுணுக்கிறது அங்குள்ள அநேகருக்கு அந்தத் தொடைசல் விகிதசம்மாகத்தான் இருக்கிறது. தலைக்கும் இருக்கிறது; வாலுக்குமிருக்கிறது. இவன் மட்டுந்தான் ஒரு கூட்டிலிருந்து இன்னுமொரு கூட்டுக்கு விக்கிரமாதித்தன் ஆகிறான். Track மாறி ஓடுகிறான். எங்கெங்கோ போய்த் தொலைந்துவிட்டு இப்போது தன்னை, தான் இருப்பைத் தேடுகிறான்.
நான்காம் நாள் ஐந்தாம் நாள் கூட அவன் அந்த இரும்புக் கேற்றைக் கடப்பதற்குச் சம்மதிக்கவில்லை. வெறுமனே யோசித்துக் கொண்டு – அல்லது யோசனையைக் களைந்து கொண்டு இருப்பதற்குப் பதிலாக அப்போது மெல்ல வாசிக்கத் தொடங்கினான். ஒரு பக்கத்தை வாசிப்பதற்கு ஒரு யுகம் தேவை போல் தோன்றியது. முன்பு வாசியாமல். ‘நேரமில்லை’ என்ற தோரணையில் எங்கெங்கோ மூலைகளில் ஒதுக்கிய நாவல்களையெல்லாம் எடுத்துத் தூசுதட்டி வாசித்தான். தன்னுடைய கவிதைகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தான். சிலவற்றை வாய் விட்டு வாசித்தான்.
‘’விண்வெளியில் உதிர்ந்துள்ள
இவ்வெள்ளிப் பூக்கள்
மீது யான் அடி வைத்து
நடக்கின்ற போதில்
என்ன இவன் அடிகென்று
இவன் வியந்து கொள்ளும்
இனிய பொற் காலமொன்று
வந்திடுமோ –அல்லால்’’
அதற்குமேல் அவன் அதை வாசிக்கவில்லை, தான் முன்பு எழுதி மீண்டும் திருத்தம் செய்ய வேண்டும் என்று விட்ட நாவலை எடுத்து ஒழுங்காக படித்துப் பார்த்தான். தன்னை இலக்கியத்துள் என்றும் ஈர்த்துவிடுகின்ற சக்தி நிச்சயமாக அந்த ‘நான்கு ஆண்டுகளுக்கு’ உண்டு என்பதை உறுதியாக உணர்ந்தான். தான் சற்றுத் தேறி வருவதாக, தன் பழைய இருப்பு நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்புவதாக அவனுக்குப் பட்டது. உண்மையில் இந்த நான்கைந்து நாட்களும் அவன் சுகயீனமாகத்தான் இருந்தானா?
ஒரு வாரம் கழித்த அவன் மீண்டும் அந்த இரும்புக் கேற்றைக் கடப்பதற்குத் துணிவு பெற்றான். இரும்புக் கேற் வழக்கம்போல் திறந்தே கிடந்தது. எதிரே அந்த வரண்ட புற்களும், நீர் வார்த்து ஓடிய சுவடுகளும் ஒற்றையடிப் பாதையின் தேய்வுகளும், அவன் நெஞ்சைக் கரிக்கத்தான் செய்தது. எனினும் அவனுக்கு இப்போது நேரமும் உணர்வும் சற்று விசாலிப்பாகத் தோன்றியது. வெயில் கொளுத்தியது. கன்ரீனில் போய் அமர்ந்து அந்த வெயிலில் அமர்க்களப்படும் அந்த பிரமாண்டமான உடற்பயிற்சி ஒத்திகையைக் கவனித்தான். ஒரு வாரத்துக்கு முந்தி என்றால் அவனும் அந்த வெயிலில் நின்று அமர்க்களப்பட்டிருப்பான். இப்போது சற்றுத் துரத்தில் நின்று பார்க்கும் மனச் சுதந்திரம் கிடைத்திருப்பதையிட்டும் பெரிதும் சந்தோஷப்பட்டான்.
பிள்ளைகள் அனாவசியமாக நின்று வெயிலுக்குள் வாடுவதாக அவனுக்குப்பட்டது. ஒரு வாரத்துக்கு முன்பு என்றால் இந்த வெயிலும் ஒரு வெயிலா என்று அவன் அந்த பிள்ளைகளிடமே கேட்டிருப்பான். பிள்ளைகள் நிலத்தில் அமர்ந்து, படுத்துப் பிரண்டு, அப்பியாசம் செய்யும் போதெல்லாம் அவர்களுடைய உடைகள் அழுக்கடைகிறதே என அவஸ்தையுற்றான். ஒரு வாரத்துக்கு முன்பு என்றால், இந்த அமர்க்களத்தினால் தன் ஒரே உடை ஒன்றுக்கும் உதவாமல் போகிறதே என்று எந்தப் பிள்ளையாவது நினைக்கிறது என இவன் நினைத்தாலும், அந்தப் பிள்ளையின் முதுகில் இரண்டு வைக்கத் தவறியிருக்க மாட்டான். ‘’பாடசாலைதான் பெரிது, நீயுமல்ல, உன் உடையுமல்ல’’ என்று கர்ச்சனை புரிந்திருப்பான். அதிபரும் ஆசிரியர்களும் ஒரு மரணப்பலியின் புரோகிதர்களாக நின்று மாணவர்களிடையே புரியும் அட்டகாசம் அவனுக்கு இப்போது விரசமாய்ப்பட்டது. இந்தப் பாடெல்லாம் எதற்காக? ஒரு ஐந்து நிமிஷ நேரக் கண்காட்சிக்காக – அதனால் பெறும் ஓர் அற்பப் பாராட்டுக்காக. அதற்காக இந்த அகோரவெயிலில் அந்தப் பிஞ்சு முகங்கள் எவ்வளவு கருகிப் போகின்றன. என்ன இது? இவன் ஏன் இப்படி சிந்திக்கின்றான். இவன் anti-establishment ஆகிவிட்டானா? அவனுக்கே அவனை நம்ப முடியவில்லை.
அந்த மாணவத் தலைவியைக் கவனித்தான் அவன் கவனித்தானா, அல்லது அவனுடைய கவனத்தை அவள் ஈர்த்தாளா! எல்லோருடைய கவனத்தையுந்தான் அவள் ஈர்த்தாள். அவள் ஓர் அற்புதமான பெண் என்று முன்பு அவன் யாரிடமோ சொன்னதாக நினைவு. ஏன் சொன்னான் என்பதை மறந்து விட்டான். அவளை இப்போது பார்க்க அவனுக்கு எரிச்சல்தான் உண்டானது. இவள் என்ன கைகளை உயர்த்துவதும் அமர்த்துவதும்? குனிவதும் நிமிர்வதும்? அவள் என்ன பெரிய இசைக் கச்சேரியா நடத்துகிறாள்? இவளுக்கு ஏன் இவ்வளவு துடிப்பும் சுறுசுறுப்பும் துள்ளலும் மல்லலும், பேய்ப் பெட்டை அந்தத் துடிப்புக்கும் துள்ளலுக்கும் இவளுடைய பிற்கால வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? நாளைக்கு இவள் ஒருவனைக் கைப்பிடித்துக் கொண்டு உப்புக்கும் புளிக்கும் திண்டாடும் போது அந்த உடற்பயிற்சிச் சாகஸங்கள் வெறும் கானலாய் கனவாய்த் தெரியாதா?
இவளை நினைக்க அவள் நினைவுக்கு வருகிறாள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவள் – கவிந்த பெரிய இமைகளும் – சற்று மிதப்பான பற்களும் ‘அம்மனின் வெண்கலச் சிலை’ போல அவள் நிஷ்களங்கமாக அவன் மனவெளியில் இன்னும் ரூபிதமாகிக் கொண்டே இருக்கிறாள் – ‘அவன் எழுதிய வரிகள் – அவளும்’ அவர்களும் – ‘கடற்கரையில் பூத்த வில்லிப் புஷ்பங்கள்’ — ‘இளைய சிவப்பு அரும்புகளில் இலைமறையும் ரோஜாக்கள்’ – பளபளவென்ற சிவப்புநிறப் பரல்கல்லில் ஓடும் நீர்த் தளம்பல்கள் – ஓ அந்த ஊதாமையில் உதிர்ந்த கோணல் எழுத்துகள். அந்த பேமத் உவையின் – அந்த நீளமான சிகரெட்டின் நெடுங்கோட்டு வெண்புகை கரையல்கள் – அந்த மார்கழிக் குளிர் இரவுகள் – கரையிலிருந்து மடிநோக்கி மீளும் அந்தக்கடலலைகள். அவளையும் அவர்களையும் நினைத்தால் இப்போதும் இவன் முகத்தில் ஊரும் நகச்சூடு, இவளையும் இவர்களையும் நினைக்கும் போது ஏன் ஏற்படுவதில்லை? இவன் மரத்துப் போய் விட்டானா? அல்லது அவர்கள் மரத்துப் போய் விட்டார்களா?
அவனுடைய வாய் மீண்டும் முணுமுணுக்கிறது.
‘’அவரவர் தனித்தன்மையும், அவரவர் ஸ்தாபனத் தொடர்புகளும் –‘’ பாவம் இவளும், இவர்களும் எல்லோரும் ஸ்தாபனமயப்படுத்தப்பட்டு விட்டார்களா?
அவனுடைய முகம் ‘குப்’ பென்று வியர்க்கிறது. சிகரெட்டை ஊதி ஊதிப் புகையைத் தள்ளுகிறான் – அந்தப் புற்கள் வரண்டு தெரிகின்றன. அந்த ஒற்றையடிப் பாதைகள் குறுக்கறுக்கின்றன. நீர் ஓடி வார்த்த அந்தச் சுவடுகள் அவன் நெஞ்சைக் கரிக்கின்றன.