கனவு கண்ட விழிப்பில் கூட
உன் நினைவு துணுக்குற்றது.
நித்திரை மயக்கத்தின்
கறுப்பு நிறப் புகாரிலும்
உன் நினைவு தைத்தது.
இரவு கண்ட கனவை
எந்த பிசாசு சப்பித் துப்பியதோ?
பொட்டுப் பொட்டாக,
கள்ளி கள்ளியாக,
என்னுள் இருந்ததை யாரோ
ஒடித்துப் போட்டதாக ஒரு கும்மிருட்டு.
கும்மிருட்டில் ஒரு கோடு போல் நான்.
வைக்கோல் இழைப்பின்
முள்ளிக் காய்கள் இரண்டு
என்னுள் இருந்து
இருட்டுக்குள் எனது
விலாப்புறமாக வீழ்ந்தது போல் ……
அசுத்தமான ஆவி ஒன்று
என்னை கழற்றத் தொடங்கியது போல் …….
நான் உன்னை இழந்ததால்தான் இது என்ற
அச்சம் மீ தூர
சிலுவை போட்டுக் கொண்டே
தலையணையை இருளில் தள்ளிக்கிடத்தி
அவளோடு நெருங்கிக் கொள்கிறேன் –
அதுவும் போதவில்லை,
அவளைத் தொட்டுக் கொண்டே
நான் ஸ்த்திரமாகி
உறங்கிப் போனேன்,
கைவிடப் பட்ட உன் நினைவுக்குள்.
அதிகாலை 26.08.93