ஜெயபாலனுக்கு ஒரு மடல்!

ஜெயபாலனுக்கு

காலம் சிறிது, கட்டுரைக்கு நேரமில்லை, ஆதலால் உன்னை விளித்து இந்தக் கடிதம் வரைகிறேன்,

1968 இல் என் கிராமத்தில், என் பட்டினத்தில் உன்னை நானே கண்டுபிடித்தேன்.

ஆலமரங்கள் அயலில் சூழும் என் கோயில் வெளியின் வெள்ளை மணலில் அமர்ந்து அன்புஜவர்ஷா வெளியிட்ட பல கவிஞர்களின் தொகுப்பைப் படிக்கையில் நீ பிடிப்பட்டாய்.

நம்பிக்கை என்னும் கவிதையின் ‘மாரிதனைப் பாடுகிற வன்னிச் சிறுவன்’ என் மனதுக்குள் புதைந்தே விட்டான், நான்தான் உன்னை – உன் கவிதையை – என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். பின்னர் 74, 75 இல் நான் கொழும்பில் வசித்தபோது, உன்னை வெள்ளவத்தையில் கலாநிதி கைலாசபதியின் வீட்டில் சந்தித்தேன். பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்குமா என அங்கலாய்த்துக் கொண்டிருந்தாய். ரொம்ப பனித்தனமாக பேசுகிறாயே என நான் வினோதப்பட்டது நினைவிருக்கிறது.

பின்னர் அலையில், உன் ‘இளவேனிலும் உழவனும்’ பார்த்தேன். மிகவும் ரசித்தேன். பனியன் என்றாலும் நீ நல்ல கவிஞன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். பின்னர் உன் வியட்நாம் கவிதை ஒன்றைப் பார்த்தேன். புல்வெளிப் பூக்கள் என்று நினைக்கிறேன். வியட்நாம் கிராமம் ஒன்றை விபரித்திருந்தாய். அது எப்படி முடிந்தது உன்னால் என்று ஆச்சரியப்பட்டேன். கவிதையில் சொந்த அனுபவத்தை சுடச்சுட, மிகையதார்த்த எல்லை வரையில், தரவேணும் என்று நான் துடித்துக் கொண்டிருந்த காலம் அது. சுய அனுபவம் இல்லாமல், வியட்நாம் கிராமம் என்ற விளம்பரத்துடன் போலி பண்ணியிருக்றாயே எனப் புகைந்தேன். பின் நீ அமெரிக்காவையும், பிராங்போர்ட்டையும் கண்டவன் மாதிரி கவிதைகள் எழுதியபோது நீ அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் போகவில்லை என்பதும், யாழ். பல்கலைக்கழகதில் படித்துக் கொண்டோ அல்லது படித்து முடிந்த பின் NGO ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாய் என்பதும் எனக்குத் தெரியும். நேரடி அனுபவம் இல்லாமலே சோடிக்கக் கூடியவன் என்பதை நான் விசனத்துடன் புரிந்து கொண்டேன். நீ அந்த யப்பானியப் பெண்ணை ஆரிமக்சி மோட்டோவை முத்தமிட்டேன் என்று சொல்வதும், புணர்ந்தேன் என்று சொல்வதும் கூட சோடிப்புத்தானே என்றும் பின் யோசித்தேன். உனது நேரடி அனுபவங்களுக்கும், அனுபவச் சோடிப்புக்களுக்கும் இடையில் எப்படி வேறுபாடு காண்பதென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எனினும் உன் நேரடி அனுபவத் தளத்தை இப்போதும் மறுக்கவில்லை. உண்மையும், போலியும், அசலும் நகலும் பேதமறக்கலந்த ஒரு Personality நீ என்னும் ஒரு கருக்கோளில் – கருகோள்தான் – இயங்கிக் கொண்டிருக்கிறேன். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லக் கூடியவன் நீ.

பின்னர் நான் உன்னை கண்டது 2000 ஆண்டளவில் என்று நினைக்கிறேன். உமாவின் வீட்டில் சந்தித்தேன். பின் என் வீட்டுக்கும் வந்தாய். எமது பட்டினத்தில் எல்லா எழுத்தாளர் வீட்டுக்கும் போனாய். குறுந்தாடியும், குர்தா பிஜாமாவுமாய் ஒரு சோணிப் பையுடன் காட்சி தந்தாய். நாடோடி அகதிக்கு அது நல்ல வேஷமாகவே பட்டது. உன்னைப் பற்றி ஏற்கனவே கதைகள் புறப்பட்டிருந்தன. உனக்கு இயக்கப் பிரச்னை உண்டென்றும் மருதூர்க்கனியின் அறிக்கைகள் போல் கவிதை எழுதத் தொடங்கிவிட்டாய் என்றும், வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெறியேற்றப்பட்டதில் மனம் குழம்பி, காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி கதறித் திரிகிறாய் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். நீ எல்லா இன மக்களுடனும் உறவாடுபவன் என்பதைக் குறிக்கும் உனது கவிதைகள் எனக்குத் தெரியும். ஆரிமக்சி மோட்டோவுடன் மாத்திரமல்லாது, வேறு சர்வதேசப் பெண்களுடனும் கலந்து கொள்பவன் என்பதைக் காட்டும் உன் கவிதைகளும் உண்டு. கடைசியாக உன்னுடைய அந்தக் கவிதையைப் பார்த்தேன். ‘’உங்கள் தொழுகை பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம், எச்சில் கையை துடைப்பதற்காக உங்கள் புனித நூல்களைக் கிழித்தோம்….’’ என வரும் வரிகளையும் படித்து மிகவும் நொந்து போயிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் நீ வந்தாய், என் மகத்தான ஊருக்கு, மரியாதைக்காக மட்டும் உன்னுடன் பேச வேண்டியதாயிற்று.

வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள், தங்கள் பெறுமதியான சில உடைமைகளைக்கூட எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் வழி அனுப்பப்பட்டார்கள் என்பது மிகவும் துரதிஷ்டமான, பெரும் அதிர்ச்சி தந்த, நம்ப முடியாதிருந்த ஒரு சம்பவம். ஒரு சமூக மக்கள் நிர்க்கதியாக, காலவரையறையற்று சூனியத்துள் தள்ளப்படுவது எவ்வளவு அனர்த்தம் என்பதை கடந்த பல ஆண்டுகளாக கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் இது போரின் ஒரு விளைவு. இதில் எந்தவிதமான போரியல் தந்திரோபாயம் இருந்தது என்று நான் சொல்வதற்கில்லை. இதிலுள்ள மூலோபாய முடிச்சு தவறவிடப்படுகிறது. அந்த முடிச்சு தெரிந்தாலும் சிலர் அதை காண மறுக்கிறார்கள். அவர்களுள் நீயும் ஒருவன். ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டி விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான சர்வதேசப் பிரச்சாரத்தின் பின்னல் வலையின் கண்ணியாக நீ உன் பங்கைச் செலுத்துகிறாய். அல்லாவிட்டால், உங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம் என்று தூஷனமாக எழுதியிருக்க மாட்டாய். உருவகம் என்ற போர்வைக்குள், இலக்கிய உத்தி என்ற போர்வைக்குள் உன் கபடத்தனத்தை கவனியாமல் விட நான் தூய இலக்கியவாதியும் அல்ல, நுனிப்புல் மேயும் விமர்சகனும் அல்ல. தொழுகைப் பாயிலும், மீசான் கட்டையிலும், திருக்குர்ஆனிலும் எனக்குள்ள புனித உணர்வின் காரணமாகவே, உன் வரிகள் அசிங்கமானவையாகவும் அசூசையானவையாகவும் எனக்குப்படுகின்றன.

உனது முதல் தொகுதியான ‘’சூரியனோடு பேசுதல்’’ செல்லரித்துப் போயிற்று. ஒற்றைகள் தோறும் இதயத்தின் அளவான ஓட்டைகள், சூரியனோடு பேசுதல் ஐ மீண்டும் ஒருமுறை வாசித்தல் அவசியமில்லை போலும் தெரிகிறது. ஏனெனில் காலக் கணக்கின்படி சூரியனோடு பேசுதல் முதலாவதாக அல்ல, இரண்டாவதாக வந்திருக்கக் கூடியது. மூத்தபெண் இருக்க இளைய பெண்ணை ஏன் அரங்கேற்றினாயோ தெரியவில்லை. மாப்பிள்ளைக்கேற்ற பெண் என்று அவளையே தெரிவு செய்தாயா? மாப்பிள்ளைதான் உனக்கு முக்கியமாகப் போயிற்றோ? அதுபோக, ஈழத்தில், வன்னியில், வாழாவெட்டியாக இருந்த உனது மூத்த மகளை – ‘நமக்கென்று ஒரு புல்வெளி’ என்னும் அழகிய ஈழத்தில் கைப்பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சூரியனோடு பேசுதலைவிட நமக்கென்றோரு புல்வெளியே உனது முத்திரையையும் மூர்த்தத்தையும் கூடுதலாகக் கொண்டதாக கொண்டாடுகிறேன், உனது முத்திரை என்ன? உனது மூர்த்தம் என்ன?

கணிசமான கருப்பொருட்களை உனது கவிதைக்குள் கொண்ர்கிறாய். கருப் பொருட்களின் பகைப் புலத்தில் உன் கவிதை விரிகிறது. கருப்பொருட்களின் ஊடுபாவலில் உன் இருப்பு கவிதையாகிறது. நீயே ஓரிடத்தில் சொல்வது போல், மனிதர்களுடன் மட்டும் வாழ்வதென்றால், நீ எப்போதோ சலிப்புற்றிருப்பாய். உன்னையும் நீ காண்கின்ற எல்லா மனிதர்களையும் சூழ நீ காண்கின்ற பயிர் பச்சை, கடல், மலை, வானம், நட்சத்திரம் எல்லாம் உன் வாழ்வுலகத்தினதும், உணர்வுலகத்தினதும் படைப்புலகத்தினதும் பங்கும் பாதியுமாய் இருக்கின்றன. இதன் தோற்றுவாய் உன் வன்னிக் களமாக இருக்கலாம். வன்னியின் இயற்கை மூர்த்தத்தில் உன்னுள் புகுந்த சங்ககால படைப்புகளாக இருக்கலாம் எப்படி இருந்தாலும் விண்ணோடும் மண்ணோடும் சேர்ந்து இயல்கின்ற சிருஷ்டித்துவம் உன் முத்திரை. இந்த முத்திரைதான் உன்னைப் பிறருக்கும் இனங்காட்டியது. இதிலிருந்தே உனது பறப்புகள் உருவாயின. உனது பறப்புகளில் சில பாலை வனங்களில் போய் முடிந்திருக்கின்றன.

பாலைகளில் நீ இடைக்கிடை வீழ்ந்து கொள்வதை உனது ‘உயிர்த்தெழுகின்ற கவிதையில்’ காண்கிறேன். உனது உயிர்த்தெழுந்த கவிதை தொகுதியில் நீ நிச்சயமாய் உன் வேர்களை இழந்து விட்டிருக்கிறாய். இயற்கையின் செல்வக் குழந்தையாய் வளர்ந்த நீ, அதே இயற்கைச் சூழலில் துப்பாக்கி தூக்கி விடுதலை உணர்வுடன் மிளிர்ந்த நீ, பின்னர் கொங்கிறீட் காடுகளிடை வாழநேர்ந்த துயரக்கதை அது. வன்னி உனக்களித்த கருப்பொருட்களை வர்த்தகமயமான கோவையோ, சென்னையோ, துருவப் பனி உறையும் நோர்வேயோ உனக்களிக்க முடியவில்லை. அதனால் நீ செயற்கை படிமங்களையும் உருவகங்களையும் தேடுகிறாய். ‘உயிர்த்தெழும் கவிதை’ இல் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

யானை என்னும் கவிதையில் நீ கவிதைக்குச் சிறகுகட்டி நீ உன்னை மலைக்கழுகாக உருவகம் செய்கிறாய். அப்போதுதான் நீ உன் உப்பு நீர்க்கரைகளை விமானக்கண் கொண்டு பார்க்கலாம். மாயாவாத யதார்த்த உருவகத்தில் ஆனந்தனை மரமாகக் காண்கின்றாய். முருகன் வேங்கை மரமானதெல்லாம் பழைய கதை அல்லவா? மரியம் வேம்புவில் ஐதிக முறையை அரவணைக்கிறாய். ‘’பூவால் குருவி’’ இலும், ‘’பொன்னியை தேடி’’ இலும் படிமச் சோடனைக் கொண்டு பலப்படுத்துகிறாய். ‘’உயில்’’ வரும் தலையாரிகள், கோயில் மடாதிபதிகள் போன்ற உப்புச் சப்பற்ற பழைய உருவகங்களும் குறியீடுகளுமே உனக்கு கை தரத் தொடங்கியுள்ளன. இந்திய குறியீடான கோவை உன் ஆருயிர் காதலி ஆகும் உறவை காண்கிறேன். இந்தியாவிலேயே ஆருயிர் காதலாய் இருக்கிறாய் என்று இதன் அர்த்தம். ‘நீயே பளிச்சென சீவி பொன்பூண் பொருத்தி அழகு பார்த்த கூரிய எனது கொம்பை அசைத்துன் மார்பில் பாய்ந்தேனே’ என்ற உன் உருவகம் ‘வளர்ந்த கடா மார்பிலே பாய்தல்’ என்பதன் அடியானதல்லவா? பூடகமாக நீ யாரைச் சாடுகிறாய், யாரைப் போற்றுகிறாய் இந்த உருவகங்கள் மூலம் என்பதை யாருக்கு நீ தெரியப்படுத்த முனைகிறாய்? வன்னியில் நேர் தரிசனத்தின் வண்ணாத்துப் பூச்சியாக, இயக்க செயற்பாடுகளில் சொகுசு வாழ்க்கையைப் புறக்கணித்த உனது ஆரம்பம் எங்கே? – தலைமறைவான தேசாந்திரியாய் உருவகங்களிலும் குறியீடுகளிலும் ஒளிந்து கொள்ளும் உனது முடிவு எங்கே?

என் பார்வையில் புது அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட உனது தனித்துவ வெளிப்பாடு உனது ‘’எமக்கென்றொரு புல்வெளி’’ உடன் போய் விட்டது, மற்றதெல்லாம் ஊரார் சோற்றுக்குள் மாங்காய் பிசையும் கழிவிரக்கங்களே. உனது அகதிப் பாடல்களில் நீ எதைச் சொல்கிறாய்? புலம் பெயர்ந்த தவிப்புக்ளையும், தலைமறைவான அச்சங்களையும், பலூன் ஊதிக் காட்டினால் போதுமா? சிறிலங்கா ராணுவத்தின் அட்டூழியங்களை அள்ளிக்கொட்டும் நீ, இந்தியப் படையின் அட்டூழியங்களைப் பற்றிய ஒரு அட்சரத்தை பதிக்கவும் உன் பேனாவை நகர்த்தியதுண்டா?

உள்ளும் புறமும் உன்னைப் பற்றி அறியவும் சொல்லவும் காலம் இன்னும் காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.