அங்கே தொலைவில் சனங்கள்
அணியணியாய் வந்தபடி உள்ளார்.
இன்னும் வருகின்றார்.
வெங்கலங்கள், கோப்பை, விசிறி,
அரிதட்டு, பலூன்
இன்னும் பலவும்
இடையில் தெரிகிறது.
முக்காடு;
கைக்குழந்தை;
மூத்தப்பா தோள்மீதும்
சொக்கைப் பயல் ஒருவன்!
தோப்புளாச் சேலைகளைக்
கட்டியப் பெரிய மனுஷிபோல் கால் தடக்கும்
சின்னப்பொடிச்சிகள்.
இன்னும் சில முதியோர்.
எல்லோரும் வந்தார்கள்.
இன்னும் வருகின்றார்.
வந்தவர்கள்,
அந்த மணிலில் அமர்ந்தார்கள்.
‘என்ன கலைப்புகா! கால்இசக்கம் இல்லை’ என்றே
மங்கல் படும்பானை
அண்ணார்ந்து பார்த்தார்கள்.
மங்கல் படும்வானின் ஊடே
ஒருகாகம்
எங்கோ பறந்து செல்லும்
எட்டத்தில் உள்ள அந்தத்
தென்னைகளின் ஓலை
சிறிது படபடக்கும்.
கொஞ்ச நேரம்
கடலின் கொந்தளிப்பைப் பார்த்தார்கள்.
பீடி புகைத்தார்கள்.
வெற்றிலையும் போட்டார்கள்
ஏதேதோ பேசிச் சிறிதே இருந்த பின்னர்
மீண்டும் எழுந்து
நடக்கத் தொடங்குகிறார்.
நீண்ட வழிதான்;
எனினும் சனம் நில்லார் ….
சேம்பிக் கிடந்த என் நெஞ்சும் …
துணிகிறது.