காற்றில் தேய்ந்த காலடிகள்

ரொம்ப நாளாய்ப் போச்சு. ரொம்ப வயதாகவும் போச்சு. இருந்தால் போல் நேற்றிரவு அந்த நினைவு. இப்படி எத்தனையோ நினைவுகள். சுள் என்று ஒரு ஏக்கம். அப்படியே ஆறியும் போகும். இப்படித்தான் எத்தனையோ நினைவுகள்.

வெள்ளை வேட்டியும் வெள்ளை நேஷனலும் மொட்டைத் தலையுமாய் சுபசிங்காதன் அடிக்கடி இரவிலிருந்து தோன்றுகிறார். அந்த நாட்களில் நிச்சயமாய் அவருக்கு மொட்டை விழவில்லை. பின்னுக்கு வாரிய சற்று ஐதான தலைமயிர். அந்த நாட்களிலேயே லேசான உதிர்வு தொடங்கி இருக்க வேணும். கிருதவிலோ அல்லது இரண்டொரு கன்னத்து மயிர்களிலோ நரை கண்ட ஞாபகம். அப்படி ஏதாவது இல்லாதிருந்தால் எனக்கு அன்றைய தினம் அத்தகைய துணுக்குறல் ஏதும் ஏற்பட்டிருக்க நியாயம் இல்லை.
ஆளின் தோற்றம் அப்படி ஒரு மாதிரியாக இருந்ததும் ஒரு காரணமாகலாம். கொஞ்சம் கட்டை. தடிப்பு. அகலமான முகம். கரடி றோமம். கிளீன் ஷேவ் எடுத்திருந் தாலும் ஒரு சொரசொரப்புத் தெரியும். இந்த சொர சொரபபுகள் எல்லாம் பின்னால் வந்த நினைவுகள்தான். அந்த நாட்களில் அவரோடு அவ்வளவு நெருக்கம் இல்லை. ஓரிரு நாள் பங்குக் கோயிலில் பூசையில் கண்ட நினைவு. லாசரஸ் சாமியாரின் தமையன் என்று யாரோ அறிமுகபடுத்திய பதிவும்.

என் வயதுக்கு அப்போது அவர் ஓர் முதியவராக தோன்றிருந்தால் சாத்தியமே. அப்போது நான் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது ஆண்டு என்றால் எனக்கு வயது 20. கல்முனை பாத்திமாக் கல்லூரியைப் பிரிந்து மூன்று வருஷங்களும் சில மாதங்களும். அப்படி என்றால் அதற்கு ,முந்திய ஒன்றரை வருஷங்களில் ஒரு ஆறேழு மாதங்கள் தான் அந்த உயிர்ப்பான கணங்கள்.
பிலோமினாவின் அம்மாவினது கொழுத்த முகமும் தடித்த ரவிக்கை இருக்கும் முழங்கையும், குறுகுறுப்பான உருண்டை கண்களும் முன் மயிர் நரை தெரியும் நெற்றியும் ஏன் என் நினைவுக்குள் இப்போது எட்டிப் பார்க்க வேணும் என்று தெரிய வில்லை. பல காரணங்கள் இருக்கலாம். பல காரணங்களா? அப்படி ஒன்றும் அதிக மில்லை. இரண்டுதான். இரண்டு சந்தர்ப்பங்கள்தான். அவை எத்தனையோ முறை கண்டு பேசிப் பழகி இருந்தாலும் இரண்டு சந்தர்ப்பங்கள்தான் மனுஷியை இன்றளவும் நினைக்கப் பண்ணுவதாய் இருக்க வேணும்.

சத்யன் இப்போ எங்கேயோ? சத்யனுக்கு பிலோமினாவின் தாய் என்ன முறை என்பதும் மறந்து போயிற்று. ஆத்மனுக்கு பிலோமினாவின் தாய் என்ன முறை என்பதையும் இனித்தான் நினைத்துப் பார்க்க வேணும். பிலோமினாவின் தாய் பெயர் எனக்கு எப்போதாவது தெரிந்திருந்ததா என்பதும் சந்தேகமே. பிலோமினாவின் அப்பாவுக்கும் அவரது மருமகன் ஆலோஷிஹுக்கும் சத்தியன் என்னென்னவோ உறவு முறைகள் சொன்னான். ஒன்றும் நினைவில்லை. ஒன்றைப் பிடித்தால் மற்றவைகளைத் தெரிந்து கொள்ளலாம். அது முடியாத வரை பிலோமினாவைக் கொண்டே உறவுகளை நினைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

அந்த வகையில்தானா பிலோமினா முக்கியமானவள்? அல்லது பிலோமினாவின் முக்கியதுவதினால்தானா அவர்கள் எல்லாம் குறிப்பிடக் கூடியவர்கள் ஆகிறார்கள்?
சத்யனுடன் பிலோமினாவின் வீட்டுக்குப் போய் வந்த நாட்களில். . .பார், பிலோமினாவின் பெயருக்கு தேவையில்ல்லாத ஒரு அழுத்தம் வந்து சேருவதை? …பிலோமினாவின் வீட்டுககுப் போய் வந்ததாக எப்படிச் சொல்ல முடியும்? –சத்யனின் ஒரு சொந்தக் காரர் என்ற நிலைதான்…’சத்யனின் சொந்தக்காரர் வீட்டுக்கு’ என்று மொட்டையாக இவ்வளவுகாலத்துக்கும் நினைவுகளுக்கும் பிறகு சொல்ல முடியுமா? ஏதோ ஒரு பேர் வேணும். அந்த மனுஷனை எப்போதாவது வழுவிய சாரனுடன் பேப்பரும் கையுமாய் சாய்மனைக் கதிரைக்குள் கண்டதுதான் ஞாபகம். கன்னத்து உச்சியும் கைமடித்த ஷேர்ட்டுமாய் அலோஷியஸை வீட்டில் கண்ட ஞாபகம் இல்லை. றோட்டில் கண்ட ஞாபகந்தான். அப்போ என்ன என்று சொல்வது? அந்த மனுஷி தான் வீட்டிற்கு உரியவ-பிலோமினாவின் தாய். அவவை சத்தியன் எப்படி கூப்பிட்டான்? அன்ரி என்று கூப்பிட்டிருப்பானோ? மாமி என்று கூப்பிட்டிருக்க மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிலோமினா முறைப் பெண் அல்ல என்பது மட்டும் நிச்சயம். பார், திரும்பவும்! பிலோமினாவைக் கொண்டே அதையும் நிச்சயித்துக்கொள்ள வேண்டி யுள்ளது. சத்யன் அவவை அன்ரி என்றோ அல்லது பெரியம்மா என்றோதான் கூப்பிட்டிருப்பான். அன்ரி என்று கூப்பிடுவதுதான் அந்த நாட்களில் ஃபஷனாய் இருந்திருக்க வேணும். பார் எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! அல்லாவிட்டால் பிலோமி னாவுக்காகதான், பிலோமினாவைத் தெரிந்ததால்தான் அந்த வீட்டுக்குப் போய் வந்ததாகவல்லவா முடியும்?

பிலோமினா அந்த நாட்களில் ஒரு பொட்டு பூச்சிதான். வீட்டின் ஒட்டு விறாந்தைக் கானோரமாய் விளையாடிக் கொண்டிருந்த ஞாபகம். சத்யனுடன் பனைமரமேறி, கருக்கு வெட்டி இரத்தம் வழிந்த நாட்களிலோ, அந்த தென்னை மரங்களின் கீழிருந்து இம்மனுவல் பிரதரின் வோக்காபுலரி லிஸ்ற்ரை உருப்போட்டு ஆளையாள் வினவி ஸ்பெல்லிங் கேட்டுக் கொண்டிருந்த நாட்களிலோ எப்படி இருந்தாள். எங்களுடன் திரிந்தாளா விளையாடினாளா என்பதெல்லாம் மறந்து போகிறது….
பிறகு கொன்வென்ட் போர்டிங்கில் அவள் இருந்த போது நேர்ந்த அந்த மாலைப் பொழுதுதான் மனசுக்குள் இன்னமும் ஒரு கருக்கலாய்….நெஞ்சுச் சட்டை கொஞ்சம் பொக்கெட்டாய் தொய்வாக…என்ன மாதிரி இருந்தது எனக்கு சிங்கநாயகம் அவளுக்கு சொக்கிலேட் வாங்கிக் கொடுத்தவன் என சத்யன் சொன்னதும்! சிங்கனாயகதிடம் அவளுக்கும் பிரியம் என்ற தகவல் என்னுள் பிராண்டிய தவிப்பை இன்னமும் தொட்டுத் தடவிப் பார்க்கக் கூடியதாகவே உள்ளது. நான் கூட அவளுடைய சிநேகத்தைப் பெறலாம் என்று நினைத்தும், அதன் பிறகு இரெண்டொருமுறை சத்யன் அவளுக்கு தீண்பண்டங்களை எடுத்துப் போகையில் அவனுடன் போனதும்….மீண்டும் அவள் வீட்டிலிருந்து ஸ்கூலுக்குப் போய்வரத் தொடங்கியதும் அவளை எதிர்கொண்டு யாட் றோட்டில் சைக்கிள் விடத் தொடங்கியதும்….அந்த சைக்கிளோட்டம் பிலோமினாவுக்குப் பின்னாலா பவளத்துக்கப் பின்னாலா என்பதெல்லாம் நினைவு தப்பிப் போகிறது. எனினும் யாட் றோட்டின் இனிமை எல்லாம் அந்த சைக்கிள் ஓட்டங்கள்தான், ஹரிசன் தியேட்டர் றோட்டின் இனிமையெல்லாம் ஈஸ்வரிக்கும் விஜயாவுக்கும் பின்னால் சத்யனும் நானும் செய்த சவாரிகள்தான் என்பது போல் எல்லாம் ஏககாலத்திலோ அல்லது இரண்டொரு மாதங்கள் இடைவெளியிலோ என்பதுதான் இன்னும் தமாஷாக இருக்கிறது….
….செய்தி துணுக்குறச் செய்கிறது. நம்ப முடியவில்லை. காலையில் ஆறே முக்காலுக்கு ரியூஷனுக்கு வர அவசரப்பட்டு புறப்படுகையில் பட்டும் படாமலும் காதில் விழுந்த மரண அறிவித்தல் சிதறல் சத்தியனின் வட்டாரத்துக்குள் தான் என்று எண்ணச் செய்தாலும் இப்படி இருக்கும் என்று யார் நினைத்தது? இனி நினைப்பதற்கென்ன. உடனே புறப்பட வேண்டியதுதான்….
கடைசியாக சுபசிங்காவைக் கண்டது கல்முனை மிஷன் ஹவுசில்தான். ஒரு பின்னேர கோயில் ஆராதனைக்குப் பின்னர், மனுஷனின் முகத்தில் என்றும் குன்றாத அந்த வாத்சல்யந்தான் பளிச்சிட்டது. அத்தனை பேருக்கும் மத்தியில் “என்ன சுஜீவன் எப்படி சுகம்? …. சரி, சரி அவசரம் போல? பிறகு சந்தித்தால் பேசுவோம்….” என்கையிலும் பிய்த்தோடி வந்த என் அவசரத்தை இப்போது நினைத்தாலும்….
ஏன் சுபசின்காவை சற்று முன்னிருந்து நினைக்கத் தொடங்கினேன்? அது ஆச்சரியத்தின் மறுபெயர். ஈஎஸ்பி, அது இது என்பதிலெல்லாம் நான் நம்பிக்கை கொள்ளமாட்டேன். சுபசின்காவுக்கும் எனக்கும் அப்படி ஒரு நெருக்கமும் இல்லை. அந்த ஒரு உறுத்தலைத் தவிர, அவரைச் சற்று முன்பு நினைக்கத் தொடங்கியதற்கும் அந்த உறுத்தலே காரணம். ஆனால் காகம் உட்கார இப்படியும் பனம்பழம் விழுமா?
இப்போது கூட நான் ஏன் புறப்படுகிறேன்? சுபசிங்காவுக்காகவா? அல்லது வேறு யாருக்காக்கவுமா? அல்லது அவர்கள் எல்லோருக்காகவுமா?
பார்க்கப் போனால் அந்தச் சம்பவந்தான் எல்லாத்துக்கும் காரணமாகிறது. அந்தச் சம்பவத்துக்குக் கூட அவதான் காரணம். பிலோமினாவின் தாய். சத்யனின் ‘அன்ரி”.

சத்யன் அதைச் சொன்ன இடம் கூட இன்னும் தெளிவாக நினைவிருக்கு. வேறு எத்தனையோ நினைவுகள் தெளிவற்றுப் போயிருந்துங் கூட. யாட் றோட்டில் நேர்ஸ் குவாட்டேர்ஹுக்கு முன்னால். பாத்திமா கொலிஜ்ஜின் கிளனி ஹொல் பின்மூலை முந்திரியை மரத்துக்கு எதிரே. நேருக்கு நேர் அவனும் நானும் சைக்கிள்களில் கால் குத்தியபடி. அவனுடைய அந்த அன்ரி எங்களைக் கடந்து போன சந்தர்ப்பமோ என்னவோ, பின்னேரந்தான் ஜீ.சி.ஈ. ஓ.எல் றிசல்ற் வந்து பாத்திமா கொலிஜ்ஜீன் சுற்று வட்டாரம் என்னை தூக்கிப்பிடித்த மிதப்பின் வெற்றிகரமான இரண்டாவது வாரம்.

“சுஜீவன் (அன்ரி) ……. வீட்டிலும் உனக்கு ஏகப்பட்ட பாராட்டு. உனக்கு ஒரு லஞ் தரவேணும் எண்டும்……(அன்ரி) சொன்னவ…”
“லஞ்சா? எனக்கா? யார் வீட்லயும் நான் இன்னும் சாப்பிட்டதில்ல. யாரும் என்னைக் கூப்பிட்டதுமில்ல. “
“என்ரா, கலியாணவீடு, சாவீடு எதிலையும்?”
“ஒண்டுக்கும் எங்க அம்மாவிட மாட்டா..”
“ஓமடா, உங்கவீட்டுக்கும் “அன்ரி” வர வேணும், உன்ர அம்மா அப்பா எல்லாரையும் ஷேப் பண்ண வேணும் எண்டும் “அன்ரி” சொன்னவ..”
“ஏன் அப்படி?”
“தெரியாதா? ரெண்டு டீ யோடயும் ஆறு சீ யோடயும் பாஸ் பண்ணி இருக்காய். அட்வான்ஸ் லெவல்லயும் ஜமாய்ச்சு யூனிவேசிற்றிக்குப் போய் டொக்ரறாகவோ எஞ்ஜியராகவோ நீ வரப் போறது அவங்களுக்கு நிச்சயமாகப் போச்சு….”
“அதுக்கு?”
“தெரியாதா? பிலோமினா ஒருத்தி கிடக்காளே அவள் attained. அது தெரியுமா உனக்கு. அவளுக்கும் உன்ல ஒரு இது போல..”
“சேச்சே!”
கொஞ்சம் புளுகமாகத்தான் இருந்தது. அப்படி ஒன்று ஆகினால்தான் என்ன என்ற நினைப்பு. பிலோமினாவுக்குப் பின்னால சில மாதங்கள் சைக்கிள் விட்டபின் திடீரென உருத்திரசிகாமணியிடமிருந்து புளிமூட்பொட்ரணி வாங்கியிருந்தது. அதில் பென்சிலால் கிறுக்கியிருந்த கன்னிகாவின் பெயரைக் கண்டது முதல் பழைய நினைவுகளில் ஆழ்ந்து, கன்னிகாவிடம் அவரைப்பூ கேட்கப் போன படலங்கள் தொடங்கியபின் யாவையும் “உணர்ந்து” கனவுலகம் வேறு நனவுலகம் வேறு என கடவுள் தரு ஒரு நிலையில் அமைதியுற்றாலும் உன் நினைவினிப்புத் தோன்றும். மழை பொழியும், நிலா எறிக்கும். தென்றல் வீசும்….என்று எழுதி கன்னிகாவை கடந்த காலமாகவே காணத் துணிந்து விட்ட காலம் அது. அதனாலோ என்னவோ பிலோமினாவின் பூங்காவுக்குள் மீண்டும் பிரவேசிக்க ஆட்சேபனை இருக்கவில்லை.
….சே எவ்வளவு சந்தோஷமாகத் தொடங்கிய இந்த நினைவு எவ்வளவு பதட்டத்தில் முடிந்திருக்கிறது? சுபசிங்காவுக்கு இப்படி நடக்கும் என்று யார் நினைத் திருக்க முடியும்? பிரபல்யமான மனிதர்தான். சபை சந்திகளில் முன்னுக்கு நிற்பவர் தான். ஆனால் அதற்காக?…. யாருக்குத் தெரியும். எந்தப் புற்றுக்குள் எந்த பாம்பென்று?

சத்யன் இப்போ எங்கிருப்பான்? ஆத்மன் இந்நேரம் அங்கு போயிருப்பனோ? காந்தனும் வருவானோ? அவர்கள் எல்லாம் என்னைக் காணுகிற போது அந்த பழைய சம்பவத்தை நினைத்து கொள்ள மாட்டார்களா? இல்லை. அது எவ்வளவு காலத்துக்கு முந்தியது? வயது. சிந்தனை, வாழ்க்கைப் போக்குகள். நாட்டங்கள், சூழல் எல்லாமே மாறி ஒவ்வொருவரின் ஆளுமையும் முற்ற்லுமே மாறுபட்டுப் போன நிலையில்யார் இந்த பால்ய நினைவுகளுக்கு சாம்பிராணி புகைத்து சந்தனக் குச்சி எரிக்கப் போகிறார்கள்? அதுவும் எந்த நிலையில்? இதோ நான் இருக்கின்றேனே….நீதான், நீ மட்டுந்தான் இப்படி சமாதிகளை தோண்டி சந்தனக் குச்சி கொழுத்திக் கொண்டிருப்பாய்.
சரி, விடு. வேறு எதையாவது நினைத்துக் கொள்ளலாம்….எப்படியும் சுபசிங்காவைப் பற்றித்தான் மனசு ஓடுகிறது. அன்றையத் தோற்றம். வெள்ளை வேட்டி. வெள்ளை நேஷனல். பின்புக்கு வாரிய தலைமயிர். இரண்டொரு நரையுடன், நரைத்துப் போவதற்கு அப்படி என்ன வயது அவருக்கு அப்போது? இப்போதைய அறிவித்தல்களைப் பார்த்தால் அப்போது அவருக்கு முப்பந்தைந்தாவது இருந்திருக்க வேணும். ஓ. எவ்வளவு வித்தியாசம் எனக்கே அப்போது பத்தொன்பது இருபதுதானே இருந்திருக்கும்.

எத்தனை பேர் அன்று சாப்பாடு பரிமாறினார்கள். அம்மா கட்டித் தந்த சோறு கிட் பேக்குக்குல்லேதான் இருந்தது. ஆத்மன் இதைத் திட்டம் போட்டுச் செய்தான் என்பதை நினைக்கவும் முடியாமல் இருக்கிறது. அப்போது ஒருவேளை அன்ரிதான் இப்படி செய்யலாம் என்று சொல்லிக்கொடுத்த்ருப்பா, ஆத்மனுக்கு அன்ரி பக்கத்து வீடுதானே. அவ பரிமாறுவது இடையில்தான் தெரிந்தது. அந்த ஊதின சொக்கையும் துரு துருத்த குண்டுக் கண்களும் மேலும் நரியாகிப் போயிருந்த முன் நெற்றித் தலைமயிரும், அவ இறைச்சிக்கறியை அள்ளி அள்ளி வைக்கும் போது பளிச்சிட்டது சுமார் நாலு வருஷங்களுக்கு முன்பு சத்யன் நேர்ஸ் குவாட்டேர்ஸ்ஹுக்கு முன்னுக்கு வைத்துச் சொன்ன கதை அவக்கு ஒரு ஐடியா இருக்கு பிலோமினாவை எனக்கு சடைந்து விட என்று சொன்ன கதை. நாலு வருஷம்காலம் தாழ்த்தி அந்த லஞ் நடக்கிறதா, சத்தியன் இல்லாமல், கெம்பஸ் மேற்றான ஆத்மனைப் பயன்படுத்தி, ஆத்மனுடைய வீட்டிலேயே எனக்கு அதே புளுகம் ஊர்ந்ததும், பிலோமினாவின் கொன்வென்டும் யாட் றோட்டும் நெஞ்சுள் குளிர்ந்ததும் கொஞ்ச நேரம்தான், சாப்பிட்டு முடிந்து, தற்செயலாக வந்தவர்போல் தோன்றிய சுபசின்காவை சந்திக்கும் வரைதான். கண்டதுமே மனுஷன் முகம் மலர்ந்து, வாய் மலர்ந்து.
“தம்பி…..ஓ, நீங்கதானா? கெம்பசுக்குப் புறப்பட்ட பயணம் போல? இது செகண்ட் இயர் போல? ஆத்மனுடந்தான் என்ன?… “கல்முனையில் நமக்கு நல்ல தெரிஞ்ச ஆள்தான் இவர்.’’

“கல்முனை சேர்ச்சில் இரண்டொரு முறை இவரைக் கண்டிருக்கிறன்… ஃபாதர் லாஸரஸ்ஸிர தமையனார் என்று கேள்விப்பட்டிருக்கன்”- நான் சொல்லி முடிய முதல் ‘ஓ, காந்தன் சும்மா இருந்திருக்கப்படதா?
“சுஜீவன், உனக்குத் தெரியாதா? ஃபாதர் லாஸரஸின் தமையன் என்று மட்டுந்தான் கேள்விப்பட்டாயா? இவர்தான் சாட்சாத் நம்ம பிலோமினாவின் ஹஸ்பென்ட்.”

உமிழ்நீரை மென்று விழுங்கியபடி என் திகைப்பை மறைப்பதற்கு ஒரு பக்கமாய் முகத்தைத் திருப்புகையில்தான் உள்ளுறையின் யன்னலினூடு அந்த முகம் சிரித்து மறைந்தது. யார் அது? ஆத்மனின் தங்கையா? அவள், தன் மாப்பிள்ளையை பார்ப்பதாகவா எண்ணி சிரித்தாள்? அல்லது தான் கள்ளத்தனமாகப் பார்ப்பதை தன் மாப்பிள்ளை கண்டு விட்டாரே என்றா சிரித்தாள்? ட்டாம் இட் பூள்ஸ்…இடியட்ஸ். பிலோமினா எப்படி நீ எப்படி –எவ்வளவு வயது போன இந்த மனுஷன் உன்னை அனைத்து சுகிக்க விட்டாய்?
இப்போதும் அந்த துணுக்குறலிருந்து விடுபட முடியவில்லை. “பொறுங்க பொறுங்க மரண அறிவித்தல்….” “என்னவாம்?” “சுபசிங்காவின் அடக்கம்நாளை 3:30 க்காம்….மூத்த மகன் டொக்ரராமே. இளைய மகன் இங்லண்டிலயாம்…பிலோமினா அக்காவுக்கு நல்ல உசத்திதான் அந்த மனுஷன்தான் எப்பேர்ப்பட்ட ஆள்!
இப்படித்தான் இந்த நினைவு முடிய வேணுமா?

Leave a Reply

Your email address will not be published.