இந்தக் கறுத்தப் புள்ளியை
எப்படிக் கழற்றலாம்?
பல ஆண்டுகளுக்கு பின்பு
மீண்டும் ஒரு கறுத்தப் புள்ளி.
கேரளத்தில்,
பெத்தனி ஹில்லின் தென்னஞ்
சோலையின் நடுவில்
நிகழ்ந்த சுவடுகள்–
ஆசிரமத்தில் அழுத நினைவுகள்
அந்தக் கறுத்தப்புள்ளி – அதுவேறு.
இந்தக் கறுத்தப்புள்ளி – இதுவேறு..
ஓ! எத்தனை கறுத்தப் புள்ளிகள்.
நண்பனே,
எனது கவிதைகள் உனக்கு விளங்குவதில்லை.
நான் எனக்காகவா எழுதுகிறேன்?
எனக்காக உள்ள,
உனது தேவையின் பொருட்டு.
எனது மூல விக்கிரகத்தை
நீ காணவேண்டும் என்பதற்காக
எனது மூல விக்கிரகத்தில்
உனது கண்கள் படரும்போது,
அது ஊறும் புளகத்திற்காக
இந்தத் திரை நீக்கம் நிகழ்கிறது.
ஆனால் நீயோ
மூலவிக்கிரஹத்தைக் காணவில்லை,
திரையைத்தான் காண்கிறாய்.
நண்பனே,
லாலே – யே – தூர் – இன்
முதற்பாடல் உனக்குப் புரிகிறதா?
இரண்டாம் பாடல் உனக்குப் புரிகிறதா?
மூன்றாவது பாடலாவது புரிகிறதா?
ஆனாலும்,
இக்பால் மஹாகவி என்பதை
நீ ஒப்புக் கொள்வாய்.
சால்களுக்கிடையே நீர் பாய வேண்டாமா?
வரிகளுக்கிடையே நீ மூழ்க வேண்டாமா?
வானத்து நட்சத்திரங்களின்
தூரம் உனக்குத் தெரியுமா?
எனினும்,
அவற்றின் காலடிகளை
நீ முத்தமிடுவதல்லையா?
எனது கறுத்தப் புள்ளியை
நீ எப்படிக் காணப் போகிறாய்?
தன் அயலவனுடன்
மூன்று மைல் நடந்தவன்
சிலவேளைகளில்
ஓர் அங்குலமும் பெயர
மறுக்கின்றானே, ….. உனக்குப் புரிகிறதா?
உள்ளாடையையும் உவந்து கொடுத்தவன்,
சிலவேளைகளில்
மேலாடையின் மீதுள்ள
பொத்தான்களைக் கூட
இறுக்கிப் பூட்டிக் கொள்கிறானே ,,,, உனக்குப் புரிகிறதா?
தான் அற்ற இடத்தில் சகலத்தையும் மறுதலிக்கும்
இந்த லோபித்தனம்,
இந்த நத்தைச்சுருங்கல்,
இந்த வக்கிரம் … புரிகிறதா நண்பா,
இந்தக் கறுத்தப் புள்ளியைக் கழற்ற
அவன்
எந்த ரசாயணத்தை எங்கே தேடுவான்?-
மீண்டும் பெத்தனி ஹில்லின் தென்னஞ்
சோலையின் ஊடு தேய்ந்த சுவடுகளா?
மீண்டும் ஆசிரமத்தில் அழுத மாலைகளா?