எழுத்தும் ஆளுமையும்
எழுத்தாளர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஆய்வு அறிவார்த்தமாக எழுதுபவர்கள் ஒரு வகை, சிருஷ்டிகரமாக அல்லது படைப்பியலாக எழுதுபவர் மற்ற வகை.
ஆய்வறிவு எழுத்தாளர்கள் சமூக வாழ்க்கையின் எல்லைக்குள் உட்பட்டு சமூக, அரசியல், கலை இலக்கிய மானுடவியல், சமய, ஆன்மீக, தத்துவார்த்த விஷயங்களை அறிவார்த்தமான முறையில் அல்லது கருத்தியல் ரீதியாக எழுதுபவர்கள், கலை இலக்கிய விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் கூட இதற்குள் அடங்குவர்.
சிருஷ்டி எழுத்தாளர் அல்லது படைப்பாளிகள் என்போர் சிருஷ்டி இலக்கியத்தில் அல்லது படைப்பிலக்கியத்தில் ஈடுபடுகின்றவர்கள். சிருஷ்ட்டி இலக்கியங்கள் இன்று முக்கியமாக நாவல், சிறுகதை, கவிதை காவியம், நடைச்சித்திரம், உரைச்சித்திரம், நாடக எழுத்தாக்கம் சிறுவர் இலக்கியம் முதலிய துறைகளாக வளர்ந்துள்ளன. இவைகளில் ஈடுபடுவோர் முறையே நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கவிஞர், நாடகாசிரியர், சிறுவர் இலக்கிய எழுத்தாளர் என அழைக்கப்படுகின்றனர்.
சிருஷ்டி இலக்கியம் சிக்கலான செயற்பாடுகளை உடையது. சிருஷ்டி கர்த்தா தன்னுடைய சிருஷ்டிப் பொருளை தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் சமூக வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் பெறுகின்றான். இவன் தன் அறிவையும் சிந்தனையையும் மட்டுமல்லாமல், ஆத்மாவையும் உணர்வுகளையும் கலந்து தன் சிருஷ்டிகளைப் படைக்கிறான். தனக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவற்றை தனக்குரிய கலைத்திறனைக் கொண்டு தன்மனம் கோலம் கொள்கின்ற முறையில் மறுபடைப்புச் செய்கின்றான். இவன் மற்றுமொரு பிரம்மனே என்பதில் சந்தேகமில்லை. இவனுடைய படைப்பு ரகசியம் பிரம்மனின் அல்லது கர்ப்பியலின் சிவநெறி போல் நுணுக்கமானதும், ஆய்வறிவுக்கு அவ்வளவு எட்டாததுமாகும்.
எழுத்தாளன் ஏன் எழுதுகிறான்? எப்படி எழுதுகிறான்? எந்த வருமானமும் அற்ற, அல்லது சிலவேளை மிகக் குறைந்த அற்ப சன்மானத்தை காட்டாப்புச் செய்யக் கூடிய, பெரும்பாலும் செலவுச் சுமையையும் காலவிரயத்தையும் தரக்கூடிய இந்தக் கலையில் இவர்கள் ஏன் மினக்கெடுகிறார்கள்?
வெறும் புகழுக்காகவா? அல்லது மகோன்னதமான சமூக லட்சிய நோக்கங்களுக்காகவா? சுய ஆன்ம திருப்திக்காகவா? அல்லது வெறும் விளையாட்டுக்காகவா? அல்லது, தன்னில் உள்ள சிருஷ்டித்துவ ஆற்றலின் சுயம்புவான வெளிப்போக்கினாலா? தாங்கள் எழுதுவது இப்படித்தான் இருக்கப் போகிறது என்ற அறுதியான திட்ட வரையறைத் தெளிவுகளுடன்தான் எழுதுகிறார்களா? அல்லது இருட்டில் தடவித் தடவி வெளிச்சத்தை நோக்கி தள்ளப்படுகிறார்களா? பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாக எழுதுகிறார்களா? அல்லது குரங்கு பிடிக்க பிள்ளையாராய் முடிந்த கதைகளும் உண்டா?
எழுத்தாளர்கள் அற்ப ஜீவிகள், நோஞ்சான் சுபாவம் உடையவர்கள் என்று சிலர் சொல்கிறார்களே அது உண்மையா? பிராய்டு Freud என்ற உளவியலாளர் சொல்வது போல் எழுத்தாளர்கள் தம் குழந்தைப் பருவத்தில் கிடைக்காத இன்பியலில் சிக்கி அலைபவர்களாயும் Jung என்ற மற்றுமொரு உளவியலாளர் சொல்வது போல் ”creative writers are not meanly committed to writing, they are addicted to writing” படைப்பிலக்கியவாதிகள் எழுத்தின் போதைப் பழக்கத்திற்கு தம்மை அர்ப்பணித்தவர்கள் என்பதை விட, எழுத்தின் போதைப் பழக்கத்திற்கு அடிமைப்படுத்திக் கொண்டவர்கள் என்பது உண்மையா? அரிஸ்ற்ரோட்டல் கூறுவது போல் எழுத்தாளர்கள் பகற்கனவு காணுகின்ற கற்பனாவாதிகளா?
என்னைப் பொறுத்த வரையில், எழுத்து என்ற இந்த மாய ‘மானை’ துரத்தி ஓட நான் தொடங்கியிரா விட்டால் மற்றெல்லா வகையிலும் நான் சிறந்து விளங்கி இருப்பேன். பாரதி சொல்வதைக் கூட நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
கதைகள் சொல்லிக் கவிதை யெழுதென்பார்;
காலி யம்பல நீண்டன கட்டென்பார்;
விதவிதப் படு மக்களின் சித்திரம்
மேவு நாடகச் செய்யுளை மேவென்பார்;
இதயமோ எனிற் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
எதையும் வேண்டில பராசக்தி
இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே,
நாட்டு மக்கள் பிணியும் வருமையும்
நையப் பாடென் றொரு தெய்வங் கூறுமே:
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டி லேயறங் காட்டெனு மோர் தெய்வம்;
பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
பஊட்டி எங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே,
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானிலத்தவர் மேனிலை யெய்தவும்
பாட்டிலே தனி யின்பத்தை நாட்டவும்,
பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்
மூட்டும் அன்புக் கனலோடு வாணியை
முன்னு கின்ற பொழுதிலெலாங்குரல்
காட்டி அன்னை பராசக்தி எமையேன்
கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.
பாரதியின் எழுத்தும் ஆளுமையும் இதில் நமக்குத் தெரிகிறது. ஒரு பக்கம் ஆன்மீகம், மறுபக்கம் நாட்டு விடுதலை, இன்னொரு பக்கம் பரந்த மானுட நேயம், மற்றொரு பக்கம் நவீன இலக்கியத்தின் பால் உள்ள நாட்டம் இத்தனைக்குமிடையில் இழுபட்டுப் போனதுதான் அவனுடைய ஆளுமை. இத்தனையாலும் வளர்ந்து ஆக முப்பத்தேழு வயதுள்ள மகோன்னதமாய் உருப்பெற்றதுதான் அவனுடைய ஆளுமை, கதை, கவிதை, காவியம், நாடகம், சொற்சித்திரங்கள்: பாட்டிலே அறம், பண்ணிலே இன்பமுமும் கற்பனை விந்தையும், எனப் பரந்து செல்லும் அவனுடைய எழுத்துக்களில் பனிமூட்டமாய்தெரியும் ஓர் ஆளுமை இன்னதுதான் என நமக்கு தெளிவாகக் காட்டுவது மேற்கூறிய அவனுடைய வெளிப்படுத்துகை.