எகிப்தின் தெருக்களிலே . . .

எகிப்தின் தெருக்களிலே . . . . . .
ஏன் எங்கள் ஆண் உடம்பு
இன்னும் எழுவதில்லை?
ஏன் எங்கள் யோனிகளில்
அரிப்புக் குதிர்வதில்லை?

அரிசி விலை 4 ரூபாய்
சீனி விலை 9 ரூபாய்
சீத்தை பதின் மூன்று
டெத்ரோன் கைக் கெட்டா

நீண்ட கியூவரிசை . . . .
நிலவுபடும் சாமத்தில் தூங்காது
எழுந்து, துடித்தோடிச் சூரியனின்
தங்கமுகத் துக்கு தலைசாய்த்து,
வெங்கதிரின் வீச்சைத் தாங்கி
வியர்த்து, விதில்விதிர்த்து
நிற்கும் பெரிய நீண்ட கியூவரிசை . . . .

எங்கள் பணம் ஈந்து
எடுக்கும் பொருளுக்கு
பல்லிளித்துக்
கால்தொட்டுப்
பந்தம் பிடிக்கின்ற வல்வினைஊழ்.
மனிதச் சுயமதிப்பு
எள்ள்ளவும் இல்லாத ஈனம்.
எங்கள் ஆண் உடம்பு ஏன் எழுவதில்லை?
எங்கள் யோனிகளில் ஏன்
அரிப்புக் குதிர்வதில்லை?

எகிப்தின் தெருக்களிலே . . . .
–‘இன்றையப் பேப்பரைப்பார் –எகிப்தின் தெருக்களிலே
கடை உடைப்பு.
தீ வைப்பு.
போலிசை எதிர்த்து மக்கள் போராட்டம்.
கண்ணீர்ப் புகை
துப்பாக்கிச் சூடு
அந்தி தொடங்கி வைகறை வரையும்
ஊர்அடங்குச் சட்டம்.
அதையும் உதறி
ஐமபதுபேர் மரணம்
அவர்கள் தொழிலாளர்
அவர்கள் மாணவர்கள்
நுற்றுக்கணக்கில்
தலை உடைவு
கை முறிவு
கால் நொடியல்
சதை கிழிந்து வழியும்
இரத்தச் சதுப்புகளில்
சிவந்தமலர் பூக்கும்.

அவர்கள் தொழிலாளர்கள்
அவர்கள் மாணவர்கள்
இத்தனையும் ஏன்?
இங்கு உள்ளதுதான் அங்கும்;
விலை உயர்வு
விலை உயர்வை எதிர்த் தெழுந்த
வெங்கனலின் அலை எறிகை!
அது இங்கே,
மெத்தச் சுருங்கி,
கொட்டப் பாக்கினும் குறைவாய் —
துவாரம் சூம்பி
ஈற்று மாறிய கிழடாய் —
எல்லாச் சுமைகளையும்
முதுகிலே ஏற்றபடி,
சொல்வார் சொல்லுக்குத்
தலை அசைத்துக்
கரம் கூப்பி
கறுப்பை வெள்ளை என்றால் அதையும் நம்பி
வெள்ளையைக் கறுப்பென்றால் அதையும் நம்பி
பிடாரனின் ஊதலுக்கு
தலை கெழித்துத் தலைகெழித்து
வளைந்து நெளிந்து, அடங்கிச் சுருளும்
சவமாய், சவங்களாய் —
எங்கள் ஆண்உடம்பு ஏன் எழுவதில்லை?
எங்கள் யோனிகள் ஏன் அரிப்புக் கொள்வதில்லை?

அங்கே, எகிப்தில்,
வெறும் அலைஎறிகை மட்டுமன்று
ஏழையின் முதுகில்
கால்நாட்டிப் பந்தலிட்டு,
உண்டு, குடித்து, உடலை விலைபேசும்
நைட் கிளப்புகளை
தகர்த்து வீசினர்.

உல்லாச புரியின் சல்லாபத் தேர்களாய்,
நடைபாதை எறும்புகளில் நயனம் பாவாது
படகுபோல் பவனிவரும்
பெரும்புள்ளிக்க் கார்களை
எரிமூட்டி, உருட்டி இழுத்துப்புரட்டினர்.
‘’சாதாத் ஒழிக’’ என
மேகத்தைக் கீறி
வான மண்டலத்துள் சேதி சொன்னார்.
விடுதலைச் சதுக்கத்தில் ஹில்ட்டனுக்கு முன்னால்,
அவனுடைய
பத்து அடி உயர (சுவரொட்டிப்)
படத்திற்குக் கல்எறிந்தார்.
கல் எறிந்து கல் எறிந்து
கை அலுத்த,
பின்னர் அதனைப் பிடித்துக்
கிழித் தெறிந்தார்.
கிழித் தெறிந்த துண்டுகள்
கீழே விழுகையிலே
நைல்நதி ஓர ஹில்ட்டன் நடுங்கியது.
அரபுலீக் தலைமைச் செயலகம் அதிர்ந்த்து.
அவற்றின் அணைப்பிலே கிடந்த
விடுதலைச் சதுக்கமோ விழித்துக் கொண்டது.

எங்கள் ஆண் உடம்பு
ஏன் எழுவதில்லை?
எங்கள் யோனிகள்
ஏன் அரிப்புக் கொள்வதில்லை?

Leave a Reply

Your email address will not be published.