தற்காலத் தமிழ்க் கவிதையில் சற்றுப் பரிச்சயம் உடையவர்கள் சசியின் கவிதைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த கொள்வர், அவரைப்போல் பிறிதொரு கவிஞரை, அவருடையதைப் போல் பிறிதொருவருடைய கவிதையை அடையாளங் காட்டுவது கடினம், அவருடைய தனித்துவம் அப்படி, தனித்தவமான இலங்கைத் தமிழ்க்கவிதை மரபின் ஒரு தீவிர வளர்ச்சி நிலையை – பாய்ச்சலை இவரது கவிதைகளில் காண முடிகிறது,
அறுபதுகளின் பின் அரைவாசியில்தான் சசி கவிதை எழுத்த் தொடங்கினார், அவர் ஆரம்பத்தில் எழுதிய சில கவிதைகளில் சற்றுச் செந்நெறிப் பாங்கான (Classical) நடையினைக் காணமுடியும், ‘கண்படுவரை நீள் கரைவாகு வட்டை’ எனத் தொடங்கும் கவிதை அவ்வகையில் நான் படித்த அவரது முதலாவது கவிதை என்று நினைக் கிறேன். அது இத்தொகுப்பில் இடம் பெறவில்லை, இத்தொகுப்பில் உள்ள அவள் நினைவிலம் இதன் சாயலைப் பார்க்கலாம், ‘இளைய சிவப்பரும்புகளில் இலைமறையும் புதுரோசா’, ‘பளபளென்று சிவப்புநிறப் பரல் கல்லில் நீரோடும்’, இதன் மொழிதான் செந்நெறிப் பாங்கானதாக இருக்கின்றதே தவிர இக்கவிதை – இதன் அமைப்பு – தமிழுக்கு மிகவும் புதிது,
செந்நெறிப் பாங்கு சசி கவிதைகளின் ஒரு பண்பல்ல, இத் தொகுதியில் அத்தகைய கவிதைகள் அவள் நினைவு ஒன்றுதான், அதுகூட முற்றிலும் செந்நெறிப்பாங்கானது அல்ல, பொதுவாக அவரது மொழி மிக்ச் சாதாரணமான இன்றைய நடைமுறைத் தமிழ்தான்,
‘நீ வந்திருக்கிறாய்
நான் எழுதவேண்டும்
ஏன்?
நீயே எனது மையமா?’’
என்று தொடங்குகிறது ஒரு கவிதை,
‘’அற்ப நிகழ்வும்
அர்த்தமற்றதும்
என்னுடன் வருக’’
என்று தொடங்குகிறது பிறிதொரு கவிதை,
‘எல்லாம் முடிந்த்து
இனி என்ன, நாம் நடப்போம்’’
என்று தொடங்குகிறது வேறொரு கவிதை.
‘’சந்தியில் நிற்கிறேன்
பகல் சாய்கிறது’’
என்பது இன்னொரு கவிதையின் தொடக்கம், இப்படி பெரும்பாலும் சாதாரண மொழிதான், ஆனால் இந்தச் சாதாரண மொழியில் அசாதாரண உணர்வுகளை எழுப்பி அந்த மொழிக்கு ஒரு அசாதாரணத் தன்மையை, ஒரு கனதியை, வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுப்பன அவரது கவிதைகள், இது மகாகவி, நீலாவணன், முருகையன் போன்றோர் மூலம் ஈழத்தில் வளர்ச்சியடைந்த ஒரு கவிதை மரபின் தொடர்ச்சி சண்முகம் சிவலிங்கம் இம்மரபின் உண்மையான வாரிசுகளில் ஒருவர், அதற்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்தவர், ஈழத்தில் வளர்ந்த இம்மரபு தமிழகத்தில் வளர்ந்த பாரதிதாசன் பரம்பரையினரின் சத்தற்ற எளிய செய்யுள் மரபிலிருந்த வேறானது, பிற்காலத்தில் வானம்பாடிக் குழுவினர் வளர்த்த ஜனரஞ்சகமான அலங்கார வசன மரபில் இருந்தும் வேறானது, இந்தக் கவிதைகள் முதல் பார்வையில் மிகச் சாதாரணமாகத் தெரியக் கூடும், ஆனால் இவற்றைப் போலியாகப் பிரதிபண்ண முடியாது, இவை எளிமையாகத் தோன்றினாலும் இது ஏமாற்றும் எளிமை, இதை உண்மையான கவிதையின் ஒரு லட்சணமாகவும் சொல்லலாம்.
தற்காலத் தமிழ்க்கவிதைபற்றிப் பேசுபவர்கள் மரபுக் கவிதை என்ற இருமைமுரண்பற்றி இன்றும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள், சசி கூட புதுக்கவிதை, அகலித்த புதுக்கவிதை பற்றியெல்லாம் பேசியிருக்கிறார், என்னைப் பொறுத்தவரை இந்த இருமைமுரண் இப்போது அபத்தமானதாகவே தோன்றுகிறது, இந்த இருமைமுரணின் அடிப்படை என்ன? வேறு எதைச் சொன்னாலும் சாராம்சத்தில் யாப்பும் யாப்பின்மையும்தான், யாப்பில் எழுதுவது மரபுக்கவிதை, யாப்பை மீறி எழுதுவது புதுக்கவிதை, புதுக் கவிதையாளர்கள் மரபுக்கவிதையை ஒரு பத்தாம் பசலியாகவே நோக்குகின்றனர், மரபுக்கவிஞர்கள் புதுக்கவிதையை ஒரு சவலைக் குழந்தையாகவே பார்க்கின்றனர். இன்று கூட இந்த நோக்கு, கவிதைபற்றிய நமது விமர்சனப் பார்வையைப் பெரிதும் பாதிக்கவே செய்கின்றது,
சரி, சசி ஒரு மரபுக் கவிஞரா? புதுக் கவிஞரா? இந்த்த் தொகுப்பில் உள்ள சுமார் அரைவாசிக் கவிதைகள் சுத்தமான யாப்பில் – வெண்பா, அகவல், விருத்தம் போன்ற செய்யுள் வடிவங்களில் – அமைந்தவை, ஏனைய கவிதைகளும் பெரிதும் ‘’யாப்பு இடையிட்டவை’’தான், இதே காரணத்துக்காக சசி யாப்பை (பத்தாம் பசலித்தனமாகக்) கையாளும் மரபுக் கவிஞர்களுள் ஒருவராகி விடமாட்டார், யாப்பில் பரிச்சய மில்லாதவர்களுக்கு சசியும் யாப்பை நிராகரித்து கவிதை எழுதும் ஒரு புதுக் கவிதைக்காரர்தான், என்னைப் பொறுத்தவரை சசி இரண்டும் இல்லை, அவர் ஒரு கவிஞர், நல்ல கவிஞர், மரபுவழிச் சிந்தனை முறையில் இருந்தும், வெளிப்பாட்டு முறையில் இருந்தும் விலகி, நவீன வாழ்வின் நெருக்கடிகளை நவீன முறையில் வெளிப்படுத்தும் ஒரு நவீன கவிஞர்.
யாப்பிலே எந்த அளவுக்கு மோசமான கவிதைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு – சிலவேளை அதை விட அதிகமாக – யாப்பை மீறி, வசனத்தில் எழுதப்பட்டவற்றிலும் மோசமானவை உண்டு, ஆகவே யாப்பு அல்லது யாப்பின்மைக்கு தானே ஒரு கலித்துவத்தகைமை இல்லை, செய்யுளும் வசனமும் கவிதைக்கான ஊடகங்கள் மட்டும்தான், ஊடகம், தானே கவிதையாவதில்லை, அது கவிதையைத் தாங்கி நிற்கும் சாதனம்; அவ்வளவுதான், கவிதை என்பது கவிதைப் பொருளும், பொருளின் வெளிப்பாட்டு முறையும் இணைந்த ஒன்று, வெளிப்பாட்டுமுறைதான் கவிதைப் பொருளுக்கு ஒரு கவித்துவத் தன்மையைக் கொடுக்கின்றதே தவிர செய்யுள் அல்லது வசனம் என்ற ஊடகம் அல்ல.
கவிதை கவிஞனின் சமூக, அரசில் பிரக்ஞையின் வெளிப்பாட்டுச் சாதனம் மட்டுமல்ல, அது அவனது முழுமையான உணர்வுலகையும் தழுவி நிற்பது, மொத்தமான வாழ்க்னை அனுபவத்தின் ஒரு வெளிப்பாட்டுச் சாதனம் அது, இரத்தமும் சதையும் உள்ள எல்லா மனிதர்களையும் போலவே கவிஞனும் பல்வேறுவகையான வாழ்க்கை அனுபவங்களுக்கு உள்ளாகின்றான், அதனாலேயே ‘எகிப்தின் தெருக்களிலே’ எழுதிய ஒரு கவிஞனால் ‘இன்று இரவு’ எழுதுவதும் சாத்தியமாகின்றது, ‘நண்டும் முன்முருக்கும்’ எழுதிய ஒரு கவிஞனால் ‘நத்தைச்சுகம்’ எழுதுவதும் சாத்தியமா கின்றது, இது கவிஞன் மனிதனாக இருப்பதன் அடையாளம், அவன் தன் இருத்தலுக்குப் பிரக்ஞையாக இருப்பதன் அடையாளம், ஆனால் நமது பெரும்பாலான கவிஞர்களைப் பொறுத்தவரை கவிதை இத்தகைய ஒன்று அல்ல. பலருக்கு அது சமூக மாற்றத்துக்கான ஒரு கருவி மட்டும்தான். சமூக, அரசியல் பிரச்சினைகளைச் சொல்வதற்கு மட்டுமே அவர்கள கவிதையைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். வேறு பலருக்குக் கவிதை, வடிவம் சார்ந்த ஒரு பரிசோதனைக் கவிதைதான். எதிர்க் கவிதை, படிமக் கவிதை, ஹைக்கூக் கவிதை என எழுதி, தாங்களே இவற்றை தமிழில் முதலில் அறிமுகப்படுத்தியதாகவும் சுயதிருப்தி உறுவர், இவர்களைப் பொறுத்தவரை கவிதை மூளை சார்ந்த்து. தங்கள் கெட்டித்தனத்தைக் காட்டும் ஒரு வித்தை. தங்கள் சுயத்தின் குரல் அல்ல. இவர்கள் எல்லாருமே தங்கள் சுயத்தின் பெரும்பகுதியை மறைத்துக் கொண்டு தங்களுக்குச் சமூக அங்கீகாரம் பெற்றுத் தரக்கூடிய ஒரு சிறு பகுதியை மட்டும் கவிதைக்குள் கொண்டு வருபவர்கள், அந்த வகையில் ஒற்றைப் பரிமாணிகள்.சண்முகம் சிவலிங்கம் இவர்களுள் ஒருவரல்ல, அவர் தன் சுயத்தை முழுமையாக வெளிச்சத்துக் கொண்டுவருவதை விரும்பும் ஒரு கவிஞர், ‘’இருத்தலும் இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும்’’ முக்கியமானது என்று கருதுபவர். தனது மூல விக்கிரகத்தையும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக – அதில் நமது மூல விக்கிரகத்தையும் தரிசிக்கவேண்டும் என்பதற்காக –தன்னைத் திரைநீக்கிக் காட்டுகிறார் அவர். எல்லா நல்ல கவிஞர்களினதையும் போல அவரது கவிதையும் அவரது முகமாக இருக்கிறது. அவரில் இருந்த பிரிக்க முடியாத ஒன்றாகி அமைகிறது, அவரது உணர்வுகளையெல்லாம் பிரதிபலிக்கிறது, அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணங்களை அவரது கவிதைகள்மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக, அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலைக் கவிதைகள் (Personal poems) அவரின் வேறொரு பக்கத்தைக் காட்டுகின்றன, அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப் பற்றிய கவிதைகள்தான்.
தற்காலத் தமிழில் சசி ஒரு வித்தியாசமான, தனித்துவமான கவிஞர் என்று ஏற்கனவே சொன்னேன். இவர் மூலம் நவீன தமிழ்க்கவிதை சில சிகரங்களை எட்டியிருக்கிறது என்பதை இத்தொகுப்பைப் படிப்பவர்கள் காண்பார்கள். சந்தியில் நிற்கிறேன், மண்ணும் மனிதரும், ஆக்காண்டி, பரவளைவுக்கோடு, மென்மையின் தளைகளிலிருந்த, ஆதாம்கள் ஆயிரம், மறுதலை, மரியாத உயிர்ச் சுவடும் விலகிச் செல்லும் மையங்களும், வெளியார் வருகை என்பன எனக்குச் சிகரங்களாகத் தெரிகின்றன. வேறு சிலருக்கு வேறு சில சிகரங்கள் தெரியலாம், ஆனால் அற்பம் என்று ஒதுக்க்க்கூடியவை இந்தத் தொகுப்பில் யாருக்கும் அதிகம் கிடைக்காது என்று சொல்வேன்.
சிவலிங்கம் தன் கவிதைகள்பற்றி ஒருபோதும் பெருமைப் பட்டுக் கொண்டவர் அல்ல. இத் தொகுப்பில் (நீர் வளையங்கள்) உள்ளவற்றுள் சுமார் மூன்றின் ஒரு பங்குக் கவிதைகள்தான் இதுவரை பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றைக்கூட கவனமாக்ச் சேர்த்து வைத்துப் பேணும் பழக்கம் அவரிடம் இல்லை. எழுதியவற்றில் கையெழுத்துப் பிரதியிலேயே காணாமற்போனவை பல. அவருடைய பெரும்பாலான கவிதைகளுக்கு நான்தான் முதல் வாசகனாக இருந்திருக்கிறேன், நீண்டகால வற்புறுத்தல்களுக்குப் பிறகு சங்கோசத்துடன்தான் என்றாலும் இந்தத் தொகுப்பை வெளியிட அவர் சம்மதித்திருக்கிறார். இத்தொகுப்பின் மூலம் இன்றைய தமிழ்க் கவிதை ஒரு புதிய வெளிச்சத்தைப் பெறும் என்பதே என் நம்பிக்கை. – எம். ஏ. நுஃமான்
மறைவையொட்டி பேராசிரியர் எம். ஏ. நுஃமான் வழங்கிய இரங்கல் குறிப்பு: