இருப்பியல் வாதம் பற்றிய ஒரு சிறு விளக்கம்

முகவுரை
இன்றையக் காலகட்டத்தில், இலக்கியப் பரிச்சயம் உள்ள ஏறக்குறைய எல்லோருமே Existentialism/ இருப்பியல்வாதம் எனச் சொல்லப்படுவதைப் பற்றிக் கேட்டிருப்போம். எம்மில் பலர், இருப்பியல்வாதம் சார்பான கட்டுரைகளையோ, நுல்களையோ ஆங்கிலத்தில் படித்திருக்கவும் கூடும். தமிழிலும் எஸ்.வி.ராஜதுரை இதுபற்றி ஒரு நுல் எழுதியுள்ளதாக்க் கேள்வி. படிக்கும் போது இருப்பியல்வாதம் புரிகிறது போலவும் தோன்றும் ஆனால் பின்னர் யாராவது ஒருவர் அல்லது நாங்களே இருப்பியல்வாதம் என்றால் என்ன என்று எம்மைக் கேட்டால் ஒழுங்காக்க் சொல்லத் தெரியாது. திண்டாடுவோம். இதற்கு ஒரு காரணம், இருப்பியல்வாதம் பற்றி எமக்குக் கிடைக்கும் நுல்கள், அதனை எமக்கு, எமது தரத்தில் அறிமுகம் செய்யக்கூடியனவாக அல்லாமல், அந்த்த் தத்துவத்தைப் பல கோணங்களி லிருந்தும் விமர்சனம் செய்வனவாகவும், அவைகளை ஆதரிப்பனவாகவும், கண்டிப்பன வாகவும், வளர்ப்பனவாகவும், பலவிதமான கருத்துப் பின்னல்களையும், உதாவுதல்களையும் உடையனவாகவும் இருத்தலேயாகும். இந்தப் பின்னல்களிலிருந்து நீங்கி இருப்பியல்வாதம் பற்றி திட்டவட்டமாக முழுமையாக ஆனால் சுருக்கமாகச் சொல்லவும் நினைக்கவும் தக்க ஒரு வடிவத்தில் அதனைப் பரிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். அதுபற்றி ஏற்கனவே எனக்குத் தெரிந்த சில அம்சங்களுடன், அதன் தொடர்வாத்தை அல்லது கண்ணிகளை இணைத்து அறிய முயன்றேன். அதனை எழுத்தில் கொணர்ந்தால்தான், அதுபற்றித் திடமாக இருக்க முடியும் என்றும் பட்டது. அத்தகைய ஒரு சிறிய குறிப்பைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள். அவை பற்றிய நுட்பமான, உயிர்ப்பான உள்நுழைவுகளை நான் வேண்டுமென்றே தவிர்த்துள்ளேன். இருப்பியல்வாதம் பற்றிய ஒரு சட்டகத்தை, எலும்புக்கூட்டை எனக்கு நானே ஆக்கிக் கொண்டு, பின்னர் அதற்குச் சதையும் குருதியும் ஊட்டி, எனது அறிவை விசாலித்துக் கொள்ளலாம் என்பது நோக்கம்.
என்னைப் போன்றே இருப்பியல்வாத்த்தை அறிவதில் பலருக்குச் சில தடங்கல்கள் ஏற்பட்டிருக்க்க் கூடுமென்பதால் எனது முயற்சியை அனைவருக்கும் பந்தி வைக்கலாம் என எண்ணினேன். இது தொடர்பான இலக்கியப் பிரயோகம் பற்றிச் சிந்தித்தபோது, எனது சில கதைகளையே உதாரணமாகச் சுட்டிக் காட்ட நேர்ந்த குற்றத்திற்குள்ளானேன். எனினும் இருப்பியல்வாதம் பற்றி எமது இலக்கியவாதிகள் அறியவேண்டும் என்ற எனது கோரிக்கை சுத்தமானது என நம்புகிறேன்.
EXISTENTIALISM
1. Existentialism என்பதைப் புரிந்து கொள்ள முதற்படியாக இரண்டு வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று Existence மற்றது Essence. தமிழில் இவைகளுக்கு நேரான சொற்களைக் காண்பது அரிதல்ல. Essence என்பதற்குச் சாரம் என்று ஒரு சொல்லைத் தரக்கூடும். அது போல் Existence என்பதற்கு இருப்பு எனச் சொல்லக்கூடும். எனினும் தமிழில் இச் சொற்களுக்கு உள்ள பொருள், அதன் சாதாரண புளக்கத்தில் Existentialism சார்பான பொருளைத் தருகின்றதா என்பது சந்தேகம், Existentialism சார்பான பொருளை இனித்தான் இச் சொற்கள் ஏற்க வேண்டும்.
Existence, Essence என்பன ஒரு பொருளின் இரு பண்புப் பரப்புகளைக் குறிக்கின்றன எனக் கூறலாம். ஒன்று அப்பொருளின் தனித்துவமான, அப்பொருளை எந்த ஒரு பொருளிலிருந்தும் பிரித்துக் காட்டுகின்ற, அப்பொருளுக்கென்று அங்கலட்சணத்தைக் கொடுக்கின்ற பண்பு. இதுவே அப்பொருளின் Existence அல்லது இருப்பு எனப்படுவத. மற்றது அப்பொருளுக்கும் அது போன்ற பொருளுக்குமுள்ள பொதப் பண்புகள், பொதுப் பண்பின் அடிப்படையில் இப்பொருள் ஒரு வகையறா ஆகிறதே ஒழிய ஒரு தனிப்பொருள் ஆவதில்லை. பொதுப் பண்புகளின் அடிப்படையில் அதனை அடையாளம் காண்பது அதன் இருத்தலை மறப்பதாகும் அல்லது மறுத்தலாகும். ஒரு பொருளின் தனிப் பண்பை, அல்லது இருத்தலை மூடுகின்ற அதன் பொதுப் பண்புகளே Essence அல்லது சாரம் எனப்படுவது.
ஓர் உதாரணத்தின் மூலமாக இதனை விளக்கலாம். எனது ஜன்னலின் வெளியே இதோ ஒரு முள்முருக்க மரத்தைக் காண்கிறேன். இதே போல முள்முருக்க மரங்கள் அடுத்த வீட்டு வேலிகளில் உண்டு. எங்கள் வீட்டின் பின் வேலிகளில் கூட இது போன்ற மரங்கள் உண்டு. ஒரே பார்வையில் இவையெல்லாம் முள்முருக்க மரங்களே. முள்ளையுடைய தண்டும், இலையின் வடிவமும் . . . . பூவின் நிறம் வடிவம், முதலியன இவைகளை ஒரு வகையறா ஆக்குகின்றன. இது முள்முருக்கின் Essence. ஆனால் இதோ ஜன்னலுக்கு வெளியே தெரிகிறதே இந்த முள்முருக்கு –இதற்கு முள் உள்ள தண்டும், குறித்த வடிவமுள்ள இலை முதலியன இருந்தாலும் இது தண்டின் வளைவு நெளிவில், இலையின் பருமனில், எண்ணிக்கையில், அடர்த்தியில், உயரத்தில், தனக்கே உரித்தான தன்மைகளைக் கொண்டுள்ளது. தவிர இதனுடைய இந்த்த் தனித்தன்மைகள், இதற்கேற்பட்ட குறித்த அகப் புறச் சூழலால் ஏற்பட்டது. இதனைப் போல் இன்னொன்று, இதன் தனித்தன்மைகளில் இராது. இதுவே இதன் Existence – இருத்தல் ஆகும். (முள்முருக்கின் இந்த இருத்தல் அல்லது ஒரு கல்லின் இருத்தல் அல்லது விலங்கின் இருத்தல், அல்லது இன்னொரு மனிதனின் இருத்தல், எனது பிரக்ஞையில் (Consciousness) தங்கியுள்ளது என்பதும் இருத்தல் பற்றிய இருப்பியல்வாத நிலை நோக்கமாகும் – இது பின்னர் விளங்கிக் கொள்ளக்கூடியது.)
2. ஆகவே ஒவ்வொரு பொருளுக்கும் (மனிதனின் பிரஞ்ஞைவழி நோக்கில்) ஓர் இருத்தலும் உண்டு ஒரு Essence உம் உண்டு. ஒரு பொருளின் இருத்தலுக்கும் அதன் Essenceக்கும் என்ன சம்மந்தம், என்பதே அறிந்து கொள்ள வேண்டிய அடுத்த விடயமாகும். சுருக்கமாகச் சொன்னால், இருத்தல் முந்தியதா Essence முந்தியதா என்று ஒரு கேள்வி உள்ளது. Essence முந்தியது என்பது பிளேற்றோ முதல் ஹெகல் வரையிலான மெஞ்ஞானிகளின் முடிவு. Essence இலிருந்தே இருத்தல் விகர்சிக்கிறது என்பது இவர்களது உட்கிடக்கை. பொது இயல்புகள் உண்டெனின் அப்பொதுமைக்கு அமையவே தனியன்கள் தோற்றம் கொள்கின்றன. ஆகவே தனியன்களின் தோற்றத்திற்கு முந்தியே அவற்றிற்கான பொதுமை உளது என்பது இதன் பொருள். இதற்கு மாறாக, இப்படி முந்தியது என இருப்பியல்வாதிகள் கூறுகின்றனர். இருப்பிலிருந்தே Essence பரிமளிக்கிறது என இவர்கள் சாதிக் கின்றார்கள். தனி இயல்புகளின அல்லது தனியன்களின் தோற்றத்திலிருந்துதான் அவற்றிற்கிடையிலான பொதுத் தன்மைகள் காணப்பட முடிவும் என இவர்கள் விளக்குகின்றார்கள்.
3. அடுத்த்தாக இருத்தலின் அகவயத் தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கமான கருத்துப்படி நிசமாக, எது உள்ளதோ அது இருத்தல் உடையதா கின்றது. அதாவது Essence என்ற கருத்து நிலையிலிருந்து இருத்தலும் உருப் பெற்றது, இருத்தல் உடையது என, விளஙகிக் கொள்ளப்பட்டது. இருப்பியல்வாத நோக்கில் இருத்தல் என்பது இது அல்ல.
இருப்பியல் வாத்த்தின்படி, இருத்தலென்பது இத்தகைய ஒரு நிலை அல்ல. இங்கு இருத்தல் என்பது, மனிதனின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டதாக எதுவும் இருக்க முடியாது. இதோ இங்கே நான் இல்லாவிட்டால் இந்த முள்முருக்கிற்கு இருத்தல் இல்லை. அதன் இருத்தல் என்பது, அதுபற்றிய எனது அகக்காட்சியே. இது போலவே, எனது சகாக்கள், ஏனைய மனிதர்களும் எனது பிரக்ஞை நிலைக்கப்பால் இருத்தல் உடையவர்களல்ல. நானே அவர்களுக்கு இருத்தலை அளிக்கிறேன். நான் கூட எனது பிரக்ஞைக்கு அப்பால் எதுவும் இல்லை. எனது பிரக்ஞையினாலேயே எனது இருத்தலைப் பெறுகின்றேன். ஆகவே இருத்தல் என்பது ஒரு இடையறாத செயல் என்பதுடன் ஒவ்வொரு மனிதனின் இருத்தலையும் அவனவனே சிருஷ்டித்துக் கொள்கின்றான்.
ஆகவே மனிதனது இருத்தலுக்குக் காரணமானது அவனது பிரக்ஞை. இந்தப் பிரக்ஞை என்பது என்ன? உயிரியில் ரீதியாய் பிரக்ஞை என்பது புலன் உணர்வுகளின் கூட்டுமொத்தம் என்றோ, மையம் என்றோ, மூளையத்தின் ஓர் ஆற்றல் என்றோ சொல்லக் கூடும். எவ்விதமாயினும் பிரக்ஞை என்பது, மனிதனது அகத்தில் உள்ள ஒரு மூடிய தொகுதி அல்ல. பிரக்ஞை என்று தனிநிலையில், தூய நிலையில் எதுவும் இல்லை. பிரக்ஞை என்பது ஏதோ ஒன்றைச் சார்ந்து நிற்பது. அதாவது பிரக்ஞை என்பது புறஉலகைச் சார்ந்து நிற்பது. எனக்கு வெறும் பிரக்ஞை என்பது இல்லை. நான் எப்போதும் ஏதோ ஒன்று பற்றித்தான் பிரக்ஞையுடயவனாய் இருக்க முடியும். அகக் காட்சி (Perception) எடமன் ஹஸ்எர்ல் (Edman Husserl) இன் சிந்தனையிலேயே, பிரக்ஞையின் இந்தச் சார்புத் தன்மை தெளிவானது. இதன்படி, மனிதனுக்கு இந்தப் புற உலகம், அவனது மனத்திரையில் சதா ஓடிக்கொண்டிருக்கும் விம்பங்களே – அதாவது காட்சி உருக்களே. புறஉலகம் எதார்த்தமாக, திட்டமாக, தெளிவாக, சதைப்பிடிப்பாக, பற்றுறுதியாக உள்ளது என்பதை ஹஸ்எர்ல் பலமாகச் சந்தேகித்தார் என்பதில்லை. ஆனால் மனிதனைப் பொறுத்தவரை புறஉலகம், அவன் மனத்திரையில் சதா பிரசன்னமாகிக் கொண்டிருக்கும் ஒரு தோற்றப்பாடே. ஹஸ்எர்லின் இந்த்த் தோற்றப்பாட்டியலிருந்தே ஹைடெக்கர் (Helddeger) பிரக்ஞையைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்தார். பிரக்ஞை என்பது, ஏதோ ஒன்றைப் பற்றியதாக இருக்குமெனிக், அந்த ஒன்றை நீக்கிவிடின் பிரக்ஞை வெறுமையாகிறது. அதாவது பிரக்ஞை என்பது சூன்யம் என்று அவர் கூறினார். பிரக்ஞை என்பது சூன்யம் என்னும் கருத்தில் எல்லா இருப்பியல் வாதிகளுக்கும் அக்கறை இல்லை. கடவுள் மறுப்புடைய இருப்பியல்வாதிகள் இதனை வற்புறுத்துகின்றனர். கடவுளை மறுக்காத இருப்பியல்வாதிகளும் உண்டு.
4. மனிதனின் பிரக்ஞையின் சார்பிலேயே இருத்தல் உண்டு என்பதே இருப்பியல்வாத்தின் அடிநாதமாகத் தெரிகிறது. மனிதனின் பிரக்ஞையின் சார்பிலே அவன் இருத்தலைப் பெறுவதனால், அவனுடைய இருத்தலின் சிருஷ்டி கர்த்தா அவனே என்பது, இருப்பியல்வாத்த்தின் அடுத்தபடியாகத் தெரிகிறது. நானே எனது இருத்தலின் நாயகன்; நானே எனது வாழ்க்கைக்குப் பொறுப்பானவன். ஆகவே எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும், அல்லது அதனைத் தெரிவு செய்து கொள்ளும் உரிமையும், சுதந்திரமும் எனக்கு உண்டு என்பதே இருப்பியல்வாதத்தின் நடைமுறைத் தத்துவமாக உள்ளது. தன்னைத்தானே ஆக்கிக் கொள்ளல், அதற்கான சுயதெளிவு (Choice), அதற்கான சுதந்திரம் ஆகியவற்றை விபரித்தலும், அவற்றிற்காக வாதாடலும், அவற்றின் அடிப்படையில் மனித மனத்தின் உள் இயக்கங்களில் வெளிச்சம் காட்டுவதுமே, இருப்பியல்வாத்த்தின் விளக்கங்களாகவும், படைப்புகளாகவும் உள்ளன.
உதாரணமாகத் தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளல் என்ற இருப்பியில்வாத்த்தின் அடி நிலையான விளக்கத்தின்படி, மனிதரின் இரு வகையான இருத்தலை இனம் காட்டுகிறார்கள். எவன் தன்னைப் பிரக்ஞைபூர்வமாக ஒரு நிலைக்கு ஆக்கிக் கொள்கிறானோ, அவனே ‘மெய்மையான இருத்தல்’ உடையவன் என்றும், மற்றவன் ‘போலி இருத்தல்’ உடையவன் என்றும் சொல்கிறார்கள். தன் மனதை அல்லது சித்தத்தைச் சாராத வேறொரு காரணியால் ஏற்படும் எந்த மாற்றமும் மெய்மையான இருத்தலைக் குறிக்காது. தன்னுடைய சுயசித்தத்தால், அதன் முனைவால் ஒருவன் தன்னை ஆக்கிக்கொள்ளும் இருத்தலே நம்பகமான இருத்தல். இவ்வித ‘சுயசித்தம்’ இருப்பியல்வாதத்தில் மிக அழுத்தம் பெறுகின்றது. விதிப்புகளை (Determinations) இருப்பியல் வாதம் உடைப்பதுடன், விதிப்புகளுக்கு உட்பட்ட இயற்கை நிகழ்ச்சிக ளையும், இருத்தல் என்ற உன்னத யதார்த்தத்திற்குக் கீழ்ப்ட்டதாகவே அது கருதுகின்றது.
தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளும் மனிதனுக்குச் சுயதெரிவு இன்றிமையாதது. இந்த்த் தெரிவைச் செய்துகொள்ள மனிதனுக்கு எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை என்பது, இருப்பியல் வாத்த்தின் சிக்கலான, அழுத்தம் மிக்க ஒப்புதலாகும். எந்த வழிகாட்டியும் சாத்தியம் இல்லை. ஏனெனில் வழிகாட்டி போன்ற ஒரு புறத்தூண்டுதலினால் ஒருவனது வாழ்க்கை அமையுமெனின் அவனது இருத்தல் மெய்மையான, ஆட்சியுடைய இருத்தல் அல்ல. (தவிர வழிகாட்டிகள் வாழ்க்கை அனுபவத்தின் சாராம்சங்களாக Essence இருப்பதனால், அவை இருத்தலை முன் வைத்துச் சொல்ல முடியாது). ஆகவே தனது இருத்தலில், மனிதன் வழிகாட்டி யில்லாத, பிறருடைய ஆலோசனை இல்லாத – இருக்க முடியாத, தர்க்கநியாயம் இல்லாத (Irrational) தெரிவுகளையே மேற்கொள்கிறான். யாரேனும் ஒருவன் போதுமான காரணங்களின் அல்லது நியாயங்களின் அடிப்படையில்தான் தனது முடிவுகளை மேற்கொள்கின்றான் என்பதுபோல அவருக்குத் தோன்றினாலும், உண்மையில் அவர் கருதும் காரணங்கள், அவர் ஏற்கனவே காரணமில்லாது மேற்கொண்ட முடிவுக்குக் கற்பிக்கும் காரணங்களுக்கும் நியாயங்களுமாகவே இருக்கும் என இருப்பியல்வாதிகள் திடமாக்க் கூறுகின்றனர். ஆகவேதான் இருத்தல் ஓர் அபத்தம் (absurd) என்ற கருத்தும் உண்டாகியுள்ளது.
தெரிவைப் பற்றியுள்ள இந்த அபத்தத்தையும்—குருட்டாட்டத்தையும் விட இன்னுமொரு வகையில் அது திகைப்பூட்டுவதாக உள்ளது. வழிகாட்டியில்லாத, முன்னுதாரணம் இல்லாத –திசையறியாத தெரிவு மிகவும் சிரம்மானது. அதுவும் ஒருவனது தெரிவுக்கு அவனே பொறுப்பாக உள்ள போது, அந்த்த் தெரிவே பெரிய இடர்ப்பாடாய், அதுவா இதுவா என்று நிச்சயிக்கமுடியாத பரிதவிப்பில், நிச்சயமின்மையில் நிர்க்கதியில், risk எடுத்தலில் கொண்டு விடுகின்றது. எனினும், ஒருவன் தன்னை ஆக்கிக் கொள்ளுதலில் ஏதேனும் ஒருவழியைத் தெரிவு செய்து கொண்டேயாக வேண்டும். இந்த வகையில் ஒவ்வொருவனுடைய மனதிலும் நிரந்தரமான ஒரு நிர்ப்பந்த உணர்வும், ஊசலாட்டமும், பயமும் உண்டு என இருப்பியல்வாதம் கூறுகின்றது.
இருப்பியல்வாதம் புலப்படுத்துகின்ற இந்த உண்மையின் காரணமாக, அதனை சோர்வு வாதம் என்றும், அவநம்பிக்கையூட்டுவதென்றும் குறைகூறப்படுகின்றது. எனினும் இருப்பியல்வாதிகள் இத்தகைய குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில்களை அளித்துள்ளார்கள். இருப்பியல்வாதத்தின்பால் கூறப்படும் பிறகுறைகள், அது புற உலகத்தின் புலனுக்குத் தெளிவான பருப்படியான யதார்த்தத்தை மறுதலிக்கிறது என்பதும், தனிமனிதக் கூண்டுக்குள் எப்பொருளையும் சிறைவைக்கிறதென்பதும், இருத்தல் பற்றிய இதன் விளக்கமுறையில் தன்னையே இருத்தலுக்கு உதவாததாக்குகின்ற முரண்வாதம் என்பதும், இவைபோன்ற பிறவுமாகும். இந்தக் குற்றச் சாட்டுகளுக்கும் இருப்பியல்வாதிகள் விரிவான பதில்களை அளித்துள்ளார்கள்.
5. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கப்பால் இருப்பியல்வாதம், பிளேற்றோ தொடக்கம் உள்ள மேற்குலக அறிவு வாதத்தையும் விஞ்ஞானத்தின் அணுகுமுறைகளையும், மனிதனது மொழியையும் சிந்தனை அமைப்பையுமே, சண்டைக்கு அழைப்பதாக உள்ளது. பொதுவாக மனிதகுலம் புறவயமான சிந்தனைக்கே பழக்கப் பட்டுள்ளது. பொது இயல்புகளின் அல்லது Essence அடிப்படையில், கருத்துருவங்கள் கொள்ளப் படுகின்றன. கருத்துருவ ஆக்கம் (concept formation) மனித மனதின் சிறப்பான ஆற்றல் என்றும், விலங்குகளுக்குச் சாத்தியமில்லாத மனிதனின் மொழியின் அடிப்படை என்றும் சொல்கிறோம். விஞ்ஞானமும், பொது இயல்புகளையும் பொது விதிகளையும் பற்றிய தான ஒன்றே., தனியான இருத்தல் பற்றி விஞ்ஞானம் ஒன்றும் அறியாத்து போல, மனித மொழியும் சிந்தனை முறையும் கூட தனி இயல்பை, இருத்தலைப் புரிந்து கொள்ளக்கூடியதாய் இல்லை. அதனால் இருப்பியல்வாதம் ஒரு ‘புது சிந்தனை முறையையும்’, உண்மையில் ஒரு புதுக் கலாசாரத்தையும் வேண்டிநிற்கிறது. காரணகாரிய சிந்தனை தரும் பதிலாக காரணகாரியத் தொடர்பு முறையில் அல்லாத உள் நோக்கிய ஒரு புரிதலை ‘முகர்ந்து’ பார்த்து அதன்வழியே ஊடுருவ முனைகிறது. Intution/ அகக்கோடல் / உள்ளுணர்வு என்ற சொற்கள் இந்தப் புரிதலைக் குறிப்பதற்குப் பயன்படுகின்றன. இந்தகைய ‘புரிதல் திறன்’ மூளையின் ஏதோ ஒரு பகுதியில் விருத்தியடையா நிலையில் அரும்புதலாக உள்ளதா, அல்லது மேற்கூறிய இருப்பியல் சிந்தனையாளர்களின் கூர்ப்பின் விகாரப்பண்பாய் ஏற்பட்டு, இனி மேல் மனிதகுலத்தில் நிலைபெறப் போகிறதா, அல்லது உதிர்ந்துவிடப் போகிறதா என்பதை இனிமேல்தான் அறிய வேண்டும். அல்லது மார்க்சியவாதிகள் சொல்ல முனைவது போல், இது ஒரு குறித்த வரலாற்றுச் சூழ்நிலையில், ஒரு குறித்த சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலையில் உண்டான சிந்தனை, இன்னுமொரு வரலாற்றுச் சூழ்நிலையில் இன்னுமொரு சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலையில் இந்தச் சிந்தனைகள் போய்விடும் என்பதா என்பதையும் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
முடிவுரை
எப்படியிருப்பினும் இருப்பியல்வாதிகளின் சில அவதானங்களாவது நம் அன்றாட அனுபவத்திற்கு உட்பட்டனவாகவே உள்ளன. வாழ்தலின் செயன்முறையிலேயே, அல்லது வாழ் நிலை அடியாயே இருப்பியல் உண்மைகள் புலப்படக் கூடுமென்பதால், இருப்பியல்வாதிகள் தங்கள் தரிசனங்களைப் புலப்படுத்துவதற்கு இலக்கிய வடிவங் களையே தெரிந்தெடுத்துள்ளனர். கெகாட் தொடக்கம் சாத்ரே, காமுல் வரையிலான இருப்பியல் வாதிகளின் படைப்புகளை உலகம் அறியும். தமிழ் இலக்கியத்திலும் —இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்திலும் கூட, இருப்பியல் வாத்த்தின் புலப்பாடுகள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. அசோகமித்திரன் புத்திபூர்வமாக இருப்பியல்வாதத்தைத் தழுவி நிற்பவர், ‘தண்ணீர்’ நாவலில் அவரவருடைய இருத்தலை அவரவரே ஆக்கிக் கொள்ள முடியும் என்ற இருப்பியல் உண்மைக்கு அழுத்தம் கொடுக்கின்றார். ஈழத்தின் மஹாகவியின் இருப்பியல் சார்புகளை நான் ஏற்கனவே, சுட்டிக் காட்டியுள்ளேன். மஹாகவியின் ‘ஒரு சாதாரண மனிதனது சரித்திர’த்தில் மாத்திரம் அல்லாமல் ஏனைய பல கவிதைகளிலும் காணப்படும் முனைவும், உழல்வும், சகிப்பும் இருத்தலின் நித்திய நிலையே. எனது சில கதைகளிலும், கவிதைகளிலும்கூட இருப்பியல் புலப்பாடுகளைக் காணலாம். (இருப்பியல் கருத்துக்களை தமிழ் வாசகர் மத்தியில் நான் அறிமுகப்படுத்த முனைகிறேன் என்பதாலும், இருப்பியலின் கொள்கை இலக்கியப் படைப்புகள் மூலமாகவே நன்கு வெளிப்படுகின்றது என்பதாலும், எனது சில கதைகளில் காணப்படும் இருப்பியல் புலப்பாட்டை நானே வெளிப்படுத்துவது தவறல்ல என்று நினைக்கிறேன்.) ‘மல்லிகை’யில் வெளியான எனது ‘மழை’ 1968ல் சாத்ரேயின் சில கட்டுரைகள் வாசித்ததின் பின்னர், மழையுடன் விடிந்த ஒருநாட் காலைப் பொழுதின் அனுபவத்தைக் கொண்டது. தெரிவு தர்க்க நியாயங்களுக்கு அப்பால் முன்கூட்டியே நடைபெறுகிறது என்பதையும், முன்கூட்டி எடுக்கப்படும் தீர்மானத்திற்குக் காரணங்களைக் கண்டுபிடித்து நியாயங்காண முற்படுகிறோம் என்பதையும், தெரிவின் இறுதிக் கட்டத்தில் பெரும் தவிப்பும், பச்சாத்தாபமும் ஏற்படுகிறது என்பதையும் அந்தச் சிறு பொழுதின் சிறு நிகழ்வு ஒன்றின்மூலம் அறிந்து கொண்டேன். அந்த உண்மை அனுபவத்தையே ஆழ்ந்து ஓர்ந்து ‘மழை’ சிறுகதையில் எழுதியுள்ளேன். இதில் மழை, புறவியமான காரணகாரிய நியாயத்தின் குறியீடாக உள்ளது. மழைக்கும் அப்பால்தான் அவன் அன்று பாடசாலை போகாத காரணம் உள்ளது. அந்தக் காரணத்துக்குப் காரணம் இல்லை. அது irrational. இதுபோலவே வில்லியம் பாறெற்றின் Man is irrational என்ற நுலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே ஏற்பட்ட ஒரு நிகழ்வை ‘உங்களுக்குப் பைத்தியமா?’ என்னும் கதையில் விபரித்துள்ளேன். ‘உங்களுக்குப் பைத்தியமா?’ என்பது எனது மனைவி ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வி. எனது irrationalityயை, நான் தரிசித்த இனிய நினைவுடன் கதை முடிகிறது. இந்தக் கதையைப் புரிந்து கொண்டோ புரிந்து கொள்ளாமலோ மல்லிகை ஆசிரியர், அதனை எனக்குத் திருப்பி அனுப்பி வைத்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். இது பின்னர், ‘அது வேறு ஆள்’ என்ற தலைப்பில் கீற்று – இதழ் 2ல் வெளி வந்த்து. அலையில் வெளியான எனது ‘நீக்கம்’ கதைகூட இருப்பில் சார்பு உடையதென்றே நினைக்கிறேன். தனக்குத் திடீரென ஏற்பட்டதென ஒருவன் நினைக்கின்ற தனது ஆனந்தமான, சலனமற்ற நிலைக்கான காரண காரியத்தை அவன் பின்னோக்கி ஆராய்வதே கதை. ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்தது போலவும் தோன்றுகிறது. அதே சமயம் அது நழுவிப் போகிறது போலவும் உள்ளது. மனித இருத்தலுக்கும் தர்க்கநியாயத் தொடர்புகளுக்கும் உள்ள பிளவைத்தான் இக்கதை காட்டுகிறது என நினைக்கிறேன். ‘அலை’ யில் வெளியான எனது ‘வெளியார் வருகை’ யிலும் இது போன்ற இருப்பியல் சார்பு புலப்படுகிறதென்றும் நினைக்கிறேன்.

‘’ . . . . . . . . . . . .
பெண்டு
பிள்ளை யாவரையும்
பொலிசில் ஒப்படைத்து
வந்து நீர் வீட்டுக்குக் காவல் இரும்’’ என்றார்.
சிந்தித்தேன்,
நாங்கள் ஒருவனைத் தீர்த்துவிட்டோம்.
நாங்களேதான்
இந்த நமனைப் பலிகொண்டோம்.
வந்தால்,
இனியும் அவர்களை மாய்ப்போம் நாம்.
‘’குத்துவோம், வெட்டுவோம்,
கொத்தி விழுத்துவோம்.
இந்த வழியே,
இனி மரணத்துள் வாழ்வோம்’’
என்றேன்,
விழித்தேன் . . . . . .

இதில் இரண்டு alternatives இல் ஒன்று தீர்மானிக்கப்படுவதையும், இந்த தீர்மானத்தின் பேரிலேயே அவர்களின் இருத்தல் நிர்ணயிக்கப்படுவதையும், அந்த இருத்தல் ‘’மரணத்துள் வாழ்வு’’ என்ற தவிப்புமிக்க, ஆனால் வீரமான ஒன்றாக இருப்பதையும் காணலாம். தீர்மானத்தின் உறுதியும், அதனால் ஏற்படும் இருத்தலின் Full commitmentஉம் கவிதையின் வீச்சத்தில் நன்கு புலனாவது போலவே எனக்குத் தோன்றுகிறது.
இவைபோலவே, ஏனைய பல எழுத்தாளர்களின் படைப்புகளிலும் இருப்பியல் அம்சங்களைக் காணமுடியும். எமது இலக்கிய விமர்சனமும் சரி, இலக்கிய விமர்சனங்களால் விகாரப் படுத்தப்பட்ட எமது இலக்கியப் படைப்புக்களும் சரி, ஒடுங்கிய ஒரு வழிப் பாதையால் போய்க் கொண்டிருக்கினறன. இன்று எமது இலக்கிய விமர்சனம் வெறும் நயப்பாக அமையும், அல்லது மார்க்சிய பிளாஸ்ரிக் சேஜரி செய்யப்பட்டதாய் இருக்கும். இந்த வரட்டுத் தனத்துக்கெதிராக்க் கனகாலமாக்க் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மார்க்சிய மெஞ்ஞானத்தின் வெளிச்சத்தில் நாம் பல உண்மைகளை அறிந்துள்ளோம். ஆனால் எல்லா உண்மைகளும் மார்க்சிய மெஞ் ஞானத்தினுள் அடங்கியுள்ளது என்றோ, மார்க்சிய மெஞ்ஞானம் தவிர்த்த ஏனையவை எல்லாம் உண்மையற்றவை என்றோ கருதுதல், சுத்தப் பாமரத்தனமாகும், அறியப்பட்ட தத்துவங்கள் அனைத்தையும் நாம் அறிந்தாக வேண்டும். அவற்றின் உண்மை பொய் களை நிறுத்தாக வேண்டும். அவற்றின் உண்மையிலும் பொய்யிலும் நடக்கின்ற இலக்கியப் படைப்புக்களை நாம் இனங்கண்டு, பெயர் சுட்டிச் சொல்ல வேண்டும். அப்போதுதான் நமது இலக்கிய விமர்சனம் வளம்பெறும் என்பதுடன், சிருஷ்டிக்கப்படும் ஒவ்வொரு இலக்கியப்படைப்பும், கணிக்கப்படுகின்ற இலக்கிய ஜனநாயகம் உருவாகும். அல்லது, காட்டில் எறித்த நிலாவாக, பாதையில் உதிர்ந்த காட்டுப் பூக்களாக, எத்தனையோ படைப்புகளின் உண்மைப் பொருளை நாம் இழந்து விடுவோம்.
குறைந்தபட்சம் இந்த இலக்கிய நோக்கிலாவது, எமது இலக்கிய விமர்சகர் களாவது இருப்பியல்வாத்த்தைப் புரிந்து பிரயோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.