இன்றையத் தமிழ் கவிதைப்பற்றிச் சில அவதானங்கள் IV

முற்கூறியவற்றிலிருந்து, கவிதை, பற்பல நோக்கங்களை முன்னிட்டும் பற்பல வகையாக எழுதப்படுகின்றதாயினும் அவற்றுள் வாழ்நிலையின் அடியாகப் பிறக்கும் கவிதைகளே பிரதானமானவை என நான் கருதுவது புலப்பட்டிருக்கும். வாழ்நிலையின் அடியாக எழும் கவிதைகளைப்பற்றியே இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியுள்ளது. எனினும் அதற்கு முன்னர் இன்னுமொரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் நன்று,

ஆரம்பத்தில் நாங்கள் பெரும்பாலும் இரண்டு காரணங்களை அல்லது இரண்டிலொரு காரணத்தை முன்னிட்டே கவிதைகள் எழுதத் தொடங்குகிறோம், ஒன்று, கவிதை என்ற இலக்கியவடிவத்தில் நமக்கு ஏற்படும் கவர்ச்சி. இது சிலருக்கு செய்யுள் என்ற மொழியுருவத்தில் ஏற்படும் கவர்ச்சியாக அமைதலும் உண்டு. மற்றது, கவிதை அல்லது செய்யுள் எழுதுதல் ஒரு பெரிய விஷயம் என்றும் அதை எழுதுகின்றவர்களை மற்றவர்கள் விசேஷமாய்க் கனம் பண்ணுகிறார்கள் என்றும் ஒரு அபிப்பிராயத்திற்கு உட்படுதல், கவிதை படிக்கின்றவர்களின் தொகை மிகவும் குறைவு என்று நாம் எவ்வளவு கூறிக்கொண்ட போதிலும், ‘’கவிஞர்’’ என்ற அந்தப் பட்டத்திற்கு நாட்டில் உள்ள கவர்ச்சி நாம் அறிந்ததே. சிறுகதை எழுதும் ஒருவரை அல்லது நாவல் எழுதும் ஒருவரை ஒரு கூட்டத்தில் பேச அழைக்கும் போது, நிகழ்ச்சி நிரலில் அவருடைய பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ சிறுகதையாசிரியர், நாவலாசிரியர் என்று போடவேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு இல்லை, ஆனால் கவிதை எழுதுகின்ற ஒருவரின் பெயரை ஒரு நிகழ்ச்சி நிரலிலோ, அதைப் போன்ற வேறெதிலோ போட நேரும் போது, நாம் அதிகமாக யோசிக்கிறோம் – ‘கவிஞர்’ என்று முன்னுக்குப் போடாமல் விட்டால் கோபித்துக் கொள்வாரோ, என்னமோ என்று. அதே போல பத்திரிகையில் சிறுகதை அல்லது தொடர்கதை ஒன்று வெளிவரும் போது அதை எழுதியவரின் பெயரின் முன்னாலோ, பின்னாலோ எந்நேரமும் சிறுகதையாசிரியர், அல்லது நாவலாசிரியர் என்ற ஒருவகையான டெசிக்கினேஷன் ஒட்டிக் கொண்டிருப்பதை நாம் காண்பதில்லை. ஆனால் கவிதை எழுதியவரின் பெயரின் முன்னால் மாத்திரம் பல தடவைகளில் அந்த டெசிக்கினேஷன் ஒட்டப்படுவதைக் காண்கிறோம். கவிஞர் என்பவர் ஒரு தனிச் சொரூபம் எனபது போல் ஆகி விடுகிறது. ஆனால் பிறமொழியாளர்களிடம் இத்தகைய கவிஞர் சொரூபமோ, கவிஞர் என்ற பட்டத்தில் இத்தகைய கவர்ச்சியோ இல்லை என்பதைக் காணும்போதுதான் நமது கவிசிரோன்மணிகளுக்குள்ள பேராசையின் அவலம் தெரிகிறது.

இவ்வாறான இரண்டு காரணங்களினாலும், அல்லது இரண்டில் ஒரு காரணத்தினால் கவிதை எழுதத் தொடங்குகின்ற நாம் கவிதையைப் பற்றியோ அல்லது கவிதை எழுதும் உத்தி நுணுக்கங்கள் பற்றியோ எந்தத் தெளிவான அபிப்பிராயங்களோடும் தொடங்குவதில்லை, தொடங்கவும் முடியாது. கம்பன் என்றால் என்ன, காளிதாசன் என்றால் என்ன, எல்லோருடைய ஆரம்பமும் இப்படித்தான், ஆரம்பத்தில் வந்த வந்த வழிக்கு உள்ள ஒரு பின்பற்றலே உண்டு. நம்மவர்கள் குறியீட்டுக் கவிதைகளை எழுதினார்கள். படிமக் கவிதைகளை எழுதினார்கள். சந்தக் கவிதைகளை எழுதினார்கள். புதிய புதிய உவமானங்களைத் தேடித் தேடி, அதுவே கவிதை என்று எண்ணிக் கொண்டு எழுதினார்கள். கால் நுற்றாண்டுக்கு மேல் கவிதை எழுதிய நம் முது பெரும் கவிஞர்கள், ‘’கவிதை என்பது என்ன தம்பி, ‘அதைப் போல இது’ என்று சொல்வது தான் கவிதை’’ என்று கூடச் சொன்னார்கள். திருப்பதிகாரங்கள் பாடிக் கொண்டு தம்முடைய கவிதையைத் தொடங்கியவர்கள் பலர். தமிழரசுக்கட்சிக்கு இசைவாகப் பாடல்களை யாத்துக் கொண்டு தம்முடைய கவிதையைத் தொடங்கியவர்கள் பலர். அந்த தமிழுணர்ச்சிப் பாடல்களைக் கண்டு இப்போது அவர்கள் வெட்கப்படுகிறார்கள். தம்முடைய தொகுதிகளில் அந்தப் பாடல்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று கூறி, அந்தவகைப் பாடல்களை உணர்ச்சிக் கவிஞர்களுக்கே தானம் செய்து விட்டு, தாம் வேறு வகையான கவிதைகளில் முயற்சிக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால், நாங்கள் ஏதோ ஒரு பின்பற்றலோடு தொடங்குகிறோம். ஆனால் நாளடைவில் ஒவ்வொருவரும் தத்தமக்கு கவிதையில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொண்டு, பற்பல சூழற்காரணிகளினாலும் அமையும் ஒரு நெறியில் நமது கவிதா சிருஷ்டித் திறனை அல்லது சிலர் தமது செய்யுள் கோக்கும் திறனைச் செயற்படுத்துகிறோம்.

அதாவது, பெரும்பாலும் தனிப்பட்ட கவிஞர்களின் கவிதைப் போக்கு எக் காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தமது வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு தளங்களுக்கு தமது கவிதைப் போக்கை, பிரக்ஞை பூர்வமாகவோ, பிரக்ஞை பூர்வமில்லாமலோ மாற்றி, நெறிப்படுத்துகிறார்கள். தனிப்பட்ட கவிஞர்கள் தம்முடைய போக்கை மாற்றி நெறிப்படுத்திக் கொள்வதைப் போல ஒரு மொழித் தொகையினர், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட சமூக உறவைக் கொண்டிருப்பவர்கள், கூட்டமாகவும், தமது கவிதைப் போக்கை காலத்துக்குக் காலம் நெறிப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நெறிப்படுத்தலுக்கே, அதன் மிக விரிவான அர்த்தத்தில் விமர்சனம் என்று பெயர். அத்தகைய நெறிப்படுத்தலுக்கான சில ஆலோசனைகளையே நான் பின்வரும் பந்திகளில் எடுத்துக் கூறப் போகிறேன். அதனால் தமிழ் கவிதைகளின் போக்கு இப்படித் தான் இருக்க வேணும் என நான் விதிப்பதாக யாரும் கருதத் தேவையில்லை. கவிஞனுக்குரிய சுதந்திரத்தில் நான் கைவைக்கிறேன் என்றும் யாரும் குறைபட்டுக்கொள்ள வேண்டாம், அப்படி ஒன்றும் நேர்ந்து விட முடியாது. நமது கவிதைப் போக்கின் சில அம்சங்களைக் குறித்து யோசனை பண்ணுகிறோம். அவ்வளவுதான்.

V
வாழ்நிலைக் கவிதைப்பற்றிச் சொல்லும் போது ‘’சேதனபூர்வமாய், இயக்க ரீதியாய் சிருஷ்டிக்கப்பட்ட வாழ்க்கைக்களத்தில் வாழ்நிலைகளின் முரண்பாடுகளை மக்களுக்குப் புலப்படுத்திச் செயலூக்கம் கோருவது……’’ என்றும், வாழ்க்கைக் களத்தையும் வாழ்நிலையையும் இணைத்து, பூரணமாக இயக்க முறையில் முரண்பாடுகளின் தடங்களையும் சுவடுகளையும் தொட்டுக்காட்டுதல் . . . .’’ என்றும் எழுதினேன்.

இனி யாருடைய வாழ்நிலை என்பதுதான் அடுத்த கேள்வி.

‘மக்களுடைய வாழ்நிலை’ என்பது மட்டும் இதற்குரிய பதிலாகாது. நம்முடைய சமுதாயத்தில் எல்லா மக்களும் ஒரேவிதமான வாழ்நிலையைக் கொண்டிருந்தால் நாம் அப்படி ஒரு பதிலைச் சொல்ல முடியும். ஆனால் இங்கு அந்த நிலை இல்லை. மாதம் இரண்டாயிரம் ரூபாய் வருமானம் உடையவரின் வாழ்நிலைக்கும், மாதம் இரு நுறு ரூபாய் வருமானம் உடையவரின் வாழ்நிலைக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு, இந்த வருமான வித்தியாசம் வெறும் ரூபாய்களின் வித்தியாசம் அல்ல. அந்த ரூபாயோடு ஒட்டிய விருப்பு, வெறுப்பு, சிந்தனை, செயல், போக்கு, லட்சியம் எல்லாவற்றிலும் வித்தியாசம் உண்டு. அதனால்தான் எந்த மக்களின் வாழ்நிலை என்பதை நாம் வேறுபடுத்தி அறியவேண்டியே உள்ளது.

சமுதாயத்தில் ஏழை பணக்காரன் என்பதை நாம் வேறுபடுத்தி அறிய முடியுமானால், இலக்கியத்திலும் நாம் ஏழையின் இலக்கியம் என்றும், பணக்காரனின் இலக்கியம் என்றும் வேறுபடுத்தி அறிய முடியும். நமது வாழ்நிலையின் அடிப்படையில், ஏழையினுடையவும், பணக்காரனுடையவும் விருப்பு, வெறுப்பு, சிந்தனை, செயல், போக்கு, இலட்சியம் இவைகளுக்கிடையில் வேறுபாடு உள்ளதை நாம் ஒப்புக் கொள்ள முடியுமானால், அவற்றினடியாக எழும் இலக்கியத்திலும் அந்த வேறுபாட்டைக் கண்டு கொள்ளமுடியும்.

‘ஏழையின் இலக்கியம்’, பணக்காரரின் இலக்கியம்’ என்ற பாகுபாடும் சொற்றோடரும் சிலருக்கு புதிதாகவும், சுவையற்றதாகவும் தோன்றலாம். ஆனால் அவர்கள் இஸ்லாமிய இலக்கியம் என்றும் கிறிஸ்தவ இலக்கியம் என்றும் கேள்விப்பட்டிருப்பார்கள், ஒரு கலாச்சார அடிப்படையில் உள்ள சில சில்லறை வித்தியாசங்களை அவர்கள் அங்கு இனங்கண்டு கொள்கிறார்கள். ஆனால் ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ இலக்யித்தினுள்ளும் ஏழையின் இலக்கியமும், பணக்காரனின் இலக்கியமும் உண்டு. வாழ்நிலையின் அடிப்படையில் உள்ள இந்த வேறுபாடு வெறும் கலாச்சார அடிப்படையில் கூறப்படும் போலியான தோற்ற வேறுபாடுகளை விட மிகவும் ஆழமானதும், ஊடுருவல் மிக்கதும் ஆகும்.

கலாச்சார அடிப்படையில் உள்ள சில்லறை வேறுபாடுகளை நாம் புறக்கணிக்கக் கூடியது போல, வாழ்நிலையின் அடிப்படையில் உள்ள வேறுபாட்டை யாரும் புறக்கணிக்க இயலாது. ஒரு ஏழைக்கும் பணக்காரனுக்கும் பொதுவாய் உள்ள சில உடலியல் உணர்ச்சிகளை வைத்துக் கொண்டோ அல்லது அவர்களுக்குப் பொதுவாய் உள்ளதாகக் கூறப்படும் சில தார்மீக, ஆன்மீக உணர்வுகளை வைத்துக் கொண்டோ இரண்டு வர்க்கத்தினருக்கும் பொதுவான இலக்கியம் செய்ய இயலாது. ஏனென்றால், அந்தப் பொதுவான உணர்ச்சிகளினதும் உணர்வுகளினதும் வெளிப்பாட்டின் தன்மையையும் முறையும் அவரவரின் வாழ்நிலையே பெரிதும் தங்கியுள்ளது. எடுத்துக் காட்டாக, ஒரு ஏழை இளைஞனுடைய காதலையும், ஒரு பணக்கார இளைஞனுடைய காதலையும் எடுத்துக் கொள்வோம். காதல் ஒன்றேயாயினும், காதல் நிகழும் சம்பவங்கள், சுற்றாடல், காதலரின் பேச்சுமுறை, காதலரின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் ஒன்று போல் இராது என்பது மாத்திரமல்ல, நேர்முரண்பாடு உடையதாகவும் காணப்படும். ஒரு பணக்கார இளைஞனின் காதல் கதையைப் படிக்கின்ற ஒரு ஏழைக்கு அந்த கதையனுபவத்தோடு ஒன்றித்துக் கொள்வது முடியாது. அதே போல ஒரு ஏழையின் காதல் கதை ஒரு பணக்காரனுக்கு தன்னுடையதைப் போன்றிராது. நல்ல உடையணிந்து, ஆலப்புழைக்குச் சென்று சினிமா பார்ப்பது, இரண்டு ஏழைத் தம்பகளின் நிறைவேறாத கனவாக இருந்தது என்று தகழி எழுதுவதைக் கேட்டு, ஒரு பணக்காரன் அப்படியும் இருந்திருக்குமா என்று கேட்காமல் இருக்க முடியாது. நுஃமான் ‘’எங்கள் அடுப்பில் எரியா நெருப்பு . . . ‘’ என்று எழுதியபோது, ‘நெருப்பு எரியாத அடுப்பும் எம்மிடையே உண்டோ?’ எனக் கேட்டவர்கள் பலர். அல்லது ஒரு பிரசவத்தை எடுத்துக் கொள்வோம். கர்ப்பக் குடலில் நோவும் யோனி வழியாக சிசு வெளிவருதலும், பிள்ளையை ஈன்றெடுத்ததும் ஒரு தாயிடம் ஏற்படும் ஆறுதலும் ஆனந்தமும் தவிர அங்கு வேறு எதுவும் பொதுவில்லை. இரண்டு பிரசவங்களையும் நிகழ்ச்சிப்படுத்த முனைகின்ற ஒரு கைதேர்ந்த கவிஞன் அல்லது கதாசிரியன் முதற்கூறியவற்றை விட மற்றெல்லா வகையிலும் ஏழை ஏழைதான் பணக்காரன் பணக்காரன்தான் என்பதை உணர்வான். ஏனென்றால் மனித உணர்ச்சிகள் சில எவ்வளவு பொதுமைப் பாடுடையவனாக இருப்பினும், அவைகள் அந்தரத்தில் தொங்கக் கூடியவை அல்ல. அவை வாழ்நிலைப் புலத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்களினூடும் வார்த்தைகளினூடும் வெளிவர வேண்டியனவே.

ஆகவே ‘ஏழையின் இலக்கியம்’ என்பதும், ‘பணக்காரரின் இலக்கியம்’ என்பதும் சிலருக்கு எவ்வளவு ரசக்குறைவாய்ப்படக் கூடிய போதிலும், அவை உள்ளவைகளாகும். இவைகளையே நாம் முறையே உழைப்பாளர் வர்க்க இலக்கியம் என்றும் பிரபுத்துவ – முதலாளித்துவ வர்க்க இலக்கியம் என்றும் பெயரிட்டு அழைக்கின்றோம்.

VI
இவற்றில், பிரவுத்துவ முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிபலிக்கின்ற கவிதைகளைப் பற்றியோ, அவர்களின் ஏனைய இலக்கிய வடிவங்களைப் பற்றியோ நமக்குக் கவலை இல்லை. பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கத்தின் முடிவை நாம் எதிர்பார்ப்பது போலவே, அந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்களின் முடிவையும் நாம் எதிர் பார்க்கிறோம். நமது கவனமெல்லாம் உழைப்பாளர் வர்க்கத்தைப் பிரதிபலிக்கின்ற – பிரதிபலிக்க வேண்டிய – கவிதைகளையும் இலக்கியங்களையும் பற்றித்தான். ஏனென்றால் எங்கள் வாழ்நிலையில் மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட வேண்டும். எங்கள் உழைப்பையும் வாழ்வையும் உறிஞ்சும் பேய்களாக எமது அருமைச் சகாக்கள் மாறுவதை நாங்கள் இனியாகிலும் தடுக்க வேண்டும். அதனால், எங்களுடைய இலக்கியம் எங்களுடைய வாழ்நிலையினின்று எழுந்து எங்களுடைய இந்த ஆசைகள் மீதும் கனவுகள் மீதும் படர வேண்டும். ஆகவேதான் எமது வர்க்கத்தில் உள்ளவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்று நாங்கள் கூர்ந்து கவனிக்கின்றோம்.

இன்று எழுதுகின்றவர்களில் பெரும்பாலோர் எமது உழைப்பாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. அதிகமானோர், முந்நூறு ரூபாய்க்கு உட்பட்ட மாதாந்தச் சம்பளமுடைய ஆசிரியர்கள் அல்லது லிகிதர்கள். ஆங்காங்கே, பெரும் குடும்பப் பொறுப்புக்களுடன், ஐந்நூறு அறுநூறு ரூபாய்ச் சம்பளம் பெறும் சில பட்டதாரி ஆசிரியர்களும் உத்தியோகஸ்த்தர்களும் உண்டு. ஆனால் இவ்வளவு பரந்துள்ள இந்த ஏழை எழுத்தாளர்கள் என்ன எழுதுகின்றார்கள்? சிலர் சுத்த கலைவாதிகள், சிலர் அகநோக்கு வாதிகள், சிலர் ஜீவகாருணியர்கள். சிலர் தமிழ்த் தேசியம் பேசும் உணர்ச்சிக்கவிகள். பலர் பொன்னாடையும் புகழுடம்பும், சாகித்திய மண்டலப் பரிசும் வேண்டும் புலவர்சிகாமணிகள்.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள்? ஏன் இவ்வாறு தங்கள் வாழ்நிலையை மறந்தார்கள்? இதற்குப் பல காரணங்களைச் சொல்ல்லாம். ஒன்று, பாரதியார், பாரதிதாசனார், நாமக்கல்லார் ஆகிய தேசியக் கவிகளின் பாதிப்பு. இரண்டாவது மேற்கேயிருந்து பல சந்து பொந்துகளினாலும் ஈழத்துள் இறங்கிவிட்ட சிம்பாலிசம் (குறியீட்டுமுறை) இமேஜிசம் (படிமத் தொகுப்பு) ஆகிய கவிதை முறைகளும், அவைகளைப் பற்றி விதந்து செய்யப்பட்ட விமர்சனப் போலியான நயப்புரைகளும். மூன்றாவது கவிப்பொருளின் தேக்கத்தினாலும், இன்னும் பல்வேறு காரணங்களினாலும் நமக்குள் நுழைந்து விட்ட சந்தைப் பைத்தியம். நான்காவது, இந்த உலகம் சாசுவதமானதல்ல, அந்த உலகமே சாசுவதமானது என்ற நம்பிக்கையும், அவற்றைத் தெரிவிக்கும் பாடல்களுக்கு இருந்த வரவேற்பும். ஐந்தாவது பெயரிலும் புகழிலும் ஆசையையும் போட்டியையும் தூண்டக்கூடிய முதலாளித்துவ அமைப்புச் சூழலும், முதலாளித்துவப் பத்திரிகை உலகும்.

VII
இவ்வாறெல்லாம் சொல்லும் போது, எழுதப்படுகின்ற கவிதைகள் எல்லாம் வர்க்கப் போராட்டத்தைக் பிரசாரிப்பதாக அமைய வேண்டும் என்றோ அல்லது உழைப்பாளர் வர்க்க இலக்கியத்தில் அழகுணர்ச்சிக்கும் வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் இடமில்லை என்றோ நான் சொல்வதாகக் கருதக்கூடாது. வர்க்கப் போராட்டத்தின் பால் உள்ள ஆர்வ மிகுதியால் இலக்கிய உணர்வின் தாற்பரியத்தை விளங்கிக் கொள்ளமாட்டாத இலக்கியத்திற்குப் புறம்பாகவுள்ள சில தோழர்கள், செய்கின்ற ஒருவகைச் சன்னியாச உபதேசம் அது. அவர்கள் நம்மையும் ‘’அடியடா, குத்தடா, வெட்டடா, எங்கள் அணி திரளுது, உங்கள் அணி முறியுது’’ என்ற சில வர்க்கப் போராட்டப் பிரச்சாரங்கள் எழுதுவதைப் போல எழுதச் சொல்கிறார்கள். இலக்கியம் எப்படி சமூக உணர்வுகளின் மெய்ப்பாடாகி, எப்படிச் சமூக மாற்றங்களுக்கு அடிகோலுகிறது என்பதை அறியமாட்டாத கற்றுக்குட்டி கம்யூனிஸ்டுகள் அவர்கள். உண்மை என்னவென்றால், எங்களுடைய இலக்கியம், எங்கள் வாழ்நிலையை எங்களின் அனுபவம் ஆக்கித் தர வேண்டும். எங்கள் வாழ்நிலையின் சந்து பொந்துகளையெல்லாம் வெளிக் கொணர்ந்து தர வேண்டும். இவைகளை இன்ன இன்ன முறையில்தான் ஒரு கவிஞனோ கதாசிரியனோ செய்ய வேண்டும் என்று விபரணப் படுத்த முடியாது. அது எத்தனையோ வண்ணமாக வெளிப்படும். அது எவ்வாறு வெளிப்படுத்தப் பட்டபோதும், அதில் சோடிக்கப்படாத, சாயந்தீட்டப்படாத எங்களின் உண்மையான வாழ்நிலை பிரதிபலிக்கப்பட்டால், அந்தப் படைப்பு நிச்சயமாக தவிர்க்க முடியாத அந்தச் சரித்திர இயக்கவியல் ரீதியான சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது என்று அர்த்தம். இந்த உண்மையை முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சில விமர்சகர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் முற்போக்கு இலக்கியம் பற்றி சில வாய்ப்பாட்டு உருக்களைச் செபித்துச் கொண்டு, எமது உழைப்பாளர் வர்க்கத்தின் கலை வளத்தை வறளச் செய்து விடுவார்களோ என்ற அச்சம் எம்மில் பலருக்கு உண்டு.

VIII

இறுதியாக வாழ்நிலைக் கவிதையின் கலையாக்கம் பற்றிச் சிறிது கூற வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டதைப் போன்று ஒவ்வொரு வகையான கவிதையிலும் ஒவ்வொரு வகையான கலையாக்கம் சம்பந்தப்பட்டுள்ளது. சந்தக் கவிதைகளிலும் ஓசைக்கோப்பு, குறியீட்டுக் கவிதைகளில் சில படிமங்களுக்குப் பல்வேறு அர்த்தப்பாடும் தோன்றச் செய்தல், படிமக் கவிதைகளில் திடமான, பிரகாசமான, கண்ணாடிப் பளிங்கு போல் தெளிவான சில படிமங்களை உருக்கொள்ளச் செய்தல், சில தமிழக இதழ்களில் வெளியாகும் புதுக்கவிதை எனப்படுவனவற்றில் கண்விடுக்காத படிமங்களை அமைப்பது, இவ்வாறு, கவிதையின் பல விதமான கலைப்பாணிகளுக்கு மத்தியில், நாம் நமது வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் கலையாக்கம் பற்றி அவதானிக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதன் பொதுவான முக்கிய அம்சங்களை சுருக்கமாகப் பின்வருமாறு நிரைப்படுத்தலாம்.
1. முதலாவதாக, பளிச்சென்று தெரிவது இந்தக் கவிதைகளில் உள்ள ஒரு நேரடித் தன்மை. எந்த மங்கலுக்கும், கலங்கலுக்கும், கூடாரத்தத்திற்கும் இடமில்லை. குறிப்பாக உணர்த்தப்படக் கூடுமாயினும் வாழ்நிலையின் புலப்பாடுகள் மூலம் அது தெளிவாக்கப்பட்டிருக்கும்.
2. இரண்டாவது, சக்குசக்கு என்று சதகத்திலும் பதிகத்திலும் வருவது போல், ஒரே விஷயம் ஒவ்வொரு பாடலிலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்காது.
3. மூன்றாவது, சொல்லப்படுகின்ற விஷயம் வாழ்நிலை-நிகழ்ச்சிப் புலப்பாடுகளினூடாக முதலிலிருந்து கடைசிவரையும், ஒரே அங்கமாக வளர்க்கப்பட்டிருக்கும், (இதன் காரணமாகவே, இத்தகைய கவிதைகள் பெரும்பாலும் கலிவொண்பா, அகவல் போன்ற உருவங்களில் எழுதப்படுகின்றன போலும்)
4. நான்காவது, மேற்கூறிய தன்மையின் பிரதிபலிப்பாக, இவைகளில் பெரும்பாலும் ஒரு இயக்கமும் நாடகப் பண்பும் காணப்படும்.
5. ஐந்தாவது, இவ்வாறிருப்பதினால், இந்தக் கவிதைகள், வாசகனுக்குச் சில விஷயங்களை அறிவிக்க வேணும் என்ற முறையில் எழுதப்பட்டிருக்க மாட்டா. உணர்வு ரீதியாக வாசகனிடம் பாதிப்புகளை ஏற்படுத்துவதே இக் கவிதைகளின் நோக்கம். ஆகவே எப்படிச் சித்தரித்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று அனுமானிக்கும் சிருஷ்டி ஆற்றலின் வழிபட்டு நிற்கும். சிருஷ்டி ஆற்றல் இல்லாதவர்கள் இத்தகைய கவிதைகளை எழுதுவது சிரமம்.
6. கடைசியாக, இக்கவிதைகளில் பாவிக்கப்படும் மொழிநடை! யாப்பமைதிக்கு உட்பட்ட இடத்தும் இயல்பான பேச்சோசை இன்றியமையாதது, நுஃமானுடைய பேச்சுமொழியும் கவிதையும் என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் சிறு சிறு வாக்கிய அமைப்பும், இயல்பான சொற்கோப்பும் கொண்டு விளங்கும். செய்யுள்களைப் பாடிக் கொண்டு ஓசையைச் செழுமைப்படுத்தல் இக்கவிதைகளுக்குப் பொருந்தாது. சொற்களின் இறுக்கத்தாலும், செறிவாலும், தெறிப்பாலுமே இக்கவிதைகளுக்கு ஓசைப்பாங்கான மெருகேற்ற முடியும்.

இந்த அம்சங்கள் முழுவதையும் அல்லது, அவைகளில் பெரும்பாலான வற்றைக் கொண்டு, சிறந்து விளங்கும் வாழ்நிலைக் கவிதைகளுக்கு நீலாவணனின் உறவு, நுஃமானின் நிலம் என்னும் நல்லாள், மஹாகவியின் சீமாட்டி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் இவைகள், ‘’வாழ்நிலைக் கவிதைகள் செயலூக்கம் கோருவன’’ என்ற கூற்றோடு ஒத்துப்போகுமா எனச் சிலர் யோசிக்கலாம். அப்படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் செயலூக்கம் பலவழிகளில் கோரப்படலாம். உதாரணமாக, மனைவி குசினிக்குள் இருந்தபடி, ‘’விறகும் இல்லை, ஒன்றுமில்லை, எப்படிக் கறியாக்குவதோ?’’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் சொல்கிறாள். உடனே கணவர் கோடரியை எடுத்துக் கொண்டு விறகு பிளக்கச் செல்வான். ‘’விறகு பிளந்து கொண்டு வாருங்கள்?’’ என்று அவள் குறிப்பிட்டுச் சொல்லாததினால், விறகு பிறக்கின்ற செயலூக்கத்தைக் கணவன் பெறாமல் இருப்பதில்லை. இன்னும் சரியாகச் சொன்னால், ‘’விறகு பிளந்து கொண்டு வாருங்கள்’’ என்று மனைவி கணவனுக்குச் சொல்வதை விட, முன் கூறியது போல அவள் சொல்வதே அதிக பாதிப்பை உடையது என்பதைக் கணவன்மார்கள் உணர்வார்கள். ஆனால் வீட்டில் விறகு பிளந்து பழக்கமில்லாத கணவன்மாருக்கு அது புரியாவிட்டால் நாம் என்ன செய்யலாம்?

Leave a Reply

Your email address will not be published.