உறவு

மூளையின் அடி இழையங்களில்…. பிரக்ஞைகளும் பிரக்ஞைகளின் பிரதித் தாக்கங்களும்… அந்தப் பின்னல் வலைத் கோர்ப்பிலே ஒன்று தவறியதால் எல்லாமே விகார ரூபமாகி, மூச்சுத்திணறி முகம் வியர்க்க …

படாரென்று விழிக்கதவுகள் திறக்கின்றன. பாயும் பழந்தலையணையும் பொருந்திய சாணம் பூசிய தரையில் புரண்டு உருள்கிறார் கற்பக்க கிழவர்.

‘சீ …. என்ன கனவு ?’

முகத்தில் அரும்பி மொய்த்த உப்பு நீர்த்துளிகளை வெறும் கையாலேயே நீவித் துடைத்து விட்டு நெஞ்சத்தின் சம்மட்டி அடிகளைச் சாந்தப்படுத்தி, கூவுகின்ற சேவல்களின் தொனியைக் கொண்டு சாமத்தைக் கணக்குப் போடுகிறார்.

கடைச்சாமந்தான்.

எழுந்திருக்கின்றார். பாயில் சிதறிப் போய்க் கிடக்கும் போர்வையை அள்ளி எடுத்து மேனியை மூடுகின்றார். அந்த ஒன்றிலேயேஆயிரம் நினைவுகளைப் படரவிட முடியும் ஆனால் சிறிது காலமாக அந்த சுகபோக சிந்தனைகளை யெல்லாம் மிஞ்சி நின்ற ஒரு நினைப்பு.. அந்த நினைப்பை ஒட்டியுரித்த அந்த கனவு….

கொளுக்கி போட்ட அந்தத் தெத்துப்பல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருகிறார். இனி விடிந்துவிடும்.

‘கொக்கரக் கூ…’

பின்னடைந்த நிலா பழுத்த வேப்ப மரத்தின் ஊடாக, அந்த தாழ்வார ஓடையில் பாய்ச்சும் ஒளித்திரளில் ஒரு வயோதிபத் தன்மை உள்ளது என்னவோ உண்மைதான். அதற்காக, இந்தச் சேவல்களுக்கு ஏன் இந்தக் கிண்டல்?

ஓன்றுக்குப் போய்வந்து செருமிக் காறித் துப்பிவிட்டு, முற்றத்தில் நின்று, மேற்கே அடுத்த வளவில் நிமிர்ந்து நிற்கும், தன் மகனுடைய அந்தப் பெரிய கல்வீட்டை ஒருமுறை பார்க்கிறார். சில மாதங்களுக்கு முன்வரை, பல வருஷங்களாக, மகன் வீட்டு சாய்மனைக் கதிரையும் சாப்பாடுமாயிருந்த நாட்களில், அந்தக் கல்வீட்டிலிருந்து கொண்டே, இந்தக் களிமண் குடிலை இதுபோன்ற வேளைகளில் அவர் பார்ப்த்ததும் உண்டு.

வாழ்க்கையின் அந்திமக் காலத்திலே, பழைய பாசங்களும் பற்றுகளும் தலை நீட்டும் என்பது உண்மைதானோ?

மகன் வீட்டு வளவுக்கும் தன்னுடைய வளவிற்கும் உறவு கற்பித்துக் கொண்டிருக்கும், அந்த திறந்த பெரிய கடப்பை சற்றுக் கூர்ந்துதான் பார்க்கிறார் – அது ஒன்று போதாதா?

திரும்பவம் ஒரு முறை செருமி காறித் துப்பி விட்டு திண்ணை வளைக்கு முடங்கி, அறைக்குள் புகுந்து வெற்றிலை உரலைத் தடவுகிறார். கதவு பாதி வழியிலேயே தங்கிவிடுகிறது.

திடீரென்று மோதிச் சிலிர்க்க வைத்த குளிர் காற்றை ஓங்கி அறைந்து துரத்துவது போல், வெற்றிலை உரலைக் கையில் எடுத்தபடியே கதவைத் தள்ளி விடுகிறார். அந்த ஓட்டைக் கதவு அவர் நினைவைப் போல மீண்டும் வந்து பாதி உறக்கத்தில் ஆழ்கிறது.

திரும்பவும் குளிர் காற்று வருகிறதா என்று பார்ப்பது போல், சற்றே தலையை நீட்டி முற்றத்தை ஒரு முறை நோக்குகிறார். சிந்தனையை எங்கோ பதித்துச் சிதற விட்ட நோக்கு. எனினும், நிலவு மேலும் மங்குகிறது. என்பது, அவர் நினைவைப் போலவே, அந்த நினைவில் ஓடி மறைகிறது.

சேவல்கள், தொடர்ந்து நீண்ட நேரம் கூவி, தங்கள் நித்திய கடமையை முடித்துக் கொண்ட நிறைவொடு ஓய்வு கொள்கின்றன.

நிலவு மேலும் மங்க முற்றத்தில் குமர் இருள் படிகின்றது. கிழவர் வெற்றிலையை இடித்து முடிக்கிறார்.

விரலால் குடைந்து, வெற்றிலைத் துவையலை இடது கையில் கொட்டி, அதை வலது கையில் வாங்கி வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டே படிக்கத்தைத் தடவுகிறார். வாயில் எச்சில் நிறைந்து வழியுமுன், படிக்கம் கையிலே அகப்பட்டதில் ஒரு திருப்தி.

படிக்கத்துள் துப்பி விட்டு, குதப்பலை மேலும் கீழும் புரட்டியபடி, கழன்று கிடந்த போர்வையைத் தூக்கிவிட்டு சம்மணம் கோலி, கை, காற் பெருவிரல்களைத் தட்டி வருடிவிட, மனம் தீவிர சிந்தனையில் முழுகி முக்குளிக்கிறது.

‘……… இவன் என்ர மகன் இப்படிச் சொல்றானே எண்டு போட்டு, நாம இன்னமின்னம் ஒதுங்கிற்று இருந்தா…..? கல்வீட்டு மண்டபத்தில காலுக்குமேல கால் போட்டுத்து இருந்தாப்பல போதுமா? என்ர சாதிசனங்கள்? அவனுக்கென்ன …….. வெள்ளக்காறத் தொர ! காற்சட்டையும் மேற்சட்டையுமா இங்கிலிசும் பேசிக் கொண்டு, தன்ர தரவடியோடு திரியுறான். அதுக்காக நம்மட சாதிசனம்? ….. நாம வேர்விட்ட மண்ண மறந்து போறதா? அட அப்படித்தானே இவ்வளவு காலமும் இருந்திட்டம்.! ….சேச்சே, என்ன கனவு அது-எல்லாம் அப்படியே அழிஞ்சு போச்சே!….’

நினைவு நீள்கிறது.

குமர் இருள் பிரிய, நிலம் பால் கோப்பையின் சாயலிலே வெளுக்க, பனி நீலிக் கண்ணீர் வடிக்கிறது. உலகை வாட்டிய குளிர் இரவின் பிரிவுக்கு, இவ்வாறு நீலிக் கண்ணீர் வடிப்பதை,உலகம் என்றும் ஒப்புக் கொண்டதில்லை. உறவின் தாம்பத்தியத்தில் நம்பிக்கையுள்ள பறவைகளின் ஒலியோடு கலந்து, கற்பகக் கிழவரின் முற்றத்தில் வரிசையாக உள்ள செவ்வரத்தம் செடிகளில் மொட்டுக்கள் அவிழ்ந்து மலர்கின்றன.

அதே தாம்பத்திய ஒலியில் கலந்து, நேற்று மலர்ந்த மலர்கள் இரவில் குவிந்து இன்றும் அதே ஒலியில் சங்கமித்து மயங்கி மண்ணில் சேர்கின்றன.

புதிய நம்பிக்கை கொண்ட கற்பகக் கிழவர், பனியின் நீலிக் கண்ணீருக்கு முக்காடு போட்டு, பறவைகளின் தாம்பத்திய ஒலிகளுடன் கலந்து பரவ, தாமும் சுருட்டுப் புகையைத் தூபமிட்டவாறு, தேடாக் கயிற்றினால் கட்டியிருந்த பீப்பாத் தகரப் படலையை அவிழ்த்துக் கொண்டு, ஒழுங்கையில் இறங்கி, வேட்டியை இடுப்பின் பின்புறமாக ஒரு சாரச் செருகிக் கொண்டு வழக்கமான பாய்ச்சல் நடைபோடுகின்றார்.

பிரதான வீதியில் ஏறி, வருஷா வருஷம் வீமன் வாள் மாற்றும் சந்திக்கு வந்து கிழக்கு நோக்கித் திரும்பி நிலத்தோடு நிலமாக சமத்துவமாகிவிட்ட திரௌபதி அம்மன் ஆலய வீதியின் புழுதி மண்ணில் கால் வைக்கிறார். அந்தைக்கு இரண்டு பாகம் கிடுகுகள் சரிந்து விழுந்து கிடக்கும் வேலிகள் ஓடிக் கழிய, குனிந்த தலை நிமிராமல் தவத்துக்குச் செல்லும் அருச்சுனனாக நடந்து கொண்டிருக்கின்ற கற்பகக் கிழவரை, ‘ யென்னகா கற்பகண்ணே, யெங்க இந்தப் பாச்சல்ல…’ என்ற இசுமாயில் காக்காவின் குரல் பேரிண்டிச்சியாக மறிக்கிறது.

விடிந்ததும் விடியாததுமாக இந்த இசுமாயிலுக்கு இங்கு என்ன வேலை? என்ற கற்பகக் கிழவரின் மனக்குடைச்சலுக்கு மறுமொழி சொல்வது போல அந்தப் படலையை இழுத்து எரிச்சலோடு போட்டுவிட்டு வேலியில் சார்த்தியிருந்த பெட்டி கட்டிய சைக்கிளைத் தள்ளிக்கொண்டே இசுமாயிலின் பேச்சு.

‘ இவனப் பாருங்கண்ணே குபேரனாம் பேர்…. என்ர பொறவி கஷடப்படுகானே எண்டுபோட்டு எட்டு மாசத்துக்கு முந்தியெண்ட கையால தூக்கி ஐஞ்நூறு ரூபாக் குடுக்கன்! பொறகு இயின மீனக்கீனயும் குடுக்கத்தான். இப்பயென்ன யெண்டா……. இதுகளத் தாற சாடயில்ல. தேடிப்போற நேரம் அவன் ஒழிச்சிக்கிற. பொண்டாட்டிதான் வெசளம் சொல்லுக. அந்தப் பொடிச்சிதான் யென்ன செய்யும். அதுதான் இண்டைக்கு வெள்ளாப்பில பொட்டியக் கட்டியெடுத்துக்கு, கடலுக்குப் போறத்துக்கு முந்தி இவனப் பாத்துக்குப் போவம் எண்டு போட்டு வந்த. மாப்பிள படுக்காக சொகமா. இன்னும் எழும்பல்லகா அந்தச் சோம்பேறித் தொர. .எழுப்பிப் பாத்துக்கு வாறன். உசும்புகானில்ல! இந்த நாளயில மனிசன் மாஞ்சாதியெண்டு ஒதவி செய்யப் போடாது. காண்ணோய்

கற்பகர் நடக்க, இசுமாயில் தனது சைக்கிளைத் தன்னிலே முட்டுக்கொடுத்து நின்று, சாரத்தை உயர்த்தி, உள்ளே அணிந்திருந்த கொட்டான் கால்சட்டைப் பைக்குள் கையை விட்டு, நெருப்புப் பெட்டியை எடுத்து பீடிபற்ற வைத்துக்கொள்தில் சற்றுச் சுணங்குகிறார். பின்னர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வேகமாக நடந்து கற்பகரை நெருங்கிக் கொண்டு, ‘என்னகாண்ணே ஒண்டும் பேசாம நடக்காய் ….? யெங்க கரக்கடைக்கா…? என்று கேட்டு பீடிப்புகையை மூக்கால் பிசுறுகிறார்.

இரண்டொரு நிமிடங்கள் ஊமை நடை.

திரௌபதி அம்மன் கோயில் சந்தியைக் கடந்து, வடக்கு வாசல் வீதியில் இறங்கி, கால்களும் சைக்கிள் சக்கரங்களும் புதைகின்றன. பெருங்கிணற்றுக் கொட்டுப் போன்ற அரச மரத்தின் அடியையும் தலையில் பட்டுத்தடவும் அதன் இலைகளையும் பார்க்க, கற்பகத்தாருக்கு ஒரு தென்பு. அதை அடுத்து நிற்கும் புளிய மரம், பூவும் பிஞ்சுமாய் உதிர்ந்து கிடக்கிறது. அவை கற்பகத்தாரின் பால்ய நினைவுகளைத் தடவுகையிலே… ‘வாற தீப்பள்ளயத்தில நானும் கட போடப் போறங்காண்ணே. ‘ என்கிறார் இசுமாயில்.

பனியின் துளிகள் பாவாத அந்த மரங்களின் ஊமை நிழல்களைத் தாண்டி, பனியின் வியாபாரத்துக்கு இடம் பரப்பிக் கொடுத்த அந்த வெட்டவெளியில் கால் வைக்கிறார் கற்பகத்தார்.

கற்பகர் அதற்கு மேல் நகராமல் அங்கேயே கால் ஊன்றி வடக்கில் முகம் திரும்புகிறார்.

அவரைக் கவனியாமலே கூத்துக்களரி மேடுவரை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போய்விட்ட இசுமாயில் திரும்பி நின்று பார்க்கிறார்.

‘நிக்கிறென்ன கற்கபகண்ணேய். வரல்லயா. வாங்களன் கரக்கடயில மீனக்கீன எடுத்துக்கு வரலாம்’

‘இல்ல இசுமாயில், நான் இயின ஓரிடத்த போக வேணும். ‘

புளிய மரத்தடியால் பிரிந்து நடைமேல் நடையூர்ந்து நெருண்டு கிடக்கும் சுவடுகளின் பதிவை நோக்கி கற்பகத்தார் காலெடுக்கிறார்.

பிரக்ஞையில் பிறந்து பிரக்ஞையற்றுப் பிறக்கும் கேள்வியொன்றை உதிர்க்கும் இசுமாயில்.

‘என்ன தூரத்தக்கா..?’

‘இல்ல இல்ல கிட்டடியிலதான் என்ர தங்கச்சி பார்வதியிர வீட்டுக்கு’

உருட்டிய சைக்கிளை நிறுத்தி, அறைபட்டவன் போல விதிர் விதிர்க்கும் இசுமாயில்

‘என்ன …..! பார்வதிப் பொடிச்சி உண்ட கூடப் பொறந்த தங்கச்சிய ?’

‘ஓமோம்’
ஏதோ சொல்ல வாய் உன்னும் இசுமாயில். மேலும் இடம் கொடுத்தால், தங்கள் குடும்ப உறவின் கோணல் பற்றி எங்கே குறை சொல்லி விடுவானோ என்று குறுகும் கற்பகர்.

‘அப்ப நான் வாறன் இசுமாயில் ‘

அவசரமாக பேச்சை இடைமுறித்துக் கொண்டு, அந்த இரண்டு பனைமரங்களையும் கடந்து புதிய கோயில் கிணற்றடிக்கு வரும் கற்பகர் தீக்குழிக்கு எதிரேயுள்ள கடற்கரைப் பாதையில் இசுமாயில் சென்று மறையும் வரை, காலில் அப்பிக் கொண்ட எதையோ, கிணற்றுத் துலாக்காலில் தேய்த்துத் துடைத்துக் கொள்வது போல் தன்னைத்தானே ஏமாற்றும் கூச்சம்.

எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் மனம். பார்வதிப்பிள்ளை என்ர தங்கச்சி எண்டால் … இந்த இசுமாயிலுக்கு அப்படியென்ன ஆச்சரியம்? நாங்க கொஞ்சக் காலமாகப் போகாம வராம இருந்தாப்போல…?

‘என்ன கொஞ்சக் காலமா ? இப்ப பத்துப் பதினைந்து வரிசம் இலுவா?… சீ, அவள்ற புருஷன் செத்த சாவுக்கு கூடப் போகல்லயே…?’

அந்த நினைவு, சுளீர் என்னும் கசையின் அடியாகி மனதைப் பிய்த்தெடுக்க நம்பிக்கை பொடியாகி சால்வை நனைகிறது. சுடு மணலில் ஓடுவதுபோல் வந்த வழியே… நினைவு திசை மாற… பெருங்கடலை நோக்கி ஓடவேணும் போல ஒரு வெப்புசாரம். குரும்பை கட்டத் தொடங்கியிருந்த அந்த கொட்டான் கெவுளித் தென்னை மரந்தான் நடுங்கும் கைகளுக்கும் வெருவும் உதடுகளுக்கும் ஆதரவு.

கெவுளித் தென்னையின் குரும்பை போல நம்பிக்கை மீண்டும் குலைகட்ட விம்மலை அடக்கி தந்தங்கள் கடுக்க, அந்த பழைய சுவட்டு நெருளில் இறங்கி, தமது நடுங்கும் சுவடுகளை மெல்லப் பதிக்கத் தொடங்குகிறார் கற்பகர். பனியின் நனைப்பிலே அவர் பதித்த சுவடுகள், அவர் பாதத்தோடேயே ஒட்டி உருவழிகின்றன. அதனடியில் சரியும் உலர்ந்த மணலில் உதை குத்தி நின்று ஒரு வீறாப்புக் கொண்டு யோசித்து மீண்டும் தயங்கி, கடைசியில் பெருஞ்சுடராக நெஞ்சக் கனலை மூட்டி, அந்த வேக்காட்டில் ஒரே தாவலாக தெருவில் ஏறி, வண்டிச்சில்லின நெரிவுகளுக்குள்ளும் நீர் வார்த்த கிடங்குகளுக்குள்ளும் இடறி இடறி நோக்கி….

வந்தாயிற்று.

‘பார்வதி…. பார்வதி…..’

தெருக்கதவு பூட்டிக்கிடக்கிறது.

‘பார்வதி…. புள்ள பார்வதி, பார்வதி…’

கூனல் நிமிர்ந்த அந்த நெடிய உருவத்தின் பார்வை, உள்ளே பாய்ந்து வளவெங்கும் மேய்கிறது. உறங்கும் வளவு…உறங்கும் வாசல்…உறங்கும் தென்னை மரங்கள். அதற்கு மேல் நினைக்க முடியாதவராகி திரும்பவும் ஒரு முறை உரக்க கூப்பிடுகிறார்.

‘பார்வதி…. பார்வதி…..’

‘என்ன அண்ணே..’

திரும்புகிறார் எதிர் வீட்டுத் தெருப்படலையில் கண்ணீர் வழிந்தோடும் பார்வதி….

‘தங்கச்சி’ நாக்குழறுகிறது.

‘என்ன அண்ணே… கனகாலத்துக்குப் பொறகு ‘ முந்தானை கண்ணைத் தடவுகிறது.

‘ஓம் .. புள்ள கனகாலத்தக்துக்குப் பொறகுதான்’ நாணத்துக்கு மூப்பில்லையோ?

‘ஓ…ஓ.. எவ்வளவெல்லாம் நடந்து போயித்து அண்ணே. ஆள் பேர் இனசனமெண்டு இருந்த நீங்கெல்லாம் வந்து … அப்பண்ட கண்ணோட அதெல்லாம்..’
பேச முடியாமல் கேவும் பார்வதி. வந்து கூடும் பக்கத்தவர்கள்.

‘ வா புள்ள, உண்ட வீட்ட போவம் ‘

‘என்ட வீட்ட பொறது எப்படி அண்ணே? அதெல்லாம் போயித்து..’

‘எப்படி போயித்து ?’

‘இப்ப அஞ்சாறு வருசத்துக்கு முன்ன, அவர் சாப்படுக்கையாக கிடக்கக்குள்ள கொஞ்சங் கொஞ்சமா வாங்கின கடன், எண்ட வீடு வளவையும் கொண்டு போயித்து. !…. நான் என்ன செய்வன். ஆள் பேர் உறவெண்டு இருந்தவிய ஆரெனக்கு உதவி. அவன் நல்லாரிக்க வேணும்.. மீன் விக்கிற இசுமாயில் தான் கடவுளப் போல வந்து கை குடுத்தான். நீங்களும் கேளுவிப்பட்டிருப்பீங்க. அவரக் கொழும்புக்கெல்லாம் கொண்டு போய் மருந்து மாயஞ் செஞ்சதான் … கடன் ஆயிரம் ரெண்டாயிரமாப் போச்சி. அதுக்கு மேல ஆரும் கைமாத்துக்கு கடன் தருவாங்களா? எல்லாத்துக்குமாச் சேத்து மிச்சத்தக்கும் இசுமாயில் காக்காகிட்டதான் வளவ வச்ச. அது.. இப்ப.. அறுதியாப் போச்சு…’

பேய் அறைந்தால் என்ன, பிசாசு அறைந்தால் என்ன, ஆரோ அறைந்தால் போல கற்பகத்தாரின் அவதியுற்ற முகம்.

‘……… இப்ப இயினக்கு இரவல்ல கிடக்கம். எண்ட வாவிடாப் பாலகனுகள் ரெண்டு பேரோட. எல்லாத்தையும் எண்ட தலயில அள்ளிப்போட்டுத்துப் போயித்தாரே…’

தலையில் அடித்து ஒப்பாரி வைத்து அழும் பார்வதி. அதற்கும் அப்பால் நனைந்து … உருகிக்……. கரைந்து….. அழிந்து…அழுந்தும் கற்பகத்தார்.

‘ நான் உருகுவதும் கரைவதும் அழிவதும் அழுந்துவதும் என்ர மகனுக்குத் தெரியுமா? அவனுக்கென்ன கல்லூட்டு மகராசா’

இரவு மெல்லுகின்ற இருட்டுக்குள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தனது வளவுக்குள் தவிக்கும் கற்கபகக்கிழவர்.

அண்ணார்ந்தால் இருட்டுக்குள் அடர்ந்த தென்னம் வட்டுக்களிலிருந்து பிரியும் அகன்ற பெரிய ஓலை மட்டைகள். மட்டைகளினதும் வட்டுக்களினதும் இருட்டுக் குவிலுள் அல்லாடும் கிழவரின் கண்கள்

வட்டுக்களிலிருந்தும் மட்டைகளிலிருந்தும் கீழிறங்கும் கிழவரின் கண்களில் நெட்டை நெடிய நெடுத்த தூண்களாகத் தெரியும் கரிய தென்னை மரங்கள். தென்னை மரங்களை அடியிருந்து முடிவரை விரிந்த மட்டைகளுடன் பார்க்கும் கிழவருக்கு மாபெரும் ராட்சதக் குடைகளைப் பார்க்கும் பிரமிப்பு. ராட்சதக் குடைகளுக்கு இடையிடை நட்சத்திரங்களின் நமட்டுச் சிரிப்பு.

நட்சத்திரங்களுக்கு ஏன் இந்த நமட்டுச் சிரிப்பு.? இருட்டுக்குள் மற்றதெல்லாம் என்ற ஏளனமா?

இருட்டுத்தான்
இருட்டின் திட்டுகள் இடையிடையே
முன் மூலையில் இலுப்பையின் முண்டம்
முற்றத்தில் மாமரக் கூடாரம்
கிணத்தடியில் வாழைகளின் பூதங்கள்
பின் மூலையில் கோழிக் காலையின் பூதங்கள்
இடையில் ஆட்டுக் கிடையின் அடவி
தூர மாட்டுத் தொழுவத்தின் குகையும் வைக்கோல் போரின் மலையும்.

இந்த இருட்டுத் திட்டுகளைப் பாத்தபடி இருளுக்குள் இருளாய் இந்தத் திண்ணையில் சாமம் தப்பிய சாமத்தில் இந்தக் கற்பகக் கிழவன் !

இலுப்பையின் கீழ், மறக்மறக்கென்று எலும்புத் துண்டை நாய் கார்ற சத்தம்.

நாய்க்கு ஒரு எலும்புத் துண்டு. நாயாகிப் போனவனுக்கும் ஒரு எலும்புத் துண்டு. இந்த எலும்புத் துண்டுகளுக்காகத்தான் எத்தனை வாதாட்டம். !

பகல் முழுவதும் வாதாட்டம். பகல் கழிஞ்ச பின்னேரமும் வாதாட்டம்.. பின்நேரம் கழிஞ்ச மாலைக்குள்ளயும் வாதாட்டம். மாலை கழிஞ்ச முன்னிரவும் வாதாட்டம்.. முன்னிரவு கழிஞ்ச பின்னரவும் வாதாட்டம். பின்னிராவில் சாமக்கோழிகள் ஒரு பாட்டம் கூவின உச்சத்திலதானே அவண்ட பொண்டில் உச்ச மாகாளியாய் உருவேறின.

சல்லியும் சதமுமாக இந்த வல்லுகத்துக்குள்ள சேர்ந்த காசு, தேங்காய் வித்த காசு, ஓலைமட்டை வித்த காசு, மாங்காய் வித்த காசு, வாழைக்குலை வித்த காசு, முட்டை வித்த காசு, பால் வித்த காசு, காளைமாடுகள் வித்த காசு, அப்படியும் இப்படியுமாய் சீட்டுகளால் சேர்ந்த காசுகள், கொஞ்ச நஞ்சமா –பத்தாயிரம் ரூபா.

பத்தாயிரம் ரூபா. அப்படியே, அடமானமாய் அவண்ட பொண்டாட்டிட்ட கொடுத்த காசு -இப்ப அதக்கேட்டால் எவ்வளவு மல்லுக்கட்டு? அறுதியாய் போன என்ர தங்கச்சிர தாயாதியை மூள அந்த பத்தாயிரத்தையும் கேட்டா அத தாறத்துக்கு அவனுக்கும் அவளுக்கும் என்ன வில்கண்டம்? தாயும்; புள்ளையளுமாக கூடப்பொறந்தது நடுத்தெருவில நிக்கக்குள்ள அந்த பத்தாயிரத்தையும் அவன்ட நடு ஊட்டுக்குள்ள இரும்புப் பொட்டிக்குள்ள இரிக்க வேணுமா ?

இனம் இனத்தோட வெள்ளாடு தன்னோட. அவனுக்கு அவனொத்த தரவடிகளோடத்தான் கூட்டும் கும்மாளமும். மாமி மாமிர மக்கள் என்றால் அவங்க ஆரெண்டு கேக்கான். மாமியை ஆரெண்டு கேக்கிறவனிட்ட மற்றக் கதை என்ன ?

‘தந்ததைத் தா’
‘அது இனி சாவீட்டுச் செலவுக்குத்தான் ‘
‘இதென்ன புதுக்கத’
‘அதுதான் இனிக் கத’
‘அடமானமாகத் தந்ததை அபகரிக்கிறதான் உன்ட திட்டமும் உன்ர பொண்டிலின் திட்டமுமா? ‘

அவ்வளவுதான். உச்சமாகாளி உதிக்காள் ஊழிக்கால கொம்பல். அவண்ட உறுமல் ஆங்கார ஓங்காரம் ஓடிப்போறாள் உள்ளுக்கு. கட கட லொட லொட இரும்புப்பொட்டிக் கதவு சிங்கம் வாய்பொளக்கிறாப் போல துறக்குது. எடுத்தோடி வாறாள் வல்லுகத்த. எறிகிறாள் முகத்தில.

‘இந்தா கொண்டு போ, உன்ட எலும்புத்துண்ட’

இருட்டுக்குள்ள இலுப்பைக்கு கீழ இன்னமும் அந்த நாய் மறக் மறக் எண்டு அது எங்கயோ பொறுக்கின எலும்புத்துண்ட கார்றது கேக்குது. இதே இருட்டுக்குள்ள இந்த நாய் இந்த திண்ணையில கறபுறவெண்டு அவன் எறிந்த இந்த எலும்புத்துண்ட கார்றது எவருக்கு கேட்கப்போகுது?
தேத்தா மரத்தில பக்கிள். பக்கிள் முக்கினா சிரட்டையைத் தட்டு. சிரட்டைக்கு எங்கு போவான் இந்த கிழவன் ?
மாவில குயில். சாமம் சாமமாய் கத்துது சனியன். கண்ண மூட உடுகுதா கொஞ்சமும் ? ஒண்டு மாறி ஒண்டு.
மூடுற கண்ணுக்குள்ள முண்டங்களும் உருவங்களும்….
குறளியிர கூத்தா? கனவுட கருக்கலா?. கனவுட கருக்கல்தான்;;;;;……
கனவும் நனவும் கைகோத்து – வண்டில் சில்லின் ரெட்டைப்பாதையில அக்கம் பக்கமாய் அசையும் கனவு கருக்கல்கள்.
கோயில் வெளியும் பார்வதியுமான கருக்கல் ஒருபுறம். சைக்கிளுடன் இசுமாயிலுமான கருக்கல் மறுபுறம்………….
திடீரென எல்லாம் ஒவ்வொன்றாய் மறையுது-
கொக்கட்டி மறையுது-
அரசு மறையுது-
புளியை மறையுது-
ஆலை மறையுது-

எல்லாம் மறைய இசுமாயிலும் சைக்கிளும் மட்டும் நின்று நிலையாய், நெடிதாய் –
சட்டென விழிக்கும் கண். கனவு கருக்கள் போலவே சிந்தனை உருக்களும், விட்டு விட்டு சொட்டும் நீர் துளிகள் போல.
வெள்ளென நடந்தால்………..
விடியக்குள்ள………..
கோயில் வெளியில் பிடிக்கலாம்
இசுமாயிலை………
………….
வெயில் பரவ நடந்தால்……
கடக்கரை வித்தையில
மீன் தோணிக்காய்…..
காத்து நிக்கும் இசுமாயிலை
காணலாம்.
…………….
வெயிலேறிப் போனால்
சந்திக்கு சந்தி
சந்து பொந்து………..
ஒழுங்கை கிழுங்கையெல்லாம்
கணீர் கணீர் எண்டு கேக்குமே
இசுமாயிலின் கடுங்குரல்
மீனேய் ….. மீனேய்………… மீனேய்

மூடும் முழிகளுக்குள் மீண்டும் கனவுருக்கள்.
எங்கோ ஒரு மூலையில் இசுமாயிலை நாரதராய் மறிக்கும் கற்பகத்தர் ஒரு கண் இமைப்புக்குள் கனவுருவாய்.
எதிர் கொள்ளும் இசுமாயிலின் உருவம் அதே கண் இமைப்புக்குள் ஐய்யாயிரத்தை நீட்டும் கற்பகத்தாரின் உருவம் இன்னொரு கண் இமைப்புக்குள்
ஈட்டுறுதியை நீட்டும் இசுமாயிலின் உருவம் அதே கண் இமைப்புக்குள் சடுதியாய் எல்லாம் மறைய மிஞசும் சாம்பல் நிற வெளி
உறக்கத்துக்கும் முழிப்புக்குமிடையில் எத்தனை கணங்கள் எத்தனை யுககங்கள்–
எத்தனை இதயத் துடிப்புகள் எத்தனை மூச்செடுப்புகள்.
எத்தனை முடங்கல்கள் எத்தனை மடங்கல்கள்
எத்தனை சுருளல்கள் எத்தனை நிமிர்வுகள்
எத்தனை இருமல்கள் எத்தனை தும்மல்கள்.
எத்தனை கொட்டாவிகள் எத்தனை குறட்டைகள்.

இருட்டுக்குள் இலுப்பையின் கீழ் கேட்ட மறக் மறக் என்ற எலும்புக் கார்வைகள் இப்போது இல்லை. நாய் உறங்கிவிட்டதா? கற்பகத்தாரின் கார்வையும் இப்போது இல்லை. கற்பகத்தார் உறங்கி விட்டாரா? அவருடைய உறக்கத்தை கவனிப்பது கண்ணுக்கு தெரியாத தேவ கணங்களா?

உணர்வின் ஒளிப்பொட்டு பிரக்ஞையின் அடி ஆழத்திற்கு ஊடுருவி இறங்கும். அதற்கு மேலுள்ளதெல்லாம் அந்தகார மூச்சாகும். பிரக்ஞையின் சல தாரையிலிருந்து கனவுத் தாமரைக் கொடிகள் அரும்பி வளர்ந்து, நீண்டு மேலெழுந்து மூச்சின் அந்தகாரத்துள் பூக்கும்.

கனவுத்தாமரைக் கொடிகள் மூச்சின் அந்தகாரத்துள் உசும்ப அந்தகாரம் சற்று வெளுக்கும். மூச்சின் வெளுப்பில் உணர்வு பிரக்ஞையின் சலதாரையிலிருந்து மேலெழ, மண்ணுலகத்து நல்லோசைகள் மறுபடியும் நுழைய, சூரிய தேவனின் சுடுகதிர்கள் தோலைத்துளைக்க, வாரிச்சுருட்டி எழுகிறார் கற்பகக்கிழவர்.

வாரிச்சுருட்டி எழுந்த கற்பகக்கிழவர், மலைத்துப்போய் முழிச இசுமாயிலின் குரல் வெயிலேறிய ஒரு மூலைக்குள் ஒலிக்க சட்டென எழும்பி வாசலில் இறங்கித் திரும்பிப் பார்க்கையில் மகன் கடப்புக்குள் கதியால் நட்டு வழியை அடைப்பது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.