இன்று இல்லெங்கிலும் நாளை

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக.
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

One thought on “இன்று இல்லெங்கிலும் நாளை

 1. Thanks http://www.yarl.com/forum/index.php?showtopic=176&mode=threaded&pid=10982

  கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் எழுத்தாளராக வரும் மாதவனை போராளிகள் பிடித்துச் செல்லும். காட்சியில் மாதவன் ஒரு கவிதையைச் சொல்லி தன்னை அடையாளம் காட்டுகிறார். இந்தக்கவிதை நமது ஈழத்து மூத்த கவிஞர்களில் ஒருவரும் ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளில் ஒருவருமான கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை அந்தக் கவிதையை இங்கே தருகின்றோம்.

  இன்று இல்லெங்கிலும் நாளை

  எங்கள் புருவங்கள்

  தாழ்ந்துள்ளன

  எங்கள் இமைகள் கவிந்துள்ளன

  எங்கள் உதடுகள் அண்டியுள்ளன

  எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன

  நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்

  எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக

  எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக

  எங்கள் முதுகில் கசையால் அடிக்குக

  எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து போகட்டும்

  தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்

  கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்

  இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்

  கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்

  அதுவரை நீங்கள் எங்களை ஆள்க

  அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக

  சண்முகம் சிவலிங்கம்

  நன்றி: மரணத்துள் வாழ்வோம்

  கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் மேற்படி கவிதை வரிகளை தவறான முறையில் மணிரத்தினம் தம்முடைய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் உபயோகித்துள்ளாரென பரவலான ஒரு அபிப்பிராயம் உள்ளது.இது பற்றி சண்முகம் சிவலிங்கத்திடம் வினவியபோது, மணிரத்தினம் அந்த கவிதை வரிகளை தவறாக பயன்படுத்தவில்லை. சக்தி தொலைக்காட்சிப் பேட்டியில் மணிரத்தினம் கூறிய விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே என்றும் கூறினார். போராளிகள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே தான் போராட்டத்திற்கு சாதகமானவன் என்பதை மறைமுகமாக சொல்லவே மாதவன் அந்தவரிகளை சொல்கிறார். போராளிகளுக்கும் அந்த வரிகள் தெரிந்திருக்கின்றன.அவர்களும் அந்த பாத்திரத்துடன் சேர்ந்து அந்த கவிதை வரிகளை சொல்கிறார்கள்.

  ஆகவே அந்த வரிகள் போராளிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வில்லை. அந்தக் காட்சியின் பரபரப்பபான சூழலாலேயே ரசிகர்களுக்கு வாசகர்களுக்கு அந்த தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது தவறு அல்ல.

  ஒரு படைப்பின் பொருளும் பயன்பாடும் வாசகர்களை பொறுத்ததே. ஒரு கால கட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சூழலில் உண்டான படைப்பு இன்னொரு கால கட்டத்தின் இன்னொரு சூழலிலும் பயன் உள்ளதாக இருப்பின் அது அந்தப் படைப்பின் வலிமையையே குறிக்கும். காலம் கடந்து சூழல் கடந்து படைப்புகள் பொருள்கொள்ளப்படும்போது புதிய சூழலின் புதிய அர்த்தத்திற்கு படைப்புக்கு புறம்பாக சிலதொடர்களை பயன்படுத்துவது சகஜமானதே!

  இவ்வாறு கவிஞர் சண்முகம் சிவலிங்கம் கூறினார்.

  கேள்வி: சுதாராஜ் அவர்களே! கன்னத்தில் முத்தமிட்டால் கதை உங்களுடைய “அடைக்கலம்’ சிறுகதையின் தழுவல் என நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் இயக்குநர் மணிரத்தினம் அவர்கள் அதை மறுத்திருப்பதோடு கதையை தயார் படுத்திய பின்னரே லொக்கேஷன் பார்ப்பதற்காக புத்தளம் வந்ததாக சொல்லியிருக்கிறாரே?

  மணிரத்தினம் பெரிய இயக்குநர். அவர் எதுவும் சொல்லலாம். அவர் ஒரு கதையோடு லொக்கேஷன் பார்க்க வந்திருக்கலாம். ஆனால் என் சிறு கதையை படித்த பின்னர் அவருடைய குறித்த திரைக் கதையில் மாற்றம் செய்திருக்கலாம் அல்லவா?

  ஆனால் இலங்கையில் தனக்கு தரப்பட்ட புத்தகங்கள் பலவற்றை தான் இன்னும் படிக்கவில்லை எனக் கூறியிருக்கிறாரே?

  ஆம். அப்படி அவர் சொல்லியிருக்கிறார். தவிரவும் மணிரத்தினம் புத்தளம் வந்தது 2000ஆம் ஆண்டில். ஆனால் எனது அடைக்கலம் சிறுகதை 1992ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடத்திய வைரவிழா போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதன் பின்னர் பரிசு பெற்ற சிறுகதைகளை ஆனந்தவிகடன், ஒரு மௌனத்தின் அலறல் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது. அதை மலிவுப் பதிப்பாக மூன்று தடவைகள் வெளியிட்டார்கள். அதனால் எனது குறித்த கதையை மணிரத்தினம் ஏற்கனவே படித்திருக்கவும் கூடும்.

  * மணிரத்தினம் புத்தளம் வந்த போது தான் படமாக்கப் போகும் கதை எத்தகையது என்பது பற்றி ஏதாவது கூறினாரா?

  இல்லை. நானாகத்தான் வலிந்து கேட்டேன். தனிப்பட்ட ஒரு கதை எனக் கூறினார். அப்போது நான் சொன்னேன். நீங்கள் என்ன படம் எடுத்தாலும் பரவாயில்லை.

  ஆனால் இலங்கைப் பிரச்சினையை வைத்து படம் எடுப்பதாக இருந்தால் அதனை உரிய முறையில் எடுங்கள். ஏற்கனவே சில தமிழ்ப்படங்களும், சிங்களப் படங்களும் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளன. அப்படி நீங்களும் செய்ய வேண்டாம். இங்கு நடப்பது ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டம், உரிமைப் போராட்டம். இந்தப் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. எந்தத்தரப்பினராக இருந்தாலும் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் போராட்டத்திற்கு ஆதரவானவர்களோ, எதிரானவர்களோ யாராக இருந்தாலும் வன்னியில் இருந்து வருகின்ற குரல்தான் முக்கியமானது. இதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே எமது பிரச்சினையை, எமது போராட்டத்தை கொச்சைப் படுத்துகிற மாதிரி நீங்கள் படம் எடுக்கக் கூடாது என மணிரத்தினத்திடம் நான் கேட்டுக் கொண்டேன்.

  *புத்தளம் வந்த இயக்குநர் மணிரத்தினம் எத்தகைய இடங்களைப் பார்த்தார்?

  யாழ்ப்பாணத்தைப் போல இடங்களை காட்டமுடியுமா எனக் கேட்டார். நான் அவர்களை உடப்பிற்கு கூட்டிச் சென்று பனைகளும் தென்னைகளும் உள்ள ஒரு இடத்தைக் காட்டினேன். அகதிமுகாம் ஒன்றை பார்க்க வேண்டுமென்றார். அதையும் காட்டினேன். இராணுவ முகாமும் பார்க்க வேண்டுமென்றார் இராணுவ முகாமிற்கு உங்களை என்னால் அழைத்துச் செல்ல முடியாது. அதற்கு அரச தரப்பின் அனுமதி வேண்டுமென்றேன்.

  * அடைக்கலம்சிறுகதையை நீங்களாக கொடுத்தீர்களா? அல்லது மணிரத்தினம் கேட்டாரா?

  எங்கள் வீட்டில் கதைத்துக் கொண்டிருந்த போது. இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக ஏதாவது நூல்கள், புகைப்படங்கள் இருக்கிறதா எனக் கேட்டார். அப்போது என்வசம் அடைக்கலம் கதையும் இன்னுமொரு கதையும் தான் இருந்தது. அவற்றை வாசிக்கக் கொடுத்தேன். எங்கள் வீட்டிலிருந்து புறப்படும் போது இயக்குநர் மணி ரத்தினத்தின் உதவியாளர் அடைக்கலம் கதையை காட்டி இதை நாங்கள் கொண்டு செல்லலாமா? எனக் கேட்டார். நானும் சரி என்றேன். அதனை அவர்கள் இந்தியா கொண்டு சென்றனர்.

  * இயக்குநர் மணிரத்தினம் சொல்லுகின்ற கொரியச் சிறுமிபற்றிய கட்டுரையும், உங்களுடைய குருவி பற்றிய அடைக்கலம் சிறுகதையும் ஒத்ததாக இருக்கலாம் அல்லவா? அல்லது அந்தக் கட்டுரையின் பாதிப்பில் நீங்களும் கதை எழுதியிருக்கக் கூடாதா என்றொரு கேள்வி எழலாம் அல்லவா?

  குறித்த கட்டுரை வெளிவருவதற்கு முன்னரே என்னுடைய கதை பிரசுரமாகியிருந்தது. அதே நேரம் மணிரத்தினம் என்னைச் சந்திக்காமல் என்னுடைய கதையை எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால் அவர் சொல்வதை நான் ஒப்புக்கொள்ளலாம்.

  * சரி “கன்னத்தில் முத்தமிட்டால்’ உங்களுடைய கதையின் தழுவல் என நீங்கள் அறிந்த போது அவ்விடயத்தை இயக்குநர் மணிரத்தினத்துடன் கடித மூலமாவது தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டிருக்கலாம் தானே?

  அவ்வாறு கேட்கத்தான் முற்பட்டேன். ஆனால் எனது கதையை பயன்படுத்துவது பற்றி எனக்கு தெரியப்படுத்தாதவர். பட டைட்டிலில் அதுபற்றி போடாதவர், கடித மூலம் கேட்கும் போது மாத்திரம் ஒப்புக் கொள்வாரா? தவிரவும் “எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவருடன் வீண்பிரச்சினை வேண்டாம் விட்டு விடுங்கள்’ என மனைவியும் சொன்னார். அதனால் அதை நான் பெரிதுபடுத்தவில்லை. அப்போது அலட்டிக் கொள்ளாத நீங்கள் இப்போது அது பற்றி அதிகம் பேசுவதேன்?

  உண்மையில் உங்களைப் போல சில ஊடக நண்பர்கள் தான் காரணம். ஒரு ஈழத்துப் படைப்பாளியும் அவனது படைப்புகளும் மழுங்கடிக்கப்பட்டுவிடக் கூடாது என பலர் என்னிடம் சொன்னார்கள்.

  குறிப்பாக சூரியன் எப்.எம். அறிவிப்பாளர் மஃரூப் தான் முதலில் இவ் விடயத்தை வெளிப்படுத்தினார். அதன் பின் விமர்சனங்கள் பல பத்திரிகைகளில் வெளிவந்தன. இப்போது அது ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது.

  * உங்கள் அடைக்கலம் கதையில் வருகிற குருவி இறுதியில் தாயுடன் இணைகிறது. ஆனால் கன்னத்தில் முத்தமிட்டாலில் வருகிற குழந்தையை தாய் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போராட்டப் பாதையிலேயே போகிறார். இதுபற்றி.

  ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாமென நான் மணிரத்தினத்திடம் கூறியிருந்ததால் அவர் போராட்டத்தை சிறப்பாக காட்டவேண்டும் என்ற காரணத்தினால் திரைப்படக்கதை முடிவில் மாற்றம் செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.

Leave a Reply to sivalingam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *