நேற்று முழுவதும் அலைச்சல்.
இரவு போய்ச் சாப்பிட்டேன்.
பின்னர் படுக்கையில் சாய்ந்துவிட்டேன். . .
மூத்திரம் பெய்ய இடையில் முழித்தெழுந்தேன்.
வார்த்தடியை நீக்கித் கதவைத் திறக்க
– இருள் போர்த்தித் தெரிந்தது
கோடிக்குள் போகையிலே
வானத்தை அண்ணார்ந்த பார்த்தேன்
வடிவாக, வெள்ளிகள் பூத்து மினுங்கின.
மூத்திரம், பெய்யும் பொழுது
பிறகும் ஒருமுறை
அண்ணார்ந்து பார்த்தேன் – அடடா,
– ஓ அடடா!
வெள்ளிகள் கீழே விரைந்திறங்கி வந்தனவே.
நம்பொணாது
கண்களை தேய்த்துக் கசக்கினேன்.
உண்மைதான்,
வெள்ளிகள் கீழே விரைந்திறங்கி
எங்களது
தென்னைகளின் மேலே திரியத் தொடங்கின பார்!
பூரணையைப் போன்ற புதுச் சிவப்புக் கோளங்கள்.
உச்சந்தலையில் ஒருசிறிய கற்றைமயிர்.
பக்கமிரண்டும் பசுவின் சிறுகொம்பு.
‘’இப்படித்தானோ இருப்பன வெள்ளியெல்லாம்-‘’
மூத்திரம் பெய்தபடி
என்னுள் முனகுகையில்,
‘’ஓம்’’ எனப்
பின்வீட்டுக் கணபதியர் ஒப்புகையில்,
தென்னோலையின் வளைந்த சிறுநுனியைத்
தொட்டபடி
வந்த கோளத்தின் வடிவம் பெருக்கிறது.
தோளும் முகமும் சுடர்ந்து பொலிகிறது
மார்பும் புயமும் வயிறும் தெரிகிறது,
‘’இப்படித்தானோ இருப்பன வெள்ளியெல்லாம்?‘’
மூத்திரம் பெய்தபடி மேலும் முனகுகையில்
‘’ஓம்’’ என
மீண்டும் கணபதியர் ஒப்புகையில்
தென்னோலையின் வளைந்த சிறுநுனியைத்
தொட்டபடி
இன்னும் வெள்ளிகள்,
இன்னும் வெள்ளிகள்
மேற்குக் கிழக்காய்
கிழக்கு மேற்காய்
இன்னும் மூத்திரம்,
இன்னும் மூத்திரம்,
இன்னும்,
மூத்திரம் பெய்து முடியவே இல்லை!
–
விடிகிறது.
இந்த வெள்ளி வீர்ர்கள்
எங்கு படிந்தனரோ?
பாலையோ? அன்றிப் பனிவெளியோ?
எந்த மலையிலோ எந்தக் கடலிலோ?
எங்கள் ஊர் மேலும் இறங்கி இருப்பரோ?
வாரிச் சுருட்டி படுக்கையை விட்டெழுந்து
மண்டபத்துள் வந்தேன்.
விடிந்து வரும் பொழுதில்,
எல்லாக் கதவும் திறந்த கிடந்தன.
எல்லாக் கதவும் திறந்தே கிடப்பதால்
வெள்ளிகள் இங்கேதான்
வந்திறங்கி விட்டாரோ?
வாசலுக்கு வந்தேன்
வளவெல்லாம் நோக்கியபின்
கூரையினைப் பார்தேன்
ஒருவன் அங்கே கால்குத்தி
நிற்கிறான்.
வெள்ளி நிலத்தவனோ?
காக்கி உடையணிந்து துப்பாக்கி வைத்திருந்தான்
போர்க்கவசம் ஒன்றைத் தலையில் புனைந்திருந்தான்.
பார்த்துப் பயந்தேனோ?
பார்க்காதவன்போல வீட்டுள் புகுந்தேன்.
பிறகு வருகையிலே
கூரையின் ஓரம் அயலவர் கூடிநின்றார்,
வீரனின் காலை ஒருவர் பிடித்திழுத்தார்
வீரன் விழுவானோ?
அல்லால் மெசின் துவக்கால்
‘பட்பட்’ என்றெங்களை பட்டாஸ் கொழுத்துவானோ?
ஊமை நிசப்தம்
ஒருகணம் நீள்கிறது
ஆட்கள் சுவரை வளைத்துக் குவிந்தார்கள்
நானும்,
படியால் நடந்து நெருங்குகின்றேன்.
ஆரோ ஒருவர்
அலவாங்கு வைத்திருந்தார்.
‘’என்னத்துக் கிந்த அலவாங்கு?’’
எனக் கேட்டேன்.
‘’பாரும் இதோ’’ என்றார்கள்.
பாதி முகம் அழிந்து
பக்க்க் குடல் சிதறி,
வீரன்
அழுகும் வெறும்பிணமாய் வீழ்ந்துள்ளான்.
ஆர் ஆராரோ வீட்டில்
அதற்கிடையில் கூடிவிட்டார்.
மாவடியின் கீழே வடிவான கூடாரம்.
ஊதுவத்தி பற்றி
தடித்த ஒரு மனிதர்
சாமி படத்திற்குப் பூசை நடத்துகிறார்
‘’எங்கே என் பிள்ளை?’’
எனக்கேட்டேன்
என்மகனைத் தந்தார்கள்.
துக்கித் தவசியிடம் செல்கின்றேன்
‘’என்ன இவையெல்லாம்?’’
என்கிறேன் இங்கிலீசில்,
‘’எல்லாம் வெளியாரை ஏற்பதனால் –‘’
என்றவரும் இங்கிலீசில் சொன்னார்
‘’இனிஎன்ன செயவ்து?’’ என்றேன்,
‘’பெண்டு
பிள்ளை யாவரையும்
போலிசில் ஒப்படைத்து
வந்து நீர் வீட்டுக்குக் காவல் இரும்’’ என்றார்.
சிந்தித்தேன்.
நாங்கள் ஒருவனைத் தீர்த்துவிட்டோம்.
நாங்களேதான்
இந்த நமனைப் பலிகொண்டோம்.
வந்தால்
இனியும் அவர்களை மாய்ப்போம் நாம்.
இந்த வழியே,
இனிமரணத்துள் வாழ்வோம்.
‘’குத்துவோம், வெட்டுவோம்,
கொத்தி விழுத்துவோம்.
இந்த வழியே,
இனி மரணத்துள் வாழ்வோம்’’
என்றேன். . .
விழித்தேன் . . .
‘’எழும்புங்க கோப்பி’’ என்று
வந்தவளைப் பார்த்தேன் மருண்டு.